விசித்திர மரணங்கள்

தெரியுமா உங்களுக்கு?

இயற்கையில் ஒவ்வொரு உயிரினங்களின் இனச்சேர்க்கை முறையும் தனித்தன்மையானவை. அவற்றில் சில விசித்திரமானவை. தன் இனத்தைப் பெருக்குவது ஒன்றே பிரதான நோக்கமாகக்கொண்ட இந்த உறவில் தாலி வேண்டுமா வேண்டாமா போன்ற பிரச்சினைகள் அங்கு எழுவதில்லை. ஆணவக் கொலைகள் இங்கில்லை என்றாலும் சிலவிதமான விசித்திர மரணங்கள் நிகழ்வதுண்டு. அப்படி ஒன்றுதான் ஆண் கும்பிடுப்பூச்சியின் (Praying Mantis) மரணம். உருவத்தில் சிறிய ஆண்பூச்சி பெண் பூச்சியை பின்பக்கமாய் நெருங்கியதும் பரஸ்பரம் சமிக்ஞைகளைப் பரிமாறிக் கொள்கின்றன. அப்புறம் பெண்ணின் அனுமதி கிடைத்ததும் இனச்சேர்க்கை ஆரம்பமாகிறது. ஒரு கட்டத்தில் எல்லாம் முடிந்ததும் பெண் பூச்சியின் அகத்தூண்டல் (instinct) அதை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்துகிறது. சட்டென திரும்பும் பெண்பூச்சி ஆண்பூச்சியின் தலையிலிருந்து தொடங்கி அதை உண்ணத்தொடங்குகிறது. தலையை இழந்தாலும் நரம்பு மண்டலம் தொடர்ந்து இயங்குவதால் சேர்க்கையும் தொடர்கிறது. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாய் தன் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காய் முழுதாய் உணவாகிறது தந்தையான ஆண்பூச்சி. ஆனால் இதற்கு விதிவிலக்கும் உண்டு. நிலமையை உணரும் ஆண்பூச்சி தன்னை விடுவித்துக்கொள்வதும் உண்டு.

இதைப்போலவே சில ஆண்சிலந்திகளை உண்ணும் பெண்சிலந்திகளும் இருந்தாலும் ஆண்கள் மட்டும் எப்போதும் தியாகிகள் ஆவதில்லை. சிலவகைச் சிலந்திகள் தம் முட்டைகளை அடைகாத்துக்கொண்டே தம் குஞ்சுகள் வெளிவருமுன் கூட்டுக்குள்ளேயே சமாதி யடைகின்றன. வெளிவரும் குஞ்சுகளுக்கான முதல் உணவு தாயின் உடல்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *