வாசகர் கேள்வி-வல்லுனர் பதில்

பல வண்ணப் பறவைகளை கூண்டில் அடைத்து விற்கிறார்களே! இது குறித்து சட்டம் என்ன சொல்கிறது? – வினோலியா, செங்கல்பட்டு

காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம் (The Wildlife Protection Act 1972), விலங்குகளை கொடுமைப் படுத்துவதிலிருந்து தடுக்கும் சட்டம் (The Prevention of Cruelty to Animals Act 1960) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code) ஆகியவை பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு கொடுமை இழைப்பதை குற்றமாக வரையறை செய்கின்றன. பத்து ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட பெறுமானமுடைய விலங்கை அல்லது விலங்குகளை கொல்வதோ, நஞ் சிடுவதோ, ஊனமாக்குவதோ அல்லது பயனற்றதாக செய்வதோ இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து வழங்க இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 428 வழிவகுக்கிறது. இவையே யானை போன்ற பெரிய விலங்கினங்கள் எனில் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்க பிரிவு 429 வழிவகுக்கிறது.

வீட்டில் வளர்க்கும் புறா, காதல் பறவைகள் போன்றவற்றிற்கு விதிவிலக்குகள் உண்டு. எனினும் அப்பறவைகளை வியாபார ரீதியாக வளர்க்க உரிமம் (licence) வாங்க வேண்டும். மேலும் வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் 1972ன் பிரிவு 9ன் கீழ் அச்சட்டத்தில் குறிப்பிட்டுள்ள மி முதல் IV வரை அட்டவணையில் கண்ட எந்த பறவைகளையும், விலங்குகளையும் வேட்டையாடுவது தடைச் செய்யப்பட்டுள்ளது. மேலும் அச்சட்டத்தின் பிரிவு 49 (சி)ன் படி தம்மிடமுள்ள அட்டவணையில் கண்ட பறவைகள் பற்றிய விவரத்தை அவ்வாறு பறவைகளை வளர்ப்பவர் முதன்மை வன உயிர் பாதுகாப்பு அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். அப்பறவைகளை உரிமம் இன்றி வளர்க்க முடியாது. உரிமம் வழங்கும் அதிகாரி அப்பறவைகளின் நலன் வளர்ப்பவரின் தகுதி புதிதாக வேட்டையாடப்படுவதை தடுக்கும் வழிகள் ஆகியவற்றை அறிந்துதான் உரிமம் வழங்கவேண்டும். கடந்த 01.05.2011 அன்று குஜராத் உயர்நீதிமன்றம் பறவைகளை கூண்டில் அடைப்பதும் அவற்றிற்கு வலியையும் வேதனையையும் தருவது சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்தது டில்லி உயர்நீதிமன்றம். 15.05.2015 அன்று ஒருபடி மேலே போய் பறப்பது பறவைகளின் அடிப்படை உரிமை அதை அடைத்து வைக்க மனிதர்களுக்கு உரிமையில்லை எனவே பறவைகள் வியாபாரம் சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்தது. ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் கடந்த 07.05.2014 அன்று எல்லா உயிரினங்களுக்கும் (All living things) கண்ணியத்துடனும் அமைதியுடனும் வாழும் உரிமையுண்டு அவற்றின் நலனை பாதுகாத்துக் கொள்ளும் உரிமையும் அவைகளுக்கு உண்டு என்று தீர்ப்பு வழங்கியதுடன் விலங்குகளை கொடுமைப்படுத்துவதிலிருந்து தடுக்கும் சட்டம் (விலங்குகள் என்ற வரையறைக்குள் பறவைகளும் உள்ளடக்கம்) இதற்கான சட்ட பாதுகாப்பை (Statutory Protection) தருகிறது என்று தீர்ப்பளித்தது.

க. திலகேஸ்வரன், உயர்நீதிமன்ற வழக்குரைஞர்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments