யாருக்காக பாதுகாக்கப்படுகின்றன புலிகள்?

விவேக் கணநாதன்

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29ஆம் தேதி சர்வதேச புலிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது அழிந்துவரும் விலங்கினமாக அறிவிக்கப் பட்டுள்ள புலிகளின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களாக குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதாகவே புள்ளிவிவரங்கள் தெரிவிக் கின்றன. கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உலக வன உயிர் நிதியமும், சர்வதேச புலிகள் அமைப்பும் அளித்த புள்ளிவிவரத்தின் படி உலகம் முழுவதும் சுமார் 3,890 புலிகள் உள்ளன. 2010ம் ஆண்டு 3,200 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2016ல் சுமார் 23 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் புலிகளின் எண்ணிக்கை மிக கணிசமாக உயர்ந்துள்ளதாக அறிக்கை அளிக்கப் பட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு கணக்கீட்டின் படி இந்தியாவில் சுமார் 2,226 புலிகள் உள்ளன. இது கடந்த 2010மல் இருந்த புலிகளைவிட சுமார் 30% அதிகமாகும். இந்தியாவில் புலிகள் குறித்த ‘விழிப்புணர்வு’ 1970களில் தோன்றியது. இதன் விளைவாகவே சுதந்திரம் அடைந்தபிறகு இந்திய விலங்காக அங்கீகரிக்கப்பட்டிருந்த சிங்கத்திற்குப் பதிலாக புலி இந்திய விலங்காக அங்கீகரிக்கப்பட்டது. 1972ம் ஆண்டு புலி இந்தியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, 1973ம் ஆண்டு புலிகள் பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட போது இந்தியாவில் இருந்த புலிகளின் எண்ணிக்கை 1867 ஆகும். புலிகள் பாதுகாப்புத்திட்டம் தொடங்கப்பட்டபோது சுமார் 9,500 சதுர கி.மீ நிலப்பகுதியில் 9 புலிகள் சரணாலயங்கள் இருந்தன. தற்போது இந்தியாவின் 18 மாநிலங்களில் புலிகள் உள்ளன. புலிகள் பாதுகாப்பு வனப்பகுதி சுமார் 68 ஆயிரம் சதுரகி.மீ. அதாவது, இந்தியாவின் மொத்த நிலப்பகுதியில் சுமார் 2% நிலப்பரப்பு புலிகள் பாதுகாப்பு வனப்பகுதியாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த நிலப்பரப்பில் சுமார் 47 புலிப் பாதுகாப்பு வனப்பகுதிகள் உள்ளன. புலிப்பாதுகாப்பு பற்றி பேசுகையில் புலி வேட்டை வரலாற்றை நினைவுகூறுவதும் முக்கியம். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகம் முழுவதும் 1,00,000 புலிகள் இருந்தன. இந்தியாவில் மட்டும் சுமார் 40,000 புலிகள் இருந்தன. ஆனால், மன்னர்களின் வேட்டை இச்சைக்கும், பல மீட்டர் தூரத்தில் பரண் உயரத்தில் பாதுகாப்பாக நின்றுகொண்டு புலிகளை சுட்டுவிளையாடும் வீரதீரத்திற்கும் புலிகள் பலியாகின. பிரிட்டிஷார் ஆதிக்கத்திலும் பல ஆயிரம் புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டன. பிரிட்டிஷ் வைஸ்ராய் கர்சன்,  ராட்சதப் புலி ஒன்றைச் சுட்டு வீழ்த்தி, அதன் மீது கால்வைத்துக் கொண்டு தன் மனைவியுடன் நிற்கின்ற புகைப் படம் நம்மிடையே மிகப்பிரபலம். இந்தியாவில் தங்கியிருந்த அமெரிக்க விமானப்படை பிரிகேடர் ஜென்ரல் வில்லியம் மிட்செல் இந்தியாவில் நடந்த புலிவேட்டையைப் பற்றிக் குறிப்புகளை எழுதியுள்ளார். அதில், 1923ம் ஆண்டு தற்போதைய சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜா மாவட்டப்பகுதியில் சுமார் 352 புலிகள் ஒரே ஆண்டில் வேட்டையாடப்பட்டுள்ளன என்கிற தகவல் நம்மை அதிரச்செய்கிறது.

இப்படி வரன்முறை இல்லாமல் சுட்டுக் கொல்லப்பட்ட புலிகளைப் பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டன. பல நூறுகோடி ரூபாய் இதற்காக செலவிடப்படுகிறது. புலிகள் சரணாலயம், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள், புலி பாதுகாப்பு கட்டுப்பாட்டுப் பகுதிகள் என இந்திய வனப்பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகளால் சட்டவேலி கட்டப்பட்டுள்ளது. இன்றைக்கு இந்தியாவில் மிகப்பெரிய நிலப் பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. புலிகளின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாக அறிக்கை இருக்கிறது. 2022க்குள் புலிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக உயர்த்தவும் ஆசிய நாடுகளின் அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது வருடத்திற்கு 27% புலி வளர்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இந்திய அரசு 380 கோடி நிதியை ஒதுக்கியது. ஆனால், புலிகளின் இயல்பை ஆராயும் ஆய்வாளர்கள், தற்போது இருக்கும் சூழலின் அடிப்படையில் அத்தகையத் திட்டம் சாத்தியமில்லை என்கிறார்கள். ஏனெனில், தற்போது, இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட புலிகளுக்கான வனப்பகுதியில் 25% மட்டுமே முறையாகப் பராமரிக்கப்படுகிறது. இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை உயர்ந்திருந்தாலும் மொத்தமுள்ள 18 மாநிலங்களில் மிகக்குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. சுமார் 1,200 சதுர கி.மீ வனப் பாதுகாப்புப் பகுதி உள்ள ஜார்கண்ட் மாநிலத்தில் 3 புலிகள்தான் உள்ளன. அதேநேரம், கேரள மாநிலம் வயநாடு வன உயிர் சரணாலயத்தின் வெறும் 344 சதுர கி.மீ பரப்பளவில் 76 புலிகள் வாழ்கின்றன. தமிழகம் – கேரளம் – கர்நாடக வனப் பகுதிகளான முதுமலை – பந்திப்பூர் – நாகர்ஹொளே – வயநாடு வனப் பாதுகாப்பு அரணில் மட்டும் 570 புலிகள் வாழ்கின்றன. இந்தப் பகுதிதான் உலகின் மிகப்பெரிய புலிகள் வாழிடம் ஆகும். இத்தகைய வேறுபாடுகள் நிலத்தைப் பொறுத்த மட்டும் இல்லை. உணவு, வாழிடம், நீர், உயிர்ச்சூழல் உள்ளிட்ட பல காரணங்களால் இவை வேறுபடுகின்றன. ஒட்டுமொத்தமாக, தற்போது இருக்கும் பாதுகாக்கப்பட்ட நிலப்பகுதியில் மட்டுமே கூடுதலாக சுமார் 30,000 புலிகள் சுதந்திரமாக வாழமுடியும். ஆனாலும், புலிகளைப் பாதுகாக்க பழங்குடியின மக்களுக்கு பட்டா வழங்குவதைத் தடுக்க புலி பாதுகாப்பு ஆணையம் உத்தர விடுகிறது! ஏன்?

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments