சூழலியல் அரசியல் பேசுவோம் …..!!

காலநிலை தன்னிலையில் மாற்றம் அடைந்து வருகிறது. இதனை காலநிலை மாற்றம் என்று கூறுகிறோம். உண்மையில் இதனை காலநிலை குற்றம் என்று தான் கூற வேண்டும். மனித சமூகம் இயற்கை மீது நிகழ்த்திய மாபெரும் குற்றம் இது. இந்த குற்றத்தை நிகழ்த்தியவர்கள் யார்? நீங்களும் நானுமா?

எல்லா உயிர்குளுக்கும் அடிப்படை உரிமையும் தேவையும் நீர், நிலம், காற்று. ஆனால் இன்று காற்று நஞ்சாக நம்மை கொல்கிறது. நீர் – விலை கொடுத்து வாங்கும் வியாபார பொருளாக மாறியுள்ளது. நிலம் தன் உயிர் சத்தை இதழந்துள்ளது. எப்படி நிகழ்ந்தது இந்த கொடூரம்? யார் காரணம் இதற்கு? நீங்களும் நானுமா?

விடை ஒன்றை வரியில் இல்லை. ஆனால் விடை காண நாம் புரிந்துக் கொள்ள வேண்டிய ஒன்றை சொல் ஒன்றுள்ளது. அது தான் அரசியல்!!

காலநிலை மாற்றத்திற்கும் அரசியலுக்கும் என்ன தொடர்பு! தண்ணீர் விற்பனை பொருளாக மாறியதிற்கு காரணம் அரசியலா?

ஆம் அரசியலே !!

பூவுலகில் தனித்து எதுவும் செயல்படுவதில்லை. “அவனின்றி” இங்கு எதுவும் அசையாது என்பது உண்மையோ பொய்யோ தெரியவில்லை. ஆனால் “அணுவின்றி” இங்கு எதுவும் நகழ்வதில்லை. இது இயற்கையின் விதி.

அது போல மனித சமூகம் தனக்கு தானே கட்டமைத்து கொண்ட செயற்கை உலகம், பல்வேறு தொடர்புகளோடு செயலாற்றி வருகிறது. இந்த செயல்கள் அனைத்தையும் கட்டுப்படுத்துவது அரசியல்.

நீங்களும் நானும் அரசியல் சிந்தனைகளை படித்தவர்கள் தான். அது அரசியல் என்று தெரியாமல் படித்தவர்கள். ஒன்றை படிப்பதற்கும் அறிவதற்கும் வேறுபாடு உள்ளது.  அறிதல் என்பது அறிவு. இயற்கையை அறிதல் என்பதே அறிவியல்.

அதுபோல அரசியல் செய்திகள் அல்லது நிகழ்வுகள் பற்றிய புரிதல் மட்டுமே அரசியல் அறிவாகாது. அரசியல் என்பது நம் வாழ்வோடு கலந்துள்ளது. உங்கள் திருமண வயதை நிர்ணைப்பது அரசியல் தான். பெண்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படலாமா என்று முடிவெடுப்பதும் அரசியல் தான்.

மக்கள் எதிர்த்த போதிலும் கூடங்குளத்தில் அணுஉலை கட்டுமானம் செய்யப்படுவதும் அரசியல் தான். ஸ்டெர்லைட் ஆலை இயங்க மறைமுகமாக செயல்படும் அரசின் நிலையும் அரசியல் தான். உணவு உற்பத்தியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நினைக்கும் பெரும் நிறுவனங்களின் விதைகள் மீதான காப்புரிமையும் அரசியல் தான்.

ஆக, நாம் அரசியலால் சூழப்பட்டுள்ளோம். மரங்கள் ஒய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை என்பது போல, நீங்கள் ஓடினாலும் அரசியல் உங்களை விடுவதில்லை. எனவே அரசியல் பேசுவோம்…

அதுவும் யாரும் அதிகமாக பேசாத சூழலியல் அரசியல் பேசுவோம் dudes !!

– வழ. வெற்றிச்செல்வன், பூவுலகின் நண்பர்கள் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *