அதிகரிக்கும் யானை – மனித மோதல்; 5 ஆண்டுகளில் 2,529 பேர் உயிரிழப்பு

 

யானைகளின் வாழ்விடங்களில் மனிதர்களின் ஆக்கிரமிப்பு, தண்ணீர் மற்றும் உணவு பற்றாக்குறை போன்ற பல்வேறு பிரச்னைகளால் யானைகள் காடுகளை விட்டு வெளியேறுகின்றன. அப்படி யானைகள் வெளியேறும்போது யானை – மனித மோதல் நடக்கிறது. இதில் யானைகளால் தாக்கி மனிதர்கள் உயிரிழப்பதும் மனிதர்கள் யானைகளை துன்புறுத்தி துரத்தும் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.
நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மேற்கு வங்க எம்.பி. ராஜூ பிஸ்தா இந்தியாவில் காட்டு விலங்குகள் மனிதர்களை தாக்கிய சம்பவங்கள் குறித்து எழுப்பிய கேள்விக்கு மற்றிய இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள 18 மாநிலங்களில் யானை தாக்கியதால் மட்டும் 2,529 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக ஒடிஷாவில் கடந்த 5 ஆண்டுகளில் 449 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை பொருத்தமட்டில் 246 பேர் கடந்த 5 ஆண்டுகளில் யானை தாக்கி உயிரிழந்துள்ளனர். 2016 முதல் 2019 வரை ஒவ்வொரு ஆண்டும் யானை தாக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50க்கு குறைவாக இருந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் முறையாக இந்த எண்ணிக்கை 50ஐ தாண்டியுள்ளது.
2016 – 49
2017 – 43
2018 – 49
2019 – 47
2020 – 58
என மொத்தமாக 246 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், அமைச்சர் பாபுல் சுப்ரியோ தனது பதிலில் ஒவ்வொரு மாநிலமும் விலங்கு – மனித மோதலைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டுதலை மத்திய அரசு வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

– சதீஷ் லெட்சுமணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *