பேரநீதியில் மரித்துப் போங்கள்!

பேரிடரில் பிழைத்துவிட்டீர்களா?

கடந்த 2015 நவம்பர் – டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் பெய்த தொடர் மழை மற்றும் உருவாக்கப்பட்ட செயற்கை வெள்ளம் காரணமாக உண்டான பேரிடரின் போது தமிழகமே ஒற்றைச் சொல்லை ஓங்கி உச்சரித்தது. அது மனித நேயம். அந்த துயரம் நடந்து ஓராண்டு ஆகிறது என்றாலும்கூட எட்டுத் திக்குமிருந்து நீண்ட உதவிக் கரங்கள் குறித்த சிலாகிப்புகள் இன்னும் அடங்கவில்லை. ஒரு மழை வெள்ளத்தில் சாதி மத பாகுபாடுகள் அடித்துச் செல்லப்பட்டதாக பெரும்புரளி பரப்பப்பட்டது. சாதி ஒழிப்புத் தளத்தில் அல்லது சமத்துவத்திற்காக போராடிக் கொண்டிருப்போருக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக இந்த திடீர் ‘மனித நேயம்’ இருந்தது. ஒரு பேரிடர் இச்சமூகத்தின் பிளவு மனப்பான்மை சரிசெய்துவிடுமெனில் சாதி ஒழிப்புக்கான வழிகளை நாம் ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டிய தேவையே இல்லையே! இரண்டாயிரம் ஆண்டுகளாக சாதியை அணுஅணுவாக கொண்டாடும் ஒரு சமூகம் பேரிடர் எனும் பெருந்துயரின்போது அதைக் கைவிட்டு மனிதர்கள் அனைவரும் தம்மைப் போன்றவரே என்ற சமத்துவ உணர்வைப் பெற்றுவிட்டதாக ஒரு பிம்பம் இங்கே உருவாக்கப்பட்டது. ஆனால் உண்மை அதுவல்ல. சென்னைப் பெருவெள்ளத்தின் போது பீறிட்ட மனிதத்தில் தலித்களுக்கு இடமளிக்கப்படவில்லை. அதுசரி; சாதியச் சமூகத்தில் தலித்கள் மனிதர்களா என்ன?! இந்த பேரிடரில் மட்டுமல்ல; தெற்காசியா முழுக்க எங்கெல்லாம் இந்துக்கள் இருக்கிறார்களோ அங்கே நிகழும் பேரிடரில் தப்பிப் பிழைக்கும் தலித்கள் தொடரும் சாதிய வன்மத்தின் புறக்கணிப்பில் நசுக்கவும் பொசுக்கவும் படுகின்றனர். அன்றாட வாழ்வில் மட்டுமல்ல, பேரிடர் போன்ற ‘மொத்தமும் சிதையும்’ தருணத்திலும் விளிம்புநிலையில் இருக்கும் தலித் மக்களை தீண்டாமையும் புறக்கணிப்பும் வன்கொடுமைகளும் விட்டுவைக்கவில்லை என்பதை நிரூபிக்கும் எத்தனையோ கொடிய தருணங்கள் இருக்கின்றன.

கடந்த கால்நூற்றாண்டு காலத்தில் தமிழகம் கண்ட மிக மோசமான பேரிடர்களாக  2004 ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்த சுனாமியையும் 2011 ஆம் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைத் தாக்கிய தானே புயலையும் கடந்த ஆண்டு நடந்த வெள்ளப் பாதிப்பையும் குறிப்பிடலாம். கடந்த நவம்பர் மாத இறுதியில் தொடங்கி டிசம்பர் மாதத் தொடக்க நாட்களில் பெய்த மழையில் சென்னை, கடலூர், விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. மழைநீரை வடிந்து போகச் செய்யும் எல்லா இடங்களிலும் கட்டடங்களை எழுப்பிவிட்டதால் கட்டடங்களை மழை மூழ்கடிக்கத் தொடங்கியது. யானைகளின் வழித் தடங்களை அழித்து காடுகளை ஊர்களாக்கிய மனிதர்கள் ஊருக்குள் யானை புகுந்து அட்டகாசம் செய்வதாகப் புலம்பு வதைப் போலவே ஆறுகள், ஏரிகள், குளங்கள், கால்வாய்களின்மேல் வீடுகளைக் கட்டிய நகரவாசிகள் வரலாறு காணாத மழை அட்டூழியம் செய்துவிட்டதாக குற்றம் சாட்டிக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் செம்பரம் பாக்கம் ஏரியிலிருந்து சுமார் முப்பதாயிரம் கன அடி நீரை முன்னறிவிப்பின்றி, எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைளும் இல்லாமல் அரசு திறந்துவிட்டதால் ஏற்பட்ட செயற்கை வெள்ளம் குடியிருப்புகளை மூழ்கடித்து பல உயிர்கள் பறி போகக் காரணமாகியது (இன்று வரை அதற்கு கணக்கில்லை). தம் உடைமைகளை இழந்து மக்கள் பெருந்துயரத்திற்கு ஆளானார்கள். சொந்த வீட்டுக்காரர்கள், வாடகை வீட்டுக் காரர்கள், வீடே இல்லாதவர்கள் என பாரபட்ச மின்றி எல்லோரையும் வீதியில் நிறுத்தியது மழை வெள்ளம்.

காட்சி 1:  கடந்த 2015 டிசம்பர் 1, சென்னை மாநகரை வெள்ளம் மூழ்கடித்த நாள்

மீட்பர்களாக, வள்ளல்களாக, கடவுளர்களாக மனிதர்கள் அனைவரும் மாறிவிட்டார்களோ என்று குழம்பிப் போகும் அளவிற்கு எல்லோர் இதயத்திலும் அன்பும் கருணையும் பீறிடுவதைப் பார்க்க முடிந்தது. ‘யாருக்கேனும் நான் உதவியே தீருவேன்’ என்ற முடிவோடு எல்லோரும் சுற்றிக் கொண்டிருந்தனர். சக மனிதரின் நற் செயல்களை அங்கீகரித்து அதைப் பரப்புரை செய்யும் நற்பண்பை திடீரென எல்லோருமே பெற்றிருந்தனர். இத்தனை தன்னார்வலர்கள் இதற்கு முன் நடந்த எந்த சமூக பிரச்னைகளிலும் காணக் கிடைக்கவில்லை. இத்தனை காலமும் இச்சமூகத்தின் பண்பாட்டு அடையாளமாகப் பாதுகாக்கப்பட்டு வந்த சாதி, மத, பாலினப்
பாகுபாடுகள் நீக்கம் செய்யப்பட்டு புதிதாக உற்பத்தியான மனிதக் கூட்டம் போல எல்லோரும் நடந்து கொண்டார்கள். மனிதர் களின் நேயம் சாதி, மதப் பாகுபாட்டை அழித்துவிட்டதாக பரப்புரை செய்யப்பட்டது. தம்மை காப்பாற்றிய முஸ்லிம்களின் பெயரை இந்துக்கள் தம் பிள்ளைகளுக்கு சூட்டினார்கள்; தலித்கள் கொடுத்த உணவுப் பொட்டலங்களை பார்ப்பனர்கள் வாங்கி உண்டனர்; முஸ்லிம்கள் கோயில்களை சுத்தம் செய்தனர். அவ்வளவுதான் இங்கே வேரூன்றி இருந்த சாதிமத காழ்ப்புணர்வு களெல்லாம் வெள்ளத்தோடு வடிந்துவிட்டதாக அச்சு, ஒலி, ஒளி மற்றும் சமூக ஊடங்களில் எல்லாம் பிரசாரம் நடந்தன. சாதி, மத அத்துமீறல்களுக்கெதிராக வேலை செய்து கொண்டிருந்தவர்கள், ’என்ன நடக்கிறது இங்கே’ என்று குழம்பிப் போகும் அளவுக்கு இந்த பிரசாரம் வலுவாக இருந்தது. உணர்ச்சி நாடகங்களுக்கு அடிபணிந்து விடாமல், அந்த திடீர் மனிதநேயம் எப்படி சாத்தியப்பட்டது? அதற்குப் பின்னாலிருக்கும் உளவியல் என்ன? அது உண்டாக்கிய தாக்கங் களும் இழப்புகளும் யாது என்றெல்லாம் நிதான மாக ஆராய்ந்தால் பல சமூக உண்மைகள் வெளிப்படும். வெள்ளப் பேரிடரில் தலித்களும் பிற ஒடுக்கப்பட்டப் பிரிவினரும் எவ்வாறு கைவிடப்பட்டார்கள்; போலி மனித நேயத்தில் மூழ்கிக் கிடந்த சமூகம் தன்னியல்பாக எவ்வாறு சாதிப் பாகுபாட்டை வெற்றிகரமாக அமல்படுத்தியது, சாதி இழிவு வேலைகளை தாழ்த்தப்பட்டவர்களிடம் எவ்வாறு தள்ளியது, எல்லாத் தரப்பினரும் பாதிக்கப்பட்ட போதும் தலித்களை மட்டும் அது எப்படி நகரைவிட்டு அப்புறப்படுத்தியது என்பது போன்ற கசப்பான உண்மைகளை அது தெள்ளத் தெளிவாக்கும். ஒவ்வொரு பேரிடர் நிகழும் போதும் மூன்று விதமான எதிர்செயல்களில் (response) பொதுச் சமூகமும் அரசும் ஈடுபட வேண்டியிருக்கிறது. 1. மீட்புப் பணி 2. நிவாரணம் 3. புனரமைப்பு/ மறுவாழ்வு. சென்னை வெள்ளப் பேரிடரில் ஒட்டு மொத்த சமூகமும் இந்த எதிர்ச்செயல்களில் தீவிரமாக ஈடுபட்டது. சென்னையை வெள்ளம் மூழ்கடித்த சில நாட்கள் வரை அரசு எந்திரம் முற்றிலுமாக பழதடைந்திருந்ததால் மீட்புப் பணியில் பொது மக்கள் தாமே ஈடுபட்டனர். சென்னையில் இரண்டு சென்னைகள் உள்ளன. ஆதிக்கசாதியினரும் பிரபலங்களும் மேட்டுக் குடிகளும் பெருமளவில் வசிக்கும் தென்சென்னை, தலித்கள், முஸ்லிம்கள், மீனவர்கள் பிற சமூகப் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் வசிக்கும் வடசென்னை. ஆறுகளும் காடுகளும் நிறைந்த வளமிக்க பகுதியான தென்சென்னை, சாதி இந்துக்களின் வாழ்விடமாக இருப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. அதேபோல குப்பைமேடுகளும், நெருக்கடியும் நிறைந்த வடசென்னை விளிம்புநிலை வாழ்விடமாக இருப்பதிலும் ஆச்சர்யமில்லை.  பொதுவாகவே ஒரு பெருநகரின் எந்த சொகுசையும் வசதியையும் காணாத சென்னையின் சேரியாகவே வட சென்னை கருதப்படுகிறது. இப்பகுதியை சென்னையின் தாராவி எனலாம். சென்னை என்ற பெருநகரம் மதராசப்பட்டினமாக அறியப் பட்ட சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் பூர்வகுடிகளாக அறியப்பட்டவர்களின் வழித் தோன்றல்களே இப்பகுதியில் பெருமளவில் வசிக்கின்றனர். ஆனால் தென்சென்னையின் அமைதியும் தூய்மையும் அடிப்படை வசதி களும் இவர்கள் கற்பனைக்கும் எட்டாதது. தென்சென்னையின் கழிவுகளையும் குப்பை களையும் கொட்டி அடைக்கும் இடமாகவே வடசென்னை ஒடுக்கப்படுகிறது. இந்நிலையில் தான் வெள்ளம் வந்தது…

காட்சி 2:

பார்ப்பனர்களும் பிற முன்னேறிய சாதியினரும் வசிக்கும் மயிலாப்பூர், கோட்டூர்புரம், அண்ணாநகர் போன்ற பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. உடனடியாக இங்கிருந்தவர்கள் மாநகராட்சியால் மீட்கப்பட்டனர். வீடுகளுக்
குள்ளும் தெருக்களிலும் தேங்கிய நீர் மோட்டார் வைத்து உறிஞ்சப்பட்டது. கழிவுகள் அப்புறப் படுத்தப்பட்டன. தலைநகரே இருளில் மூழ்கியிருந்தபோது இந்தப் பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் இதே பகுதிகளில் ஆற்றங்கரையோரம் வசித்த தலித் மக்கள் கைவிடப்பட்டனர். அவர்களின் குடிசைகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. மொத்த வாழ்நாள் சேமிப்பையும் நொடியில் இழந்து நடுத்தெருவில் நின்றவர்கள் பக்கம் ‘மீட்பர் களும்’ அரசும் திரும்பிப் பார்க்கவில்லை. வீடுகளில் வெள்ளநீர் புகுந்த நிலையில் அருகருகே இருந்த அரசுப் பள்ளிகளில் மக்கள் தாமாகவே தஞ்சம் புகுந்தனர். உணவோ, குடிநீரோ, மின்சாரமோ, போர்வையோ இல்லாமல் பச்சிளம்பிள்ளைகளோடும் பல நாட்கள் துவண்டு கிடந்தனர். ஒரே இடத்தில் ஒரே மாதிரியாக பாதிக்கப்பட்ட இருவரில் சமூகப் பொருளாதார ரீதியாக வலிமையாக இருப்பவரை மட்டும் மீட்டு சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைத்தன அரசு நிர்வாகமும், தன்னார்வமும்.

காட்சி 3:

தென்சென்னை முற்றிலுமாக மீட்கப்பட்ட பின்னர்தான் வடசென்னைப் பக்கம் தன்னார் வலர்களின் பார்வை திரும்பியது. தொலைக்காட்சி சேனல்களின் கேமராக்கள் முன் இந்த மக்கள் பசி என்றும் காப்பாற்றுங்கள் என்றும் கதறினர். வியாசர்பாடி, புளியந்தோப்பு போன்ற பகுதிகளில் குடிசைமாற்று வாரியத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பில் மாட்டிக் கொண்டவர்களை தன்னார்வலர்களும் அரசும் சென்றடையவே ஒரு வார காலத்திற்கும் மேலாகிவிட்டது. அதற்குள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து முடித்தனர் விளிம்பு நிலை மக்கள். அவர்களின் கோபக் கதறலும் கண்ணீரும் மனிதத்தின் செவிகளை எட்டவே இல்லை. நகருக்குள்ளேயே இந்நிலை என்றால் நகரை விட்டு வீசியெறியப்பட்ட குடிசைப் பகுதிகளைச் சேர்ந்த தலித்மக்களின் நிலை மிகவும் அவல மானது. அரசால் இம்மக்களுக்கென நகருக்கு வெளியே ஒதுக்கப்பட்ட நவீனச் சேரிகளான கண்ணகிநகர், செம்மஞ்சேரி போன்ற பகுதிகள் சராசரி நாட்களிலேயே குடிநீர், மின்சாரம், வாழ்வாதாரங்கள் மறுக்கப்பட்ட அவல நிலையில் இருக்கும். இதில் மழைநீரும் தேங்கி நிற்க, சகதியிலும் கொசுக்கடியிலும் பாம்பு பூரான்களுக்கு மத்தியிலும் பல நாட்களைக் கழித்தனர். மீட்பே சாத்தியப்படாத நிலையில் நிவாரணத் தின் நிலையைப் பற்றி தனியாகச் சொல்லத் தேவை யில்லை. இருக்கப்பட்டவர்களுக்கு கொடுத்தது போக மிச்சம் தான் தலித்களின் கைகளுக்கு வந்து சேர்ந்தது. தமிழகம் முழுவதி லிமிருந்து சென்னைக்கும் பாதிக்கப் பட்ட பிற மாவட் டங்களுக்கும் பொருட்கள் குவிந்தன என்றாலும் அவை அதுவரை ‘நலமாக வாழ்ந்த’ இனி எப்போதும் நலமாகவே வாழப் போகிற பிரிவினருக்கே போய்ச் சேர்ந்தன. சாதி பற்றிய புரிதலிருந்த சமூக ஆர்வலர்களின் முயற்சியில் நிவாரணப் பொருட்கள் வட சென்னை பகுதிக்கும் தலித் கிராமங்களுக்கும் மடை மாற்றம் செய்யப்பட்டன. ஆனால் இது மிகச் சொற்பமான அளவே. இதோ இந்த ஓராண்டு கடந்த நிலையில் மழை வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட மற்ற பிரிவினர் இயல்பு வாழ்க்கைக்கு த் திரும்பிவிட்ட நிலையில், தலித்களும் பிற விளிம்புநிலை மக்களும் பேரிடர் இழப்பையும் அதில் அனுபவித்த பாகு பாட்டையும் கூடுதல் சுமையாக இன்றளவிலும் சுமந்து கொண்டிருக்கின்றனர். சென்னையைத் தவிர, கடலூர் விழுப்புரம் மாவட்டங்களில் தலித்கள் வசித்த குக்கிராமங்கள் முற்றிலுமாக கைவிடப்பட்டன. அடித்துப் பெய்த மழையில் அவர்களின் நைந்த குடிசைகள் அழிக்கப்பட்டன. பாத்திரங்கள் போர்வைகள் மாற்று உடைகள் சமையல் பொருட்கள் என இருந்தவை அனைத்தும் நாசமடைந்தன.
அவர்கள் எங்கேயும் வேலைக்குச் செல்ல முடியவில்லை. அன்றாடங்காய்ச்சிகளான அவர்களுக்கு இதுதான் பேரிழிப்பு. பசியிலும் குளிரிலும் அவர்கள் பலநாட்கள் வாடிக் கிடந்தனர். வெகு நாட்கள் கழிந்த நிலையில் தம்மைத் தேடிவந்த தன்னார்வலர்களின் கால்களில் விழுந்து ஒருவேளை பசியாற்றச் சொல்லி அவர்கள் கதறினர். இதில் மிகுந்த வேதனை என்னவெனில், இம்மாவட்டங்களில் தலித் மக்கள் இருந்த பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்லவிடாமல் சாதி இந்துக்கள் வழிப்பறியிலும் வன்முறையிலும் ஈடுபட்டனர் என்பதே! தங்களுக்குக் கிடைத்தது போக எஞ்சியதைக் கூட அவர்கள் தலித் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கத் தயாராக இல்லை. மீட்பிலும் நிவாரணத்திலும் பங்கெடுத்த கதாநாயகர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டும். இந்த சேவை பல சாமானியர்களை ஹீரோவாக்கியது. ஹீரோக்களை சாமானியர் களைப் போல வேலை செய்ய வைத்தது. இவர்களனைவருமே அடுத்தடுத்த மாதங்களில் அவர்கள் தம் சேவைக்காக கவுரவிக்கப்பட்டனர். சென்னையின் மீட்பையும் நிவாரணத்தையும் அரசின் உதவியின்றியே நிகழ்த்திக் காட்டிய பெருமையை எல்லோருமே பங்கிட்டுக் கொண்டனர். பெருவெள்ளத்தில் உயிரைப் பணயம் வைத்து நீந்திப் போய் சகமனிதரைக் காப்பாற்றிய அந்த வீர சாகசம் நிச்சயமாக மெச்சத் தக்கது. படகுகளை வாடகைக்கு அமர்த்தி வீடுகளில் சிக்கிக் கொண்டவர்களுக்கு உணவைச் சேர்த்த அந்த மனிதநேயம் போற்றத் தக்கது. ஆனால் அந்த மனிதத்தில் ஜாதி கலந்திருந்ததும் அதன் கண்களுக்கு தலித்கள் தெரியவே இல்லை என்ற சமூக எதார்த்தமும் தான் வலிமிகுந்ததாக இருக்கிறது. மீட்பிலும் நிவாரணத்திலும் தங்களைக் கண்டு கொள்ளாத அரசையும் அரசியல் வாதிகளையும் மக்கள் பல இடங்களில் விரட்டி அடித்தனர். தன்னார்வலர்களையே அவர்கள் வரவேற்றனர். ஆனால் பேரிடரின் முதலிரண்டு எதிர்ச் செயல்களுக்கும் உயிரைப் பணயம் வைக்கத் துணிந்த பொதுச் சமூகம் புனரமைப்பில் ஒதுங்கிக் கொண்டது. ஏனெனில் மற்ற இரண்டையும் போல அது சாகச வேலை அல்ல. கடுமையான உடலுழைப்பைக் கோருவது. மக்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கான நிவாரணம் ஓரளவுக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் வீடுகளுக்கு திரும்பிய மக்களுக்கு முன்பிருந்த பெரிய சவால், குப்பைகளும் கழிவுகளும். வெள்ளத்திலும்

அடித்து ஊற்றிய மழைநீரிலும் சென்னையின் சாக்கடைகள், மலக்குழிகள், மலைபோல் குவித்து சேர்க்கப்பட்டிருந்த குப்பைகள் கலந்து நகரையே பெருஞ்சாக்கடையாக்கி இருந்தன. அது மட்டுமல்ல! ஒவ்வொரு வீட்டிலும் இருந்த துணிகள் போர்வைகள், மெத்தைகள் என பயன்பாட்டிலிருந்த அத்தனை பொருட்களும் கழிவாக ஒவ்வொரு வீட்டிலிருந்தும் தெருவில் வீசியெறியப்பட்டன. இவற்றை யார் அள்ளுவார்கள்? வேறு யார்? இத்தேசத்தின் கழிவுகளை அள்ளுவதற்கென்றே ஒரு சாதி இருக்கிறதே! கையால் மலமள்ளும் இழிவை நாகரிகமும் தொழில்நுட்பமும் முன்னேறிய இக்காலத்திலும் சுமக்கும் அருந்ததியர்கள் எல்லா நகராட்சிகளிலிருந்தும் ஒப்பந்த அடிப்படையில் இழுத்து வரப்பட்டனர். பேரிடரை சீர்செய்ய அதுவரை வேலை செய்தவர்களெல்லாம் துப்புரவுப் பணிக்கு தலித்களைத் தேடினார்கள். துப்புரவுப் பணி யாளர்கள் அடிமாடுகளைப் போல மாநகராட்சி குப்பை வாகனங்களில் பல மணி நேரம் பயணம் செய்து சென்னை வந்து சேர்ந்தனர். அவர்களை தனி வாகனத்தில் கவுரவமாக அழைத்து வர வேண்டுமென்ற எண்ணம் அரசுக்கே தோன்றாத அளவுக்கு சாதியுணர்வு வேரூன்றி இருக்கிறது என்பதைத் தவிர இதில் சொல்ல ஏதுமில்லை. கோத்தகிரியிலிருந்து சென்னைக்கு 12 மணி நேரம் லாரியில் நின்று
கொண்டே வந்தனர் பணியாளர்கள். அல்லாடும் மக்களுக்கு நம்மாலான உதவியைச் செய்யலாம் என நினைப்போடு வந்தனர் சிலர். பலரை இங்கிருக்கும் யதார்த்தத்தை விளக்காமல் தேங்கிய தண்ணீரில் ப்ளீச்சிங் பவுடர் போடுவது போன்ற எளிய பணி எனச் சொல்லி ஏமாற்றி அழைத்து வந்தது அரசு. இப்பணியாளர்களுக்கு ஒரு நாளைக்கு 250 ரூபாய் கூலி. எந்த அடிப்படை வசதியும் இல்லாத அரசுப் பள்ளிகளில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். போதிய, நல்ல உணவு வழங்கப்படவில்லை. கழிவறை தேடி அதிகாலை நான்கு மணிக்கு அவர்கள் தெருத்தெருவாக நடக்க வேண்டியிருந்தது. அதிகாலை ஆறு மணிக்குத் தொடங்கி இரவு எட்டு மணி வரை ஓய்வின்றி வேலை வாங்கப்பட்டனர். 12 மணி நேர கொடுமையான பணிக்குப் பிறகு உடலைக் கழுவிக் கொள்ளத் தண்ணீருக்கு ஏற்பாடில்லை. நாற்றம் குடலைப் பிடுங்கும் கழிவுகளை இவர்கள் எந்தப் பாதுகாப்பு உபகரணமுமின்றி வெறுங்கைகளால் அப்புறப்படுத்தினர். பலர் மயங்கி விழுந்தனர், காய்ச்சலும் வயிற்றுப் போக்கும் பலரைப் படுக்கையில் தள்ளியது. கண்ணாடி குத்தி ஒருவரின் கால் அப்புறப்படுத்தும் நிலைக்குப் போனது. ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். ஒருவர் மாரடைப்பில் இறந்தார். மற்றொருவர் மாநகராட்சி லாரி ஏறிச் செத்தார். துப்புரவுப் பணியை குறிப்பிட்ட சாதியினர் தான் செய்ய வேண்டுமென்ற சாதி இந்துக்களின் உளவியல் தலித் மக்களை தனியாக இக்கொடுமைகளை அனுபவிக்கச் செய்தது. இப்பணியைச் செய்ய துப்புரவுப் பணியாளர்களை அனுப்பச் சொல்லி சில மேட்டுக்குடிவாசிகள் போராட்டமெல்லாம் செய்தனர். ஆனால் மனிதத்தில் சிலாகித்திருந்த அவர்களின் கண்களுக்கு இப்பணியாளர்களின் நிராதரவான நிலை குறித்து சிறு அக்கறையும் தோன்றவில்லை. பத்து நாட்களுக்கும் மேல் கடுமையாக வேலை வாங்கப்பட்ட ஒப்பந்தப் பணியாளர்களுக்கு அந்த சொற்பக் கூலியும் முழுமையாகத் தராமல் ஏமாற்றப்பட்டனர். வெள்ளக் கழிவை அப்புறப்படுத்தியவர்கள் கடுமையான உடல்நலக் கேடுகளோடு சொந்த ஊர் திரும்பினர். புனரமைப்பின் இன்னொரு நடவடிக்கையாக ஆற்றங்கரையோரங்களிலும், நகரின் மையப் பகுதிகளில் குடிசைகளிலும் வசித்த தலித் மக்கள் நகருக்கு மிக வெளியே வீசியெறியப்பட்டனர். நகரை அழகுபடுத்தும் திட்டப்படி குடிசைகளை அகற்றுவதை கொள்கையாகக் கொண்டிருக்கும் அரசுக்கு பேரிடர்கள் மிக வசதியாகப் போகின்றன. உங்கள் வாழ்விடங்களுக்குப் பாதுகாப்பில்லை என்பதையே காரணமாக்கி தலித் மக்களை நகருக்கு வெகுவெளியே கட்டி வைத்திருக்கும் நவீனச் சேரிகளுக்கு அனுப்பியது. பேரிடருக்கு முன்பு வாழ்விட மாற்றத்திற்கு ஒப்புக் கொள்ளாமல் போராட்டம் நடத்தியவர்கள் அத்தனையையும் இழந்து நிற்கும் இயலாமைச் சூழலில் ஓர் அகதியின் மனநிலையோடு அமைதியாக வெளியேறினர். சைதாப்பேட்டை ஆற்றங்கரையோரம் பல ஆண்டுகளாக இருந்த குடிசைப் பகுதி முற்றிலுமாக துடைத்தழிக்கப்பட்டது. கோட்டூர்புரத்திலும். இவ்விடங்களில் தமது வாழ்வாதாரத்தைக் கொண்டிருக்கும் மக்கள் நகரை விட்டு 30 -40 கி.மீட்டர்கள் தொலைவில் கட்டப்பட்ட நவீனச் சேரிகளில் அடைக்கப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் உழலும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களது பிள்ளைகள் இங்கே தான் நகருக்குள் பள்ளிகளில் படித்துக் கொண்டிருந்தனர். அந்த மக்களும் இங்கே தான் வீட்டு வேலையோ வேறெதுவும் கூலி வேலையோ அல்லது சிறு தொழில்களோ செய்து கொண்டிருந்தனர். அவர்களை இங்கிருந்து அப்புறப்படுத்தியதன் மூலம் முற்றிலுமாக ஒரு சிறை வாழ்க்கைக்கு அவர்களை தள்ளியிருக்கிறது அரசு. பள்ளிக்கூடம் சென்ற பிள்ளைகள் எல்லாம் பேரிடருக்குப் பின்னர் கல்வியை கைவிட்டு சாலையில் பிச்சையெடுக்கவும் கூலி வேலை செய்யவும் நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். நகரின் மையப்பகுதியில் தலித் மக்கள் வாழ்ந்த இடம் பிரம்மாண்ட மால்களுக்கும் சொகுசான அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குத் தாரை வார்க்கப்படும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மதுரையைச் சேர்ந்த ‘’இண்டலெக்சுவல் சர்க்கிள் பார் தலித் ஆக் ஷன்ஸ்’’ என்ற அமைப்பின் உண்மை அறியும் குழு கடலூர் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நடத்திய ஆய்வில் தலித்கள் வெள்ளப் பேரிடரில் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டதை உறுதி செய்கிறது. மரக்காணம், பரங்கிப்பேட்டை குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட 18 கிராமங்களில் செய்த களப்பணியின் அடிப்படையிலான அதன் ஆய்வறிக்கையில், ‘’ ஆயிரக்கணக்கான் தலித்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். கடலோரப் பகுதிகளில் வசிக்கும் தலிகளும் சாதி இந்துக்களும் சமமான அளவில் பாதிக்கப்பட்டிருந்தாலும் இருவரும் தஞ் சமடைகிற வகையில் ஒரு நிவாரண கேம்ப் கூட அமைக்கப்படவில்லை. இது தலித்கள் மீதான பாகுபாட்டை அம்பலப்படுத்துகிறது. 2004ல் சுனாமியிலும் மற்றும் 2011ல் தானே புயல் பேரிடரிலும் தலித்களும் இருளர் சமூகத்தவரும் எதிர்கொண்டதை போன்றதொரு பாகுபாடு இது. தலித் கிராமங்களுக்கு நிவாரணப் பொருட்கள் சென்று சேரவிடாதவாறு ஆதிக்க சாதியினரும், உள்ளூர் அரசியல்வாதிகளும் தடுத்தனர்’’ என குறிப்பிடுகிறது. கடும் பேரிடர் சூழலில் தலித்கள் எதிர்கொண்ட இந்த பாகுபாடு ஓர் ஒற்றை சம்பவமல்ல. இதற்கு முன்னர் நிகழ்ந்த ஆழிப் பேரலைத் தாக்குதலிலும் தலித் மக்கள் கடுமையான நிராகரிப்பையும் புறக்கணிப்பையும் எதிர்கொண்டனர். சென்னை முதல் கன்னியாகுமாரி வரையிலான கடலோரப் பகுதிகளை புரட்டிப் போட்ட சுனாமி நூற்றுக்கணக்கான உயிர்களையும் காவு வாங்கியது. கடல்புரத்தை ஒட்டி வாழ்ந்த மீனவர்களும் ஆதிக்க சாதியினருமே சுனாமியில் பாதிக்கப்பட்டவராகக் கருதப்பட்டனர். அவர்களுக்கே மீட்பு, நிவாரணம் மற்றும் புனரமைப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. சோகம் என்னவெனில் இவர்களளவுக்கு சமமாக பாதிப்பை எதிர்கொண்ட தலித்களுக்கு பின்னுரிமை கூட அளிக்கப்படவில்லை. ஆதிக்க சாதியினரின் படகுகள், வயல்கள், வீடுகளுக்கு, உடைமைகளுக்கு முன்னர் தலித்களின் கட்டுமரமும் குத்தகை நிலமும் குடிசைகளும் ஓர் இழப்பாகவே கருதப்படவில்லை.

தலித்கள் கடன் வாங்கிச் செய்த குத்தகை விவசாயம் நாசமடைந்தது. சொந்த நிலம் வைத்திருந்தவர்களுக்கே நிவாரணப் பணம் என்பதால் தலித் மக்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர். சேரிகளாக ஒதுக்கப்பட்டு தீண்டத் தகாதவர் களாக இழிபடுத்தப்பட்ட மக்களை நிவாரண கேம்ப்களில் சேர்த்துக் கொள்ள மீனவர்களும் பிற சாதி இந்துக்களும் தயாராக இல்லை. உணவளிக்காமல் நிவாரணப் பொருட்களை கிடைக்க விடாமல் அவர்கள் தலித்துகளை மிக மோசமாக விரட்டியடித்தனர். தலித்களோடு ஓரிடத்தில் தங்க அவர்களது சாதி கவுரவம் இடமளிக்கவில்லை. ‘‘அவர்களிடம் என்ன இருந்தது, இழப்பதற்கு?’’ இதுதான் எல்லா இடங் களிலும் சாதி இந்துக்கள் முன் வைத்த வாதம். உயிர் போகவிருந்த பேரிடரிலும் அவர்கள் சாதியை நிலைநிறுத்தினார்கள். மக்களுக்கு இணையாக அரசும் சாதி இந்துக்களின் நிவாரணக் குடியிருப்புகளை கவுரமானதாகவும் தலித்துகளுடையதை ஆஸ்பெஸ்டாஸ் குடியிருப்புகளாகவும் அமைத்து பாகுபாட்டை உறுதி செய்தது. சுனாமி பாதிப்பு குறித்த ஐரோப்பிய கமிஷன் மனிதநேய உதவிகள் மற்றும் சிவில் பாதுகாப்பு அலுவலகத்தின் அறிக்கை, ‘’தாழ்த்தப் பட்டவர்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்னை, அவர்களிடம் மிக சொற்பமான உடைமைகளே இருப்பதால் நிவாரணம் பெறுவதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. இது அவர்களை மென்மேலும் வறுமைக்கும் புறக்கணிப்பிற்கும் ஆளாக்குகிறது. அவர்களிடம் உள்ள பதிவு செய்யப்படாத மீன்பிடி படகோ, வலையோ பட்டா இல்லாத வீடோ இது எதுவுமே கணக்கில் வராது. இதனால் அவர்கள் சார்பான பேரிடர் இழப்பு முற்றிலுமாக மறைக்கப்படுகிறது’’ என விளக்குகிறது. சென்னையின் வெள்ளப் பேரிடரைப் போலவே சுனாமியின் போதும் நூற்றுக்கணக்கான துப்புரவுப் பணியாளர்கள் (தலித் மக்கள்) அதிகம் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், நாகூர், வேளாங்கண்ணி, தரங்கம்பாடி, சீர்காழி, மற்றும் நெல்லிக்குப்பம் ஆகிய பகுதிகளுக்கு அழைத்து வரப்பட்டனர். டிசம்பர் 27 தொடங்கி 31 வரையான நாட்கள் அவர்கள் வாழ்வின் கொடுங்கனவாகவே இருக்கும். ஏனெனில் மிக மோசமான வன்கொடுமைக்கும் சுரண்டலுக்கும் ஆளாக்கப்பட்டனர். கடலோரத்தில் குவிந்த பிணங்களை அவர்கள் வெறும் கைகளால் அப்புறப்படுத்த நிர்பந்திக்கப்பட்டனர். ஐரோப்பிய யூனியன் மற்றும் இண்டர்நேஷனல் தலித் சாலிடாரிட்டி நெட்வொர்க் நிதியுதவியில் தேசிய தலித் கண்காணிப்பகம் மற்றும் தலித் மனித உரிமைகளுக்கான தேசிய பிரச்சாரம் நடத்திய ‘பேரிடர் எதிர்ச்செயலில் சாதிப் பாகுபாடு என்ற ஆய்வில்’ சுனாமியில் தலித் மக்கள் புறக்கணிக்கப்பட்டதும் இழிதொழிலை செய்ய நிர்பந்திக்கப்பட்டதும் விரிவாக விவாதிக் கப்பட்டுள்ளது. ‘பாதிக்கப்பட்டவர்களின் சூழலைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு உதவவே தலித் மக்கள் துப்புரவுப் பணியைச் செய்ய ஒப்புக் கொண்டனர். ஆனால், அவர்களது கவுரவமும் ஆரோக்கியமும் முற்றிலுமாக துடைத்தழிக்கப்பட்டது. அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கூட சூப்பர்வைசர்கள் செய்து தரவில்லை. குளிக்க நீரோ, சோப்போ, தொற்றுத் தடுப்போ (disinfectant) அளிக்கப்படவில்லை. உறங்க இடமின்றி, இந்த மோசமான வேலையின்போது அணிந்துகொள்ள இரண்டு சீருடைகளோடு அவர்கள் கைவிடப்பட்டனர். அழுகிய பிணங்களை பாதுகாப்பு உபகரணங்களின்றி அப்புறப்படுத்தினர். 12 மணி நேர இந்த பணிக் கிடையில் நிவாரண மையங்களில் உணவுக்காக கையேந்த வைக்கப்பட்டனர். நான்கு நாட்களுக்கு பிறகே மாஸ்க்கும் கையுறையும் வழங்கப்பட்டன. மீனவர்கள் இந்த வேலையை செய்யச் சொல்லிக் கம்பை எடுத்துக் கொண்டு அவர்களை மிரட்டினார்கள். நகராட்சிப் பணியாளர்களாக பிணங்களை அப்புறப்படுத்துதல் அவர்களது வேலை அல்ல. ஆனால் தீண்டத்தகாவர்கள் என்பதால் சாதி வழக்கப்படி அவர்கள்தான் இந்த தீண்டத்தகாத வேலையை செய்தாக வேண்டும். ஐந்து நாட்கள் கழித்து அவர்களுக்கு ரூ.125 கூலியாக அளிக்கப்பட்டது. பத்து நாட்கள் கழித்து 188 ரூபாய். ஒரு மாதம் கழித்து பல்வேறு வலியுறுத்தல்களுக்குப் பின்னர் 2500 ரூபாய். இழிவேலையை செய்து வீடுகளுக்குத் திரும்பிய அவர்களால் சாப்பிடக் கூட முடியவில்லை. அவர்களுக்கு கவுன்சலிங் அளிக்கப்பட வில்லை. யாருமே இவர்களின் சேவைக்கு நன்றி தெரிவிக்கத் தயாராக இல்லை. மாறாக இவர்களது சூப்பர்வைஸர்கள் பெரும் பாராட்டைப் பெற்றனர்’’. தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவில் எந்த மாநிலத்தில் பேரிடர் நிகழ்ந்தாலும் இதே கொடுமையைத் தான் தலித்கள் அனுபவிக்கின்றனர். சுமார் 30 ஆயிரம் பேரை பலி கொண்டு பத்து லட்சம் பேரை வீடற்றவர்களாக்கிய இந்தியாவின் வடமேற்கு மாநிலத் துயரமான குஜராத் பூகம்பத்தின் நிவாரணப் பணிகளில் தலித்களும் முஸ்லிம்களும் கடுமையான சாதி மதப் பாகுபாட்டை எதிர்கொண்டனர். பூகம்பம் நிகழ்ந்து ஆறு வாரங்கள் கழித்து மனித உரிமை கண்காணிப்பகம் மிக மோசமாக
பாதிக்கப்பட்ட புஜ், காவ்டா, அஞ்சார், பிஜோரி ஆகிய பகுதிகளுக்கு சென்ற போது, தலித்களும் முஸ்லிம்களும் தனி கேம்ப்களில் இருப்பதை கண்டது. பேரிடரிலும் தீண்டாமையும் பாகு பாடும் கடைபிடிக்கப்படுவதை மனித உரிமை கண்காணிப்பகம் குஜராத்தில் உறுதி செய்தது. சாதி இந்துக்களுக்கு உயர் ரக வசிப்பிடங்கள் வழங்கப்பட்டன. அவர்களுக்கு மின்சாரம், உணவு, குடிநீர் மற்றும் பிற அடிப்படை வசதிகள் தடையின்றி வழங்கப்பட்டன. இந்தியாவில் நிகழும் பேரிடர்கள் ஊர் – சேரிப் பாகுபாட்டை அழித்து சிதைத்தாலும் புனரமைப்புப் பணியாக வீடுகளைக் கட்டித் தரும் அரசு மீண்டும் தலித்களை சேரிகளுக்குள் தனியாக முடக்குகிறது. 1950 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தீண்டாமை ஒழிப்புச் சட்டத்திற்கு முற்றிலும் எதிராகவே எல்லா மாநில அரசுகளும் இவ்விஷயத்தில் செயல்படுகின்றன. 2007 -2009 வரை பிஹார், ஆந்திரா, கர்நாடகா மற்றும் அஸாமில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடர்களில் மேற்சொன்ன அதே சாதியக் கொடுமைகள் அரங்கேறின என்பதை பல ஆய்வுகள் அம்பலப்படுத்துகின்றன. இந்தியாவில் மட்டுமல்ல; தெற்காசியாவில் எந்த நாட்டில் பேரிடர் நிகழ்ந்தாலும் அங்கெல்லாம் தலித்கள் சாதிப் பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர். நேபாளம், பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் அடிக்கடி நிகழும் வெள்ளப் பேரிடரிலும் நிலநடுக்கத்திலும் தாழ்த்தப்பட்ட மக்கள் கைவிடப்படுவது தொடர்கொடுமையாகவே இருக்கிறது. உலகளவில் இயற்கை பேரிடர்கள் அதிகம் நிகழ கெடுவாய்ப்புள்ள நாடாக சீனாவைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை பிடிக்கிறது. இந்தியாவின் 76 சதவிகித கடற்பகுதி புயல் மற்றும் சுனாமிக்கு சாத்தியமுள்ளவை, 59% நிலப்பரப்பு பூகம்பம் நிகழும் சாத்தியங்களை கொண்டுள்ளது. 10% வெள்ளம் மற்றும் ஆற்று அரிப்புக்கும் 68% வறட்சிக்கும் வாய்ப்பிருக்கிற பகுதிகள். ஆக, ஆண்டு முழுக்க பல வகையான இயற்கைப் பேரிடர்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இவை மிக நிச்சயமாக பல்வேறு சமூகப் பொருளாதார மற்றும் கலாச்சாரப் பின்னணியில் உள்ள லட்சக் கணக்கான மக்களை துயரத்தில் தள்ளுகின்றன. ஆனால் இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்படுவதில் விளிம்பு நிலையில் உள்ள மக்களே முன்னிலை வகிக்கின்றனர். காரணம் வெள்ளச் சமவெளிகள், கடலோர நகரங்கள், பலமற்ற மலைச் சரிவுகளில் வாழக் கூடிய அவலம் அவர்களையே சூழ்ந்திருக்கிறது. எல்லா பார்ப்பனர்கள் தொடங்கி தலித்கள் வரை சாதியின் எல்லா அடுக்கிலும் ஏழைகள் இருக்கின்றனர். ஆனால் ஏழை என்பதுவே பேரிடரில் பாதிப்படைய போதுமானத் தகுதியில்லை. ’தீண்டத்தகாத’ என்ற சமூக அழுக்கு படிந்திருக்கும் வரை சேரியில் பொருளாதார வசதி படைத்த ஒருவர் வசித்தாலும் புறக்கணிப்பினால் அவர் மீட்பு, நிவாரணம் மற்றும் புனரமைப்பு உரிமைகளை பெற முடியாது. சாதி இந்து ஏழையை விட பொருளாதார ரீதியாக முன்னேறிய ஒரு தலித் விளிம்பு நிலையில் இருப்பதன் காரணம் இந்த சமூகத் தகுதிதான். இந்தியாவில் தலித்களுக்கு சமூகக் கலப்பு தடை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் ஊரின் தனிப் பகுதியான சேரிக்குள் மையச் சமூக இயக்கத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். குப்பையும் கழிவும் சேரும் நிலையில் உள்ள வாழ்விடம், எளிதில் சிதையும் வகையிலான வீடுகள் என பருவ மாற்றத்தின் சாதாரண மழையே தலித்களுக்கு பேரிடர் தான்.   பொது வளங்களில் புழக்கம், கல்வி உரிமை மறுப்பு என ஏற்கனவே அவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் பேரிடர் அவர்கள் மேல் மேலும் அழுத்தமான இருளைக் கவியச் செய்கிறது. சாதி இந்துக்களின் குரல்களைத் தாண்டி இவர்களது கதறல்கள் வெளியே கேட்பதில்லை.

இந்த சமூக உண்மை மத்திய மாநில அரசு களுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் பேரிடர் எதிர்செயலில் சமூக நீதியை நிலைநிறுத்தும் வகை யிலான செயல்திட்டங்களை அவை வகுக்கவே இல்லை. இந்தியா இயற்கை பேரிடர்களின் பூமியாக இருக்கையில் பேரிடர் மேலாண்மைக்கே இன்னும் அது தயாராகவில்லை என்பது ஒவ்வொரு முறையில் உண்டாகும் பாதிப்புகள் உணர்த்துகின்றன. ஆண்டுதோறும் வெள்ளப் பாதிப்பு வந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்
கைகள் எடுக்க வேண்டியதன் அவசியத்தை அரசுகள் உணரவில்லை. இந்நிலையில் பேரிடரில் சாதியப் பாகுபாட்டை களைய அரசுகளிடம் எதிர்பார்ப்பதெல்லாம் மேலதிகமான பேராசையாகிறது. ஆனால், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான தலித்திய மற்றும் மனித உரிமை அமைப்புகள் பேரிடரில் சாதியப் பாகுபாட்டினை களைய தொடர்ந்து ஆய்வறிக்கைகளையும் வழிகாட்டுதல்களையும் அளிக்கின்றன. 2004 சுனாமிக்குப் பிறகு தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005ல் உருவாக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் மாநில அளவிலான ஆணையங்களும் இதன் பின்னர் தான் தோன்றின. இந்தச் சட்டத்தில் விளிம்பு நிலையில் உள்ள தலித்களை உள்ளடக்கும் வரையறைகள் சேர்க்கப்பட வேண்டுமென பலதரப்பட்ட தலித்திய அமைப்புகளிடமிருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. தேசிய தலித் கண்காணிப்பகம் மற்றும் தலித் மனித உரிமைகளுக்கான தேசிய பிரச் சாரத்தின் ஆய்வறிக்கை, ‘பேரிடரில் சாதியப் பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவர, தற்போதுள்ள பேரிடர் மேலாண்மை சட்டம் 2005, பேரிடர் மேலாண்மைத் திட்டம் 2009 மற்றும் பல்வேறு வகையான பேரிடர்கள் குறித்தான வழிகாட்டுதல்கள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு பேரிடர் எதிர்ச்செயல் மற்றும் பேரிடர் அபாயக் குறைப்பில் தலித்களை உள்ளடக்கிய திட்டங்களுக்கான சாத்தியங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இச்சட்டத்தின் உட் கூறுகள் மற்றும் இத்திட்டம் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் பாரபட்சமில்லாத சிறப்புக் கவனம் மற்றும் பாதுகாப்பை அவர் களின் தேவைகளை பொறுத்து வழங்க வலியுறுத்துகிறது. ஆனால் உண்மையான பொறுப்பு எப்போது வருமெனில், பேரிடர் மேலாண்மைச் சட்டத்திலும் கொள்கையிலும் இதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு அதை களத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான தொடர்புடைய விதிமுறைகள் உருவாக்கப்படும் போது. கவுரவமாக வாழ்வதற்கான உரிமை; பாதுகாப்பிற்கான உரிமை மற்றும் மனிதாபிமான உதவிகளைப் பெறுவதற்கான உரிமைகளை நிலை நிறுத்த பேரிடர் எதிர்ச்செயல் மற்றும் அபாயக் குறைப்பில் உரிமைகள் சார்ந்த ஒரு அணுகுமுறை அவசியமாகிறது’’ என்று வலியுறுத்துகிறது. தலித்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பல்வேறு சட்டங்கள் நம்மிடம் இருக்கின்றன. ஆனால் சாதியே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் அதிகாரத்தைக் கொண்ட நாட்டில் சட்டங்கள் வெறும் காகிதம் மட்டுமே. அதற்கு இச்சட்டமும் விதிவிலக்கல்ல. சாதிய நடைமுறைகளை வாழ்வியல் விதியாக வைத்திருக்கும் சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஒவ்வொரு நாளும் பேரிடரே. சாதி இந்துக்கள் தமது வன்மத்தால் தலித்களின் வாழ்வை நிமிடந்தோறும் சிதைக் கின்றனர். நம்மால் அதை தடுக்க முடிந்ததா என்ன? தம் தரப்பில் எல்லாம் சரியாக இருக்கும்போதே தலித்களை ஒடுக்குகிறவர்கள் பேரிடர் போன்ற இக்கட்டுகளில் தலித்களை சேர்த்துக் கொள்வார்கள் என எதிர்பார்ப்பது கோமாளித்தனம். நாம் ஒவ்வொரு சூழலிலும் தலித்கள் மீதான ஒடுக்குமுறையைப் பற்றிப் புலம்பிக் கொண்டிருக்க முடியாது. அதில் உரிமை யில்லை, இதில் புறக்கணிப்படுகிறோம் என பேசிக்கொண்டே இருப்பதில் பயனில்லை. ‘புரட்சிக்கு முன்னர் அழித்துவிடவில்லை எனில் புரட்சிக்குப் பின்னர் சாதி உங்களை வழிமறிக்கும்’ என்கிறார் பாபாசாகெப் அம்பேத்கர். விடுதலைப் போராட்டம் உட்பட இந்தியாவில் நடைபெற்ற / நடைபெறும் எல்லா புரட்சிகளிலும் கிளர்ச்சிகளிலும் அம்பேத்கரின் இந்த கூற்று மெய்ப்பட்டு வந்ததை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்தியர்களின் வாழ்வை இயக்கும் சக்தியாக சாதி நீடிக்கிற வரை இங்கு வெடிக்கும் எந்த மக்கள் புரட்சியும், சட்ட உருவாக்கமும் வேடிக்கையானதும் நிரந்தர மற்றதும் மாற்றத்துக்கு உதவாததும் ஆகிறது. இதோ இங்கே கறுப்புப் பணவேட்டை நடந்துகொண்டிருக்கிறது. நமது சமூகக் கட்டமைப்பின்படி இந்நடவடிக்கை தலித் மக்களையே பெரிதளவில் பாதித்திருக்கும் என உறுதியாகச் சொல்ல முடியும். பல தரப்பு மக்களும் கலவையாக வாழும் சாத்தியமிருக்கிற நகரங்களை விடுங்கள்! கிராமங்களில் சாதி இந்துக்களின் அதிகாரம் மேலோங்கி இருக்கின்ற
ஊர் வங்கிகளில் தலித்களால் பணத்தை எடுத்துவிட முடியுமா? மேலுமொரு கசப்பான உண்மை என்னவெனில் இந்தியாவில் வங்கிக் கணக்கில்லாத 60 கோடி பேரில் எத்தனை சதவிகிதம் தலித்கள்? இயற்கைப் பேரிடர் மட்டுமல்ல இது போன்ற அரசு உருவாக்கும் பேரிடர்களிலும் தலித்கள் பலிகொள்ளப்படுகின்றனர். நமது கவலை எல்லாம் பண ஊழலைப் பற்றியதுதான். ஆனால் ஆயிரமாண்டுகாலமாக சக மனிதரை தீண்டாமையிலும் சாதி இழிவிலும் வைத்திருக்கும் அற ஊழல் பற்றி இங்கு யாருக்கும் எந்தக் கவலையும் இல்லை. கறுப்புப் பணத் திற்காக தொலைக்காட்சியில் தோன்றி நாடி புடைக்க உரை நிகழ்த்தும் பிரதமர், இந்தியர்கள் இதை சகித்துக் கொள்ளத்தான் வேண்டுமென உத்தரவிடும் பிரதமர் என்றேனும் சாதி ஒழிப்பிற்காக இப்படியரு நடவடிக்கையை எடுக்க முடியுமா? ஊர்- சேரி கட்டமைப்பு இன்றோடு ஒழிகிறது, தேசத்தின் அற ஊழலைத் தடுக்கும் இந்நடவடிக்கையை இந்தியர்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இத்தனை உறுதியோடு உத்தரவிடும் துணிவு பிரதமருக்கு இருக்கிறதா? பண ஊழல் என்பது அற ஊழல் எனும் மாமலையின் சிறு மடு. சாதி எனும் மாமலையை அப்படியே வைத்துக் கொண்டு கறுப்புப் பணம் எனும் மடுவைத் தகர்க்க இத்தனை ஆர்ப்பாட்டம். அரசு உருவாக்கிய இந்த கறுப்புப் பண ஒழிப்பு பேரிடரில் சாதிப் பாகுபாடு என்ற ஆய்வை தேசிய தலித் கண்காணிப்பகம் போன்ற அமைப்புகள் நடத்தினால் தலித்கள் எவ்வாறு இதில் வதைக்கப்பட்டனர் என்ற உண்மை வெளியே வரும். சாதியை ஒழிக்காமல் இங்கு புரட்சியும், வளர்ச்சியும் மறுமலர்ச்சியும் சாத்தியமில்லை. சாதியை ஒழிக்காமல் இந்நாடு துளியளவும் முன்னோக்கி நகராது. கறுப்புப் பணத்தை ஒழித்தால் நாடு சீரடைந்துவிடும் என நாடகங்களை வேண்டுமானால் நடத்திக் கொண்டிருக்கலாம். இந்தியாவின் சீர்திருத்தம் சாதி ஒழிப்பில் இருந்தே தொடங்குகிறது. 20 கோடி தலித்களை தீண்டாமையின் பிடியில் வைத்து சாதிய வன்கொடுமைகளில் வதை செய்யும் இந்நாடு நாகரிகமானதா? கறுப்புப் பண ஒழிப்பல்ல; இந்நாட்டை நாகரிகமானதாக்கும் சாதி ஒழிப்பே நாம் நிகழ்த்த வேண்டிய முதல் புரட்சி! இயற்கைப் பேரிடர், அரச பேரிடர், மனித பேரிடர் எல்லாவற்றிலும் இருந்து தலித் மக்களைக் காக்கவல்லது அந்த ஒற்றைப் புரட்சிதான். அதை நிகழ்த்தும் துணிவு நமக்கு இருக்கிறதா?

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments