பாலூட்டிகள் நிகழ்த்தப்போகும் வாணவேடிக்கை!

ஜீயோ டாமின்

ஆறுகோடியே ஐம்பதுலட்சம் ஆண்டுகளுக்குமுன் அந்த வாணவேடிக்கை நடக்காது போயிருந்தால் ஒருவேளை இப்புவியை அந்த பிரம்மாண்ட பல்லிகள்தான் ஆண்டு கொண்டிருந்திருக்கும். ஆம்! அந்த பெரும் விண்கல் பூமியில் விழுவதற்குமுன் ஊர்வன இனத்தைச்சார்ந்த (Reptiles) டைனோசர்களும் பிற உயிரினங்களும்தான் இப்புவியின் நிலத்தையும் கடலையும் வான்பரப்பையும் ஆக்கிரமித்திருந்தன.

ஒருபுறம் விண்கல் மோதலால் ஏற்பட்ட அதிர்வும் வெப்பமும் பலலட்சம் உயிரினங்களைக் கொன்றொழிக்க, இன்னொருபுறம் புவியிலிருந்து வழிமண்டலத்தையும் தாண்டி வீசப்பட்ட தூசும் கரியும் நிறைந்த பெரும் புகைமண்டலம் புவிப்பரப்பை சூரியனிலிருந்து மறைத்துவிட்டிருந்தது. மோதலில் ஏற்பட்ட அதிர்வலைகள் நிலத்திலும் கடலிலும் பெரும் நிலநடுக்கங்களையும் எரிமலை வெடிப்புகளையும் ஏற்படுத்தின. தாங்கொண்ணா வெப்பத்தில் பச்சைமரங்களும் விலங்குகளும் நொடிப்பொழுதில் தீப்பிடித்தெரிந்து சாம்பலாகின. பெரும் விசையுடன் விண்ணில் தூக்கி எறியப்பட்ட பெரும்கற்கள் அதேவிசையுடன் புவிக்காந்தத்தால் ஈர்க்கப்பட அவை வழிமண்டலத்தில் தீப்பிடித்துச் சிதறி பலவர்ண வாணவேடிக்கைபோல ஜாலம் காட்டின. நிலநடுக்கங்கள் பிரம்மாண்ட சுனாமி அலைகளை தோற்றுவித்தன. பல மாதங்கள் தொடர்ந்த இருட்டின் ஆக்கிரமிப்பில் சூரிய ஒளியின்றி செடிகொடிகளும் மரங்களும் கருகின. தொடர்ந்து நிலைபெற்றிருந்த தூசுப்படலம் புவியின் காலநிலையையே மாற்றிவிட்டிருந்தது. கடலின் அடிப்படை உணவாதாரமான பிளாங்க்டன்கள் அழிந்தன. எங்கும் பெரும் உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. பசுமைப்போர்வை புவியிலிருந்து மறைய தொடர்ந்து தாவரங்களை உண்ணும் விலங்குகள் பட்டினியால் மடிந்தன. அடுத்ததாக அவற்றை உண்ணும் ஊனுண்ணிகளும் கூட்டம் கூட்டமாய் மடிந்தன. ஆங்காங்கே புவிப்பரப்பில் இடப்பட்டிருந்த டைனோசர்களின் முட்டைகள் பொறிப்பதற்குப் போதுமான வெப்பம் புவிப்பரப்பை வந்தடையவில்லை. கருமேகங்கள் தம் திரையை விலக்கி சூரிய ஒளி புவியை அடைந்தபோது அதன் சரிபாதிக்கும் மேலான உயிரினங்கள் மறைந்து போயிருந்தன. ஆனால் உலகின் இயக்கம் அத்தோடு நின்றுவிடவில்லை. பெரும் உணவுப்பஞ்சத்தில் அதிகஉணவு தேவைப்படும் பெருவிலங்குகள் அனைத்தும் மடிந்திருக்க, சிறுவிலங்குகளான பாலூட்டிகள், தவளைகள், நீர்நிலவாழ் பல்லிகள் (Salamander),  ஆமைகள் மற்றும் முதலைகள் பேரழிவிலிருந்து தப்பிப்பிழைத்திருந்தன. பாலூட்டிகள் சிறிய விலங்குகளா என்றுதானே கேட்கிறீர்கள்? ஆம்! ஆறுகோடியே ஐம்பது லட்சம் ஆண்டுகளுக்குமுன் பாலூட்டிகள் டைனோசர்களின் விரல் இடுக்குகளில் புகுந்து வெளியேறும் வகையிலான சிறிய எலிகள் போன்ற கொறிவிலங்குகளாகவே இருந்தன. யானைகளோ திமிங்கலங்களோ இல்லை குறைந்தபட்சம் கோமாதாவோகூட அதுவரை பிறந்திருக்கவில்லை. மிகக்குறைந்த அளவே உணவு தேவைப்பட்டதும் குட்டிப்போட்டு பால் கொடுக்கும் இனப்பெருக்க முறையும் சிறு பாலூட்டிகளை அந்தப் பேரழிவில் பிழைக்கச்செய்திருந்தன. பகலை ஆண்டுவந்த டைனோசர்கள் கண்ணயரும் இரவுநேரம் வரும்வரை தம் வளைகளுக்கும் மறைந்திருந்து பின் வெளிவரும் இரவாடிகளாகவே அன்றைய பாலூட்டிகள் இருந்தன. டைனோசர்களின் மறைவிற்குப்பின் தம் மறைவிடங்களில் இருந்து வெளிவந்து அவை சூரியனை உற்று நோக்கியபோது வகைதொகையற்று பரவியிருந்த ஊர்வனவற்றின் யுகம் முடிந்திருந்ததையும் மிகச்சிறு எண்ணிக்கையிலான இனங்களைக் கொண்டிருந்த தாம், பல்லாயிரம் இனங்களாக பல்கிப் பெருகி புவியை நிரப்பக் காலம் கனிந் திருந்ததைக் கண்டன. உலகம் தொடர்ந்து வேகமாகச் சுழன்று கொண்டிருந்தது. இருபத் தைந்து கோடி ஆண்டுகளுக்கும் முன்பே பாலூட்டிகள் தோன்றியிருந்தாலும் அவை டைனோசர்களின் மறைவுக்குப்பின்பே ஏற்றம் பெறத் தொடங்கின. எலியை ஒத்த தோற்றமுடைய உயிரினத்திலிருந்து (morganucodon <https://www. google.co.in/search?biw=1920&bih=949&q=morga nucodon&sa=X&ved=0ahUKEwjdu5Lju8fVAhUJro 8KHQTjB9kQ7xYIJCgA>) தொடர்ந்துவந்த பல இலட்சம் ஆண்டுகளில் பறக்கும் (வெளவால்), நீந்தும் (திமிங்கலம்), நடக்கும் (குரங்கு), குதிக்கும் (கங்காரு), தவழும் (கடல்பசு), சறுக்கும் (பறக்கும் அணில்), ஓடும் (மான்) விலங்குகள் முதலாய் இறுதியாக “வாகனம்”ஓட்டும் பாலூட்டிகள்வரை (மனிதன்) பலவாறாக பரிணமித்தன. இருபத்திரண்டரைகோடி ஆண்டுகளுக்குமுன் ஒரே கண்டமாக இருந்த பேஞ்சியோவில் பிறந்து பின் கண்டங்கள் பல துண்டுகளாகப் பிரிந்து தத்தம் வழியில் பயணப்பட ஒவ்வொரு கண்டங்களோடும் பயணித்த பாலூட்டிகள் அவ்வவற்றின் சூழலுக்குத் தகுந்தவாறு தம்மைத் தகவமைத்துக்கொண்டு கோலோச்சத் தொடங்கின.

மூதாதைப் பாலூட்டிகளின் தாடைகள் முன்பு செழித்திருந்த ஊர்வனவற்றின் தாடைகளை விட மேம்பட்டவையாக இருந்தன. கொறிவிலங்குகளாக (Rodents) இருந்த ஆதிப் பாலூட்டிகளின் முன்பற்கள் மரப்பட்டைகளையும் கொட்டைகளையும் நொறுக்குமளவு கூராகவும் நீளமாகவும் இருந்தது மட்டுமின்றி அவை தேய்மானத்தை ஈடுகட்ட ஆயுள் முழுதும் வளர்ந்தன. ஆனால் மேய்ச்சல் விலங்குகளுக்கோ அவை உணவை அரைக்கும் சீரான இடைவெளியற்ற பற்களாகவும், கொன்றுண்ணிகளுக்குத் தசையை கிழிக்கும் கூரான உறுதியான இடைவெளியுடனான கோரைப்பற்களாகவும் அவை பரிணமித்தன. மேலும் பாலூட்டிகளின் பற்களின் அமைப்பு ஊர்வனவற்றைப் போலன்றி உணவை நன்றாக அரைக்க உதவின. இதனால் உணவிலிருந்து கிடைக்கும் சக்தியின் அளவு அதிகரித்தது. அடுத்தடுத்த பரிணாமங்களில் மேலும் தாடை எலும்புகள் காது எலும்புகளிலிருந்து பிரிய, தலை பக்கவாட்டில் பெரிதாகி, அது  மூளையின் அளவு அதிகரிக்க வழிவகுத்தது. வியர்வைச் சுரப்பிகள் மேம்பட்ட பால்சுரப்பிகளாகப் பரிணமித்தன. முட்டைகளைப் போட்டுவிட்டுச் சென்றுவிடும் பெரும்பாலான ஊர்வனபோல அல்லாது குட்டிகளை ஈனும் பாலூட்டிகளுக்குத் தம் குட்டிகளைப் பேணும் பண்பும் அதிகரித்தது. மரங்களில் இலைகளை உண்ணும் ஒட்டகச் சிவிங்கி போன்ற விலங்குகளுக்கு இலைகளையும் பூக்களையும் பறிக்க ஏதுவாக நாக்கின் நீளம் அதிகரித்தது. நீண்ட தொலைவு பயணிக்கவேண்டிய மேய்ச்சல் விலங்குகக்கு கால்விரல்கள் இணைந்து உறுதியான காலணி போன்ற அதேநேரத்தில் எடைகுறைவான குளம்புகளாக (Hooves) வளர்ச்சி பெற்றன. அதேநிலத்தின் இரைக்கொல்லிகள் அதிகம் ஓடவேண்டியிருந்தும் இரையைப் பற்றிப்பிடிக்க விரல்கள் தேவைப்பட்டதால் குளம்புகளற்ற கூரிய நகங்களுடன் கூடிய கால்விரல்களைப் பெற்றன. கடலுக்குள் புகுந்த ஆதிபாலூட்டிகளின் மூட்டுகள் ((Limb)) நீந்துவதற்கேற்ற துடுப்புகளாக மாறி திமிங்கலங்களையும் ஓங்கில்களைய்யும் (Dolphin) நீச்சலடிக்ச்செய்தன. வான்வெளியை வசமாக்கிய ஒளவால் போன்ற விலங்குகளுக்கோ அவை சிறகுகளாகவும் வளர்ச்சி பெற்றன. சண்டையிடவும் இணையைக் கவரவும் பல பாலூட்டிகளுக்குக் கொம்புகள் தோன்றின. ஆதியில் யானைகளுக்குத் தந்தங்களோ இல்லை காண்டாமிருகங்களுக்கு ஒன்றைக்கொம்போ இருந்திருக்கவில்லை. பின்பு யானையின் பற்கள் தந்தங்களாக, காண்டாமிருகத்தின் தடித்த மயிர்களோ கொம்புகளாகின. பாலூட்டிகளுக்கே உரித்தான மயிர்போர்த்திய தோல் (fur) அவை வாழும் பகுதிக்கேற்ப தம்மை மறைத்துக்கொள்ளும் நிறத்தைப் பெற்றது. சவானாவின் மேய்ச்சல் விலங்குகளின் தோல் அந்நிலத்தின் பழுப்பு நிறத்தைப்பெற, இருள் மூடிய அடர் கானகத்துக் கரடிகள் கருமை நிறம் பெற்றன. துருவங்களைச் சேர்ந்த கரடிகளின் மூதாதையர் கடும் குளிரிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ள மேலும் அதிக அடர்த்தியான மயிர்ப்போர்வை பெற்றதோடு பனிபோர்த்திய தம் வாழிடத்தோடு ஒன்றும் வெண்மை நிறம் பெற்றன.

இரவில் வேட்டையாடும் தேவாங்குபோன்ற விலங்குகள் இருளிலும் அதிக ஒளியைப்பெற பெரிய கண்களைப் பெற்றன. ஆனால் கண்ணிருந்தும் பயனற்ற கலங்கிய நீரில் வாழும் ஓங்கில் இனங்கள் மிகச்சிறிய கண்களுடன் பரிணமித்தன. ஆனால் வேட்டையாட அவற்றின் மற்ற புலனுறுப்புகள் வளர்ச்சி பெற்றன. வேட்டைக்காக காதுகளைச் சார்திருக்கும் வெளவால்களுக்கு காதுகள் தலையைவிட பெரிதாகின. குளிர் பிரதேசங்களில் காதுகள் வழியே உடல் வெப்பம் வெளியேறாதிருக்க, பனி யுகத்து யானைகள் மிகச்சிறிய காதுகளையும் மயிர் போர்த்திய தோலையும் பெற்றிருந்தன. ஆனால் திறந்த நிழலற்ற புல்வெளிகளில் வாழும் ஆப்பிரிக்க யானைகள் தம் உடல் வெப்பத்தை வெளியேற்ற பெரிய காதுகளை பெற்றன. அதேநேரத்தில் மரங்கள் அடர்ந்த கானகங்களில் வாழும் ஆசிய யானைகளின் காதுகளோ சிறியதாக இருந்தன. பல்லாயிரம் ஆண்டுகள் முதல் பல இலட்சம் ஆண்டுகள் எடுத்துக்கொண்ட இந்த மாற்றங்கள் அவை இப்புவியில் நிலைத்திருக்கும் வாய்ப்பை அதிகரித்தன. பெருங்கண்டமான கோண்டுவானா நிலப்பரப்பிலிருந்து பிரிந்து தென்னமெரிக்கா, ஆப்பிரிக்கா சென்ற ஆதி பாலூட்டிகள் தொப்புள்கொடிமூலம் பிணைக்கப்பட்ட முழுவளர்ச்சியடைந்த குட்டிகளை ஈன்றெடுக்க.. ஆஸ்திரேலியாவை அடைந்த பாலூட்டிகளோ முழுமைபெறாத குட்டிகளை ஈன்று தம் உடலின் வெளிப்புறத்தில் பையமைத்து (கங்காருக்கள்) அவை வளரும்வரை பாதுகாத்தன. உடல் அமைப்பு மட்டுமின்றி பாலூட்டிகளின் பழக்கவழக்கங்கள் மற்றும் சமூக வாழ்விலும் மாற்றங்கள் ஏற்பட்டன. மேயும் விலங்குகள் தனியாக மேய்ந்தால் எதிரிகளைக் கவனிக்க இயலாது ஊனுண்ணிகளுக்கும் இரையாகும் நிலை ஏற்பட, கூட்டம் கூட்டமாக மேயத் தொடங்கின. தனியாக மேயும் போது எதிரியை நோட்டமிட இரண்டு கண்களே இருந்தன. ஆனால் கூட்டத்துக்கோ பலநூறு கண்கள் பலம் சேர்த்தன. அதற்காக இரைக் கொல்லிகளும் ஏமாந்து போய்விடவில்லை. இரை எவ்வளவு நுட்பமாக தன்னைத்தானே காத்துக்கொள்கிறதோ அதைவிட நுட்பமாக வேட்டையாட ஊனுண் ணிகளுக்கு நுண்புலன்கள் பலம் சேர்த்தன. பாலூட்டிகளின் சுற்றுப்புற வெப்பநிலை கூடினாலும் குறைந்தாலும் அவற்றால் தம் உடல் வெப்பநிலையைக் கட்டுக்குள் (endothermic) வைக்கமுடிந்தது. இது புதிய வாழிடங்களுக்கு எளிதில் அவற்றைத் தகவமைத்துக்கொள்ள உதவியது. குறிப்பிட்ட சில இனங்களில் மூளையின் அளவும் செயல்பாடும் அதிகரித்தன. புதிய செய்கைகளால் ஏற்படும் புதிய அனுபவங்கள் மூலம் விலங்குகள் கற்கத்தொடங்கின. உடான்கள் போன்ற புத்திசாலிக் குரங்குகள் தம் தாயோடு எட்டு ஆண்டுகள்வரை வாழ்ந்து ஏராளமான திறமைகளை வளர்த்துக்கொண்டன. பரிணாமமானது வாழிடம், சூழல் உணவுக்கு தக்கவாறு உடல் அமைப்பை மாற்றியதிலிருந்து வேறுபட்டு மூளையின் மூலமாக தான் பிழைத்திருக்கத் தேவையான கருவிகளை உருவாக்கத் தொடங்கியது. புத்திசாலிக் குரங்குகள் கற்களையும் மரக்குச்சிகளையும் தேர்ந்தெடுத்துக் கருவிகளாகப் பயன்படுத்தும் ஆற்றல் பெறத்தொடங்கின. எல்லாருக்கும் எல்லாமும் கிடைத்துவிட்டால்? எல்லோரும் பிழைத்துவிட்டால் இங்கு வசிப்பதற்கு இடமேது? வாழும்கலை அவ்வளவு எளிதா என்ன?

இல்லை! அது அத்தனை எளிதாக இல்லை. இந்த ஆறுகோடி வருடங்களில் வகைதொகை யின்றிப் பெருகிய பாலூட்டிகளில் பாதிக்கும் மேலான இனங்கள் புதிய சூழல்களை தாக்குப் பிடிக்கமுடியாது அழிந்தன. பல பாலூட்டிகள் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி கண்டன. இருபது முப்பது உள்ளினங்களைக் கொண்டு பெரும் எண்ணிக்கையில் புவியெங்கும் வாழ்ந்த கங்காருகள் சில சிற்றினங்களாக சுருங்கியதோடு எண்ணிக்கையிலும் சுருங்கின. ஆனால் மிகச்சமீபத்தில் தோன்றிய மனிதன் போன்ற பாலூட்டிகள் எண்ணிக்கையில் பல மடங்காய் ஏற்றம் கண்டன. பாலூட்டிகளின் பரிணாமத்தில் மணிமகுடமாய் பரிணமித்த ஹோமோசெப்பியன்கள் சூழலுக்குத் தக்கபடி தம்மை மாற்றுவதிலிருந்து விலகி சூழலை மாற்றுபவையாய் பரிணமித்தன. பலகோடி ஆண்டுகளாய் புவியில் சேமிக்கப்பட்ட வளங்களை சிலநூறு ஆண்டுகளில் சிதைத்து சின்னாபின்னப்படுத்தியதோடு அடுத்தடுத்த கோள்களை ஆக்கிரமிக்கும் நோக்கோடு வானையும் அளக்கத் தொடங்கிவிட்டன அந்த மேதாவிக் குரங்குகள். வாணவேடிக்கை பார்ப்பதில் அவற்றுக்கு கோடி இன்பம். ஆறரைகோடி ஆண்டுகளுக்குமுன் ஏற்பட்ட விண்கல் மோதலால் ஏற்பட்டது போன்றதொரு நிகழ்வை மீண்டும் நிகழ்த்த சிதறிக்கிடக்கும் கோண்டுவானாவின் மேற் பரப்பெங்கும் தயார்நிலையில் அவை அணு குண்டுகளை குவித்துவைத்துள்ளன. யார் முதலில் பொத்தானை அழுத்துவது என்பதுதான் இப்போது ஒரே கேள்வி. அவற்றிற்கு இப்போது கோரப்பசி எடுக்கிறது. அவை உணவில் தன்னிறைவு பெற்றுவிட்டதால்(?) இப்போது பசி வயிற்றில் இல்லை. அவற்றிற்கு பரபரப்பாக எதையாவது செய்துபார்க்க வேண்டும். எப்போதும் பரபரப்பாக உணரவேண்டும். என்ன செய்வது? கண்ணுக்கெட்டும் தூரம்தாண்டி பலநூறு ஒளியாண்டுகள் தொலைவிலும்கூட எந்த விண்கல்லையும் காணவில்லை. எனவே “போர்… போர்” என்று கூச்சலிடுகின்றன. இன்று இரவுகூட அந்த அழிவுக்கான பொத்தான்கள் அழுத்தப்படலாம். அழுத்தப் பட்ட அடுத்தடுத்த நொடிகளில் என்னென்ன நடக்கும் என அன்றொருநாள் ஒரு தெற்கத்தி “குமாரன்” விவரித்தது நினைவிற்கு வருகிறது. அணுவாயுதம் வெடித்த மறுகணமே கடும் வெப்பத்தால் சுற்றிலும் சிலநூறு கிலோமீட்டர் தொலைவுக்கு அனைத்தும் சாம்பலாகிவிடும். அடுத்த பலநூறு கிலோமீட்டர் தொலைவுக்கு கட்டிடங்கள் உட்பட அத்தனைப் பொருட்களும் உயிர்களும் தானாகத் தீப்பற்றியெரியும். அடுத்த பலநூறு கிலோமீட்டர் தொலைவுக்கு கட்டுக்கடங்கா கொடிய கதிரியக்கம் சென்றடையும்போது அதனால் தாக்கப்படும் பல லட்சம் உயிரினங்கள் சிலநிமிடங்களில் எந்த முதலுதவிகளும் செய்யுமுன் உயிரிழக்கும். தாக்கப்பட்ட பகுதியிலிருந்து வெளிவரும் பெரும்புகையும் தூசுமண்டலமும் மேகங் களையும் வழிமண்டலத்தையும்தாண்டி விண்ணோக்கித் தூக்கியெறியப்படும். அப்போது அந்தப் புகைமண்டலம் ஒரு பிரம்மாண்ட காளான் (Mushroom Cloud) போன்று காட்சிதரும். காற்றின் திசையையும் வேகத்தையும் பொறுத்து பயணப்படும் இந்த காளான் மேகம் கொடிய கதிரியக்கத்தை செல்லுமிடமெங்கிலும் அள்ளிவீசும்.

இறுதியில் மிகப்பெரும் பரப்புக்கு சூரியஒளி முற்றாக மறைக்கப்படும். பூமியை இருள்கவ்வ அணுசக்தி குளிர்காலம் (Nuclear Winter) ஆரம்பமாகும். சூரிய ஒளியின்றித் தாவரங்கள் அனைத்தும் மடியும். பிளாங்கடங்கள் கடலிலிருந்து மறையக் கடலுயிர்கள் அத்தனையும் மறையும். நிலமும் நீரும் முற்றிலும் பிணங்களால் மூடப்படும். “செத்தவன் பேறுபெற்றவன். உயிரைத் தக்க வைத்திருப்பவனுக்கு ஐயோ கேடு” என்ற குரல்கள் எங்கும் கேட்கும். பிழைத் திருப்பவர்கள் கொடிய கதிரியக்க நோய்களால் தாக்கப்படுவர். இந்தக் குளிர்காலம் ஒருசில மாதங்கள் முதல் சில ஆண்டுகள் வரை தொடரும். பின் காளான் மேகம் சூரிய ஒளிக்கு வழிவிட அணுசக்தி கோடைகாலம் (Nuclear Summer) தொடங்கும். சூரியனின் புற ஊதாக் கதிர்களை தடுத்து உயிர்களைக் காத்த ஓசோன் படலம் அப்போது முற்றிலும் மறைந்திருக்கும். சூரியனின் கதிர்வீச்சு நேரடியாகத் தாக்க, எஞ்சிய அத்தனை உயிர்களும் பார்வையை இழக்கும். பிணங்களிலிருந்து வெளிவந்த மீத்தேன் வாயு மொத்த புவிப்பரப்பையும் சூழ்ந்து அணுசக்தி கோடைகாலத்தை அணுசக்தி குளிர்காலத்தைவிட கொடூரமானதாக்கும். ஆறுகோடியே ஐம்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன் நடந்த வாணவேடிக்கையை வெறும் நாற்பதாயிரம் ஆண்டுகளுக்குமுன் தோன்றிய இப்புவியின் நுண்ணறிவுமிக்க பாலூட்டி நடத்த தொடங்கியபின் தினமும் பரபரப்புக்கு பஞ் சமிருக்காது. ஆனால் இதையெல்லாம் பார்த்துக் களிக்க எந்த நுண்ணுயிரும்கூட எஞ்சியிருக்காது. அணுசக்தி கோடைகாலம் முடியும்போது நான்கு மூட்டுகள் கொண்ட பாலூட்டிகளின் யுகம் முற்று பெற்றிருக்கும். பூமி அழிந்துவிட்டதோ என்று நீங்கள் பயப்படவேண்டியதில்லை. கொடிய அந்தப் பேரழிவில் கரப்பான்பூச்சிகள் மட்டும் தப்பிப்பிழைக்கும் என்பதை நுண்ணறிவுமிக்க பாலூட்டிகள் அறிந்து வைத்திருக்கின்றன. தம் மறைவிடங்களில்ருந்து வெளியேறிய கரப்பான் பூச்சிகள் சூரியனை நோக்கும் நாளில் ஆறு மூட்டுகள்கொண்ட பூச்சிகளின் யுகம் ஆரம்பமாகும். அதுவரையிலும் அதற்கப்பாலும் பூமி சுழன்றுகொண்டே இருக்கும்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments