ரத்தத்தால் நிலத்தைக் காக்கும் இயற்கை நேசிகள்!

நந்தினி

எங்களுடைய குரலை நாங்கள் இன்னும் உயர்த்துகிறோம். எங்களிடம் ஆயுதங்கள் இல்லை. எங்களிடம் பணம் இல்லை. எங்களிடம் சக்தி இல்லை. ஆனால், எங்களிடம் இன்னும் குரல் உள்ளது. நாங்கள் அதை பயன்படுத்துகிறோம். அதுதான் எங்களுக்கான உண்மையான வளர்ச்சியை நோக்கி இட்டுச் செல்கிறது” மார்டின் கோம்ஸ், (இயற்கை ஆர்வலர் ஹோண்டுராஸ்) இதுதான் லத்தீன் அமெரிக்காவில் உள்ள கோத்தேமலா  (GAUTEMALA)  மற்றும் ஹோண்டு ராஸ் (HONDURAS)  நாடுகளில் உள்ள இயற்கை ஆர்வலர்களின் குரலாக உள்ளது. இந்த இரு நாடுகளும்தான் இயற்கை ஆர்வலர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளாக உள்ளது என ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் ஆய்வு அறிக்கை சொல்கிறது. இயற்கை ஆர்வலர்கள் மீதான நய வஞ்சகமான அச்சுறுத்தல்கள், போலியான குற்றச்சாட்டுகள், தாக்குதல்கள், ஆர்வலர்களின் கொலைகள் இவையெல்லாம் இந்த இரு நாடுகளையும் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுக்கு ஆபத்தான நாடுகளாக மாற்றியுள்ளன. “நாங்கள் இந்த நிலத்தை எங்கள் ரத்தத்தால் காக்கிறோம்” என்ற பெயரில் ஆம்னெஸ்டி வெளியிட்டுள்ள ஆய்வில், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் அவர்களின் அமைப்புகள் மீதான வன்முறைக்கு எப்படி நீதி கிடைக்காமல் போகிறது என்பதை விளக்குகிறது.

குளோபல் விட்னஸ் (GLOBAL WITNESS) என்கிற என்.ஜி.ஓ-வின் ஆய்வில், 2015-ஆம் ஆண்டு உலகளவில் கொலை செய்யப்பட்ட 185 இயற்கை ஆர்வலர்களில் 122 பேர் அதாவது 65% பேர் லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட அனைவருமே தங்களுடைய நிலம், பிரதேசம், சுற்றுச்சூழல் இவற்றின் மீதான தங்கள் மக்களின் உரிமைகளுக்காக போராடியவர்கள். இந்த 122 கொலைகளில், 8 கொலைகள் ஹோண்டுராசிலும், 10 கொலைகள் கோத்தேமலாவிலும் அரங்கேறியுள்ளது. இது லத்தீன் அமெரிக்காவில் நடைபெற்ற கொலைகளில், அதிகப்படியான கொலைகள் இந்த இரு நாடுகளில் மட்டுமே நடைபெற்றுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும். ஹோண்டுராவைச் சேர்ந்த பெர்டா கேசர்ஸ் (BERTA CACERES) என்ற இயற்கை ஆர்வலர் கடந்த மார்ச் மாதம் கொலை செய்யப்படுகிறார். அதன்பின், 6 மாதங்கள் கழித்து ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் ஹோண்டுராஸ் மற்றும் கோத்தேமலாவில் கள ஆய்வு செய்து இந்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. “மனித உரிமைகளுக்காக போராடு பவர்களுக்கு பெர்டா கேசர்ஸ்-ன் படுகொலை ஒருவித மரண திருப்புமுனையாகவே மாறியுள்ளது. வெளிப்படையான மற்றும் செயல்திறன் மிக்க விசாரணை என்பது இந்தக் கொலைகள் குறித்து நடைபெறவில்லை. தங்களுடைய நிலத்தின் மீதான உரிமைகளுக்காக போராடுபவர்களுக்கு இத்தகைய கொலைகள் ஒருவித வெறுப்பை உண்டாக்குகிறது.”, என ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் அமெரிக்க இயக்குனர் எரிக்கா குவேரா ரோசாஸ் (ERICA GUEVARA – ROSAS) கூறுகிறார்.

ஹோண்டுராஸ் – மரணத்திற்கான தாக்குதல்:

இயற்கை ஆர்வலர் பெர்டா கேசர்ஸ், ஹோண்டுராவின் தலைநகரம் டெகுசிகல்பாவில் (TEGUCIGALPA) உள்ள அவரது வீட்டில் கொலை செய்யப்பட்ட உடனேயே  COPINH  என்கிற ஹோண்டுராஸில் மனித உரிமைகள், இயற்கையை காத்தல் உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபடும் அவரது அமைப்பின்மீதும் தாக்குதல் நடத்தப் பட்டது.  GUALCARQUE   என்கிற ஆற்றின்மீது ஆபத்தான வகையிலும், அங்குள்ள மக்கள் பாதிக்கப்படக் கூடிய வகையிலும் அந்நாட்டு அரசாங்கம் கட்ட முடிவெடுத்த அணையை எதிர்த்து, பெர்டா கேசர்ஸ் பல ஆண்டுகள் போராடியவர். அந்த ஆற்றைப் பாதுகாப்பதற்கான இயக்கத்தை 2013-ஆம் ஆண்டு தொடங்கிய அவருக்கு பலவிதமான அச்சுறுத்தல்கள் வந்திருக்கின்றன. ஆனால், அவை எதுவுமே முறையாக விசாரிக்கப்படவில்லை. மனித உரிமைகளுக்கான அமெரிக்க ஆணையம், இயற்கை ஆர்வலர்கள் அனைவருக்குமான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியபோதும், ஹோண்டுராஸ் அரசாங்கம் அதனை செயல்படுத்த தவறியது.

பெர்டா கேசர்ஸ்-ன் படுகொலைக்கு பிறகு COPINH மற்றும் அதன் கிளை அமைப்பான MILPAH இவற்றில் தன்னார்வலர்களாக உள்ளவர்கள்மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அடையாளம் தெரியாத நபர்கள், அவர்களின் வீட்டின் முன்பும், அவர் களுக்கான வானொலி நிலையம் முன்பும்
தாக்குதல்களை நிகழ்த்தியதாக தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர்.COPINH அமைப்பைச் சேர்ந்தவரான நெல்சன் கார்சியாஎன்ற ஆர்வலர், கடந்த மார்ச் மாதம், தான் ஒருங்கிணைக்க உள்ள போராட்டம் குறித்து அமைப்பில் உள்ள மற்றவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் வீட்டுக்கு வரும் வழியில் சிலரால் கொலை செய்யப்பட்டுள்ளார். அதன்மீதான விசாரணையை அதிகாரிகள் துவங்கினார்களே தவிர இன்னும் நிறைவடையவில்லை. லெஸ்பியா உர்குவியா என்கிற நிலமீட்புப் போராளி ஒருவர் கடந்த ஜூலை மாதத்தில் குப்பைக் கிடங்கில் இருந்து கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அதன்பிறகு, 2 நாட்கள் கழித்து இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். ஆனால், அவர்கள் மீது ஒரு வழக்கு கூட காவல் துறையினர் பதிவு செய்யவில்லை. MILPAH இயக்கத்தைச் சேர்ந்த தலைவரான மார்டின் கோம்ஸ் வாஸ்க் மேற்கு ஹோண்டு ராஸிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, சில நபர்களால் கல்லால் தாக்கப்பட்டார். ஹோண்டுராஸ் நிலத்தின்மீதான மக்களின் பாரம்பரிய உரிமையைப் பறித்து நிலத்தை அபகரித்தவர்கள்தான் தன்னைத் தாக்கியதாக மார்டின், அதிகாரிகளிடம் தெரிவித்தபோது கூட தாக்குதல்குறித்த விசாரணையை அதிகாரிகள் துவக்கவில்லை. பெர்டா கேசர்ஸ்-ன் படுகொலையை எதிர்த்து போராடுபவர்கள், அவர்களுக்கான வழக்கறிஞர்கள்மீது கூட தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. பெர்டா கேசர்ஸின் குடும்பத்துக்காக வாதாடும் வழக்கறிஞர் விக்டர் ஃபெர்ணாண்டஸின் அலுவலகத்தை சில நபர்கள் கடந்த ஜூலை 13-ஆம் தேதி அன்று சிலர் சோதனையிட்டனர். பெர்டாவின் வழக்கு தொடர்பான சில முக்கிய ஆவணங்களை அவர்கள் எடுத்து சென்றனர். இதன்மீதான, விசாரணையை கூட அதிகாரிகள் இன்னும் துவங்கவில்லை. ஃபெலிக்ஸ் மொலினா என்கிற ஹோண்டு ராஸைச் சேர்ந்த பத்திரிக்கையாளரைச் அவர் காரில் பயணித்தபோது சிலர் கொலை செய்தனர். எதற்காக? பெர்டா கேசர்ஸ்-ன் கொலை குறித்து முக்கியமான கட்டுரையை பத்திரிக்கையில் எழுதியதற்காக. இந்தக் கொலை மீதான விசாரணையைக்கூட முழுமூச்சுடன் அதிகாரிகள் நடத்தவில்லை. 2013-ஆம் ஆண்டு ஹோண்டுராஸில் நடத்தப்பட்ட 80 சதவீத படுகொலைகளில் குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை என ஆம்னெஸ்டி ஆய்வறிக்கை சொல்கிறது. இதேபோல், கோத்தேமலாவில் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் நிலமீட்பு ஆர்வலர்கள் மீது காவல் துறை மற்றும் அதிகாரிகள் பொய்யான குற்றச் சாட்டுகளையும் புகார்களையும் முன்வைத்து ஆர்வலர்கள் மக்களுக்கு எதிரானவர்கள் போன்றதொரு பிம்பத்தை உருவாக்கியுள்ளது. கனிம வளங்கள் உள்ளிட்ட இயற்கை வளங் களை சூறையாடும் கும்பலை ஒடுக்குவதற்காக போராடும் ஆர்வலர்கள் மீதே அதிகத் தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன. கோத்தேமலாவில் ஏற்படுத்தப்பட்ட கனிம சுரங்கத்தை எதிர்த்து போராடியவர்களின் தலைவர்கள் அவர்களது குழந்தைகளுடன் சேர்ந்து தாக்குதல்களுக்கு ஆளானார்கள். இவைகளும் வெறும் வழக்காக மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது வேதனைக்குரியது.

செயல்திறனற்ற பாதுகாப்பு:

இயற்கை ஆர்வலர்கள் மீதான பாதுகாப்பு என்பது கோத்தேமலா மற்றும் ஹோண்டுராஸ் ஆகிய இரு நாடுகளிலுமே செயல் திறனற்ற ஒன்றாகத்தான் உள்ளது. ஹோண்டுராசில் இதுபோன்று இயற்கை ஆர்வலர்களைப் பாது காப்பதற்குப் பல திட்டங்கள் இருந்தாலும், அவை பல்வேறு அரசியல் காரணங்கள் மற்றும் பொருளாதாரக் காரணங்களால் முழுமையாக செயல்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. தாங்கள் யாரால் தாக்கப்படுகிறோமோ அவர்களைச் சார்ந்த அதிகாரிகளையே தங்கள் பாதுகாப்புக்கு பொறுப்பானவர்கள் என நியமிக்கப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். சமூக இயக்கங்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மீதான பல தாக்குதல்களில் காவல் துறையும் ஒத்துழைப்பு கொடுத்துள்ளதாக பல ஊடகங்களின் தரவுகள் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன. இயற்கை மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்களை கொரில்லாக்கள், தீவிரவாதிகள், வளர்ச்சிக்கு எதிரானவர்கள், சுற்றுச்சூழல் தீவிரவாதிகள் என பெரும் பான்மை மக்களிடையே சித்தரிப்பது போன்ற ஆபத்தான போக்கு மிக தீவிரமாக ஹோண்டு ராஸ், கோத்தமலா நாடுகளை தவிர உலகம் முழுவதிலும் உள்ள ஆர்வலர்கள் மீது கட்டமைக் கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவில், கோத்தேமலா மற்றும் ஹோண்டுராஸ் நாட்டு அரசாங்கத்திற்கு சில கோரிக்கைகளையும் ஆம்னெஸ்டி முன்வைக்கிறது.

* நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு, ஆர்வலர்கள் மீதான நன்மதிப்பை ஏற்படுத்தி விழிப்புணர்வை உண்டாக்குவது
* தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ரீதியாக ஆர்வலர்கள் மீதான பாதுகாப்பை உறுதிப்படுத்துவது.
* மனித உரிமை ஆர்வலர்கள் பாதுகாப்பு குறித்த ஐநாவின் தீர்மானத்தை செயல் படுத்துவது. இவையெல்லாம் சில முக்கியமான கோரிக்கைகள்.

ஹோண்டுராஸ், கோத்தேமலா மட்டுமல்ல. இயற்கை ஆர்வலர்கள் மீதான தாக்குதல்கள், அவர்களை அலட்சியம் செய்தல், தீவிரவாதிகள் போல் சித்தரித்தல், பொய் வழக்கு தொடர்தல் என்பது இந்தியாவிலும் அதிகளவில் நடை பெறுகிறது. தங்கள் நிலத்தின் மீதான உரிமையை கோருதல், தங்கள் மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையிலான திட்டங்களுக்கு எதிராக போராடு பவர்கள் மீது எத்தனையோ முறை தேசத்துரோக வழக்குகள் பாய்ந்துள்ளன. கூடங் குளம் அனு உலைக்கு எதிரான போராட்டங்கள், நர்மதா நதி மீது அனை கட்டுவதற்கு எதிரான போராட்டம், மணல் கொள்ளை, கனிமக் கொள்ளை, நியூட்ரினோ, மீத்தேன் எதிர்ப்பு என அனைத் திலும், பாதிக்கப்படக்கூடிய மக்கள் களத்தில் இருந்து போராடுகிறார்கள். அவர்கள் மீது எத்தனைமுறை அரசு எந்திரம் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது என்பதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம். இயற்கை ஆர்வலர்களை தீவிரவாதிகள் போல் சித்தரிக்காமல், அவர்களது கோரிக்கைகளுக்கு கொஞ்சம் காது கொடுத்தால் மக்களுக்கான வளர்ச்சி என்பது சாத்தியம்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments