மரணம் அத்தனை எளிதானது !

விளையாடிக்கொண்டிருக்கும் ஒரு பூனைக் குட்டியைத் தூக்கியிருக்கிறீர்களா? அது தன் நான்கு கால்களையும் ஆட்டியபடி கீழே விடச்சொல்லி அடம்பிடிப்பது அவ்வளவு அழகாக இருக்கும். இதுவே ஒரு யானையைக் கழுத்தில் கயிறு கட்டி கிரேன் கொண்டு தூக்கித் தொங்கவிட்டால்? அதுவும் கால்களை ஆட்டிக்கொண்டு உயிருக்காக கெஞ்சி, கொஞ்சம் கொஞ்சமாக மூச்சை நிறுத்தும்போது? இதையும் ஒரு சமூகம் கைதட்டிக் கொண்டாடும்போது? இந்தப் புகைப்படத்தைப் பார்த்தால் மூச்சடைக்கிறதா? கழுத்தை இறுக்குவது போல் உள்ளதா? ஏதோ ஒரு கோணத்தில் அந்த யானையை விளையாடிக் கொண்டிருந்த பூனைக்குட்டியோடு தொடர்புபடுத்திப் பார்க்க முடிகிறதா? முடிந்தால் இந்தக் கட்டுரையை வாசிக்கும் முழுத் தகுதியும் உங்களுக்கு உள்ளது! தண்டனைகள் பற்றி நாம் அனைவருக்கும் தனித்தனியே கருத்துகள் உண்டு. தெரிந்தோ தெரியாமலோ பல நூற்றாண்டு களாய் நம்மைச் சுற்றி இருக்கும் தாவர, விலங்கினங்களைத் தினந்தோறும் தண்டித்துக் கொண்டிருக்கிறோம். அவைகள் மனிதரல்லா பிற உயிர்கள் என்பதுவே அதற்கான பிரதான காரணம். மேலும், அவைகளுக்கு தாங்கள் தண்டிக்கப்படுகிறோம் என்ற சுயநினைவு இல்லை என்று நம்மை நாமே குற்ற உணர்வுகளில் இருந்து விடுவித்துக் கொள்கிறோம். ஆனால், ஒரு குழுவின் பயன்பாட்டுக் கண்ணோட்டத்தைப் பொருத்து, விலங்குகளை மனிதர்களுக்குக் கீழ் அடிமைப்படுத்தி சித்ரவதை செய்துவிட்டு, பின் மனிதர்களின் இடத்தில் அவற்றைப் பொருத்தி, பிரபலமாவது ஒரு நூற்றாண்டின் போக்காக இருந்தது. இப்படியாக, மரண தண்டனை அளிக்கப் பட்டு, தூக்கில் தொங்கவிடப்பட்டது மேரி என்ற யானை. சர்க்கஸில் பல வருடப் பயிற்சிகளுக்குப் பிறகு , முக்காலியில் அமர்வது, மூன்று கால்களில் நடப்பது, நொண்டி ஆடுவது, இசைக்கருவிகள் வாசிப்பது என வித்தைகள் புரிந்தது அந்த யானை. இதில் பயிற்சி என்று நான் சொல்வது, சிறு வயதிலிருந்து பிரம்பால் அடிபடுவது, கூர்மையான கம்பினால் தோலில் துளைபடுவது, தீக்குச்சியால் சூடுபடுவது, தண்ணீர் மறுக்கப் படுவது, உணவு மறுக்கப்படுவது, பிற விலங்குகள் படும் சித்ரவதையை நேரில் பார்க்க வற்புறுத்தப்படுவது, இன்னும் வார்த்தைகளால் விவரிக்கமுடியாத அனைத்து சித்ரவதைகளும் பொருந்தும். அதன் ஒவ்வொரு வித்தைக்கும் பின்னால் இருப்பது அதன் வாழ்நாள் வலி மற்றும் வலி மட்டுமே. ‘மனதிடம்’ உள்ளவர்களுக்கு சர்க்கஸ் விலங்குகள்பற்றி, youtube-ல் கிடைக்கும் ஆவணப்படங்கள் பரிந்துரைக்கப் படுகின்றன. நான்கு வயதுக் குழந்தையின் கையில் மைக்-ஐ திணித்து, நீங்கள் விரும்பும் பாடல் எதுவாக இருந்தாலும் அதை நவரசத்துடன் பாடவைத்துக் கைதட்டி ரசிக்கும் சமூகத்திற்கு இதையும் விலா வாரியாக சொல்லித்தானே ஆகவேண்டும்!

சரி, மேரியின் கதைக்கு வருவோம்! பொதுவாக சர்கஸ் யானைகள் பயப்படுவது, பயிற்சியாளன் கையிலிருக்கும் குச்சி ஒன்றிற்காகத்தான். சிறுவயதிலிருந்து அதைக்கொண்டு யானையின் மிருதுவான உடல்பாகத்தில் குத்திக் குத்தியே பயிற்சி அளிக்கப்படும். சிறைபிடிக்கப்பட்ட சில நாட்களில் ரத்தம் வரும்வரை குத்தி அதை அதீத வலிக்கு உட்படுத்துவார்கள். பின் நாட்களில் அவை அந்த வலிக்குப் பயந்து, பயிற்சியாளன் கட்டளையிடும் யாவற்றையும் செய்யும். இதைத் தான் நாம் பார்வையாளராக ரசித்தும் கொண்டிருக்கிறோம். எப்போதும் போல் ஒருநாள் சர்க்கஸ் நிரம்பியிருந்தது. அன்று மேரிக்கு வாயில் தீவிரமான காயம் இருந்தது. நிகழ்வின்போது கொஞ்சம் தாகம் தணித்துக்கொள்ள, அங்கு கிடந்த ஒரு தர்ப் பூசணியை உண்பதற்காக நின்றது. அப்போது அதன் பயிற்சியாளன் அந்தக் காயத்திலே குச்சி வைத்துக் குத்தி மிகுந்த வலி ஏற்படுத்தினான். அதீத வலியில் சுயமிழந்த மேரி, அவனைக் கீழே தள்ளி மிதித்ததில் அவன் இறந்துவிட்டான். கலவரம் போன்ற ஒரு சூழலை நீங்கள் இப்போது எதிர்பார்க்கலாம். ஆனால் மேரி தர்பூசணியை பார்த்தபடி சாந்தமாக நின்றது. ‘மனித உரிமை மீறல்’ என்ற பெயரிலிருந்து தன் சர்க்கஸ்-ஐ காத்துக்கொள்ள, அதன் முதலாளி மேரியைக் கொன்றுவிடுவதாக தெரிவித்துவிட்டான். இதைப் பற்றிய கலந்தாலோசிப்பிற்காகக் கூட்டப்பட்ட குழுவில், மேரியை எவ்வாறு கொல்லலாம் என்று காரசாரமான வாக்குவாதம் நிகழ்ந்தது. ஒரு சிலர், மேரியை ரயில் தண்ட வாளத்தில் கட்டிவிட்டு, இருபக்கமும் அதை நோக்கி விரையும் ரயில்களுக்கு நடுவில் நசுக்கி விடவேண்டும் என்று ஆசைப்பட்டனர். வேறுசிலர், எதிரெதிரே இருதிசைகளில் செல்லும் இரண்டு ரயில்களில் அதன் முன்னிரண்டு கால்களையும் பின்னிரண்டு கால்களையும் தனித்தனியே கட்டிவிட்டு, அதன் உடலைக் கிழித்தெறியவேண்டும் என்று ஆத்மார்த்தமாக கேட்டுக்கொண்டனர். பிறகு, தங்கள் சர்க்கஸ்-ஐ பிரபலமாக்கும் நோக்கத்தைக் கருத்தில் கொண்டு, உலகிலேயே தூக்கிலிடப்பட்ட முதல் யானை என்ற பட்டத்தை மேரிக்கு அளிக்க விரும்பினர்.

குறித்த நாளில், மேரியும் அதனுடன் சர்க்கஸில் பழகிய வேறு நான்கு யானைகளும் கொலைக் களத்திற்கு அழைத்துவரப்பட்டன. மேரி தப்பித்துவிடக் கூடாது என்பதற்காக அதன் கால்கள் ரயிலில் கட்டப்பட்டன. பின், அதன் கழுத்தில் சங்கிலி இறுக்கப்பட்டு, அதன் மறுமுனை கிரேனின் வாயில் கட்டப்பட்டது. மனித தொழிற்புரட்சியின்அமோக வெற்றி!கிரேன் மெல்ல எழும்புகிறது. பாதி தூக்கிய நிலையில் சங்கிலி அறுந்துவிழ, மேரியின் முழு உருவம் ஒரு பெருஞ்சத்தத்துடன் கீழே விழுகிறது. ஒரு பெண் யானையின் அடிவயிற்று எலும்புகள் முறியும் சத்தம் அந்த இடத்தை சூன்யப்படுதுகிறது. ஒரு காட்டின் பிறப்பிடம் உடைந்து நொறுங்குகிறது! கதியற்றுத் திணறும் அந்த யானையின் கழுத்தில், மீண்டும் வலுவான சங்கிலி இறுக்கப்படுகிறது. மேரி மேல எழ எழ கீழ் இருக்கும் தலைகள் எல்லாம் சிறிதாகின்றன. வாழ்விற்கான தனது கடைசி நம்பிக்கையை தன் கால் அசைவுகளில் தெரிவித்துவிட்டு, நிலத்தின் மிகப்பெரிய உடல் விரைக்கத்தொடங்குகிறது. பெருங்காட்டில், தன் தாயுடன் திரிந்த மீச்சிறு நாட்களை, அது தனது இறுதி மூச்சின் போது நினைத்திருக்கலாம். யாருக்குத் தெரியும்! அதன் மாபெரும் விடுதலையைக் கொண்டாடவோ என்னவோ கீழிருந்த மக்கள் கூட்டத்தில் ஒரு மெய்சிலிர்க்கும் ஆரவாரம்! உலக வரலாற்றை நிரப்ப மீண்டும் ஒரு பக்கம். அடுத்த நாள் அந்த சர்க்கஸ் எப்போதும்போல் செயல்பட்டது. இரண்டாவது நாள், அதிலிருந்த நான்கு யானைகளில் ஒன்று ஓட்டம்பிடித்து, மேரி தூக்கிலிடப்பட்டஇடத்திற்கு வந்து சேர்ந்தது. காட்டியல்பின் மீச்சிறு குணாதிசயத்துடன் அது தேடியது ஒரு யானையை மட்டுமல்ல என்று உங்களுக்குப் புரியவில்லை என்றால் என் எழுத்திற்கு அர்த்தமில்லை. மீண்டும் அதே சர்க்கஸ், முக்காலியில் அமர்வது, இசைக்கருவி வாசிப்பது, மூன்று கால்களில் நடப்பது…

இதுதான் மரணம். இதுதான் தண்டனை, இதுதான் கொலை. இதுதான் வாழ்க்கை. ஏதோ சென்ற நூற்றாண்டில் நடந்த சம்பவம் என்று நீங்கள் ஆசுவாசப்பட்டுக் கொள்ள வேண்டாம். நம் கைகளில் சுத்தமில்லை. ஒரு மனிதக்குழந்தை பிறக்கும்போதே ஏதோ ஒரு விலங்கின் குழந்தையுடைய உணவையும் உறைவிடத்தையும் அபகரித்து விட்டே பிறக்கிறது. அல்லது பெற்றெடுக்கப்படுகிறது. மேரி என்பது ஒரு சம்பவம். சர்கஸ்களில் மட்டுமே பல்லாயிரக்கணக்கான விலங்குகள் சித்ரவதிக்கப்பட்டு, கொலை செய்யப் பட்டிருக்கின்றன. அவற்றின் கடைசி நிமிட நடவடிக்கைகள் பற்றி படித்தால், நம் முகத்தைக் கண்ணாடியில் பார்க்க நமக்கே சகிக்காது. டைக் என்ற பெயருடைய வேறு ஒரு யானை 86 துப்பாக்கிக் குண்டுகளால் சுடப்பட்டு ஒரு மாநகரின் நடுவீதியில் இறந்தது. இந்த சம்பவத்திற்கு இரண்டு நாட்கள் முன்… நடுத் தெருவில் அந்த யானையை அதன் பயிற்சியாளர் பிரம்பால் அடிக்கிறான். அது அடியில் இருந்து தப்பிக்க மூன்று கால்களால் மண்டியிட்டுக் கெஞ் சுகிறது. அவன் அதைப் பொருட்படுத்தாமல் அடிக்கிறான். தன் உடலை மறைத்துக் கொள்ள அது தரையில் இன்னும் மண்டியிட முனைகிறது. நிலத்தின் மாபெரும் உடல், தன் உருவத்தை நினைத்து வருந்துகிறது. அப்போதும் விடாமல் அவன் அடிக்கிறான். அது வலி தாளாமல் பிளிறுகிறது. அப்போதும் அடிக்கிறான். வெகுநேரம் கழித்து அவன் சென்று விட்ட பிறகும், அவர் இருப்பதாக நினைத்துக் கொண்டு மண்டியிட்டு நடுத்தெருவில் கெஞ்சி அழுகிறது ஒரு பெண் யானை. காட்டுயிர் அடையாளம் இழக்கிறது. பிச்சைஎடுக்கிறது. இறைஞ்சுகிறது. முடிந்து விட்ட மிரட்டலைக் கற்பனித்து அழுகிறது. ஒருமுறையேனும் பிள்ளை சுமந்திருக்காத அந்த உடல் இருப்பென எதைத்தான் நினைத்துக் கொள்ளும்? அல்லது இதையும் கண்டு வளரும் அந்த நகரத்துக் குழந்தைகளின் வளர்ப்பு எப்படி இருக்கும்? மாபெரும் பிளிறல் சத்தத்தோடு அந்த யானை மரணித்து வீதியில் விழுவதை நம் குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டுவோமா? சன்னி என்ற ஒரு ஆண் யானையை 152 மஸ்கட் குண்டுகளும்,ஒரு விஷம் தோய்த்த குண்டும் கொன்றன. அதைக் கொலைசெய்ய பணிக்கப்பட்டவீரர்கள், அதன் கூண்டிற்கு எதிரே அணிதிரள்கின்றனர். சன்னிக்கு பூனைபோல் தன் இரண்டு கால்களும் முட்டுக் கொடுத்து அமரச்சொல்லிக் கட்டளையிடப்படுகிறது. 152ஆவது குண்டு வரை சன்னி தான் அமர்ந்திருந்த தோரனையை மாற்றவே இல்லை. மரண வலியில் கடைசியாக மூச்சை நிறுத்திவிட்டு தான் அது கீழே விழுகிறது. என்றால், அதற்கு அளிக்கப்பட பயிற்சி 152 குண்டுகளை விடவும் வலி மிகுந்தது தானே? மனதில் எவ்வளவு பயமிருந்தால் அது இவ்வளவு அராஜகத்திற்கும் ஒத்துழைத்திருக்கும்! சன்னியின் உடல் ஒரு பொதுவிடத்தில் அறுக்கப்படுகிறது. அதன் 30 மீட்டர் நீளமுடைய தந்தங்களும் எலும்புக்கூடும் விளம்பரப்படுத்தி விற்கப்படுகின்றன. பெரு நிறுவனத்தின் வீரத்தைப் பறைசாற்ற இன்னுமொரு சான்று.

இதையெல்லாம் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் மரணம் அத்தனை எளிதானது. இந்த சம்பவங்கள் இங்கே குறிப் பிடப்பட்டதற்கான நோக்கம் வெறும் சர்க்கஸ் என்பது மட்டுமல்ல. ‘Capital Punishment’ என்ற வாக்கியம்தான் இங்கே இணைப்புக் கயிறு. ஐரோப்பா இதுபோன்ற பல செயல்களில் பகிரங்கமாக ஈடுபட்டு, பலநூறு பன்றிகளுக்கும், பறவைகளுக்கும், எலிகளுக்கும், பூச்சிகளுக்கும், மரணதண்டனை விதித்திருக்கிறது. மக்கள் அருந்தும் நீரில் வாய் வைத்து, மக்கள் உணவை உண்டது, உரிமையாளரை ‘மதியாதது’ போன்றவை இவற்றின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. காண்பவை எல்லாவற்றையும் பயன்படுத்திக் கொள்ளும் உரிமையை நமக்கு நாமே அளித்துக் கொண்டோம். ஒன்று விலங்குகளுக்கு உணர்ச்சி இல்லை என்று ஒதுக்கிவைப்பது. இல்லையென்றால், அவற்றின் இயல்பை நம் கண்ணோட்டத்தில் குற்றமெனப் பாவித்து அவற்றைத் தண்டிப்பது. இரண்டு வகையிலும் அமோகமாக குற்றமளிப்பது நாம் தான். உயிரியல் பூங்காக்களும் விலங்குகளைப் பாதுகாக்கும் பெயரில் அவற்றின் சுதந்திரத்திற்கு அநீதியே இழைக்கின்றன.இந்நாட்களில் சர்க்கஸ் விலங்குகள் குறித்து ஓரளவு விழிப்புணர்வு இருந்தாலும், UK போன்ற நாடுகளில், சர்கஸ் விலங்குகள் பயன்பாட்டின் மீது எந்தத் தடையும் இல்லை. இந்திய அரசு, சிங்கம், புலி, கரடி, குரங்கு மற்றும் சிறுத்தை ஆகிய ஐந்து விலங்குகளை மட்டும் சர்க்கஸ்களில் பயன்படுத்தத் தடை விதித்திருக்கிறது. யானை, பறவைகள், குதிரை, நாய் போன்றவற்றின் பயன்பாட்டில் எந்தத் தடையும் இல்லை. யானைமீது தடை விதிக்காததற்கு அதன்மேல் திணிக்கப்பட்டிருக்கும் மத அடையாளங்கள் ஒரு பிரதான காரணம். இன்று வரை நவராத்திரியின்போது ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் யானை ஒரு வாழைப்பழ சீப்பிற்காக மூன்று கால்களில் நொண்டியடித்துக் கொண்டு வரும். மேலும் பிரமாதமாக மௌத் ஆர்கன் இசைக்கும். இவையெல்லாம் அந்தக் கோவில் யானைக்குக் கடவுள் குடுத்த திறமைகள் என்று நம்பிக்கொண்டிருக்கும் சூழல் தான் நிலவுகிறது. பாகன் கையிலிருக்கும் குச்சிதான் இதை இயக்கிக் கொண்டிருக்கிறது என்ற அடிப்படைப் புரிதலும் இல்லாமல் தான் நாம் விழாக்களைக் கொண்டாடுகிறோம். மக்களின் நம்பிக்கை உண்மையாகவே இருந்தாலும், சிறுவயதிலிருந்து அதற்குக் கொடுக்கப்பட்ட பயிற்சியை, அதன் மூலம் ஒரு குட்டி யானை உணர்ந்த வலியை, அதன் மனதில் பதிக்கப்பட்டிருக்கும் பயத்தை நாம் கொண்டாடுவதில் என்ன புண்ணியம் வந்துவிடப் போகிறதென அந்தக் கடவுளுக்குத் தான் வெளிச்சம்!

ஒரு கோவில், ஒரு மதம் என்றில்லை. நம் சமூகம் பாரபட்சமின்றி ஒட்டுமொத்தமாக இவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்ளப் பழக்கப்பட்டுவிட்டது. ‘God’s Own Country’ எனச் சொல்லிக்கொள்ளும் கேரளாவிலும் வருடாவருடம் நூற்றுக்கணக்கான யானைகள் அலங்கரிக்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. மென்மையான குணம் கொண்டவைகள் யானைகள். அவ்வளவு ஆரவாரம், அவ்வளவு புகை, அவ்வளவு நெரிசல் என்று அவைகள் படும் வேதனையையும் உங்கள் வேண்டுதலின் போது கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்! படைப்பு குறித்த உங்கள் தத்துவம் உண்மையாகவே இருந்தாலும், யானைகள் உங்களை ஆசிர்வதிப்பதற்காகவும், உங்களிடம் பிச்சையெடுப்பதற்காகவும் படைக்கப்படவில்லை! அவை காட்டை உருவாக்குபவை. காடு முழுதும் நடந்து திரியும் யானையை, நாள் முழுதும் கட்டிவைப்பதன் மூலம் நீங்கள் சொல்லிக்கொள்ளும் படைத்தவன்-ஐ மதியாமல் பாவம் சேகரித்துக் கொண்டிருக்கிறீர்கள்! இவ்வளவு அநீதியும் செய்துவிட்டு, ‘விவசாய நிலங்களில் யானைகள் அட்டகாசம்’ எனத் தலைப்புச் செய்தி வாசிப்பதில்தான் நமக்கு அவ்வளவு புல்லரிப்பும். ‘Vermin act’ என்ற பெயரில் அரசே விலங்குகளைக் கொலை செய்யச் சொல்லிக்கொடுக்கும்போது, இவை யெல்லாம் எம்மாத்திரம்! சமீபத்தில் கேரளாவில் தெருநாய்களைக் கொலைசெய்து, ‘Capital Punishment’ என்று அறிவித்திருந்தார்கள். தெருநாய்கள் உண்மையிலேயே அவ்வளவு ஆபத்தானவையா என்ன? முப்பதாயிரம் ரூபாய் கொடுத்து வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த நாயைத் தானே நாம் வீட்டுக்குள் அனுமதிப்போம். நாய்களைப் பொறுத்தவரை அவைகள் மனிதர்களின் நண்பர்களாக பார்க்கப்படுமாயின், இந்த செயலை செய்யும் துணிவு இவர்களுக்கு வந்திருக்குமா என்ன? ‘மூடர்கூடம்’திரைப்படத்தில் ஒரு காட்சி நினைவிற்கு வருகிறது. தாயின் முலையில் பால் குடித்துக் கொண்டிருக்கும் ஒரு நாய்க்குட்டியை இழுத்து எடுப்பதுதான் நம் தோழமையின் லட்சணம்! இயல்பாய் அங்கு வசிக்கும் பிராணிகளிடத்தில் காட்டாத நம் அன்பில் தான் என்ன ஒரு பரிசுத்தம்! தெருநாய்களால் மக்களுக்கு ஆபத்து என வக்காளத்து வாங்குபவர்கள் முதலில் தெருக்களை சுத்தமாக வைத்திருக்கிறார்களா?சுகாதாரம் என்ற பேச்செடுத்தாலே முதலில் குற்றம் சாட்டப்படுவது தெருநாய் தான். உண்மையில் தெருக்களில் வாழும் விளிம்பு நிலை மக்கள் தெருநாய்களை சுதந்திரமான செல்லப்பிராணிகளாகத் தான் நினைக்கிறார்கள். எந்த இடத்தில் மனிதர்கள் அதிகரிக்கிறார்களோ, அதே இடத்தில் நாய்களும் அதிகரிப்பது தான் இயற்கை. ஆக, ஓரிடத்தில் நாய்களின் எண்ணிக்கையைக் குறைக்கவேண்டுமென்றால் அந்த இடத்தில மனிதசுவடும் குறையும்போதுதான் அது சாத்தியமாகும்!

கொலைவெறியில் இருப்பவர்கள் ‘இனத் தொகை இயக்கவியல் (Population dynamics)’ என ஒன்று இருப்பதை யாராவது கேள்வியாவது பட்டிருப்பார்களா என்று தெரியவில்லை. பொதுவாக ஓர் இனம் ஓரிடத்தில் அதிகமாகினால் அதற்கு பல காரணங்கள் உண்டு. தங்கள் வாழ்விடம் அழிக்கப்படுவது, பக்கத்திலிருக்கும் இடங்களில் உணவு கிடைப்பது- இவை இரண்டும் இனத்தொகையை இயக்குவதில்
நேரடியான காரணங்கள். இவற்றைத் தாண்டி, அறிவியல் பூர்வமாக ஒன்று உள்ளது. ஒரு குறிப்பிட்ட இடத்தில உணவு மிதமாகக் கிடைக்கும் பட்சத்தில், அந்த உணவு உண்ணப் படுவதற்காக இயற்கை அந்த இடத்தில் ஓரினத்தின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும். அதாவது, நீங்கள் vermin என்ற சட்டம் போட்டு எவ்வளவு தான் சுட்டுக் கொன்றாலும் இயற்கை அந்த சமனை ஏற்படுத்த அதிக அளவில் இனப்பெருக்கத்தை இயக்கிகொண்டுதான் இருக்கும். ஆக, ஒன்றுக்கும் உதவாமல்தான் நாம் கொலைசெய்யத் தூண்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆஸ்திரேலியாவில்  vermin என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் கங்காருகள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மேலும், நரிவகைகளும் (Coyete) பல நாடுகளில் வெர்மினாக அறிவிக்கப்பட்டு, போட்டிகள் வைத்துக் கொல்லப்படுகின்றன. அறிவியல் தளத்தில் இயங்கும் நாடுகளில் இவை நிகழ்த்தப்படுவதற்கான காரணம் வெறும் ‘Public nuisance’  ஆகத் தோன்றவில்லை. அந்த உயிரினங்களின் வணிக மதிப்பும் இதை இயக்கிக் கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் யானைகள்மீது வேறு வகையான வன்முறை நிகழ உள்ளது. பிறப்புக் கட்டுப்பாட்டு மருந்துகள், அவைகளின் பிறப்புறுப்பில் செலுத்தப்படுவது! கருவுறுவது, பிள்ளை பெறுவது என அனைத்து ஆசைகளும் தேவைகளும் விலங்குகளுக்கு உண்டு. அதுவும் யானை போன்று, குட்டியை வெகு பத்திரமாக பார்த்துக்கொள்ளும் விலங்குகளுக்கு, ஒரு குட்டியை ஈன்று அதனுடன் வளர்வது என்பது அதன் வாழ்வின் பொருள். இதுதான் மனரீதியான அவற்றின் நன்மைக்கும் வழி. Serotonin, Progesterone முதலிய ஹார்மோன்கள் மனிதர்களை மட்டும் இயக்குவதில்லை.

நீங்கள் அவற்றின் உளவியலை இப்படி மோசமாக பாதிப்பீர்களாயின், அவை உங்கள் வாழ்விடங்களில் புகுந்து ‘அட்டகாசம்’ செய்வதை யாராலும் தடுக்க முடியாது! மேலும், உலகில் மிக அதிக அளவில் பரவியிருக்கும் இனத்திற்குத் தெருக்குத்தெரு ‘Fertility centre’  இருப்பது பற்றி அந்த விலங்குகளுக்கு என்ன கருத்து இருக்குமென யோசிக்கத் தோன்றுகிறது.இந்த வரி ஒரு தனிமனிதனுடைய உணர்ச்சிகளுக்கும் உரிமைகளுக்கும் உதாசீனமாகத் தோன்றினால், அதே உதாசீனத்தை அதே அறிவியல்மூலம் பல்லாயிரம் தனிவுயிர்களுக்கு அளிக்கிறோம். பொதுவாக ‘Animal Rights’ பற்றி பேசப்படும் அத்தனை கருத்துகளும், விளிம்பு நிலை மக்களுக்கு எதிராகவே இருக்கும் என்ற வாதத்தைக் கூட்ட எழுதப்படவில்லை இந்தக் கட்டுரை. ஒருவேளை உணவிற்காக ஒற்றைக் கயிற்றில் நடக்கும் ஒரு சிறுமியின் வலியைத்தான் மேரி, டைக், சன்னி, மற்றும் இன்னும் பிற உயிர்கள் அழுத்திச் சொல்லிச் சென்றிருக்கின்றன. மனிதர்கள், விலங்குகள் என்றில்லாமல், எல்லாருக்குமான ‘உரிமை மீறல்’தான் இங்கு ஒட்டுமொத்தமாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் தன்னை விட பலம் குறைந்த ஒவ்வொருவரின் மீதும் தனக்கான உரிமையை நிலைநாட்டுகின்றனர். ஒரு பயன்பாட்டு மனோபாவம் பாரபட்சம் இன்றி சமூகத்தில் நிலவிக்கொண்டிருக்கிறது. அதிலும், சீரான பகுத்தளித்தல் இல்லாத ஒரு பயன்பாட்டு மனோபாவம் தான் பணம் இருப்பவர்களை, நாய்க்குட்டி மிதிவண்டி ஓட்டுவதைப் பார்த்து ரசிக்கவைக்கிறது! பல்லுயிரைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர் அதை பற்றிய நினைவே இன்றி, பொதுச்சந்தையில் பல்லுயிரைக் கூவிக் கூவி விற்பதற்கு எதிரானது தான் இந்தக் கட்டுரை! ஆனால், ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி மனிதர் என்ற போர்வைகொண்டு பிற உயிர்கள்மீது ஒரு அடிப்படை சகோதரத்துவமும் இன்றி வாழ நாம் அனைவருக்கும் பழக்கப்பட்டுவிட்டது! உரிமைகளும் உடைமைகளும் உருவாக்கப் படுவதில்லை. பிடுங்கப்படுகின்றன! இயற்கைச் சூழலில் எதையும் உருவாக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது! பிடுங்கப்பட மட்டும் தான் முடியும். பிடுங்குபவர்களுக்கு எல்லா மொழிகளிலும் அழகான பெயர்களுண்டு. அந்தப் பெயர்களை உங்களுக்கு நீங்களே சூட்டிக்கொள்ள ஆசைப்படுகிறீர்களா என்று ஒருமுறை நினைத்துக்கொள்ளவும்!

இவையெல்லாவற்றையும் படித்தபின்பும் Vermin முதலிய சட்டங்களில் நியாயம் இருப்பது போல் தோன்றினால், இன்னொன்றையையும் நினைத்துக்கொள்ளவும்! உலகிலேயே மிக அதிக அளவில் பரவியிருக்கும் ஒரே ஒரு உயிரினம் மற்ற அனைத்துக் கோடிக்கணக்கான உயிரினங்களுக்கும் nuisance ஆக இருக்கின்றது. அது எந்த உயிரினம் என்பது நமக்கே தெரியும். Homo sapiens (மனித இனம்)-ஐ Vermin ஆக அறிவித்துவிட்டு தற்கொலை செய்துகொள்வது தான் இயற்கைக்கான ஆகச்சிறந்த நன்மையாக இருக்கும்!

ஏனென்றால் மரணம் அத்தனை எளிதானது!

பல நூற்றாண்டுகளாய் நம்மைச் சுற்றி இருக்கும் தாவர, விலங்கினங்களை தினந்தோறும் தண்டித்துக் கொண்டிருக்கிறோம். அவைகள் மனிதரல்லா பிற உயிர்கள் என்பதுவே அதற்கான பிரதான காரணம்.

நிவேதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *