மீண்டும் ஒரு போபால் பேரிடர்:

 

 

போபால்..

போஜா மன்னரால் உருவாக்கப்பட்ட நீர்நிலைக்கு பிறகு அந்த ஊர் போஜடால் என்றும் போஜபால் என்று பெயர்பெற்றது (டால் என்றால் ஏரி, பால் என்றால் அணைக்கட்டு). இப்படி வரலாற்று குறிப்புகளாலும், தனது இயற்கை வளங்களினாலும்  நீர்மேலாண்மையின் சிறப்பால் உருவாக்கப்பட்ட செயற்கை நீர்நிலைகளினாலும் அறியப்பட வேண்டிய ஒரு அழகிய ஊர்,இன்றுஒரு மிக மோசமான தொழிற்சாலை விபத்திற்காக உலகெங்கும் அறியப்படுகிறது.

1984 டிசம்பர்3ம் தேதியூனியன் கார்பைட் தொழிற்சாலையில் நடந்ததை விபத்து என்று சொல்வதை விட அது மனிதரால் உருவாக்கப்பட்ட பேரிடர் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். அப்பேரிடர் இன்னும் முடிந்தபாடில்லை, அந்த கோர விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இன்றும் பிறந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆம்36 வருடங்களுக்குபிறகும்அங்கு குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

பல்லாயிரம் பேர் இறப்பிற்கு காரணமாகஇருந்தது ஆலையில் இருந்து கசிந்த 40டன்Methyl Iso Cyanide வாயு மட்டுமல்ல, விபத்து நடந்தால் பாதிப்புகள் அசாதாரணமாக இருக்கும் என தெரிந்தே MIC யை பாதுகாப்பில்லாமல்அளவுக்கு அதிகமாக குவித்த நிர்வாகத்தின் அலட்சியமும், இந்தியாவில் அப்பொழுது வலுஇல்லாமல் இருந்த சூழலியல் சட்டங்களும், மலிவான ஊழியர்கள் கிடைக்கிறார்கள் என்பதற்காகவும், கெடுத்தால் கேள்விகேட்பார் இல்லை என்பதனாலும் வளரும் நாடுகளை தங்களின் லாபத்திற்காக பயன்படுத்திகொண்ட மேற்கத்திய கம்பெனிகளின் அணுகுமுறையுமே போபால் பேரிடருக்கு முக்கிய காரணமாகும்.

சரி போபால் விபத்திற்கு அபோதைய இந்தியாவின் சூழலியல் சட்டங்கள் சரிவர இல்லாதது ஒரு காரணம் என்றால் தற்பொழுது இந்தியாவின் சூழலியல் சட்டங்கள் வலுவாக உள்ளதாஎன்ற கேள்வி உங்களுக்கு எழலாம்,

போபால் விபத்திற்கு முன்னரேFactories Act (1948), Water Act (1974),Air Act  (1981) போன்ற சூழல் பாதுகாப்பு சட்டங்கள் நம் நாட்டில் இருந்தாலும், போபால் விபத்தை மையமாக வைத்து தான் இந்தியாவின்முக்கியமான சூழலியல் சட்டங்களில் கொண்டுவரப்பட்டன. சரியாக போபால் விபத்திற்கு இரண்டு வருடங்களுக்கு பிறகு 1986ம் ஆண்டு ‘EPA-Environmental Protection Act’கொண்டுவரப்பட்டது. நச்சுத்தன்மை வாய்ந்த தொழிற்சாலைகளிடம் இருந்து சுற்றுசூழலை பாதுகாக்கும் நோக்கில் இந்த சட்டம் வடிவமைக்கப்பட்டது. இதன் கீழ் 1989ம் ஆண்டு நச்சு கழிவுகளை பாதுகாப்பாக கையாள்வதற்காக‘Hazardous waste management handling rules 1989’ கொண்டுவரப்பட்டது. இது மட்டுமல்லாமல் நச்சுதன்மை வாய்ந்த தொழிற்சாலைகளில் விபத்துக்கள் நேரிடும் பொழுது பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு உடனடி நிவாரண இழப்பீடு வழங்குவதற்காக 1991ம் வருடம் ‘The public Liability Insurance Act’நடைமுறைபடுத்தப்பட்டது. போபால் விபத்து தொடர்பான வழக்குகளும் இன்னும் பிற சூழலியல் தொடர்புடைய வழக்குகளும் வழக்காடுமன்றத்தில் தொடர்ந்து நிலுவையில் இருந்த காலக்கட்டத்தில்சூழலியல் வழக்குகளை முக்கிய கவனத்துடன் விரைந்து முடித்திட பிரத்தியேக அமைப்பை உருவாக்குவதற்காக ‘National Environment Tribunal Act’ 1995ம்ஆண்டும்‘National Green Tribunal Act’ 2010ம் ஆண்டும் உருவாக்கப்பட்டது. ரசாயன தொழிற்சாலைகளில் நடக்கும் விபத்துக்களை தடுப்பதற்காகவும் , முனெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் ‘CAEPPR (Chemical Accidents Emergency Planning, Preparedness and Response Rules’ 1996ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதை தவிர்த்து Disaster Management Act 2005, Hazardous waste (management handling and transboundary) rules 2008 ஆகியவை தொழிற்சாலை கழிவுகளால் ஏற்படும் சூழலியல் பாதிப்புகளை ஏற்படாமல்தடுக்கவும் , விபத்து ஏற்பட்டால் பாதிப்புகளை குறைக்கவும்இந்திய சட்டத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் ஆகும்.

இத்தனை கடினமான சூழலியல் சட்டங்கள் வந்தபொழுதிலும் இன்னும் மோசமான தொழிற்சாலை விபத்துக்கள் ஆங்காங்கே நடந்துக் கொண்டு தான் இருக்கின்றன. 2015-16ம் வருடம்64 தொழிற்சாலை விபத்துக்களும்,2016-17ம் வருடம் 57விபத்துகளும், 2017-18ம் வருடம் 31விபத்துகளும்நடந்துள்ளது. இந்த மூன்று வருடங்களில் மட்டும் பல்வேறு தொழிற்சாலை விபத்துக்களில் 195 பேர் உயிரிழந்துள்ளதோடுசுமார்1100 பேர் காயம் அடைந்துள்ளனர்.இத்தனை சூழலியல் பாதுகாப்புச் சட்டங்கள் வந்த பின்பும் தொழிற்சாலை விபத்துக்களும் அதனால் ஏற்படும் சூழலியல் பாதிப்புகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன, இதற்குசமீபத்தில் விசாகபட்டினம்L.G.Polymers நிறுவனத்தில் நடந்த விஷவாயு கசிவே உதாரணம்.

36 வருடங்களுக்கு முன்பு போபால்விசவாயு கசிவின் பொழுது Union Carbide தொழிற்சாலை எப்படி அனுமதி இல்லாமல் அளவுக்கு அதிகமாக Methyl Iso Cynideஐசேகரித்து வைத்திருந்ததோ அதே போல் தற்பொழுது விபத்து நடந்திருக்கும் LG Polymers உம் அளவுக்கு அதிகமான Polystyrene’ஐ பாதுகாப்பில்லாமல்சேகரித்து வைத்திருந்திருக்கிறது, போபாலில் விச வாயு கசிந்தவுடன் சமந்தப்பட்ட நிறுவனம் மக்களுக்கு தெரியப்படுத்தாமல் விபத்தை மறைக்க முயற்சித்தது போலவே, விசாகபட்டினம் விபத்திலும் கசிவு ஏற்பட்டுவிட்டது என்று தெரிந்த பல மணிநேரத்திற்கு பிறகும் மக்களிடம் விபத்தை தெரியப்படுத்தாமல் இருந்திருக்கிறது LG Polymers, அன்றும் எச்சரிக்கை மணி அடிக்கவில்லை, இன்றும் எச்சரிக்கை மணி அடிக்கவில்லை, அன்றும் விபத்திற்கான காரணம் தனிநபர்(ஊழியர்) மேல் போடப்பட்டது இன்றும் ஊழியர் ஒருவரை குற்றம்சாட்டியிருக்கிறது LG Polymers. போப்பாலில்லும் மக்களுக்கு விபத்தின் பொழுது தற்காத்துக்கொள்வதற்கான பயிற்சிகள் வழங்கப்படவில்லை இன்று விசாகபட்டினத்திலும் மக்களுக்கு விபத்தின்பொழுது தற்காத்துகொள்வதற்கான பயிற்சிகள் வழங்கப்படவில்லை. 36 ஆண்டுகளுக்கு முன் Union Carbide நிறுவனம்எப்படிகவன குறைவோடும், அலட்சியத்தோடும் நடந்துகொண்டதோ அதே அலட்சியத்தோடு இன்று LG Polymers நடந்துகொண்டதின்விளைவாகவிசாகபட்டினத்தில்மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்றால் இத்தனை ஆண்டுகள் முயற்சியில் சூழலை காக்க உருவான சட்டங்களின் நடைமுறை செயல்பாடுகள் என்னவென்ற கேள்வி நம்முள் எழுகிறது.

விசாகபட்டினம்

விபத்திற்கு பிறகு LG Polymer நிறுவனத்தின் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டதோடுStyrene சேகரித்து வைத்திருந்த குளிர் சாதன கருவியின் குழாயை இயக்கம் பொழுது ஊழியர் செய்த தவறினால் விபத்து நடந்தது போல , தனி நபர் தவறாகவே அதை சித்தரித்திருந்தது. வழக்கமாக அனைத்து நிறுவனங்களும் கையாளும் அதே யுக்தி தான். இங்கு தனிநபர் தவறை தாண்டி ஆராய்ந்து பார்த்தால் தான் விபத்தில் நிறுவனத்தின் பெரும்பான்மைபங்கும், அரசாங்க ஏந்திரத்தின் தவறுகளும் புலம்படும்.

விசாகபட்டினம் தொழிற்சாலை விபத்து நடந்ததுமே7ம் தேதி, அதாவது கொரோனா கட்டுபடுதுவதற்காக நாடுதழுவிய முழு ஊரடங்கு அமலில் வந்து45 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொழிற்சாலையை செயல்படுத்த முயற்சித்த முதல் நாள் இந்த விபத்து நடை பெறுகிறது. அதே நாளில் சத்திஷ்கரில் உள்ள காகித ஆலையில் பாய்லர் வெடித்து விபத்து, நெய்வேலி அனல்மின் நிலையத்தில் இரண்டு பாய்லர் வெடித்ததில்5 ஊழியர்கள் மரணம் என ஒரே நாளில் மூன்று பெரிய தொழிற்சாலை விபத்துகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

  1. ஒரே நாளில் மூன்று விபத்துகள் நடக்க முக்கிய காரணம், நீண்ட நாட்கள் இடைவெளிவிட்ட பிறகு தொழிற்சாலையை இயக்க முயற்சிக்கும் பொழுது செய்ய வேண்டிய சோதனைகளையும் முனெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அந்த நிறுவனங்கள் செய்ய தவறியது தான். ஊரடங்கினால் நீண்ட நாட்கள் செயல்படாமல் இருந்து தொழிற்சாலைகள் மீண்டும் இயங்குவதற்கென வழிகாட்டுதலை NDMA-National Disaster Management Authority விசாகபட்டினம் விபத்திற்கு பிறகு வெளியிட்டதென்பது குறிப்பிட தக்கது.
  2. LG Polymer நிறுவனத்தில்பணிபுரியும் 400 தொழிலாளர்களில்50 பேர் மட்டுமே நீண்ட கால ஒப்பந்த பணியாளர்கள். மீதமுள்ள350 பேர்Casual Workers என்றழைக்கபட கூடிய தற்காலிகஅடிப்படை தொழிலார்கள். விபத்து நடந்த அன்று தொழிற்சாலை இயக்கிய 15 பேருமேபோதிய பயிற்சி இல்லாத தற்காலிகதொழிலாளர்களாகவே இருந்ததும் விபத்திற்கான ஒரு காரணம். விபத்தை தவிர்க்க கூடிய அல்லது விபத்து சூழலை கையாளக்கூடிய ஆற்றல்பெற்ற ஒரு அதிகாரியோ, ஒப்பந்தஊழியரோ இல்லாமல்தொழிற்சாலையை இயக்கிவிட்டு விபத்து நடந்தவுடன் நிறுவனம்தனிநபர்மீது பழி போடுவதை எப்படி ஏற்க முடியும்.

இந்தியாவில் உள்ள பெரும் நிறுவனங்களில் 46% பேர்தொழிலாளர் உரிமைகள் அதிகம் இல்லாத குறைந்த ஊதியத்திற்கு தற்காலிகமாக வேலை செய்யும் தொழிலாளர்களாகவே இருக்கிறார்கள். இப்படிநிரந்தரதொழிலாளர்களை தவிர்த்துவிட்டு தற்காலிக பணியாளர்களை நிறுவனங்கள் பணியில் அமர்த்துவதற்கான காரணமாக இருப்பது நிறுவனங்களின்வசதிக்காக வளைந்துக்கொடுக்கும் தொழிலாளர் சட்டங்கள் தான் என்பது அத்துறை வல்லுனர்களின் கருத்தாக இருக்கிறது. இந்தியாவில் நிலவும் வேலையில்லா திண்டாட்டமும், இந்தியாவில் போன்ற வளரும் நாடுகளில்குறைந்த ஊதியத்திற்கு தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டலாம் என்ற மேற்கத்திய முதலாளிகளின் சிந்தனையும் இவ்வாறான தவறுகள் நடக்க கூடுதல் காரணங்களாக அமைகிறது.

  1. 45 நாட்கள் பூட்டிக்கிடந்த தொழிற்சாலை மீண்டும் இயக்குவதற்கு முன்னர் மாசுகட்டுபாட்டு வாரியம் ஆய்வு மேற்கொண்டு அதன் ஒப்புதலுக்கு பிறகே தொழிற்சாலையை இயக்க அனுமதித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எந்த ஆய்வும் LG Polymers இல் செய்யப்படவில்லை. நிறுவனத்திற்கும் மாசுகட்டுபாட்டு அதிகாரிகளுக்கும் உள்ள நட்பின் அடிப்படையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தொலைப்பேசியில் பேசி அனுமதி பெறப்பட்டு தொழிற்சாலையை இயக்கியதே விபத்திற்கான முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. ஊரடங்கிற்கு பிறகு திறக்கப்படும் தொழிற்சாலைகளுக்கு மாநில மாசு கட்டுப்பட்டு வாரிய அதிகாரிகள் நேரில் என்று உரிய பாதுகாப்பு சோதனை ஆய்வு (Safety and Hazard Audit) மேற்கொண்ட பிறகே திறக்கஅனுமதிவழங்கவேண்டும் என்று மத்திய மாசு கட்டுப்பட்டு வாரியம் விசாகபட்டினம் விபத்து நடந்ததற்கு பிற்பாடு மே 09ம் தேதி அன்று உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் அதற்கு சரியாக ஒரு வாரம் கழித்து மே16ம் தேதி இயக்கப்பட்ட சென்னை மணலியில் உள்ள மெட்ராஸ் உரத் தொழிற்சாலையில் (MFL-Madras Fertilizers Limited)இல்அம்மோனியா வாயு கசிந்து அருகாமையில் வசிக்கும் மக்கள் பாதிப்புகளுக்கு உள்ளானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
  2. Styrene வாயு உயிர்கொல்லியாக உலகில் எங்கும் கண்டறியப்படவில்லை, தொழிற்சாலைகளுக்குள்100 PPM அளவுள்ளStyrene வாயுவை8 மணி நேரம் வரை சுவாசிக்கலாம் என்றுOccupational Health & Safety Administration நிர்ணயத்துள்ளது. அதே போல் அமெரிக்காவில் உள்ள ஒரு தொழிற்சாலையில்800PPM அளவுள்ளStyrene வாயுவை4மணி நேரம் சுவாசித்த பிறகு தொழிலாளர்களுக்கு மூச்சுகுழாய் எரிச்சல் ஏற்பட்டதாக The US Agency of Toxic Substance என்ற அமைப்பு பதிவு செய்திருக்கிறது. ஆனால் உலகில் எங்கும் Styrene வாயு தாக்கி மனிதர்கள் உயிரிழந்ததாக தெரியவில்லை என்கிறார்கள் வல்லுனர்கள். சம்பவம் நடந்த அன்று காலை 30 மணிக்கு கூட வாய்வினால் உயிருக்கு ஆபத்தில்லை என்றுஅப்பகுதிகாவல் ஆய்வாளர் R.K.Meena அறிவிப்பு செய்திருக்கிறார். அப்படி என்றால் உயிரை கொல்லும் அளவுக்கான Styrene வாயுமாறியிருக்கிறது என்றால் எந்த அளவிற்கான Styrene வெளியேறியது என்றும் எவ்வளவு அதிகமான Styrene சட்ட விரோதமாக சேகரித்து வைக்கபட்டிருந்ததென்பதும் ஒரு கேள்வி என்றால். உண்மையில் அங்கு மக்கள் இறப்பிற்கு காரணம் Styrene வாயு தானா? அல்லது வேறு ஏதாவது நச்சு வாயு கசிந்ததை styrene என்று சொல்லி நிர்வாகம் மறைக்கிறதா என்பது இன்னொருபுறம் எழும் கேள்வியாக இருக்கிறது..LG Polymer ஒருISO தர சான்றிதல் பெற்ற நிறுவனம் என்றஅடிப்படையில்EPA வின் கீல் வரும் ‘Rules of Hazardous Chemical Storage’ஐ முறைப்படி கடைபிடித்திருந்தால் இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம் என்பதுஇங்கு குறிப்பிடத்தக்கது.

 

இப்படிவிபத்திற்கான பல காரணங்களை தெரிந்தே செய்திருக்கும் LG Polymer நிறுவனம் அலட்சியத்தோடு நடந்துகொள்வது இது முதன் முறை அல்ல.

2000ம் ஆண்டு இதேLG Polymer தொழிற்சாலையில் ரியாக்டர் வெடித்தது, அப்பொழுது அருகாமையில் வசிக்கும் மக்கள் தங்கள்இடத்தை விட்டு உடனே ஓடியதால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இந்த நிறுவனத்தால் சூழல் மாசடைவதாகமக்கள் கொடுத்த தொடர் புகாரை அடுத்தும் ஆந்திரா மாநில மாசு கட்டுப்பட்டு வாரியம் LG Polymer மீது நடவடிக்கை எடுக்காததால் கடந்த2017 ஆண்டுமக்களின்கோரிக்கைகேற்ப மாநிலங்களவை உறுப்பினர் M.P.சுப்பராமி ரெட்டி அவர்கள் மாநிலங்களவையில் LG Polymer பிரச்னையை எழுப்பி இருக்கிறார்.

இப்படி தொடர் சர்ச்சைக்குள்ளான LG Polymer தொழிற்சாலையை முறையான தொடர் ஆய்வுகளுக்கு உட்படுத்தாததே விபத்துக்கு முக்கிய காரணம்.

போபால் Union Carbide தொழிற்சாலையை போல, விசாகபட்டினம் LG Polymer தொழிற்சாலையை போல தமிழகத்திலும் நச்சுத்தன்மை வாய்ந்த விபத்துக்களை ஏற்படுத்த கூடிய ‘118’ MAH-Major Accident Hazzard தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இந்த ஊரடங்கு நேரத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பட்டு வாரியத்தின் முறையான ஆய்வுகள் மேற்கொள்ளபடாமல் தொழிற்சாலைகள் நீண்ட இடைவெளிக்கு பிறகு திறக்க அனுமதி கொடுத்தால் விசாகாபட்டினம் விபத்து போல ஒரு கொடிய தொழிற்சாலை விபத்து தமிழகத்திலும் நடப்பதற்கான அத்தனை வாய்ப்புகளும் இங்கும் இருக்கிறது என்பதனை சுட்டிக்காட்டி அனைத்து தொழிற்சாலைகளுக்கும் ஆய்வு செய்யபட்ட பிறகே திறப்பதற்கான அனுமதி வழங்க வேண்டும் என்பதனையும் பூவுலகின் நண்பர்கள் இதன் மூலம் வலியுறுத்துகிறது.

போபால் விசவாய்வு கசிவு போல இன்னொரு நிகழ்வு இந்தியாவில் நடந்துவிட கூடாது என்பதற்காவே,

  1. MSIHC- Manufacture, storage, and Import of Hazardous Chemical Rule 1989
  2. CAEPPR- Chemical Accidents Emergency Planning, Preparedness and Response Rules 1996

என்ற இந்த இரண்டு முக்கியமான விதிமுறைகள் கொண்டுவரபட்டது.

கடந்த2016 ஆம் ஆண்டு இந்த இரண்டு விதிகளையும் மேம்படுத்த வேண்டும் என்று மத்தியசுற்றுசூழல்அமைச்சகம்பரிந்துரைகொடுத்தும், இன்று வரை இந்த விதிகளை தற்கால சூழலுக்கு ஏற்றவாறு மேம்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
உடனடியாக இவ்விரண்டு விதிமுறைகளையும் மேம்படுத்தி நடைமுறை படுத்த வேண்டும் என்பது பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் கோரிக்கையாக இருக்கிறது.

என்னதான் வலுவான சூழலியல் சட்டங்கள் இருந்தாலும் வளர்ச்சி என்ற பெயரால் தொழில்நிறுவனங்களின் எளிதில் தொழில் செய்ய ஏதுவாக சட்டங்களை அரசே அவ்வப்பொழுது வளைந்துக்கொடுப்பதே இது போன்ற தொழிற்சாலை விபத்துகளுக்கும் , தொழிற்சாலை கழிவுகளால் ஏற்படும் சூழலியல் சீர்கேடுகளுக்கும் காரணமாக அமைகிறது.

இந்தியாவில் சூழலியல் சட்டங்கள் உருவாக்கும் பொழுது இருந்த நோக்கமும் அக்கறையும், அரசு அதை நடைமுறை படுத்துவதிலும் கடைப்பிடித்தால் தான் அச் சட்டங்கள் முழுமைப் பெறும்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments