நம்முடைய விதைகள் இனி யாருடையவைகளாகும்?

உணவையே ஆயுதமாக்கும் அமெரிக்காவின் ரகசிய சதி – பகுதி 1

தண்ணீர் அனைவருக்கும் அவசியமான ஒன்று. பணக்காரன், ஏழை என்ற பேதம்காட்ட தண்ணீருக்குத் தெரியாது. ஆனால் தண்ணீர்  இலவசமாக கிடைக்கப்பெறும் உரிமை நம் எல்லாருக்கும் உண்டு என்ற நம்முடைய பாரம்பரிய புரிந்துணர்வு, இப்போது கார்ப்பொரேட் முதலாளிகளின் கைகளில் சிக்கி, செத்துக்கொண்டிருக்கிறது.

எல்லாருக்கும் இன்றியமையாத ஒரு பொருளை, மக்கள் என்ன விலை கொடுத்தேனும் வாங்கி விடுவார்கள் என்பதாலேயே, தற்போது தண்ணீர் வர்த்தகமாக மாறி விற்பனைக்கு வந்திருக்கிறது. இதுவே கார்ப்பொரேட் முதலாளிகள் கண்டுபிடித்த யுக்தி. இதனால்தான் அவர்கள் நதிகள் மீதும், நீராதாரங்கள் மீதும் தங்கள் பிடியை இறுக்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களின் விலைமதிப்பற்ற நீராதாரத்தை, கார்ப்பொரேட் நிறுவனங்களுக்கு முழுவதுமாக எழுதிக்கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதோ, இப்போது விதைகளின் விஷயத்திலும் இதே யுக்திதான் கையாளப்பட்டுக்கொண்டிருக்கிறது. உணவு, சார்ந்திருத்தல், வாழ்ந்திருத்தல் என்ற இவை மூன்றோடு சம்பந்தப்பட்டு நிலைத்துநின்ற ஒன்றுதான் நம்முடைய வேளாண்மைப் பாரம்பரியம். நம் வேளாண் பாரம்பரியத்தில், விவசாயிகளின் கூட்டுறவும், பரஸ்பரமும் அதிப்பிரதானமான காரணிகளாக இருந்தவைகள்.

விதைகளை பாதுகாத்துச் செல்வதும், புதிய தர விதைவகைகளை உருவாக்கிக்கொண்டு போவதும், மரபுவழி வேளாண்மையில் பல்வகை முறைமைகளை நிலைநிறுத்திச் செல்வதும், விவசாயிகள் பரஸ்பரம் விதைப் பரிமாற்றம் செய்து விவசாயம் செய்துவந்ததுமான இவைகள், நமக்குள் கிளைபரப்பி நின்ற, ஒருங்கிணைந்த ஆத்மார்த்த மனோபாவத்தின் கூட்டுப்பலன்களாகவே இருந்தன. ஆனால் இன்று விதைகளுக்குக் காப்புரிமை செய்வதும், அவைகளை பெரு நிறுவனங்களுக்கு குத்தகையாக மாற்றம் செய்வதும், விவசாயிகள் காலங்காலமாக செய்து வந்த விதை சேகரித்தல் மற்றும் விதைப்பு முறைகளை சட்டவிரோதமாக அறிவிப்பதற்கு உதவும் விதமாக, அறிவுசார் சொத்துரிமை சட்டத்துடன் (Intellectual Property Rights Act) சம்பந்தப்பட்ட காப்புரிமைச் சட்டம் இந்தியாவில் திருத்தம் செய்யப்படுகிறது.

குத்தகை ஏகாதிபத்தியத்தில் விதைகள் முழுமையாக புதைந்துவிட்டால்,  அதன்பிறகு வேளாண் சாகுபடிக்காக ஒரு விவசாயி விதைகளைப் பெற,  சந்தையை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய நிர்பந்தநிலை உருவாகும்.

நம்முடைய பாரம்பரிய விதைகள் விஷயத்தில் சுயத்தை சார்ந்திருத்தல் அல்லது யாரையும் சாராதிருத்தல் என்பது உடைத்தெறியப்படுவதோடு நம்முடைய விவசாயம் முழுமையுமாக வெளிநாட்டு கார்ப்பொரேட் நிறுவனங்களான மான்சாண்டோ (Monsanto), கார்கில் (Cargill) ஆகியவைகளின் கீழ் வந்துசேரும். அத்துடன் இவ்வகை நிறுவனங்களின் கருணையை நம்பி மட்டுமே எதையும் செய்ய முடியும் என்ற நிலை உருவாக்கப்படும்.

பருத்தி சாகுபடி விஷயத்தில் இப்போதே நாம் இந்தியாவின் பல பாகங்களில் இதைக் காண முடிகிறது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைக்கொண்டு விவசாயம் செய்த ஏராளமான விவசாயிகள் கடன்பட்டு நொடிந்துபோவதையும், அவர்களின் தொடர் தற்கொலைச் செய்திகளையும் பத்திரிகைகளில் நாம் வாசித்துக்கொண்டிருக்கிறோம். இனி நெல்லும், கோதுமையும் இன்னபிற உணவு தானியங்கள்கூட உயிரி தொழில்நுட்பம் என்ற பெயரில், காப்புரிமையை தட்டிப்பறிக்கும் ஏதாவது ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் கையில் சென்றுசேர்ந்தால், நம் உணவுப் பாதுகாப்பு என்பது ஒரு மாய தரிசனமாக, ஒரு கானல் நீராகவே மாறிப்போகும்.

உணவை ஆயுதமாக்குதல் என்பது சர்வாதிகார, முடியாட்சி நாடுகளிலும்  மற்றும் பல நாடுகளிலும் பரீட்சித்துப் பார்க்கப்பட்ட யுத்த தந்திரமாகும். மக்களின் உணவு, மருந்து ஆகியவை தொடங்கி, அவைகளின்மேல் முழுமையான கட்டுப்பாடு கிடைத்துவிட்டால் அந்த நாட்டையே மறைமுகமான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம். ஆப்பிரிக்க நாடுகளிலும், லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், போருக்குப் பிறகான ஈராக்கிலும் இந்த தந்திரோபாயம் பரீட்சித்துப் பார்க்கப்பட்டு, வெற்றியும் அடைந்துவிட்டது. அதனாலேயே உலக வர்த்தக மையத்தின் அறிவுசார் சொத்துரிமைகளின் காப்புரிமைக்கான பட்டியலில், உணவுப் பொருட்கள், விதைகள், மருந்துப்பொருட்களை சேர்க்கக்கூடாது என்று பல நாடுகள் குரல் எழுப்பின. இதுகுறித்து அந்த நாடுகளைச் சேர்ந்த மனிதநேய முன்னெடுப்புகளில் ஆர்வம் உள்ள பலர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் கார்ப்பொரேட் நிறுவனங்களின் லாபத்தில் மட்டுமே கண்ணும் கருத்துமாக உள்ள பன்னாட்டு சர்வாதிகார மையங்களில் ஒன்றான உலக வர்த்தக மையம் செவி மடுக்கவேயில்லை. விதை நிறுவனங்களைக் கொண்ட நாடான அமெரிக்காவின் ‘அழுத்தம் தரும் யுத்த தந்திரமே’ அங்கு வெற்றி கொண்டது.

இந்தியாவோ என்றால் ‘ஓடும் நாய்க்கு ஒரு முழத்திற்கு முன்னால்’ என்ற மலையாள பழமொழிக்கு ஏற்ப, உலக வர்த்தக மையத்தின் பல்வேறு மக்கள் விரோத திட்டங்களுக்கு உச்சபட்சமாக உதவும் விதத்தில், இங்குள்ள காப்புரிமைச் சட்டங்களில் அவசர சட்டங்கள் மூலம் திருத்தங்கள் செய்தாயிற்று. சர்வாதிகாரத்துடனான தனது கீழடங்குதலை, சேவனத்தை திரையேதும் இல்லாமல் இந்திய ஆட்சியாளர்கள் மீண்டும் ஒருமுறை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டிவிட்டனர்.

விவசாயிகளின் தற்கொலைச் செய்திகளை செய்தித்தாள்களில் படித்துவிட்டு முதலைக்கண்ணீர் வடிப்பவர்கள் கவனிக்காமலோ அல்லது அல்லத் தட்டியோ விட்டுவிட்ட ஒரு விஷயம் உண்டு. அது, நம்முடைய பாரம்பரிய விதைகளுக்கு பன்னாட்டு விதை நிறுவனங்கள் காப்புரிமை பெறப்போகின்றன என்பதும், அவற்றை விற்பனை செய்வதற்கான ஒப்பந்த உரிமையை பெறவுள்ளன என்பதும், இந்தியாவில் விவசாயத்தின் மீதான முழு ஆளுகையானது, வெகுவிரைவில் பல நாடுகளுக்கு ஒப்பந்தமாக கிடைக்கப்பெறும் என்ற அச்சுறுத்தும் யதார்த்தமே அது. இரண்டாம் சுதந்திரப் புரட்சியே அல்லாமல், இவைகளை தடுத்து நிறுத்த மற்றொரு பரிகாரம் ஏற்றதாக இருக்கும் என்று தோன்றவில்லை.

காலம் காலமாக நமக்கு இருக்கும் உரிமையை தட்டிப்பறித்து, தனியார் நிறுவனங்களின் லாபத்திற்காக நம்மை பலிகடாக்களாக ஆக்க வேண்டும் என்பதுதான் விதைக் காப்புரிமை செய்வதன் மூலம் நிகழ்ந்தேறப்போகிறது.

பாசுமதி அரிசியும், மஞ்சளும், வேம்பும் என இன்னும் பல பொருட்கள் (பன்னாட்டு நிறுவனங்களால்) காப்புரிமைப் பெறப்பட்டதன் பட்டியலில் உள்ளன. இப்படி இந்த சட்ட திட்டங்களை மீறினால், விவசாயிகள் நீதிமன்றங்களின் நீண்ட படிகளில் ஏறவேண்டியது வரும். அங்கே நீதி கிடைக்கும் என்றாலும் அது பெரு நிறுவனங்களுக்கு என்பதாக மட்டுமே இருக்கும்.

நீரும், விதையும் பொதுச் சொத்து; அது எல்லோருக்கும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் தடைபட்டுப்போகக் கூடாது. நீரை, விதையை வியாபார சரக்காக மாற்றுவதையும், தனியார் மயமாக்குவதற்கான அனைத்து முன்னெடுப்புகளையும் எதிர்க்க வேண்டும் என்பது, நம் விவசாயத்தை காக்க வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல; நாம் வாழ்வதற்கான உரிமையையும், நம் ஜனநாயகத்தையும் காப்பதற்கு உள்ள ஒரே வழியும்  இதுவேயாகும்.

–தொடரும்

நன்றி – நல்லபூமி இயக்கம், கேரளா

தமிழில் – குஞ்சம்மாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *