என் குருநாதர்

1987–8- 8 கூடங்குளம் அணுமின் திட்டம் அறிவிக்கப் பட்ட காலகட்டம். 1988 ஜுன் மாதம் நானும் சில நாகர்கோவில் நண்பர்களும் “இந்தியப் பெருங்கடல் சமாதானக் குழு” எனும் அமைப்பைத் துவங்கினோம். திரு.டேவிட் எனும் ஒரு பெரும் போராளி தென் தமிழகத்தில் மக்களை ஒருங்கிணைத்து அணு உலைக்கு எதிராகப் போராடுகிறார் என்பது எங்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனாலும் அவரைப் போய் சந்திப்பதற்கும், அவரோடு இணைந்து நிற்பதற்கும் உள்ளூர பிரமிப்பாகவும், தயக்கமாகவும் இருந்தது. இவருடைய போராட்டங்களால் இந்தியப் பிரதமரே இங்கே அடிக்கல் நாட்ட வரவில்லை என்றால், நாங்கள், சிறுவர்கள், எப்படி இவரைக் கண்டு அஞ்சாமலிருப்போம்?

அடுத்த ஆண்டு நான் உயர் கல்விக்காக அமெரிக்காவுக்குப் போய் விட்டேன். சோவியத் யூனியன் சிதறுண்டு, இராஜீவ் காந்தி கொல்லப் பட்டபோது, கூடங்குளம் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் தேவ கௌடா இந்தியப் பிரதமராகவும், போரிஸ் எல்ட்சின் ரஷ்ய அதிபராகவும் பொறுப்பேற்றபோது, கூடங்குளம் திட்டம் மீண்டும் தூசி தட்டப்பட்டது. குமரி மாவட்ட அணு உலை எதிர்ப்புப் போராளிகள் பலரையும் 1999-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாகர்கோவிலில் சந்தித்து அனைவருமாக “அணுமின் நிலைய எதிர்ப்பு இயக்கம்” எனும் அமைப்பைத் தோற்றுவித்தோம். 2001-ஆம் ஆண்டு நிரந்தரமாக இந்தியா திரும்பியதும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, மதுரையில் வசித்து வந்த அய்யா ஒய். டேவிட் அவர்களை நேரில் சென்று சந்தித்தேன். உடல்நலம் குன்றியிருந்த நிலையிலும் என்னை வாஞ்சையோடு வரவேற்றுப் பேசினர் அய்யா டேவிட் அவர்களும் ரீட்டாம்மா அவர்களும். கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டத்தை மறுபடியும் உயிர்ப்பிப்பது பற்றி விலாவாரியாகத் திட்டமிட்டோம். அதன் விளைவாக 2001 நவம்பர் 10 அன்று மதுரையில் வைத்து அய்யா ஜார்ஜ் கோம்ஸ் போன்ற ஜாம்பவான்களுடன் “அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்” துவங்கப்பட்டது. அய்யா டேவிட் அவர்கள் ஓர் அருமையான சேவகத் தலைவர். தானே வேலைகளை ஏற்றெடுத்துச் செய்பவர். அனைத்துத் தரப் பினரையும் அரவணைத்துச் செல்வதில் தேர்ந்த விற்பன்னர். மக்களோடு பயணிக்கும் போது, அவர்களோடுதான் தங்குவார், அவர்கள் உண்பதைத்தான் உண்பார். தன்னை உயர்ந்தவ ராக, சிறந்தவராக பார்க்க மாட்டார். கடுஞ்
சொல் அறியாதவர். எளிமை, இனிமை, இறைமை எனும் மூன்றும் ஒருங்கே அமையப் பெற்றவர்.

“அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும்”

எனும் குறளுக்கேற்ற நேர்மறையான எடுத்துக்காட்டு அவர். புரட்சிகரமான தனித்துவ சிந்தனைகள் உடையவராக, ஏராள மான தனித்தன்மைகள் கொண்டவராக இருந்தாலும், எல்லாத் தரப்பு மக்களோடும், இயக்கங்களோடும், தலைவர்களோடும் அமைந் தாங்கு ஒழுகியவர். தனது வலிமையின் அளவு அறிந்த காரணத்தால், அகலக்கால் வைக்காத யதார்த்தவாதியாக வலம் வந்தார். தன்னை, தனது பல்வேறு போராட்டங்களை, சாதனைகளை வியந்து போற்றுவதை மட்டுமல்ல, விவரித்துப் பேசுவதைக்கூட நான் கேட்டதேயில்லை. அந்த அளவு பணிவும், முதிர்ச்சியும் உடையவர். அதனால் விரைந்து கெடாமல் நிறைந்து நின்றவர். அவர் மக்களை அணி திரட்டும் பாங்கு அலாதியானது. மதுரையில் வசித்தவர் பேருந்தில் நாகர்கோவில் வருவார். ஒரு வாடகைக் காரை அமர்த்திக்கொண்டு ஊர் ஊராகச் சுற்று வோம், மக்களை சந்திப்போம். கடலோர ஊர்களில் ஏராளமான பெரியவர்களைத் தெரிந்து வைத்திருந்தார். ஒருமுறை அய்யா டேவிட், அய்யா ஜார்ஜ் கோம்ஸ், நான் மூவரும் உள்நாட்டு கிராமம் ஒன்றுக்குப் போய் மக்களை சந்திப்பது என்று முடிவு செய்தோம். அங்கே யாரையும் எங்கள் மூவருக்கும் தெரியாது. என்ன செய்யப் போகிறோம், எப்படி துவங்கப் போகிறோம் என்று எனக்கு எதுவுமே புரியவில்லை. இந்த நிலைமையை அய்யா டேவிட் எப்படிக் கையாளப் போகிறார் என்று நான் மிகுந்த ஆவலுடன் அவரை உற்று நோக்கிக் கொண்டிருந்தேன். ஊருக்குள் சென்று இறங்கியதும், அருகிலுள்ள ஒரு கடைக்குச் சென்று கடைக்காரரிடமும், அங்கேயிருந்தவர்கள் சிலரோடும் பேச்சுக்கொடுத்து முன்னாள் மற்றும் இந்நாள் பஞ்சாயத்துத் தலைவர்கள், உறுப்பினர்கள், ஊர்த் தலைவர்கள், வணிகர் சங்கப் பிரதிநிதிகள் போன்றோரைப் பற்றிய ஓர் அதிகாரபூர்வமற்ற பட்டியலை உருவாக்கினார். அதிலிருந்து இறந்துபோனவர்கள், தள்ளாத முதுமை அடைந்தவர்கள், பொதுவாழ்விலிருந்து விலகிவிட்டவர்கள், சமூகப் பிரச்சினைகளில் தெளிவற்ற நிலையில் இருந்தவர்கள் என பலரையும் விடுவித்தார். தேறியவர்களில் முக்கியமானவர் ஒருவரது வீட்டுக்குச் சென்றோம். எங்களை அறிமுகப்படுத்தியபிறகு அய்யா டேவிட் பேசத் துவங்கினார். பத்து நிமிடங்களில் நாங்கள் சந்திக்க வேண்டிய இருபது பேர் பட்டியல் தயாராகிவிட்டது. விறுவிறுவென வேலை துவங்கியது. ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னால் யாரையும் அறியாமல் நின்ற நாங்கள் பின்னர் ஒரு பெரும் கூட்டத்திடமிருந்து விடை பெற்றோம். இது என்னால் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.

பிறப்பால், வளர்ப்பால், நடப்பால் கிறித்தவர் என்றாலும், அன்பால், பண்பால், நட்பால் அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துக் கொண்டவர். மகத்தான மனிதநேயப் பண்பாளர். சமூகநீதி போற்றி “தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம்” என்று வாழ்ந்தவர்.

இறையியல் கற்றவர், ஆனால் திருச்சபைகளின் சங்கிலிகளை அறுத்தெறிந்து தன்னை மத நிறுவனங்களிடமிருந்து விடுவித்துக் கொண்டவர். பிறப்பால், வளர்ப்பால், நடப்பால் கிறித்தவர் என்றாலும், அன்பால், பண்பால், நட்பால் அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துக் கொண்டவர். மகத்தான மனிதநேயப் பண்பாளர். சமூகநீதி போற்றி “தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம்” என்று வாழ்ந்தவர். அணு உலைகளை எதிர்ப்பது, சுற்றுச்சூழலைக் காப்பது, மாற்று மருத்துவம் போற்றுவது, மாற்று கட்டிடவியலை வளர்ப்பது என பற்பல கள நடவடிக்கைகளைத் தாண்டி, தன் சமூக, பொருளாதார, அரசியல், சூழலியல் கருத்துக்களைக் கோர்த்து, முறைப்படுத்தி ஒரு விடியல் விழுமியமாக வடித்தெடுத்து “சமத்துவ சமுதாய இயக்கம்” எனும் அமைப்பைத் தோற்றுவித்தார். இந்த அமைப்பின் பெயரிலேயே ஒரு முறை கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி பொதுத் தேர்தலில் ‘பானை’ சின்னத்தில் போட்டியிட்டார். அய்யா டேவிட் அவர்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங் களின் பிதாமகனாகத் திகழ்ந்தவர். இந்தியாவெங்கும், தமிழகமெங்கும் இ ய ங் கி க் ª க £ ண் டி ரு க் கு ம் பல தொண்டு நிறுவனங்களின் வளர்ச்சியில், பல தன்னார்வத் தலைவர்களின் முதிர்ச்சியில் அய்யா அவர்களின் அளப்பரிய பங்களிப்பு இருந்தது. போட்டியும், பொறாமையும், சூதும், வாதும், ஏச்சும், பேச்சும்
மலிந்துகிடக்கும் பொதுவாழ்வில் தாமரை இலைத் தண்ணீராக, தண்ணீரில் எரியும் கற்பூரமாக, கற்பூர மணம் கமழும் ஆளுமையாக வாழ்ந்து பிரகாசித்தார் அய்யா டேவிட். இருளையே பழித்துக் கொண்டிராமல், இயன்ற வழிகளில் எல்லாம், இடங்களில் எல்லாம், களங்களில் எல்லாம் தன்னையே தீபமாய் ஏற்றியவர், ஏற்றங்களோடு ஒளிர்ந்தவர். கடந்த சில ஆண்டுகளாக புவி வெப்பமயமாதல் பற்றி ஆய்வுகள் செய்தார், கவலை கொண்டார், கடிதில் களமாடினார். இந்தப் பிரச்சினை குறித்து ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்குத் திட்டமிட்டிருந்தார். அண்மையில் தன்னுடைய பழையகால “பசுமைப் பஞ் சாயத்து” நடவடிக்கைப் பற்றி விவரித்து, எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் “பச்சைத் தமிழகம் கட்சி” என்னென்ன செய்யலாம் என்பது பற்றி தனக்கு சில எண்ணங்கள் இருப்பதாகவும், நேரில் நிறையப் பேச வேண்டும் என்றும் சொன்னார். எனது நேர்காணல்கள் அடங்கிய புத்தகத்தை செப்டம்பர் 6, 2016 அன்று மதுரையில் அய்யா டேவிட் அவர்கள் வெளியிட்டார். அவரோடான நேர்காணல்தான் நான் என் வாழ்வில் நடத்திய முதல் நேர்காணல். அது வெளிவருவதற்கு முன்பே அய்யா விடைபெறுவார் என்று நான் கனவிலும் நினைக்க வில்லை. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் நேர் கண்டது முதல் நாங்கள் நிறையவே நேர் கொண்டோம். அய்யாவோடான நேர் காணல்கள் நிறைவு பெற்றுவிட்டனதான்; ஆனாலும் காண முடியாத பல பரிணாமங்களோடு காணல்கள் இ ன் னு ம் நி ச் ச ய ம் « ந ரு ம் . தற்கால தமிழகத்தின் மிகச் சிறந்த ஆளுமைகளுள் ஒருவரான அய்யா ஒய். டேவிட் அவர்களுக்கு வீர வணக்கங்கள்!

சுப.உதயகுமாரன்குருநாதர்

அஞ்சலி:ஒய்.டேவிட்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments