அழியும் குடகு மலையின் காடுகளும் காவிரியும்

மிகச் சமீப காலம் வரை கர்நாடக குடகு மாவட்ட காபி தோட்ட விவசாயிகள் காப்பிச் செடிகளை காலம் காலமாக அவர்களுக்கு வாய்த்திருந்த பசுமை காட்டு போர்வையில் தான் வளர்த்து வந்தனர். இப்போதோ, வெட்ட வெளியில் சூரிய வெளிச்சத்தில் வளர்க்க விழைகின்றனர். இது காவிரி நதியையும் மேற்குத் தொடர்ச்சி மலையையும் கடுமையான தாக்கத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. வர வர இன்னும் அதிக விவசாயிகள் டாடுப் (Dadup – Erythrina subumbrans), அரிகானட், , (Arecanut – Areca catechu), பாலான்ஜி  (Balanji – Acrocarpus fraxnifolius) மற்றும் பலா மரம் (Jackfruit – Acrocarpus heterophyllus) போன்ற மரங்களை இறக்க விடுகின்றனர். இதன் மூலம் பசுமைக் காடுகளின் அடர்த்தியைக் குறைத்து, வெளிச்சத்தை விரும்பும் காப்பி வகைகளை வளர்க்கலாம் என்று எண்ணுகின்றனர். விளைவாக, அதிக காப்பி உற்பத்தி செய்து அதிக இலாபம் ஈட்டலாம் என எத்தனிக்கன்றனர். மேற்குறிப்பிட்ட பெரிய மரங்களுக்கு பதிலாக, வெளிநாட்டு இறக்குமதியான சில்வர் ஓக்ஸ்-ஐ  (Silver Oaks (Grevillea robusta) வளர்க்கின்றனர்.

சில்வர் ஓக்கின் கம்பம் போன்றிருக்கும் தண்டு மிளகுக் கொடி வளர்ந்து இலாபம் பெருக்க உதவியாக இருக்கிறது. சில்வர் ஓக்கின் அதீத பெருக்கத்தால் அங்கிருக்கும் சில பகுதிகளில் அதுவே பிரதான மரமாகவும் மாறி இருக்கிறது. இந்த மாற்றம் சுற்றுச்சூழலிடமிருந்து அதிக விலை கோரி இருக்கிறது. கூர்க் என்று அறியப்பட்ட குடகு, மைசூரின் மேற்கு விளிம்பில் இருக்கும் பீடபூமி ஆகும். கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 800 மீட்டர் உயரத்தில் உள்ளது. அங்கிருந்து மேற்குத் தொடர்ச்சி மலைக்கு உயர்ந்து கொண்டே சென்று 1500 மீட்டராக உள்ளது. அதிலிருந்து கேரளத்தின் மேற்கு பக்கத்தில் குறுகலாக சரிகிறது. இந்த பீடபூமி கிழக்கு நோக்கியே பிரதானமாக சரிகிறது. அப்படி சரியும் நிலப்பரப்பில் பல கிளை நதிகள் இணைந்து காவிரி ஆறாக உருபெற்று, பல இலட்சம் கர்நாடக, தமிழக மற்றும் புதுச்சேரி மக்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. காப்பிதான் குடகு பகுதியில் மிக அதிகமாக பயிரிடப்படும் வேளாண் பொருள். 33% மாவட்ட நிலப்பரப்பில் காபி பயிரிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 38% இந்தியாவிற்கான காபி இந்த மாவட்டத்தில் இருந்துதான் வருகிறது. சூழலியல் ரீதியாக, குடகு மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலேயே பல்லுயிரியலுக்கான நுண்ணிய ஹாட் ஸ்பாட்டாக கண்டறியப்பட்டுள்ளது. கருமேகம் மற்றும் கடும் மழை இந்த மாவட்டத்தின் மீது அதிகப்படியான நீரைக் கொட்டுகிறது. மாவட்டத்தின் மேற்கு முணை சராசரியாக 5000 மில்லி மீட்டர் மழைப்பொழிவைப் பெறுகிறது என்றால், கிழக்கில் 1200 மில்லி மீட்டராகக் குறைகிறது. பெய்யும் அதிகப்படியான மழை நீர் காவிரிக்கு ஆதாரமாக உள்ளது.

குடகு, பொன்னம்பெட், வனவியல் கல்லூரியின் அறிக்கைபடி, இயற்கையான வனச்சூழல் மாவட்டத்தின் மொத்த பரப்பில் 46% இருக்கிறது. இவை பசுமை காடுகள்,  semi evergreen, moist deciduous, dry deciduous and scrub forest types மற்றும் மிக உயரத்தில் வளரும் புல்வெளி சூழல்களையும் உள்ளடக்கியது. பாரம்பரியமாக, காப்பி இந்த மரங்களின் நிழலில் தான் பயிரிடப்பட்டது. குடகில் உள்ள காபி எஸ்டேட்களில் ஒரு ஹெக்டேருக்கு குறைந்தபட்சம் 270 மரங்களும், சராசரியாக 350 மரங்களும் இருக்கின்றன. பிராககிரி வனவிலங்கு சரணாலயம் அருகாமையில் ஹெக்டேருக்கு 640 மரங்கள் வரை வளர்கின்றன. இது இந்த எஸ்டேட்களை உலகிலேயே மிக அடர்த்தியான வேளாண்-வனவியல் அமைப்பாக ஆக்கியுள்ளது.

குடகு, பொன்னம்பட்டியில் உள்ள வனவியல் கல்லூரியின் வனவியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் பல்கலைக்கழகத் தலைவர், சி.ஜி.குஷாலப்பா, “உலகில் மிகக் குறைந்த நிலப்பரப்பே குடகில் உள்ளது போல காபியை விளைவிக்கின்றன.” என்று கூறினார். அவர் மேலும், “நாங்கள் அரேபிக்கா மற்றும் ரொபஸ்டா காபி வகை மரங்களின் நிழலுக்குக் கீழே விளைவிக்கின்றோம். எங்கள் நிழல்-வளர்ப்பு ரொபஸ்டா அதிக விலைக்கு விற்கப்படுகிறது. நிழலுக்குக் கீழே விளைவிக்கப்படும்போது, காபி மெதுவாகவும் முழுவதாகவும் வளர்கிறது. இதனால் அவை நல்ல சுவையைத் தருகிறது.” என்றார். மேற்கு தொடர்ச்சி மலைகளில் இந்த வருடம் தென்மேற்கு பருவக்காற்றால் போதிய மழைப்பொழிவு இல்லை. இதனால் கர்நாடக காவிரி நீர்த் தேக்கங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்ப்பட்டது. இது தமிழக காவிரி கரையோரங்களில் உள்ள பகுதிகளுக்குத் தண்ணீர் தருவதில் பிரச்சினை ஏற்பட காரணமாக உள்ளது. இந்த விவாதம் நடந்து கொண்டிருக்கையில், சுற்றுச்சூழலை சீர்படுத்தும் பணிகள் குடகு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் காப்பி தோட்ட விவசாயிகள் எந்த வனத்தின் கீழ் பயிரிடுகிறார்களோ அதைக் காத்து காவிரியில் நீரோட்டத்தை தொடரும்படி செய்கின்றனர். இந்த செயல்கள் நீர்பிடிப்புப் பகுதிகளில் பருவநிலை மாறுதல்களை தடுக்கவும் உதவிகரமாக இருக்கும். பல்வேறு வகையான மரங்களாலான வனப் போர்வை காப்பித் தோட்டங்களில் காணாமல் போய்க் கொண்டிருக்க, தென்மேற்கு பருவக் காற்றின் பெருமழை வேகமாக புரண்டோடி, மேற்ப்பரப்பில் இருக்கும் மதிப்புடைய மணலை அடித்து செல்கின்றது. இது வெள்ளத்தை உருவாக்கி பின்பு நீண்ட கால வறட்சிக்கும் வித்திடுகிறது.

வானிலை மாற்றம் ‘காப்பி’ மழையின் மூலம் அளவிடுதல்

கர்நாடக குடகு மாவட்ட காபி தோட்டக் காரர்கள், மிக கவனமாக மழைப்பொழிவைப் பதிவு செய்து வருகின்றனர். சிலர், பல பத்தாண்டுகளுக்கு முன்பு வரை விபரம் வைத்துள்ளனர். அவை மாறிவரும் மழைப்பொழிவு அளவின் கதையைச் சொல்கின்றன. இந்த மாறி வரும் பாங்கு காப்பி வளர்ப்பதிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மேலும் மலைகளிலும் சமவெளிகளிலும் மாறிவரும் பருவநிலை மாற்றத்தைப் பற்றியும் சுட்டுகிறது. இந்த மழையளவை கணக்கிடும் மையங்கள் இருப்பதால், இந்தியாவின் மற்ற இடங்களை விட குடகு பகுதியில் மழைப்பொழிவு போக்குகளை மிகத் துல்லியமாக அறிய முடிகிறது. மழையின் சராசரி அளவு மேற்கு மூனையில் 5000 மில்லி மீட்டராகவும் கிழக்கு முனையில் 1200 மில்லி மீட்டராகவும் வேறுபட்டுள்ளது. இந்தத் தரவுகள் ஒரு சர்வதேசக் கூட்டுத் திட்டத்தின் அடிப்படை கணக்கீட்டின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த திட்டம் குடகு மாவட்டத்திலுள்ள தனித்துவமான வேளாண்-வனவியல் காபிபிணையம் திட்டத்தில்  (CAFNET – Coffe Agro-Forestry Network)  பங்கேற்பாளராக உள்ளது. கடந்த 60 வருடங்களில் 118 காபி தோட்டங்களில் மழைப்பொழிவின் அளவை இந்தத் திட்டம் பகுப்பாய்ந்துள்ளது. காஃப்நெட் கடந்த 35 வருடங்களில் மழைப் பருவம் 14 நாட்கள் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அது மேலும், கடந்த 12 முதல் 14 அண்டு கால சுழற்ச்சியிலேயே மழைப்பொழிவுகளில் அதீத ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

காப்பி நிலபரப்பில் குறைவான மழைப்பொழிவு

மேற்குறிப்பிட்ட கால சுழற்சியின் குறைவான புள்ளியாக இருப்பதாலோ அல்லது எல்நினோவின் மாறும் மழைப்பொழிவின் பாங்கோ, 2015 மற்றும் 2016தான் குடகு பகுதியில் மிகக் குறைவாக மழைபெய்துள்ள ஆண்டுகள். தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக மழைப் பொய்த்துள்ளது. 2015 இல் 19% மழைப்பொழிவு குறைந்துள்ளது. இதன் காரணமாக, குடகு மாவட்டத்தையடுத்து காவிரியின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ண ராஜ சாகர அணையில் இந்த வருடம் நீர் இருப்பளவு 31 % குறைந்துள்ளது. பொன்னம்பெட், குண்டா கிராமத்தின் காப்பி வளர்ப்பர் கே.கே.நரேனின் கள அளவீடுகள் இதை உறுதிபடுத்துகின்றன. “எங்களின் சாதாரண மழையளவு 90 முதல் 100 இன்ச்கள் (2200 முதல் 2500 மில்லி மீட்டர்). இந்த வருடம் 38 இன்ச்கள் தான் பெய்துள்ளது. பொதுவாக வருடத்தின் இந்த நேரத்திற்குள் 70 % மழை பெய்துவிடும்.” என்கிறார். காப்பி தோட்டக்காரர்கள் கடந்த சில வருடங்களின் ஒழுங்கற்ற மழைப்பொழிவால் குழம்பியுள்ளனர். டாடா காபி நிறுவனத்தின் தலைவர் எம்.பி.கணபதி, “மழை மற்றும் வானிலை பாங்குகள் கடந்த சில வருடங்களாக அதிகம் எதிர்பாராத வகையில் உள்ளது.” என்றார். அவர் மேலும், “மழையளவு மாறவில்லை என்றாலும், மழைப்பொழிவு நன்றாக பகிர்ந்து இருப்பதில்லை எனவும் மிக அதிக வறட்சி காலத்தைத் தொடர்ந்து மிக கன மழை பெய்கிறது. அதைத் தொடர்ந்து அதிக திசை வேகக்காற்றும் வீசுகிறது. இது எங்களின் விவசாய மேலாண்மையைக் கடினப்படுத்தியுள்ளது.” என்று எடுத்துரைத்தார்.

அரும்பு மழைச்சாரல் (Blossom showers) பாதிக்கப்பட்டுள்ளது

கொலங்காடு கிராமத்தைச் சார்ந்த காப்பி விவசாயியான பி.பி.தம்மையாவைப் பொறுத்த வரை, இந்த ஒழுங்கற்ற மழைப்பொழிவு பிப்ரவரி ஏப்ரல் மாதங்களில் ஏற்படும் அரும்பு மழைச்சாரலை சில வருடங்களாக பாதித்துள்ளது. காப்பி மலர்களை அரும்பச் செய்தலிலும், ஆண்டின் பிற்பகுதியில் நல்ல விளைச்சலைக் கொடுப்பதிலும் பெரும் பங்கு வகிப்பதால், இது காபி உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறுகிறார். குஷாலப்பா, இதனால் சுற்றுச்சூழலும் தாக்கத்துக்கு உள்ளாகி இருப்பதாக சொல்கிறார். அரும்புச் சாரல் ஒழுங்கற்றுப் போனதால், காபி விவசாயிகள் இந்த மாதங்களில் நிலத்தடி நீரை பயன்படுத்தத் தொடங்கினர். பாரம்பரியமாக காப்பி பயிரிடுதலுக்கு, கலப்பு-மரங்களில் நிழலும் அரும்புச் சாரலும் சேர்ந்து தான் நல்ல மகசூலைத் தந்தன. எப்போது அரும்புச் சாரல் நிலத்தடி நீரால் ஈடுசெய்யப்பட்டதோ, மரங்களின் நிழல் பெரிய பயன் தராமல் போனது. விவசாயிகளுக்கு மண்ணின் மரங்கள் மீது சார்பு குறைந்தது. இந்த பொதுவான போக்கால் மண்ணின் சொந்த மரங்கள் இறந்தன. இந்த மரங்களுக்கு பதிலாக சில்வர் ஓக் மரங்கள் நடப்பட்டது. யார் நிலத்தை வைத்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து வனங்கள் முற்றிலுமாக அழிக்கப்படும் சாத்தியக்கூறுகளும் இருக்கிறது. தம்மையாவின் தோட்டம் கொலகாடுலு கிராமத்தில் உள்ளது. மேற்கு முனையின் பீடபூமியிலிருந்து அருகாமையிலுள்ள வனம்சூழ் பள்ளத்தாக்கில் இருக்கிறது அவரது தோட்டம். அவர் தோட்டத்தில் ஒரு வருடத்திற்கு 5000 மி.மீக்கும் மேல் மழை பொழிகிறது. அவர், பள்ளத்தாக்குத் தளத்தில் அவர் முன்னோர் செய்தது போல் அரிசியைப் பயிரிடுகிறார். அந்த வனம் அவரது தாத்தா காலத்தில் இருந்தது போல அடர்த்தியாக இல்லை என்றாலும், மிச்சம் இருப்பதைக் காக்கவே அவர் விரும்புகிறார். தம்மையாவின் நிலப்பரப்பு குடகு மக்களுக்கு மரபு ரீதியாக வாய்த்திருந்த நிலத்தை ஒத்துள்ளது. காலங்காலமாக, கூட்டுக்குடும்பங்கள் எங்கெங்கு நிலம் வைத்திருந்தார்களோ அங்கெல்லாம் அரிசியைப் பயிரிட்டார்கள். காட்டிலிருந்து வைக்கோலையும் சுள்ளிகளையும் பொறுக்கி கால்நடைகளுக்குத் தீவனம் வைத்தனர். மரங்கள் அரசுடமை ஆதலால், அந்த குடும்பங்களுக்கு அவற்றின் மீது உரிமை கிடையாது.

சில்வர் ஓக்கின் பொருளாதாரம்

சில்வர் மரங்களை நடவோ, வெட்டவோ, விற்கவோ முடியும். சித்தாபுராவைச் சேர்ந்த காபி விவசாயியான எம்.சி.குஷலப்பா, கூறுகையில், ‘சில்வர் ஓக் மரம் காப்பி விவசாயிகளுக்கு இரண்டு வகையான இலாபத்தை ஈட்டித் தருகின்றன. ஒன்று, தேவைப்படும் நேரங்களில் குடும்பத்திற்கு வருமானம் அளிக்கும். இரண்டு, அதன் செங்குத்தான தண்டு, மிளகு கொடிகள் வளர்வதற்கு துணையாக இருக்கும். இது கூடுதல் வருவாயைக் கொடுக்கிறது. சொத்துரிமையும் இல்லாத பொருளாதார உந்துதலும் இல்லாத மண்ணின் சொந்த மரங்களை உயிரோடு வைத்திருப்பதற்கு விவசாயிகளுக்கு எந்தவித ஊக்கமும் இல்லை என்று விரிவுபடுத்தினார். இந்த வேளாண்-வனவியல் காப்பி முறை, சுற்றுச்சூழலுக்கு மிகவும் முக்கியமானது. இது மலைவாழ்வினருக்கான பருவநிலை மாற்றத்தை மட்டும் சமாளிக்கவில்லை, கூடவே பல இலட்சம் காவிரி நீரோடைகளுக்கு தண்ணீர் ஆதாரமாகவும் உள்ளது. இந்த வனங்களைப் பொறுத்தவரை ஒரு பிரச்சனை உள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ளது போல குடகு பகுதியில் வனங்கள் வனத்துறையிடம் மட்டும் இல்லை. இந்த பகுதியில் காடுகள் வனத்துறை மற்றும் விவசாயிகளின் கூட்டுக் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால், அதைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பதில் சிரமம் இருக்கிறது. இதை கூறுவதால், வனத்துறையினர் தான் காடுகளை முழுவதுமாக பாதுகாப்பவர்கள் என்று சொல்வதற்கில்லை. ஆனால், கட்டுப்பாடுகள் சீராக இருந்தால் பாதுகாப்பு நடவடிக்கைகளின் நடைமுறையை அதிகப்படுத்துவது உறுதியாக இருக்கும்.

பெயர் குறிப்பிட விரும்பாத வனத்துறை அதிகாரி ஒருவர், “குடகில் இருக்கும் பெரும்பான்மையான காடுகள் கட்டுபாட்டில் இல்லாதவை. எனவே, அதை உயிர்ப்புடன் வைத்திருக்க காபி விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்.” என்றார். அவர் மேலும், “கிருஷ்ணராஜ சாகர அணைக்கு முன்னால் பாயும் காவிரியில் 90 % நீர்பிடிப்புப் பகுதி குடகில் தான் இருக்கிறது. விவசாயிகளிடம், அக ரீதியில் மாற்றத்தை ஏற்படுத்தி அதன் மூலம் மண்ணின் மரங்களையும் பல்லுயிரையும் காப்பாற்ற வேண்டும்.” என்று தெளிவுபடுத்தினார். காஃப்நெட் ஆய்வின் மூலம், சுற்றுச்சூழல் சேவைகளைப் பற்றி அளவிட முடியும். “நாங்கள் முறையே மண்ணின் மரங்கள் மற்றும் சில்வர் ஓக் மரங்கள் நீரியில் நிலையில் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆராய்ந்தோம். எங்கள் குழு, எவ்வளவு மழை ஊடுருவியது, தண்டுகள் வழியாக எவ்வளவு நீர் வந்தது, எவ்வளவு நீர் நிற்காமல் சென்றது மற்றும் எவ்வளவு நீர் மீள்நிரப்பு (recharged) செய்யப்பட்டது என ஆராய்ந்தோம்.” என்று விளக்கினார் குஷாலப்பா.

சொந்த மரங்களின் மாயாஜாலம்

இந்த ஆய்வு, வெளிநாட்டுத் தாவரமான சில்வர் ஓக்கின் நிழற்ப்போர்வையை அதிகரிப்பதால் மழை இடைமறிப்பின் மீது சிறிதளவே தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது என்கிறது. ஏனென்றால், காபி செடிகளின் இடைமறிப்பைவிட (9% முதல் 22%) மரங்கள் இடைமறிப்பு குறைவானது (1% முதல் 6%). மண்ணின் சொந்த மரங்களிலிருந்து வெளியேறுவதை விட வெளிநாட்டு மரங்களிலிருந்து வெளியேறும் நீர் அதிகம். இருந்தாலும் சொந்த மரங்களின் நீராவி மற்றும் சொட்டுநீர் வெளியேற்றமும் நுண்ணிய பருவநிலை மாற்றத்தில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும், பெரும் நிழற்போர்வை மற்றும் ஆழமான வேர்கள் கொண்ட அமைப்பினால் மண்ணின் சொந்த மரங்கள் மிக ஆழத்தில் இருக்கும் நீர் தேக்கங்களுக்கு, குறிப்பாக பருவ காலங்களில் தண்ணீரை எடுத்துச் செல்ல உதவும். எனவே, நன்றாக மழை பொழியும் போது மண்ணின் மரங்கள் நீரைத் தேக்கி வைத்தும், அதை மெதுவாக ஆறுகளில் வெளியிடவும் செய்தது. அதே நேரத்தில் தோட்டங்களில் பருவநிலை மாற்றத்தைத் தாங்கும் சுற்றுச்சூழலையும் உருவாக்கியது. வேளாண்-வனவியல் கலப்பு அமைப்பு கார்பனையும் சமன்பாட்டில் வைத்திருக்க உதவியது. காஃப்நெட் ஆய்வு, அரேபிகா காபி வகை, உருவாக்கப்பட்ட வனத்தை விட கலப்பு தாவர போர்வையின் கீழ் நன்றாக வளர்ந்தது என்கிறது. சில்வர் ஓக்கின் கீழ் வளர்க்கப்படும் அரேபிகா, மண்ணின் சொந்த மரங்களின் கீழ் வளர்க்கப்படும் ரொபஸ்டா காபி வகையைவிட குறைவாகவே இருக்கிறது என்றது. சில்வர் ஓக்கின் கீழ் வளர்க்கப்படும் ரொபஸ்டா மற்ற எல்லா கலவையையும் விட குறைவு தான் என்றும் கூறியது. அரும்புச் சாரலின் மறைவு கூட காபி விவசாயிகள், அவர்களின் பசுமை போர்வையை அகற்றுவதற்குக் காரணமாக இருக்கலாம். எதிர் மறையாக, விவசாயிகளின் இந்த நடவடிக்கை சுற்றுப்புறத்தில் கார்பன் அளவை மேலும் அதிகரித்து குடகு பகுதியில் மழைப் பொழிவை பாதிக்கும்.

செறிவான உள்ளூர் அறிவு

இந்த ஆய்வு, விவசாயிகள் அவர்களின் உள்ளூர் அறிவைப் பிரதானமாகக் கொண்டு உருவாக்கி பின்பற்றி வரும் பன்-தள வேளாண்-வனவியல் அமைப்பு உலகிலுள்ள பன்மைத்துவ அமைப்புகளில் ஒன்று என்கிறது. பாரம்பரியமிக்க வேளாண்-வனவியல் காபி அமைப்பு, பலதரப்பட்ட விலங்குகள், பறவைகள், செடிகள் மற்றும் நுண்ணியிர்களைக் காத்து பல்லுயிரையும் காக்கிறது. மேலும் கார்பனை கட்டுக்குள் வைத்து நீர் சார் சுற்றுச்சூழல் சேவைகளையும் காக்கிறது. மிளகு, மான்டரின் ஆரஞ்சுகள், வெண்ணிலா மற்றும் தேக்கு போன்ற பல்வேறு பயிர்கள் இந்த அமைப்பில் வளர்க்கப்படுவதால், காபி விலை சரியும் போது விவசாயிகளுக்கு உதவியாகவும் இருக்கும். காஃப்நெட் அறிக்கை, மர நிழலுக்குக் கீழே அரேபிக்கா மற்றும் ரொபஸ்டாவை வளர்க்கும் காபி விவசாயிகளுக்கு, அவர்களின் சுற்றுச்சூழல் சேவைகளுக்கான சன்மானம் வழங்கப்பட வேண்டுமெனக் கூறுகிறது. இதனால், பல்லுயிர் சமநிலையையும் அதன்மூலம் காவிரிக்கான நீரையும் காக்க முடியும் என்கிறது. PES  இரண்டு வகைமைகளை சிபாரிசு செய்கிறது. ஒன்று சுற்றுச்சூழல்-சான்றிதழ் மற்றும் குடகு காபிக்கென்று நிலம் சார் பாதுகாப்பு குறிப்பிடுதல் ஆகும்.

சுற்றுச்சூழல் சேவைக்கான சன்மானம்

சுற்றுச்சூழல் சேவைக்கு சன்மானம்  (Paying for ecosystem serivice – POS)  மூலம் விவசாயிகளுக்கு உற்சாகம் ஊட்டப்படுகிறது. இதன் மூலம், கலப்பு தாவர மரங்களின் போர்வைக்குக் கீழ் பாரம்பரியமிக்க காபி பயிரிடுதலை தொடர் வோருக்கு சுற்றுச்சூழல் – சான்றிதழ்  (ecocertification)  வழங்கப்படுகிறது. இந்த செயல், குடகு நிலபரப்பிற்கே உரித்தான சுற்றுச்சூழல் சேவைகளை உறுதிபடுத்த உதவும். மேலும் இதைப் போன்ற பிற சேவைகளையும் மற்றும் காவிரி நோக்கி பாயும் பருவநிலை சமன்பாட்டையும் உறுதி செய்யும். கலப்பு-தாவர மரங்களின் கீழ் வளர்க்கப்படும் காபி வகைகளுக்குக் கொடுக்கப்படும் சுற்றுச்சூழல்-சான்றிதழ் நடைமுறை, கடந்த ஐந்தாண்டுகளில் குடகு மாவடத்தில் பிரபலமடைந்துள்ளது. கிட்டத்தட்ட 900 காபி விவசாயிகள் சுற்றுச்சூழல்சான்றிதழ் அளித்த காபிக்கு மாறியுள்ளனர். ஒரு ஏக்கருக்கு பத்து விவசாயிகளே என்று வைத்துக் கொண்டாலும், மொத்தம் 10,000 ஏக்கர் அளவிற்கு சுற்றுச்சூழல்-சான்றிதழ் பெற்ற காபிக்கு இது வித்துடுகிறது. கூடுதலாக, டாடா காபி அதன் 13 எஸ்டேட்களுக்கும் சுற்றுச்சூழல்-சான்றிதழ் வாங்கியதை சேர்த்துக் கொண்டால், குடகு மாவட்டத்தில் 20,000 ஏக்கர் காபி பயிரிடுதல் சுற்றுச்சூழல் பாதிப்படைவதை குறைக்கும் நோக்கில் இருக்கிறது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான ஊக்கமாக, காபி விவசாயிகள் அவர்களின் காபி கொட்டைகளுக்கு சந்தை விலையை விட அதிகமாக பெறுகிறார்கள்.

மண்ணின் சொந்த மரங்களின் முக்கியத்துவம்

சுற்றுச்சூழல்-சான்றிதழ் சார்ந்த இந்த பயிற்சியின் பிரதான பாடம், சொந்த மரங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வது தான், என்கிறார் நரேன். அவர் மேலும், “எங்களுக்கு சொந்த மரங்களைப் பற்றி தெரியாமல் இல்லை, அதை தொடர்ச்சியாக பாதுகாப்பதில் ஆர்வமில்லாமல் இருந்தோம். சொந்த மரங்கள் எங்களுக்குப் பொருளாதார இலாபத்தை தரவில்லை. எனவே சில்வர் ஓக்கின் மீது கவனம் செலுத்தினோம்.” நரேனைப் பொறுத்தவரையில், மழை காடுகள் சார்ந்த சுற்றுச்சூழல்-சான்றிதழ் முறை, மண்ணின் சொந்த நிழல் மரங்கள் இருக்கிறதா என்று பார்க்கிறது. மேலும் சான்றிதழ் வழங்குபவர்கள், பணியாளர் மேலாண்மை, பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுகிறதா என்றும், பணியாளர்கள் தங்குமிடம் சுத்தமாக இருக்கிறதா போன்ற வற்றைப் பார்த்துதான் வழங்குகிறார்கள். அவர்கள், குழந்தை தொழிலாளர்களைப் பயன்படுத்தக் கூடாது என்பதில் கறாராக இருப்பர். “அவர்கள் வேதியல் பொருட்கள் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதையும் கண்காணிக்கிறார்கள். அவர்கள் வேதியல் பொருட்களுக்கு தடை விதிப்பதில்லை. ஆனால், சிலவற்றுக்கு கட்டுப்பாடும், மற்றவைக்கு எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதையும் நோக்குகிறார்கள். நாங்கள் நதிகள் அல்லது தொட்டிகள் பக்கத்தில் பூச்சிக்கொல்லி வேதியல் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்பதில் அவர்கள் உன்னிப்பாக உள்ளனர். உள்ளூர் சுற்றுச்சூழலை சீராக வைத்திருப்பதில் அவர்கள் கவனம் செலுத்துகின்றனர் என்று விரிவாகக் கூறினார்

காத்திருக்கும் சவால்கள்

மேற்குறிப்பிட்டவைகள் இருப்பினும், சுற்றுச்சூழல்-சான்றிதழ் நடைமுறை எவ்வளவு வேகமாக பரப்பப்பட்டாலும், சில பிரச்சினைகளையும் கடக்கவேண்டி இருக்கிறது என்கிறார் இயற்கை பாதுகாப்பு நிறுவனத்தின் (National Condervation Foundation-NCS) விஞ் ஞானிடி.ஆர்.சங்கர் ராமன். இந்த நிறுவனம் தான் ஆரம்ப வருடங்களில் மழைக்காடுகள் சான்றிதழ் வழங்குவதில் ஈடுபட்டிருந்தது. அவர் மூன்று புள்ளிகளில் கவனம் வேண்டுமென சொல்கிறார். மிக அதி வேகத்தில் சான்றிதழ் வழங்குவது, நிர்ணய குழுவில் உயிரியிலாளர்கள் மற்றும் சமூக விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட இல்லாமல் இருப்பது, மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளில் (பசுமை போர்வை மற்றும் சொந்த மண் சார்ந்த உயிரினங்களைக் குறைப்பது போன்றன) சான்றிதழ் வழங்குவதை நீர்த்துப் போகச் செய்வது. “அதிவேக சான்றிதழ் வழங்குவதால் மேலும் மேலும்
விவசாயிகளின் நிலம் சுற்றுச்சூழல்-சான்றிதழ் கிழ் கொண்டுவரப்படுகிறது. இருப்பினும், சான்றிதழ் வழங்கும் நடைமுறை களிலும் கறார் தன்மை தொடர்ச்சியாக பின்பற்றப் படும் என நம்புவோம். அப்படிச் செய்வதால், மண் சார்ந்த பசுமையைப் பாதுகாக்கும் இறுதி நோக்கத்தில் சமரசமில்லாமல் இருக்கும்.” என்று கவனப்படுத்துகிறார். அதிக விவசாயிகள் சுற்றுச்சூழல்சான்றிதழுக்கு விண்ணப்பிப்பதால், கலப்பு-மர நிழலில் விளைவிக்கப்படும் காபி முறைகளை பாதுகாப்பதற்கான இயக்கம் தோன்றியுள்ளது. இந்த விளைவிக்கும் முறை தொடர்ந்து உறுதியடைவதற்கு, விவசாயிகள் அவர்களின் சுற்றுச்சூழல்-சான்றிதழ் உற்பத்திக்கு தொடர்ச்சியாக நல்ல பொருளாதார பலன்கள் இருக்க வேண்டும். காபி விவசாயிகளுக்கு சுற்றுச்சூழல்சான்றிதழ் மூலம் வரும் இந்த கூடுதல் இலாபம், குடகின் தனித்துவமிக்க வேளாண்-வனவியல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உதவும், மேலும் காவிரியில் பாயும் நீரையும் இது பாதுகாக்கும். பெங்களூரூ மற்றும் பிற கரையோரங்களில் வசிக்கும் பல இலட்சம் கீழ்க்கரை மக்கள் மேற்கு கரையின் காபி விவசாயிகளை, அவர்களின் குடிநீருக்காகவும் பருவ சமனிலைக்காகவும் நன்றி கூறுவர்.

இந்தியாவின் முன்னணி சுற்றுசூழல் பத்திரிக்கையாளர்களில் ஒருவர். பேனோஸ் சவுத் ஆசியா அமைப்பின் பிராந்திய சுற்றுச் சூழல் மேலாளராக இருக்கிறார். இந்திய சுற்றுச் சூழல் பத்திரிக்கையாளர்களுக்கான அமைப்பில் செயலாளராக இருக்கிறார்.

கோபிவாரியார்

தமிழில்:திண்டி பரத்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments