விடுதலையை சமைக்கும் உணவு   லியா பென்னிமேன் – கறுப்பின விவசாய களப் போராளி

துலிப் மலர்களின் கதை 

 வருடம் 80,000 டாலர்கள் தரக்கூடிய, பணி ஓய்வுக்கு பிறகு பென்ஷன் தரக்குடிய பள்ளி ஆசிரியர் வேலையை உதறிவிட்டு லியா பென்னிமேன் விவசாயம் செய்ய போவார் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த கறுப்பினத்தவர், விவசாயத்தின் மீதான அபூர்வமான ஆர்வம் பதின் வயதுகளிலேயே இருந்தாலும் அதை கறுப்பின ஒடுக்குமுறைக்கு எதிராக, சமத்துவத்துக்கான ஒரு களமாக மாற்றியதுதான் லியாவின் மிக முக்கியமான பங்களிப்பு. நியூயார்க்கில் 72 ஏக்கரில் அவரது வயல் (soul fire farm) உணவில் பாகுபாட்டை, இனவெறியை, அநீதியை எதிர்த்து 2011ல் உருவானது. இயற்கை மற்றும் மூதாதையரின் வழியில் இங்கு விவசாயம் நடைபெறுகிறது. பிறருக்கு விவசாயத்தைக் கற்றுக்கொடுக்கிறது. கறுப்பின மக்களுக்கு மீண்டும் விவசாயம் மீது ஒரு ஆர்வம் வர வேண்டும் என்று போராடுகிறது.

கறுப்பினத்தவர் விவசாயத்தை விட்டு வெகுதூரம் விலகிச் சென்றதில் இனவெறிக்கு மிக முக்கியமான ஒரு பங்கு இருக்கிறது. தனது சமீபத்திய புத்தகமான Farming While Black (கறுப்பினத்தவராக இருந்து கொண்டு விவசாயம்) என்கிற புத்தகத்தில் இது குறித்து லியா விரிவாக பேசுகிறார். அந்த புத்தகத்தில் உள்ள மிக முக்கியமான தரவு இது. 1920ல் 14 சதவிகிதமாக இருந்த கறுப்பின விவசாயிகள் (நிலம் வைத்திருப்பவர்கள்), இப்போது வெறும் 2 சதவிகிதம்தான். “உண்மையில் கறுப்பினத்தவர் விவசாயமே வேண்டாம் என்று நினைக்கிறார்கள். இங்கு விவசாயம், உணவுமுறையில் நிறுவனமயப்படுத்தப்பட்ட பாகுபாடும் இனவெறியும் இருக்கிறது” என்கிறார் லியா. முரண் என்னவென்றால் அவர்களது ஆப்பிரிக்க மூதாதையரின் வேளாண் அறிவு அவ்வளவு அற்புதமானது. “வரலாற்றில் முதல்முறையாக மண்புழு உரத்தை பயன்படுத்தியவராக இடம்பெற்றிருப்பவர் கிளியோபாட்ரா. நமீபியாவைச் சேர்ந்த ஒபம்போ மக்கள்தான் முதல்முதலில் பாத்தி கட்டியவர்கள். இன்றைய நிலையான வேளாண்மைக்கு அடிப்படையான பல பயிர் சாகுபடியானது நைஜிரியாவில் மட்டும் 26 வகை இருக்கிறது.”

அடிமை முறை ஒழிப்புக்கு பிறகு விவசாயத்திலிருந்து வெகுதூரம் கறுப்பின மக்கள் விலகிப்போனதற்கு பல முக்கியமான காரணங்களை அடுக்குகிறார் லியா. “இது நிச்சயமாக யதேச்சையான வரலாறு அல்ல” என்பது அவர் வாதம். கறுப்பின மக்கள் கிட்டத்தட்ட இன அழிப்பு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து அவர்களுக்குரிய நிலம் பிடுங்கப்பட்டது. உணவில் நிறவெறி, இனவாதம், ஒடுக்குமுறை என்று இந்த புள்ளியைச் சொல்லலாம். “நிலத்தை சொந்தமாக வைத்திருந்தார்கள் என்கிற ஒரே காரணத்துக்காக 1920களில் கிட்டத்தட்ட 4000 கறுப்பின மக்கள் வெள்ளை மேலாதிக்க குழுக்களால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களது வீடுகள் எரிக்கப்பட்டன, நிலங்கள் பிடுங்கப்பட்டன” என்று அந்த ரத்த வரலாற்றை பேசுகிறார் லியா. தவிர தொடர்ச்சியாக திட்டமிடப்பட்டு, அரசுகளின் சலுகைகளிலிருந்தும் உதவிகளிலிருந்தும் கறுப்பின மக்கள் விலக்கி வைக்கப்பட்டார்கள். இன்றும் உணவில் இந்த நிறவெறி தொடர்வதாகவே நினைக்கிறார் லியா. “இங்கு பிரிவினை ஒரு அமைப்பாக இருக்கிறது. அந்த அமைப்பின் வாயிலாக சிலருக்கு உணவு மிக அதிகமாக கிடைக்கும். மற்றவருக்கு எதுவும் கிடைக்காது. அமெரிக்காவில் நிங்கள் ஒரு கறுப்பின குழந்தையாக இருந்தால் பட்டினியாக தூங்கப் போவதற்கான வாய்ப்பு, ஒரு வெள்ளை குழந்தையைவிட உங்களுக்கு இரண்டு மடங்கு அதிகம்.” இப்போதிருக்கும் உணவு அமைப்பு கூட 12.5 மில்லியன் ஆப்ரிக்க விவசாயிகளால் உருவாக்கப்பட்டது என்கிறார் லியா. ஆனால் அந்த அமைப்பில் அவர்களுக்கு இடமில்லை.

 

விவசாயத்திலிருந்து கறுப்பின மக்கள் விலகியதன் பின்னாலுள்ள உளவியலை கறுப்பின விவசாயி கிரிஸ் போல்டன் நியூசம் இப்படி சொல்கிறார்: “நிலம், குற்றங்களுக்கான ஒரு இடம்.” ஒடுக்குமுறை மாதிரியான துயரங்கள் தலைமுறை தலைமுறையாக கடத்தப்படுவதாக விளக்கமளிக்கிறார் லியா. “யூதர்களுக்கு எதிரான பெரு இன அழிப்பில் தப்பி பிழைத்தவர்களின் பேரன் பேத்திகள் தமது பாட்டி தாத்தாக்களின் வலியை சுமப்பதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். நாங்கள் நடத்தும் விவசாய பண்ணைக்கு முதல்முறையாக கறுப்பின மக்கள் சிலர் வரும் போது அடிமை முறை பற்றி மறைமுகமாக பேசுவதை பார்த்திருக்கிறேன். ‘நான் அதையெல்லாம் தொடுவதில்லை, நான் குனியமாட்டேன், வெகு காலத்துக்கு முன்பே விவசாயத்தை விட்டுவிட்டேன், எப்போதும் அழுக்காக கூடாது என்று தாத்தா சொல்லியிருக்கிறார்’இப்படி பல. நிலமே நம்மை ஒடுக்கியதாக நினைக்கிறோம். உண்மையில் நிலம், ஒடுக்குமுறை நிகழ்ந்த களம் மட்டுமே” என்று சொல்லும் லியாவின் நோக்கமெல்லாம் நிலத்தை கறுப்பின மக்களுக்காக மீட்க வேண்டும் என்பதுதான்.

“நிலம் இருந்தால் வணிகங்களை உருவாக்கலாம், வீடு கட்டலாம், உணவு வளர்க்கலாம் இன்னும் என்னென்னவோ செய்யலாம். நிலத்துடன் விடுதலையும் செயலாண்மையும் வருகிறது. 1960ளின் சிவில் உரிமை போராட்டங்களை கூர்ந்து பார்த்தால் இது மிக தெளிவாக புரியும்.  வடக்கிலிருந்து களப் போராளிகள் வந்து போராடும் போது அவர்கள் நிலம் வைத்திருந்த கறுப்பின விவசாயிகளையே பெரிதும் நம்பியிருந்தார்கள். வடக்கிலிருந்து வந்த இந்த போராளிகள் தங்கவேண்டுமென்று எந்த ஹோட்டல் திறந்திருக்கும்? யார் உணவளிப்பார்கள்? எல்லாவற்றையும் நிலம் வைத்திருந்த கறுப்பின விவசாயிகளே செய்தார்கள். நிலம்தான் எல்லா விதமான விடுதலைக்கும் அடிப்படை என்று மால்கம் எக்ஸ் சொன்னது மிக முக்கியமான உண்மை. நிலம், சுதந்திரத்துக்கு, நீதிக்கு, சமத்துவத்துக்கான அடிப்படை. நிலம் இல்லாமல் நாம் நமது அடிப்படை வாழ்வுக்காக கூட நம்மை அழிக்க நினைக்கும் ஒரு அமைப்பையே சார்ந்திருக்க வேண்டியிருக்கும்”.

கொஞ்சம் கீரையும் பனிக்காலத்துக்கான பதப்படத்தப்பட்ட சூப்பும் இருந்தால் நாம் என்ன செய்ய வேண்டும் என்று யாரும் சொல்ல முடியாது என்று சிவில் உரிமைகளுக்கான போராளி பானி லௌ ஹாமர் (Fannie Lou Hamer ) சொன்னதை நினைவு கூர்கிறார் லியா. “சுதந்திரமாக இருக்க வேண்டுமென்றால் நமது உணவை நாமே தயாரித்துக்கொள்ள வேண்டும்.

தனது விவசாயப் பண்ணையில் பாரம்பரிய முறைகளை பின்பற்றுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் லியா. நிலத்துடனான தொடர்பு மிக உயிர்ப்பானது என்று நம்புகிறார். “கானாவைச் சேர்ந்த பெண் தலைவர்கள்தான் எனக்கு வழிகாட்டிகள். அவர்கள் ஒரு சமூகத்தின் மானுட மையத்தை பாதுகாப்பவர்கள். விழா எடுப்பது, கைவிடப்பட்டவர்களை பேணுவது போன்ற பல வேலைகள் அதில் அடக்கம். அமெரிக்காவில் விதை நட்ட பிறகு ஒரு பாடல் பாடப்படுவதில்லை, புனித நீர் ஊற்றப்படுவதில்லை, படையல் வைப்பது இல்லை, ஒரு பிரார்த்தனை கூட இல்லை என்று நான் சொன்ன போது அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். “இதையெல்லாம் செய்யாமல் உணவு மட்டும் செழித்து வளர வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள். நீங்கள் எல்லாம் எப்போதும் நோய்வாய்பட்டிருக்கிறீர்கள் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை!” என்றார்கள். இந்த சடங்குகள் எல்லாமே நிலத்துக்கும் மக்களுக்குமான உயிர்ப்பான தொடர்பின் ஒரு அறிகுறி. நிலம் பாழ்படாமல் பாதுகாக்கும் அம்சம்..

மண்ணில் கூடு கட்டி விளையாடும் லியாவின் மகள் ஒரு நாள் நரம்பு பிரச்னையால் பாதிக்கப்பட்ட போதுதான் அதற்கு அந்த மண்ணில் கலந்திருந்த ஈயம் காரணம் என்று அவருக்கு புரிந்தது. அமெரிக்காவில் ரத்தத்தில் ஈயத்தின் அளவு அதிகமாக இருக்கும் 5 லட்சம் குழந்தைகளில் அவளும் ஒருத்தி. இது போன்ற அனுபவங்கள்தான் இன்று லியா முன்னெடுக்கும் விவசாய புரட்சியின் அடிப்படை. இன்று கறுப்பினத்தவர் மெல்ல மெல்ல விவசாயத்தை நோக்கி கவனத்தை திருப்பி வருகிறார்கள்.

நிலத்தை மீட்பது மட்டுமல்ல, அதை ஆற்றுப்படுத்துவதும் அவரது கடமை என்று லியா நம்புகிறார். விவசாயம் கறுப்பின மக்களின் எதிர்ப்புணர்வின் ஒரு வடிவம் என்றும். நிலம் குற்றம் நடந்த இடம்தானே தவிர குற்றவாளி அல்ல என்பதை தம் மக்களுக்கு புரிய வைப்பதே முக்கியமான வேலை என்கிறார் லியா. “நிலத்துடன் எங்களுக்கு இருப்பது ஆதி தொடர்பு. எங்கள் மூதாதையர்களின் வலியை அறிந்தே இருக்கிறேன். அவர்களுக்கு நிலத்தை பிரிவதென்பது அச்சவுணர்விலிருந்து விடுதலை பெறுவது. ஆனால் நிலம் எங்கள் உரிமை. அவளுடனான எங்களது உறவை புதுப்பித்துக் கொள்வதுதான் எங்களுக்கும் அவளுக்கும் நல்லது” என்கிறார்.

 

நிலம் எங்கள் உரிமை என்பது சர்வதேச போர்க்குரல். லியா அந்த போர்க்குரலின் ஒரு அழுத்தமான எதிரொலி

 

(லியா பென்னிமேன் குறித்த பல்வேறு கட்டுரைகள் மற்றும் அவரது பேட்டிகளிலிருந்து தொகுக்கப்பட்ட கட்டுரை இது.)

  • கவிதா முரளிதரன்
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments