சுற்றுச்சூழல் சர்வாதிகாரத்திலிருந்து மக்களை காக்க நேரம் வந்தது!

புற்களால் சூழப்பட்டு, ஒரு மரம் அல்லது மரங்கள் உள்ள நிலத்தை வைத்திருந்து அதனிடையே வாழ்வதுதான் உலகமய மாக்கலை எதிர்க்கும் ஒரே வழி. உங்கள் மகனின் மூன்று சக்கர விளையாட்டு வாகனம் அங்கு இருக் கட்டும். சில ஏழைக் குழந்தைகள் அங்கு வந்து விளையாடட்டும். பறவைகள் அங்கு வந்து
அந்த மரங்களை பன்படுத்திக்கொள்ளட்டும். சின்ன விஷயங்கள். சின்ன கனவுகள்.” அன்புத் தோழியும், சிறந்த எழுத்தாளருமான மகாஸ்வேதாதேவியின், பெருநிறுவன உலகமய மாக்கலிடம் இருந்து நம்முடைய விடுதலைக்கான கனவு இதுதான் என தன்னுடைய கடைசி பேச்சுகளில் குறிப்பிட்டுள்ளார். ஜூலை
28இல், தனது 90வது வயதில் அவர் மறைந்தார். ஆதிக்க பொருளாதார அமைப்புகள் கத்தி கொண்டு எல்லா மரங்களையும் புற்களையும் அழித்தொழிக்கும்போது, நமக்கான சுதந்திரம் புற்களிலும் மரங்களிலும் அடர்த்தியான வனங் களிலும் சுயாட்சியிலும்தான் இருக்கிறது என மகாஸ்வேதாதேவி நமக்கு நினைவூட்டுகிறார்.
நாங்கள் இருவரும், நம்முடைய அழகான பல்லுயிர்த்தன்மை நிறைந்த இந்த நாட்டில் யூகலிப்டஸை பயிரிட்டு பசுமை பாலைவனமாக மாற்றியதை பற்றி எழுதும்போதும் சரி, உலக மயமாக்கல் பெண்கள் மீது ஏற்படுத்திய தாக்கம் குறித்து பணியாற்றும்போதும் சரி, மகாஸ்வேதாதேவி எப்பொழுதும் இந்த பூமியின், ஒடுக்கப்பட்ட மற்றும் குற்றம் சுமத்தப்பட்ட மக்களின் குரலாகவே இருந்திருக்கிறார். பெருநிறுவனங்களுக்கு சாதகமான தாராள வர்த்தக ஒப்பந்தத்தை (Free Trade Agreement-FTA) மையப்படுத்திய உலகமயமாக்கல் மக்களின் சுதந்திரத்தையும் வாழ்வாதாரத்தையும் எப்படி பறித்துக் கொண்டது என அவரால் கவித்துவமாக கற்பனை செய்ய முடிந்தது. ‘தாராள வர்த்தகம்’ என்பது நாம் எவ்வாறு வர்த்தகம் செய்கிறோம் என்பது மட்டுமல்ல. அது நாம் எவ்வாறு வாழ்கிறோம்? நாம் வாழ்கிறோமா? என்பது பற்றியது. அது நாம் எவ்வாறு சிந்திக்கிறோம்? நாம் சிந்திக்கிறோமா? என்பது பற்றியது. உலக வர்த்தக மையத்தின்(World Trade Organisation-WTO) ஒப்பந்தங்கள் தங்களுடைய விதிகளை தளர்த்தியே, நம்முடைய பொருளாதாரம், நம்முடைய உற்பத்தி மற்றும் நுகர்வு அமைப்புகள், நாம் வாழ்வதற்கான ஆதாரங்கள், ஒட்டுண்ணியாக உள்ள பல பில்லியனர்களின் சிறு குழுக்களின் எழுச்சி ஆகியவற்றை ஒரு வடிவத்திற்கு கொண்டு வந்துள்ளது. 1994-ஆம் ஆண்டில் மொரோக்கோவில் உள்ள மர்ராகேஷில் இந்தியா காட் (GATT) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம் தான் 1995-இல் WTO  உருவாக வழிவகுத்தது. WTO  ஒப்பந்தங்கள் பெரு நிறுவனங்களால் பெரு நிறுவனங்களுக்காக உருவாக்கப்பட்டது. வளங்கள், உற்பத்தி, சந்தை, வர்த்தகம் மீதான தங்கள் கட்டுப்பாட்டை விரிவுபடுத்த, ஏகபோக தனியுரிமையை நிறுவ, பொருளாதார மற்றும் அரசியல் ஜனநாயகத்தை அழிக்க அமைக்கப் பட்டது.

WTO ஒப்பந்தத்தின் ஒரு அங்கம் (TradeRelated Aspects of Intellectual Property Rights-TRIPS) அதாவது, வர்த்தகம் சம்பந்தப்பட்ட அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தம். இதனை வகுத்தது மான்சாண்டோ. ஏன்? நெல் விதைகளை உருவாக்கியது மான்சாண்டோதான் என வாதாடி அதன் மீதான உரிமைய நிலைநாட்டி நெல்களுக்கு காப்புரிமைய பெற. அதாவது, நெல் மான்சாண்டோவின் ஒரு ‘அறிவுசார் சொத்து’. இதற்கான நோக்கம் ஒன்றுதான். நெல்லை சொந்தமாக்கி, தான் கட்டுப்படுத்தி, பல ஆதாய உரிமைகளினால் பெரும் லாபம் அடைவதுதான். மான்சாண்டோவின், முறைகேடான இந்த ‘சொத்துரிமையின்’ விளைவுகளை நாம் இந்தியாவில் அனுபவித்து வருகிறோம். இதனால் மரபணு மாற்றப்பட்ட விதைகளின் விலை கடுமையாக உயர்ந்தது. WTO-இன் விவசாயத்துக்கான ஒப்பந்தத்தை தொகுத்தது  Cargill, Inc. இதன் விளைவாக, எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்பு வகைகளை அதிகளவில் உற்பத்தி செய்த இந்தியா இன்று இதனை மற்ற நாடுகளிடமிருந்து பெருமளவில் இறக்குமதி செய்யும் நாடுகளாக மாறியுள்ளது. மரபணு மாற்றப்பட்ட சோயா எண்ணெய் மற்றும் பணை எண்ணெய், அதாவது பிண்ணாக்கிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஹெக்சேனால் செய்யப்பட்ட எண்ணெயை ‘நல்ல எண்ணெய்’ எனக்கூறி இறக்குமதி செய்கிறோம். இதனால், அர்ஜெண்டினா, இந்தோனேசியா, பிரேசில் ஆகிய நாடுகளில் பெருமளவில் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. பருப்பு வகைகளை கனடா, மொசாம்பிக்கிலிருந்து பெறுகிறோம். நம் நாட்டில் விளைந்த செழிப்பான பருப்பு வகைகளை உற்பத்தி செய்த நிலங்களை உயிரி-எரிபொருளை உருவாக்கும் அந்நிய நிறுவனங்களுக்கு கொடுத்துவிட்டோம். இந்த வடிவம் விவசாயம் மற்றும் உணவு முறையை அழித்துவிட்டது. இதனால், நம்முடைய நம்முடைய மற்றும் இந்த பூமியினுடைய நலத்தை அழித்து வருகிறோம். சுகாதாரத்திற்கான WTO ஒப்பந்தத்தை அதிவேக உணவு நிறுவனம் (The Junk Food Industry) எழுதியுள்ளது. நம்முடைய உணவு கலப் பட தடுப்பு சட்டம் 1954 இந்த ஒப்பந்தத்தால் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணை யமாக மாறியது. இந்த போலி பாதுகாப்பு சட்டங்களால், இந்தியாவின் வளமான மற்றும் பரந்துப்பட்ட , உணவு பொருட்கள் சம்பந்தப் பட்ட குடிசை மற்றும் சிறு தொழில்கள் மூடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

FTA-ஒப்பந்தத்தில் உள்ள UPOV-1991-(Union for the Protection of New Varieties of Plants)-இன் படி புதிய வகை தாவரங்களுக்கு காட் நாடுகளின் ஒப்புமை கோராத விதிகளை புகுத்தியது. இதனால், ஒரே மாதிரியான விதிகள் ‘காட்’ நாடுகளுக்கு புகுத்தப்பட்டது. இதன்மூலம், ஊட்டச்சத்தில் பல்லுயிர்த்தன்மை மற்றும் பருவநிலையின் வேறுபட்ட தன்மை ஆகியவை முக்கியம் என்பதை இந்த விதிகள் சிதைத்தன.FTA-இல் உள்ள பசிபிக் நாடுகளுடனான கூட்டுப் பங்களிப்பு ஒப்பந்தத்தில் (TransPacific Partnership TPP)  ஆஸ்திரேலியா, புரூனே, கனடா, சிலே, ஜப்பான், மலேசியா, மெக்சிகோ, நியூசிலாந்து, பெரு, சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட 12 நாடுகள் கையெழுத்திட்டன. ஆசிய நாடுகளுடனான பிராந்திய அளவிலான கூட்டுப் பங்களிப்புக்கான(The Regional Comprehensive Economic Partnership-RCEP) ஒப்பந்தத்தில் இந்தியா, சீனா, தென் கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியவை வர்த்தக கூட்டுப் பங்காளிகளாக உள்ளனர். FTA-இல் உள்ள மற்ற ஒப்பந்தங்களை விட RCEP ஒப்பந்தம் மக்கள் தொகை அதிகம் உள்ள ஆசிய நாடுகளை வெகுவாக பாதிக்கும். இந்த நாடுகளை TPP ஒப்பந்தத்துக்கு இழுத்து வரும்போது மற்ற நாடுகளுடனான அழுத்தத்தை அதிகரிக்கும்.

TPP-இல் கையெழுத்திட்ட நாடுகள் UPOV1991-இல் இணையச்செய்கிறது. இதனால் தாவரங்கள் மீதான காப்புரிமை எனும் உயிர்மத் திருட்டுக்கு வழிவகுக்கிறது. இதனால், வேம்பு, பாஸ்மதி, கோதுமை போன்று பல உயிர்மத் திருட்டுகள் ஏற்பட வாய்ப்புள்ளன. TPP-இல் உயிரியல் சம்பந்தப்பட்ட பிரிவில் TRIPS ஒப்பந் தத்தில் விடுபட்ட எல்லா வற்றையும் சேர்த்து விடுகிறது. இதனால் பல ஆபத்தான மற்றும் சோதிக்கப்படாத தடுப்பு மருந்து களுக்கான காப்புரிமை மற்றும் அதன் மீது செலுத்துதல், புதிய மரபணு தொழில் நுட்பங் களான ஜீன் தொகுப்பாக்கம் மற்றும் ஜீன் ஒட்டு ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது. இதனால், TPP  உயிரி ஏகாதிபத்தியத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் கருவியாகவே இந்த ஒப்பந்தம் பார்க்கப்படுகிறது.

காப்புரிமையில் தாவரங்கள் மற்றும் விலங்கு களுக்கு விலக்கு அளிப்பதை உறுதிசெய்ய நம்முடைய காப்புரிமை சட்டத்தில் பிரிவு3(j) இந்தியா முயற்சி செய்கிறது. WTO-இல் உள்ள நாடுகள் UPOV-இல் இணைய வேண்டும் என்பது கட்டாயமில்லை எனவும் இந்தியா உறுதிபடுத்தியுள்ளது. ஆனால், தாவரவகைகளுக்கு காப்புரிமை பெற WTO நாடுகளின் ஒப்புதல் தேவையில்லை. இவை நம்முடைய தாவர வகைகள் மற்றும் விவசாயி உரிமைகள் சட்டம்2001-இல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. WTO துணையுடன் விதைகள் மீதான முழு ஏகபோக தனியுரிமையைஅனுபவிக்க முடியாததால், வேதி பெருநிறுவனங்கள் (உயிரி தொழில்நுட்பம் மற்றும் விதை பெருநிறு வனங்கள்) உயிரினங்கள் மற்றும் அதன் உற்பத்தி அமைப்புகளின் மீது காப்புரிமையை புதிய FTA-இன் மூலமாக புகுத்த முயற்சிக்கிறது. மேலும், நம்முடைய உள்ளூர் உணவு முறைய மாற்றி பெருநிறுவன அதிவேக உணவு களை நுகரச்செய்து நம்முடைய உடல் நலத் தையும் உயிரி-பாதுகாப்பையும் அழிக்க முயற்சிக்கிறது. இறுதியாக, பெருநிறுவனங்களும் அதனை கட்டுப்படுத்துபவர்களும் ISDS (Investor-State Dispute Settlement) எனப்படும் ரகசிய தீர்ப்பாய அமைப்புகளின் மூலம் அரசுகளிடம் வாதாடி ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான அனைத் தையும் பெருநிறுவனங்களே தயாரிக்கும்படி செய்கிறது. இவ்வாறு 0.01 சதவீதம் உள்ள பெரும் செல்வந்தர்களின் வசம் உள்ள பெருநிறுவனங்கள் நம்முடைய ஜனநாயகத்தை ரகசிய ஒப்பந்தங்கள் மற்றும் நீதிமன்றங்கள் மூலம் மாற்றியமைக்க முயற்சி செய்கிறது. இந்த 0.01 சதவீத பெரு நிறுவனங்களிடமிருந்து நம் புவியை காக்க சுதந்திரமான இயக்கத்தை .முன்னெடுக்க காலம் கனிந்துவிட்டது.

 

வந்தனா சிவா

தமிழில்: நந்தினி

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments