”பிழைத்திருக்க யாசிக்கும் பேருயிர்கள்” ஓசை காளிதாசன் உரை

நீலகிரி மாவட்டம் மசினகுடியில் தனியார் விடுதி உரிமையாளர்கள் காட்டு யானை ஒன்றிற்கு தீயிட்ட சம்பவம் 2021 ஜனவரி மாதம் நடந்தது. இந்த கொடூரம் குறித்து ஓசை அமைப்பின் காளிதாசன் ”பிழைத்திருக்க யாசிக்கும் பேருயிர்கள்” என்கிற தலைப்பில் பூவுலகின் நண்பர்கள் முகநூல் பக்கத்தில் ஜனவரி 23ஆம் தேதி ஆற்றிய உரை

வணக்கம்!  பூவுலகின்  நண்பர்களின்  இந்த முகநூல் பக்கத்தில் ஒரு பேருயிரைப்பற்றி பேசுகின்ற வாய்ப்பிற்காக, தோழர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு மிகக் கொடூரமான நிகழ்வு நடந்த உடனே இப்படி ஒரு உரையாடல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த கொடூர நிகழ்வு என்ன என்பதை நாம் அறிவோம், நேற்று உலகமெங்கும் இருக்கக்கூடிய அறிவார்ந்த சமூகத்தை ஒரு மிகப்பெரிய வேதனைக்கு உள்ளாக்கிய நிகழ்வு, தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் மசினகுடி பகுதியில் ஒரு காட்டு யானை மீது சிலர் பற்றி எரியும் டயரை தூக்கி எறிந்ததால் பதற, பதற கத்திக்கொண்டு அந்த யானை ஓடுகின்ற காட்சி ஊடகங்களில் வெளிவந்த போது அனைவரும் பதறி போனோம். ஒரு மிகப்பெரிய கொடூரம் நிகழ்ந்திருக்கிறது. அந்த கொடூரத்தை நிகழ்த்தியவர்கள் மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அந்த கொடூர சம்பவத்தை பார்க்கிறபோது அதை ஒரு ஒரு மனித நேயம் நேயமிக்கவர்களாக. உயிர் நேயமிக்கவர்கள் யாரும் இத்தகைய செயலை செய்ய மாட்டார்கள் என்பதை அறிவோம். அவர்களுக்கு இந்திய வன உயிரின சட்டம் 1972ன் படி தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதுதான் இயற்கை ஆர்வலர்களுடைய கோரிக்கையாக இருக்கிறது. அந்த சட்டத்தின்படி யானை என்பது அந்த அட்டவணை ஒன்றில் இருக்கிற உயிரினம்.

Schedule 1 Animal அப்படியானால் மிகக் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட வேண்டும். இந்திய அரசு யானையை பாரம்பரிய விலங்கு என்று அறிவித்திருக்கிறது. அப்படியானால் அந்த பாரம்பரிய விலங்கின் மீது நடத்தப்பட்டிருக்கின்ற வன்முறையை நடத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இந்த சம்பவத்தை பல்வேறு கோணங்களில் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. முதலில் அந்த மசினகுடி,  அந்த மசினகுடியை பற்றி நாம் அறிய வேண்டும். அது மசினன்  குடி. மசினன் என்பது பழங்குடி அங்கு இருக்கக்கூடிய கோவில் பழங்குடிகளின் கோவில். காலம் காலமாக பல்லாயிரம் வருடங்களாக அங்கே பழங்குடிகள் வாழ்ந்து வரக்கூடிய ஒரு பகுதி. அதே போல் அந்த பகுதி இன்னொரு பக்கம் உலகின் மிக முக்கியமான காட்டுயிர்கள் வாழக்கூடிய பகுதி. ஒரு பக்கம் முதுமலை, இன்னொரு பக்கம் பந்திப்பூர். இவை அருகில் இருந்தாலும் அந்த இடத்தில் மிகவும் கவனிக்க வேண்டிய முக்கியத்துவம் என்னவென்றால், அந்த பகுதி நீலகிரி உயிர்க் கோள காப்பகத்தின் ஒரு பகுதி.

நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் தான் ஆசிய யானைகள். உலகில் இருக்கும் ஆசிய யானைகள் ஒரே வாழ்விடத்தில் அதிக எண்ணிக்கையில் இருக்கிற இடம் நீலகிரி உயிர்க்கோளம் காப்பகம். அப்பகுதி ஒரு தொடர்ச்சியான கானகம். அங்கு இருக்கக்கூடிய யானைகள் தரைப்பகுதி சமவெளிப் பகுதியில் சத்தியமங்கலம், கோயம்புத்தூர் வந்து, கேரளாவின் மன்னார் காடு, அமைதிப் பள்ளத்தாக்கு வரைக்கும் போகக்கூடிய து. அங்கிருந்து கீழே இறங்கக்கூடிய பகுதியில் ஒரு மிக முக்கிய வலசை பாதையாக அந்த மசினகுடி பகுதி இருக்கிறது.

அதற்கு சீகூர் யானைகள் வளர்ச்சிப் பாதை என்று பெயர். Sigur Elephant Corridor. அந்த அந்த சீகூர் யானைகள் வலசை பாதை துண்டிக்கப்பட்டால், உலகில் அதிக எண்ணிக்கையில் யானை ஆசிய யானைகள் வாழும் ஒரு பெரிய வாழ்விடம் துண்டாடப்படும் என்பதை இதைப் பற்றி ஆய்வு நடத்திய பல்வேறு அறிஞர்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.  ஆனால், அந்த இடத்தில் என்ன நிகழ்ந்திருக்கிறது என்றால், கடந்த இருபது, முப்பது ஆண்டுகளாக பழங்குடிகள் கையிலும், உள்ளூர் மக்கள் கையிலும் இருந்த நிலங்கள் அவர்கள் வேளாண்மை செய்த நிலம். அவர்கள் மேய்ச்சல் நிலமாக இருந்த இடத்தையெல்லாம் எங்கிருந்தோ வந்தவர்கள் வாங்க ஆரம்பித்தார்கள். வாங்க ஆரம்பித்தது மட்டுமல்ல, அந்த இடத்தை கேளிக்கை விடுதிகளினுடைய மையமாக மாற்றி இருக்கிறார்கள். ஒரு காணுயிர்கள் வாழக்கூடிய உலகின் மிக முக்கியமான ஓர் இடம் இப்போது கேளிக்கை விடுதிகளினுடைய மையமாக மாறி இருக்கிறது. அந்த கேளிக்கை விடுதிகளில் என்ன செய்கிறார்கள் என்றால், எதையெல்லாம்? ஒரு காட்டுயிர்கள் வாழ்கிற பகுதியில், காட்டுப்பகுதியில் இயற்கை சூழல், முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் செய்ய கூடாதோ அனைத்தையும் செய்கிறார்கள்.

அந்த உள்ளூர் பழங்குடிகள் ஒருவர் கூட அங்கே கேளிக்கை விடுதி நடத்தவில்லை. அது பழங்குடிகளினுடைய மண். அங்கே விடுதி  நடத்துபவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழகத்தைச் சார்ந்தவர்களே அல்ல. வணிக நோக்கத்தோடு எங்கிருந்தோ வந்தவர்கள் அந்த நிலத்தை வாங்கி, அது ஒரு வியாபாரம் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள், அந்த வியாபாரத்தின் உடைய விளைவாகத்தான் யானைகளுடைய வலசை பாதைகள், அந்த வலசை பாதை தடைபடுகிறது என்பதை அறிந்துதான்  அதைக் காப்பாற்ற வேண்டும் என்று  இயற்கை ஆர்வலர்கள் நீதிமன்றத்தை நாடினார்கள்..  சென்னை உயர்நீதிமன்றம் அதற்கு வனத்துறையிடம் கேட்கின்றபோது. வனத்துறை அந்த பகுதிகளின்   முக்கியத்துவத்தை பல்வேறு அறிஞர்களுடைய ஆதாரங்களோடு திரட்டி நீதிமன்றத்தில் ஒப்படைக்கின்ற போது, சென்னை உயர்நீதிமன்றம் முதலில் அந்த பகுதியில் இருக்ககூடிய யானைகள், வலசை பாதையில் இருக்கக்கூடிய அனைத்து கேளிக்கை விடுதிகளும் மூடப்பட வேண்டும் என்று உத்தரவு போட்டது. அதன் பிறகு அந்த அந்த கேளிக்கை விடுதிகளை நடத்துபவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். மேல்முறையீட்டிலும் அண்மையில் தீர்ப்பு வந்திருக்கிறது. அங்கு இருக்கக்கூடிய அனைத்து கேளிக்கை விடுதிகளை மூடப்பட வேண்டும் என்று தீர்ப்பு வந்திருக்கிறது.

அந்த தீர்ப்பை நடைமுறை படுத்துவதற்க்காக மூன்று பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த குழுவில் ஆலோசனைகள் கோரிக்கைகள் இருந்தால் வைக்கலாம் என்று இப்போது நடந்து கொண்டு இருக்கிறபோதுதான் இந்த கொடூர சம்பவம் நம் கண் முன்னால்  நடந்துள்ளது. இங்கே நாம் கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால், முதலில் சுற்றுலா பற்றிய பார்வையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சுற்றுலா பொதுவான சுற்றுலா மனிதர்களை மையப்படுத்துவது. நம்ம எப்படி வேணாலும் போகலாம். , எப்படி வேணாலும் சத்தம் போடலாம். எப்படி வேணாலும் ஆடலாம் பாடலாம் என  நம் கொண்டாட்டங்களை , உணர்வுகளை மையப் படுத்துவது சுற்றுலா. ஆனால் இயற்கை சுற்றுலா காணுயிர் சுற்றுலா என்பதெல்லாம் முற்றிலும் மாறுபட்டது. அதுவும் காட்டுயிர்கள் வாழக்கூடிய பகுதிகளில் நடைபெறக்கூடிய சுற்றுலா, அது ஒரு கட்டுப்படுத்தப்பட்ட ஒரு பொறுப்புணர்வு மிக்க சுற்றுலாவாக இருக்க வேண்டும்.

A Responsibal Tourism என்று அதை சொல்லுவார்கள். அங்கே நம்முடைய உணர்வுகள் புறந்தள்ளப்பட்டு, அங்கு இருக்கக்கூடிய காட்டு உயிர்களுடைய உணர்வுதான் அங்கு மதிக்கப்பட வேண்டும். அது பறவைகளின் விலங்குகளின் வீடு என்கின்ற உணர்வோடு அந்த வீட்டிற்குள் நுழைகிற போது, நாம் எத்தகைய பொறுப்புணர்வோடு இருக்கவேண்டுமோ, அந்த பொறுப்புணர்வு அங்கு இருக்க வேண்டும். ஆனால், இவை எதுவும்  மசினகுடியில் நடைபெறவில்லை. மசினகுடியில் வணிகம் மட்டும் தான் நோக்கம். அங்கு வரவேண்டியது யார் என்று கேட்டால், இயற்கை மீது அக்கறை உடையவர்கள் வரவேண்டும். காட்டு உயிர்களை காப்பாற்றப்படவேண்டும் என்று அக்கறை உடையவர்கள் அங்கு வரவேண்டும்.  ஆனால், அவர்கள் எல்லாம் பெரும்பாலும் அங்கு போவதை தவிர்க்கிறார்கள். அதுவும் விடுமுறை நாட்களில். அந்த பகுதிக்கு காட்டுயிர்கள் மீது அக்கறை உடைய யாராவது போனால் ஒரு பெரிய மன வலியோடுதான் திரும்புவார்கள்.

அவ்வளவு பெரிய கூட்டம் கட்டுப்படுத்தப் படாத கூட்டம் எவை எல்லாம் செய்யக்கூடாதோ, அவற்றை எல்லாம் செய்து கொண்டு இருக்கிறது. இதன் விளைவாகத்தான் அந்த வழக்கே போடப்பட்டது. வழக்கு போடப்பட்டு வழக்கின் அடிப்படையில் சில விடுதிகள் மட்டும் மூடப்பட்டன. ஆனால், இன்னும் பல விடுதிகள் இயங்கிக்கொண்டே இருக்கின்றன. அவை தொடர்ந்து இயங்கி கொண்டு இருக்கின்றன. அவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.

இந்த யானையைப் பற்றி நாம் சொல்ல வேண்டும். இந்த யானை ஒரு ஆண் யானை. ஏதோ காரணத்திற்காக காட்டில் ஏற்பட்ட சண்டையிட்டதாலோ வேறு காரணத்தினாலோ முதுகில் அதற்கு ஒரு காயம் ஏற்பட்டு இருக்கிறது. அந்த காயத்தை அறிந்த வனத்துறை சில வாரங்களுக்கு முன்பாக அதன் முதுகில் இருக்கின்ற காயத்திற்கு சிகிச்சை அளித்தனர். ஒரு காட்டு யானைக்கு சிகிச்சை அளிப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல, ஆனாலும் அளித்தனர். சிகிச்சைக்குப் பிறகு காட்டுயிர் காட்டில்தான் இருக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் காட்டிலே விடப்பட்டது. ஆனால், அந்த நோயோடுவா வலியோடு இருக்கக்கூடிய அந்த யானை, அந்த வெகுதூரம் நடக்க முடியாது அந்த பகுதியில் அவை சுற்றி திரிகிறபொழுதுதான். இந்த ஒரு விடுதிக்கு   அருகில் வருகிற போதுதான் கொடூரமாக இப்படி அவர்கள் துன்புறுத்தி இருக்கிறார்கள்.

அந்த யானையினுடைய இடத்தில் இப்படி வணிக நோக்கத்தோடு கேளிக்கை விடுதி நடத்துவதற்கு யார் உரிமை தந்தனர்? இந்த கேள்வியில் இருந்து நாம் இப்பிரச்னைக்கான விடை காண வேண்டும். நாம் உடனடியாக அவர்களுக்கு தண்டனை வழங்குவது மட்டுமல்ல, நாம் உடனடியாக வைக்கும் கோரிக்கை மசினகுடி பகுதியில் இருக்கும் அனைத்து கேளிக்கை விடுதிகளும் மூடப்பட வேண்டும், ஏனென்று கேட்டால் அங்கு எவ்வித சுற்றுலா நடைபெறுகிறது என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் சொல்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு மலையாள திரைப்படம் வந்தது. மம்மூட்டி அவர்கள் நடித்த திரைப்படம், அந்த திரைப்படத்தில் ஒரு வசனம் இடம் பெற்றது. என்ன வசனம் என்றால் நீ விபச்சாரம் நடத்த வேண்டும் என்றால் மசனகுடிக்கு போ, இங்க ஏன் இருக்கிற என்று அந்த வசனம் வருகிறது. நினைத்து பாருங்கள் உலகப் புகழ் பெற்ற ஒரு  காட்டுயிர்கள் வாழும் ஒரு பகுதியில் காட்டுயிர் வாழிடத்தில், எப்படிப்பட்ட மனநிலையை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்றால், இதுதான் மசனகுடியினுடைய சோகம்.

ஆகவே தான் இந்த வணிக நோக்கத்தோடு செயல்படக்கூடிய எல்லா சுற்றுலா விடுதிகளும் மூடப்பட வேண்டும். அங்கு பொறுப்புணர்வோடு காட்டுயிர் சுற்றுலாவுக்கான ஒரு மாதிரியாக ஒரு மாடலாக மசினகுடி மாடல் என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஒரு கட்டுப்படுத்தப்பட்ட ஒரு சுற்றுலாவிற்கான ஒரு செயல்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட வேண்டும். அதற்கான ஒரு திட்டம் மேற்கொள்ள வேண்டும்.

இதை யார் செய்வது, வனத்துறையால் செய்ய முடியுமா என்றால் வனத்துறையால் செய்ய முடியாது. ஏனென்று கேட்டால் வனத்துறை ஏற்கனவே ஒரு சுற்றுலா நடத்திக் கொண்டு இருக்கிறது. அது கட்டுப்படுத்தப்பட்ட சுற்றுலா. ஒரு குறிப்பிட்ட எல்லையில் மட்டும் அந்த வனத்துறை வாகனம் போய் வரும். இங்கே நாம் கவனிப்பது பொதுவாக ஒரு மனநிலை உண்டு. யானைகள் காட்டுயிர். அது காட்டில் தானே இருக்க வேண்டும் என்று ஒரு பொதுவான மனநிலை இருக்கிறது. யானைகள் காட்டுயிர் காட்டில் தான் இருக்க வேண்டும். ஆனால் அதனுடைய காடு என்று நாம் இன்றைக்கு வரையறுத்து இருப்பது கொஞ்சம் இடம் தான். அது காலங்காலமாக அது பயன்படுத்திய எல்லா இடங்களும் அதனுடைய வாழ்விடம் தான். இப்போது நாம் Forest land, Patta land, Revenue land எல்லாம் பிரித்து வைத்திருக்கிறோம். ஆனால் நீலகிரி யை பொறுத்தளவில், அதுவும் இந்த கூடலூர்  பகுதியை பொறுத்தளவில் பல நூறு ஆண்டுகளாக, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அங்கு யானைகள் வாழ்ந்து வருகின்றன. எல்லா இடத்திலும் யானைகள் வாழ்ந்தன, யானைகளோடு பழங்குடி மக்கள் வாழ்ந்தார்கள். ஆனால், வெளியில் இருந்து போனவர்கள் அண்மை ஆண்டுகள் தான் அந்த இடத்தை கைப்பற்றி இருக்கிறார்கள். அந்த கைப்பற்றியவர்கள் தங்களுடைய நிலம் என்று சொல்கிறார்கள். அவர்களுக்கு பட்டா நிலமாக இருக்கலாம். ஆனால், அது உண்மையில் யானையின் உடைய இடம்.

யானையின் உடைய இடத்தில் இத்தகைய நிகழ்வுகள் நடத்துவது எந்த வகையில் நியாயம்? இந்த கேள்வியை கேட்டுவிட்டுதான், இந்த சுற்றுலாவை முறைப்படுத்துவதற்கான ஒரு திட்டத்தை உடனடியாக அரசு அறிவிக்க வேண்டும்.. பொதுவாக யானைகளை பற்றி யானைகளுக்காக குரல் கொடுக்கிறபோது. இது ஏதோ கரிசனத்தோடு கொடுக்கக்கூடிய குரல் அல்ல. ஜீவ காரணத்திற்காக கொடுக்கக்கூடிய குரல் அல்ல இது. இதுவொரு பொதுவாக, காட்டுயிர்கள் வாழ வேண்டும் என்று சொல்வது அவற்றின் மீது பரிதாபப்பட்டு அல்ல. மிக அழகாக, அறிவியலாளர்கள் ஒரு உண்மையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இந்த பூமியில் உயிர் கன்னியில் உயிர் சூழலில் உயிர் அந்த பின்னி பிறந்த உயிர்ச்சூழல் பிணைப்பில் இறுதியாக கலந்தவர்கள் மனிதர்கள்தான். காலத்தோடு ஒப்பிடும்போது ஏறக்குறைய இந்த பூமியின் வயது 460 கோடி ஆண்டுகள் என்றால், பூமியில் முன்னூறு கோடி ஆண்டுகளாக உயிர்கள் இருக்கலாம் என்று மதிப்பிடப் படுகிறது. அவற்றில் இன்றைக்கு நாற்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பாகவே, இந்த பூமியில் பூச்சி, புழுக்கள் இருந்திருக்கின்றன. முப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பாகவே, Reptile என்று சொல்லக்கூடிய ஊர்வன இனங்கள் வாழ்ந்து இருக்கின்றனர். இருபது கோடி ஆண்டுகளாகவே இந்த பூமியில் பாலூட்டிகள் காணப்பட்டு இருக்கின்றன. பதினைந்து கோடி ஆண்டுகளாக பறக்கும் உயிரினங்கள், பறவைகள் இங்கு இருக்கின்றன. ஆனால் நாம் எப்பொழுது வந்தோம்? Homo sapiens என்று சொல்லக்கூடிய நவீன மனிதர்கள் இந்த புவியில் பரிணமித்து இரண்டு லட்சத்தில் இருந்து மூன்று லட்சம் ஆண்டுகள் ஆகியது என அறிவியல் சொல்கிறது. அப்படியானால் பறவைகள் பதினைந்து கோடி ஆண்டுகளாக வாழ்கின்றன. பூச்சிகள் நாற்பது கோடி ஆண்டுகளாக இருக்கின்றன. நாம் இரண்டு இரண்டு கோடி வருடம் என்றால் முந்தா நாள் இந்த பூமிக்கு வந்தவர்கள் தான். இந்த பூமியில் பரிணமித்தது அவர்கள் தான். ஆகவே தான் அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். நாம் இல்லாத உலகத்தில் பறவைகள், விலங்குகள் உயிர் வாழும். ஆனால் பறவைகளும், விலங்குகளும் இல்லாத உலகத்தில் நம்மால் உயிர் வாழ முடியாது என்று அறிவியலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள்.

அதில், காடு நமக்கு நாம் சுயநலமாக பார்க்கவேண்டும் என்று சொன்னால் கூட காடு இல்லையென்றால் இன்றைக்கு மனிதகுலம் இல்லை. அதை நீங்கள் எந்த நோக்கில் பார்த்தாலும் இன்றைக்கு அதாவது மிகப்பெரிய இந்த புவிக் கோளத்தின் மிகப்பெரிய சவாலாக இருக்கக்கூடிய இந்த புவிக்கோளத்தின் உயிர்கள் வாழ்வதற்கு மிகப் பெரிய ஆபத்தாக இருக்கக்கூடிய இந்த காலநிலை மாற்றம் உட்பட அனைத்தையும் அனைத்திலும் இருந்து விடுபடுவதற்கு ஒரு பக்கம் தொழில்நுட்ப காரணங்கள், தொழில்நுட்ப மாற்றங்கள் வேண்டும் என்றால் இன்னொரு பக்கம் நாம் மிதமிஞ்சி அளவுக்கு அதிகமாக சிந்தி இருக்கிற கார்பன் டை-ஆக்ஸைட் உறிஞ்ச கூடிய ஆற்றல் மரங்களுக்கு உண்டு. மரங்கள் நாம், நம்மால் வளர்க்கப்படுகிற மரங்கள் ஒரு விழுக்காடு கூட கிடையாது. ஆனால் கானகம் அவ்வளவு விழுக்காடு மரங்களைக் கொண்டிருக்கிறது. ஆகவே காட்டை காப்பாற்றுவது என்பது இன்னும் பிறக்காத என் தலைமுறையை காப்பாற்றுவதாக நாம் அர்த்தப் படுத்திக் கொள்ளலாம்.

இந்த புவிகோளத்தை காப்பாற்றுவதில் பெரும்பங்கை காடுகள் ஆற்றுகின்றன. நமக்கு காடுகள், மரங்கள் எவ்வளவு பயன் என்பதை நாம் விளக்க தேவையில்லை. ஆனால், இந்த காட்டுக்கும், நமக்குமான உறவை நாம் எப்படி எடுத்துக் கொள்ளும்போது, இந்த கானகத்தை நம்மால் உருவாக்க முடியாது என்கிற ஒரு உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மரங்களை வளர்த்து எடுக்க முடியும். ஆனால் காடுகளை உருவாக்க முடியாது. ஏனென்று கேட்டால், மரம் என்பது உயிர். காடு என்பது ஒரு உயிர்ச்சூழல். அங்கு கண்ணுக்கு தெரியாத பாக்ட்டீரியாவிலிருந்து இருந்து ஆலமரம் வரை, சின்ன பாசியில் இருந்து யானை வரை, மரம், செடி, கொடி, பூச்சி, புழு, பறவை, விலங்கு, அந்த மண் எல்லாம் சேர்ந்த ஒரு தொகுப்புதான் காடு. அந்த காட்டை நம்மால் உருவாக்க முடியாது. அந்த காட்டை காப்பாற்றலாம். எப்படி காப்பாற்றுவது? காட்டுயிர்களை காப்பாற்றுவதன் மூலமாக மட்டுமே காப்பாற்றலாம். காடுகளில் போய் மரம் நட்டு காட்டை காப்பாற்ற முடியும் என்றால் அது பொய். அது மிகப்பெரிய தவறில் முடியும். ஏன் என்று கேட்டால், காட்டில் என்ன மரத்தை வளர்க்க வேண்டும் என்று நமக்கு தெரியாது. வெள்ளைக்காரர்கள் செய்த தவறு இங்கு வெளிநாட்டு மரங்கள், தாவரங்கள் வளர்ந்து காற்றின் சூழலை கெடுத்து இருக்கின்றன.

பறவைகள், விலங்குகள் அங்கு காட்டில் விதைக்கும் வேலையை செய்கின்றன. அவற்றை காப்பாற்றினால் காடு வாழும், காட்டிற்கு போய் தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை. காட்டிற்கு போய் பூச்சிக்கொல்லிகள் அடிக்க வேண்டிய அவசியம் இல்லை. பூச்சிக்கொல்லிகள் எங்கேயும் தேவையில்லை. இதுதான் உண்மை. காற்றில் ஏராளமான பூச்சிகள் உண்டு. பூச்சிகள் இல்லையென்றால் கானகம் இல்லை. ஏனென்று கேட்டால் நமக்கு தெரியும் ஒவ்வொரு விதமான தாவரத்திலும் ஒவ்வொரு விதமான பூச்சிகள் மகரந்த சேர்க்கை நிகழ்த்துகிறன என்று. அப்படியானால் பூச்சிகள் அதிகம் ஆனால் என்ன செய்வது? கவலைப்பட வேண்டாம், அதைக் கட்டுப்படுத்த இங்கு Bee eater, Fly catcher என்று ஏராளமான பறவைகள் உண்டு. பிறகு நாம் என்ன செய்வது, காட்டை உருவாக்க முடியாது, காட்டை காப்பாற்றவேண்டும், காப்பாற்றுவதற்கு நாம் என்ன செய்வது? இந்த கேள்விக்கு ஒரு நீண்ட ஆய்வுக்கு பிறகு அறிவியலாளர்கள் விடை தருகிறார்கள். மனிதர்கள் என்ன செய்தால் காட்டை காப்பாற்றலாம்? என்ற கேள்விக்கு அவர்கள் விடை தருகிறார்கள்.

மனிதர்கள் ஒன்றுமே செய்யாமல் இருந்தால் காட்டை காப்பாற்றிவிடலாம். ஏனென்றால் மனிதர்கள் போன காடு மட்டும் தான் இங்கே கெட்டு போயுள்ளது. நாம் மனிதர்கள் என்ற பட்டியலில் பழங்குடிகளை நான் வைத்துக் கொள்ளவில்லை. அவர்கள் அந்த கானகத்தின் ஒரு அங்கம். ஆனால் வேறு எங்கெல்லாம் புறச் சூழலில் இருந்து மனிதர்கள் உள்ளே நுழைகிறார்களோ அந்த கானகம் கெட்டு போய்யுள்ளது. அப்படியானால் மிச்சம் இருக்கிற காடு அந்த காட்டுயிர்களை காப்பாற்ற வேண்டும் என்றால் அங்கு முடிந்த வரையிலும் மனித நடமாட்டத்தை தடுக்க வேண்டும். நீங்க வந்து ஒரு நான் நான் பெரிய இயற்கையாளன், இயற்கை அக்கறையாளன். நான் வாரம் தவறாமல் காட்டிற்கு போய்விடுவேன். அப்படி என்று ஒருத்தர் சொன்னார் என்றால் அவரை கொஞ்சம் தள்ளி நிக்க வைக்கலாம். ஆனால் நான் இதுவரைக்கும் காட்டிற்கே போனதில்லை. கானகத்திற்கு நான் பயணித்தது இல்லை என்று ஒருவர் சொன்னார்கள் என்றால் அவர் தான் மிகச் சிறந்த ’கானக காப்பாளர்’ என்று நாம் சொல்ல முடியும். ஏன் என்று கேட்டால் நாம் காட்டிற்கு வாரம் தவறாமல் போய் வருவதனால் காட்டிற்கு ஒரு அழுத்தம் ஏற்படுகிறதே தவிர நாம் எதையும் செய்யப்போவதில்லை.

நமக்கு வேண்டுமானால் நம்முடைய காட்டுயிர்களை பார்த்தோம். காட்டுயிர்களை படம் எடுத்தோம் என்று நாம் குதூகளித்துக் கொள்ளலாம். ஆனால், அதனால் ஏற்படுகின்ற விளைவு ஒரே ஒன்று தான். அதை பார்த்து விட்டு வந்து இதை காப்பாற்ற வேண்டும் என்று சொல்கிற பணியை வேண்டுமானால் செய்யலாம். அப்படியானால் காட்டிற்கு போகின்றவர்களுடைய  முதல் நிபந்தனை எதுவாக இருக்கும் என்றால், நாம் போவதற்கு முன்பாக அந்த காடு எப்படி இருந்ததோ, போய் வந்த பிறகும் அப்படி இருக்க வேண்டும். இந்த நிபந்தனையோடு உட்பட்ட ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சுற்றுலாவை தான் கானக பகுதியில் வழி நிறுத்த வேண்டும். ஆனால் சுற்றுலா என்று வந்து விட்டால் அங்கு ரிசாட்டுகள் கட்டுவது கேளிக்கை விடுதிகளை உருவாக்குவ்,து. உணவகங்களை உருவாக்குவது ஒரு கான்கிரீட் காடாக கானக பகுதிகள் உருவாக்கக்கூடிய ஒரு அவலம் தான் இந்த கேளிக்கை விடுதிகள். இதைப்பற்றிய மனநிலையை ஒரு மாற்றம் கொண்டு வர வேண்டும். இந்த மனநிலையில் தான் அரசுக்கு அழுத்தம் கொடுக்க  வேண்டும்.

இந்தியாதான் உலகத்தில் அதிக எண்ணிக்கையில் ஆசிய யானைகள் இருக்கின்றன. ஏறக்குறைய உலகத்தில் இருக்ககூடிய ஐம்பத்தி எட்டு விழுக்காடு ஆசிய யானைகள் இந்தியாவில் இருக்கின்றன. இந்தியாவில் இருபது மாநிலங்களில் யானைகள் உண்டு. அந்த இருபது மாநிலங்களில் யானைகள் இருக்கிறது என்றாலும் மொத்தம் இருக்கின்ற யானைகளை நாற்பத்தி மூன்று விழுக்காடு யானைகள் மூன்று மாநிலங்களில் இருக்கின்றன. அது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா இந்த மூன்று மாநிலங்கள் தான். முதல் இடத்தில் கர்நாடகம் இருக்கிறது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் யானைகள் இருப்பது கர்நாடகாவில். அதற்கு அடுத்த அசாமில் மூன்றாவது இடம் கேரளா. நான்காவது இடம் தமிழ்நாடு. ஆகவே அசாம் தவிர்த்து மீதி மூன்று மாநிலங்களில் நாற்பத்தி மூன்று விழுக்காடு யானைகள் இங்கு இருக்கின்றன. இந்த யானைகள் காலங்காலமாக இங்கு இருக்கின்றன.

நமக்கு காடு வேண்டும், நம் காட்டிற்கு யானைகள் வேண்டும். ஏன் என்று கேட்டால் அது யானை ஏன் வேண்டும் என்ற கேள்விக்கு ஒரு நீண்ட விடை சொல்ல வேண்டும். ஆனால் யானையை அறிவியலாளர்கள் Keystone species என்று பகுத்து இருக்கிறார்கள். ஆதார உயிரினம் என்று அந்த வார்த்தைக்கு அர்த்தம். ஒரு ஒரு வளைவு, ஒரு முகம். அதாவது  ஒரு வளைவு  கட்டிடம்  அமைக்கபடுகின்றபோது அதை அமைப்பது எளிதல்ல, கட்டடவியல் படித்தவர்களுக்கு தெரியும். மிக லாபகமாக அந்த கற்களை அடுக்கிக் கொண்டு போய், நடுவிலே ஒரு கல்லை வைத்து   அந்த ஆர்ச் அமைப்பை அவர்கள் வடிவமைப்பார்கள். அதில் நடுவில் தாங்குகின்ற கல்லுக்கு பெயர் தான் Keystone. அப்படி ஒரு உயிர் சூழலில் எந்த உயிர் இல்லாமல் போனால், அந்த Keystone கலைந்து அந்த அமைப்பே சிதைந்து போகும். அப்படித்தான் ஒரு உயிர் சூழலில் எந்த உயிர் இல்லாமல் போனால் அந்த உயிர்ச்சூழல் முற்றிலும் பாதிக்கப்படுமோ. அதான் Keystone species. யானை அப்படி ஒரு Keystone species.

நமக்கு காடு வேண்டும், காட்டிற்கு யானை வேண்டும், அதில் யானை எவ்வளவு முக்கியம் என்றால் இந்தியாவில் நான் ஏற்கெனவே சொன்னேன். இதுவரை இப்போது அண்மையில் நடைபெற்ற கணக்கெடுப்பின்படி இருபத்தி ஏழாயிரம் யானைகள் வரை இருக்கலாம் என்று மதிப்பீடு இருக்கிறார்கள். இந்த யானை மதிப்பீட்டு முறையில் கூட பெரிய சிக்கல் இருக்கிறது. இதற்கு முந்தைய கணக்கெடுப்பில் முப்பதாயிரம் ஆக இருந்தது. இப்போது இருபத்தி ஏழாயிரம் ஆக குறைந்திருக்கிறது. பத்து விழுக்காடு குறைந்திருப்பதாக நாம் அர்த்தப் படுத்திக் கொண்டால் அது குறைந்ததாக அர்த்தமல்ல. கணக்கெடுப்பில் ஏற்பட்டு இருக்கிற கோளாறு. இது வரையிலும் கூட யானைக்கான கணக்கெடுப்பு முறை துல்லியமாக நடத்தப்படுவதில்லை. அதைப் பற்றி ஆய்வுகள் போதிய அளவுக்கு இல்லை. நாம் அதைப் பற்றி தனியாக பேச வேண்டும். அந்த இருபத்தி ஏழாயிரம் யானைகள் இந்தியாவில்  இருக்கிறது என்கிறனர். உலகத்தில் அதிக எண்ணிக்கையில் யானைகள் இங்கு இருக்கின்றன. இந்த யானைகளுடைய வாழ்விடம் எவ்வளவு சதவீதம் இந்தியாவில் இருக்கிறது என்றால் மிகக் குறைவான பகுதியில்தான் யானைகள் இந்தியாவில் வாழ்கின்றன.

இருபத்தி ஆறாயிரம் யானைகளில் எத்தனை விழுக்காடு ஆண் யானைகள் இருக்கிறது என்பது தான் மிக கவனிக்கத்தக்கது. இங்கே அறிஞர்கள் மதிப்பிடுகிறார்கள். துல்லியமான மதிப்பீடு நம்மிடம் இல்லை, இருந்தாலும் மதிப்பிடுகிறார்கள் இருபது  யானைகளுக்கு ஒரு ஆண் யானை தான் இருக்கலாம் என்று மதிப்பிடுகிறார்கள், அப்படியானால் இங்கு இருக்கிற யானைகளில்  குறைவாகவே அதாவது  ஒரு மூவாயிரம் ஆண் யானைகள் வரைக்கும் தான். மொத்த யானையில். மூவாயிரத்தி இருந்து நாலாயிரம் யானைகள் மட்டும் தான் ஆண் யானைகளாக இருக்கும் என்று மதிப்பிடுகிறார்கள்.

பொதுவாக ஆண் யானைகளுக்கான ஆபத்து எங்கே ஆரம்பித்தது என்றால் வேட்டையில் தான் நடந்தது. ஆண் யானைகள் தந்ததுக்காக குறிவைத்து வேட்டையாடப்பட்டன. அப்படி குறி வைத்து வேட்டையாடப் பட்ட போது தொண்ணூறுகளில் ஒரு மிக சோகமான நிலை இருந்தது. அப்போது ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது.. கர்நாடகத்தில் பந்திப்பூர் பகுதியில் அப்போது யானையின் உடைய ஆண் பெண் விகிதமானது ஒரு ஐந்து பெண் யானைகளுக்கு ஒரு ஆண் யானை என்கின்ற அளவில் இருந்தது. அப்படி பொதுவாகவே பிறக்கிற குட்டிகள் ஆண், பெண் சரிசமமாக தான் பிறக்கும். அப்படியானால் எண்ணிக்கை சரிசமமாக இருக்க வேண்டும். ஆனால் ஐந்து பெண் யானைகளுக்கு ஒரு  ஆண் யானை இருக்கும் என்றால் அது ஆரோக்கியமான ஒரு சூழல் தான் அறிவியலாளர்கள் சொல்கிறார்கள்.  அப்படி 1:5 என்று இருந்தது. ஆனால் அதே காலகட்டத்தில் முதுமலையில் இருபத்தி ஐந்து பெண் யானைகளுக்கு ஒரு ஆண் யானை தான் இருந்தது. அதே காலகட்டத்தில் கேரளாவினுடைய தேக்கடி பகுதியில் இன்றைக்கு இருக்கிற பெரியார் சரணாலயம் பகுதியில் தொண்ணூறு பெண் யானைகளுக்கு ஒரு ஆண் யானை தான் இருக்கு. அதற்கு காரணம் அப்போது நடைபெற்ற வேட்டை, தந்த வேட்டை.  தந்த வேட்டை பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால் யானைகள் அதிக எண்ணிக்கையில் இப்பவும் யானைகள் இறப்பது ஆண் யானைகள்தான். காரணம் அதற்குரிய வாழ்வியல் சிக்கல். யானையின் உடைய வாழ்விடங்களில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், யானைக்கு பெரிய வாழ்விடம் தேவை நம் எல்லோருக்கும் தெரியும் பெரிய உயிர் அது, அதிக உணவு தேவை. ஆகவே பெரிய வாழ்விடம் தேவை. எவ்வளவு பெரிய வாழ்விடம் என்பதையும் நாம் அறிவோம். சராசரியாக ஐநூறு சதுர கிலோமீட்டர் ஒரு ஆண்டிற்கு அவை வாழ்விடமாக பயன்படுத்துவதாக அறிஞர்கள் சொல்கிறார்கள். முதுமலையில் இருக்கக்கூடிய யானை கோயம்புத்தூர் உடைய சிறுவாணி மலைக்கும் அல்லது கேரளாவினுடைய. அட்டப்பாடி தாண்டியும் போய் அடுத்து அந்த ஆண்டே திரும்ப முதுமலை வருவதை ரேடியோ காலர் முறையில் ஆய்வு செய்து அறிஞர்கள் நிரூபித்து இருக்கிறார்கள். எல்லா நாட்களிலும் ஒரே இடத்தில் உணவு கிடைத்துவிடாது. யானையின் உடைய இன்னொரு பண்பு அது கூட்டமாக வாழும். புலி, சிறுத்தை போன்றவை எல்லாம் தனித்துதான் வாழும். யானைகள் கூட்டமாக வாழும். அந்த கூட்டத்தை கூட மூன்றாக பிரித்தார்கள். அந்த கூட்டங்கள் ஒரு பெரும் கூட்டத்தோடு தொடர்பு இருக்கும். க்ளான் என்று சொல்வார்கள். அந்த பெருங்கூட்டத்தோடு தொடர்போடு இருக்கும். ஆண்டிற்கு எப்போதாவது ஒரு முறை அந்த பெரும் கூட்டங்கள் ஒரு இடத்தில் சந்திக்கும். இந்த கூட்டங்கள் தனித்து தனித்து, உணவு தேடி இரை தேடி போகும். அப்படி போகிறபோது, அந்த கூட்டங்கள் கூட, உணவு பற்றாக்குறை ஏற்படுகின்ற போது, அவை குடும்பங்களாக பிரிந்துவிடும்.

அவற்றை, குடும்பம், கூட்டம், பெரும் கூட்டம் என்று வகைப்படுத்தலாம். ஆனாலும் அவை தொடர்புகளுள் இருக்கும். இதுதான் அறிவியல் சொல்கிறது. அப்படி அந்த ஒரே கூட்டமாக பெரும் கூட்டமாக இருக்கிற யானைகள் ஒரே இடத்தில் வாழ முடியாது என்பதால் தான் நீண்ட தூரம் வலசை போகின்றன. நீண்ட வாழ்விடம் தேவைப்படுகிறது. அப்படி வாழ்விடத்திற்குள் போகின்ற பாதைகளை தான் வலசை பாதைகள் என்கிறார்கள். ஆகவே வாழ்விடம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு வலசை பாதைகள் முக்கியம். அந்த வலசைப்பாதை எங்கெல்லாம் குறுகி இருக்கிறதோ அதுதான் Elephant corridor என்று சொல்கிறோம். இணைப்பு பாதைகள் என்று சொல்கிறோம். இந்த இணைப்பு பாதைகள் மிக மிக முக்கியம். இணைப்பு பாதைகள் துண்டாடப்பட்டால் அந்த வாழிடம் இரண்டாக பிளந்து விடும். ஆகவே இரண்டாக சுருங்கி விட்டால், அங்கே , அதற்கு உணவு தேவை, தண்ணீர் தேவை உட்பட. ஆண் யானைகளை பொறுத்தளவில் ஆண் யானைகள் தான் பிறந்த குடும்பத்தில் இணை சேராது. ஒரு வயது வந்த பிறகு பதிமூன்று வயது, பதினைந்து வயது ஆன பிறகு அந்த கூட்டத்தை விட்டு அவை பிரிக்கப்படும். ஒன்று விரட்டப்படும் அல்லது துரத்தப்படும்.

வேறு கூட்டங்களோடு இணை சேருகிறபோது தான் ஒரு ஆரோக்கியமான யானைக்கூட்டம் உருவாக வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அப்படி போகிறபோது அவை நீண்ட தூரம் போகும். இணை சேர்கின்ற காலத்தில். அதுதான் மதக் காலம் என்று சொல்வார்கள். மதம் என்பது யானையுடைய நோய் அல்ல. அது ஒரு ஆரோக்கியமான யானையுடைய வெளிப்பாடு. பல பேர் மதம் பிடித்திருக்கிறது என்றால் நோய் என்று நினைக்கிறார்கள். அப்படி இல்லை. அந்த மத காலத்தில் அவை அப்படி நீண்ட தூரம் போகும். அப்படி போகிறபோது அதற்கான பாதைகள் சரியாக இல்லை என்றால் அது ஒரே கூட்டத்திற்கு, அதுவும் சில கூட்டங்களுக்கு உள்ளே இணை சேர்கிற  வாய்ப்பு இருக்கிறது. ஆகவே தான் பரந்த வாழ்விடம் தேவைப்படும்., நாம் எப்போது  இந்த நிலம் பாகுபாடு பிரித்தோமோ, அப்போது காலங்காலமாக யானைகள் போன இடத்தையும், பிரித்தோம்.

மசினகுடியில் மட்டும் அல்ல. தமிழகத்தின் பல பகுதிகளில் இந்தியாவின் பலபகுதிகள் என்ன நடக்கிறது என்றால், அந்த யானைகள் காலம் காலமாக போய் வந்த பல இடங்கள் அதுவே பழங்குடிகள் கையிலும், வேளாண் குடிகள் கையிலும் இருக்கிற வரைக்கும் எந்த சிக்கலும் இல்லை. அவர்களுக்கு தெரியும் அது யானை வருகிற இடம் என்று. ஆனால் கடந்த இருபத்தைந்து, முப்பது ஆண்டுகளாக எங்கிருந்தோ வந்தவர்கள் அந்த இடங்களை எல்லாம் விலைக்கு வாங்கினார்கள். அவர்கள் கேளிக்கை விடுதி  மட்டும் கட்டவில்லை அவர்கள் பள்ளிக்கூடங்கள் கட்டினார்கள், கல்லூரிகள் கட்டினார்கள், ஆசிரமங்கள் கட்டினார்கள்.

எல்லாம் அந்த யானையினுடைய வழித்தடத்தில்தான் கட்டப்பட்டது. உடனே அவர்கள் வந்து சில பேர் உடனே ஒரு பெரிய சண்டைக்கு வருவார்கள். எங்களுடையது Elephant corridor இல்லை என்று. Elephant corridor இருக்கிறதா இல்லையா என்பதை யார் சொல்லுவது. அவர்கள் உடனே WTI இருக்கிறதே. அவர்கள் சொல்கிறார்கள், இவர்கள் சொல்கிறார்கள் என்பார்கள். உண்மையில் என்ன நடக்கிறது என்றால், 101 வலசை பாதைகள் Elephant corridor குறுகிய பாதைகள் அடையாளம் காணப்பட்டு ஒரு Rights of paths என்ற நூலில் வெளியிடப்பட்டு இருக்கிறது.  அதை வெளியிட்டது Wildlife Trust of India (WTI) என்கிற அமைப்பு இந்திய அரசினுடைய Project Elephant என்கிற ஒரு அமைப்போடு சேர்ந்து அதை செய்தார்கள். அதில் குறிப்பிட்டு சொல்கிறார்கள், இந்த 101 என்பது இறுதியானது அல்ல. இவை  இப்பொழுது அறியப்பட்டிருக்கிறது. இன்னும் நிறைய இந்த வலசை பாதையில் அறியப்பட வேண்டும் என்பதை அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அதை ஒரு அமைப்பால் செய்யமுடியாது. உள்ளூர் அமைப்புகள், உள்ளூர் ஆய்வாளர்கள், உள்ளூர் அலுவலர்கள் அவர்கள் அடையாளம் கண்டிருக்கிறார்கள் பல, அதை வலசை பாதைக்கு தகுதியுடையதாக இல்லை என்று அங்கு பட்டியலில் சேர வில்லை. என்றாலும் பல இன்னும் சேர்க்கப்பட வேண்டியது இருக்கிறது. அந்த Elephant corridor  என்பது இரண்டு வாழ்விடங்களை இணைக்கும் குறுகிய பாதை. அப்படித்தான் அவை வரையறுக்கபடுகின்றன. அதுமட்டுமே முக்கியம் என்றால் முக்கியமல்ல, எல்லா வலசை பாதைகளுமே முக்கியம்.

அந்த பட்டியலில் இடம்பெறாத எல்லாம் வலசை பாதைகளும் முக்கியம் வாழ்விடம் முக்கியம். அந்த வாழ்விடத்தை ஒட்டி பெரும் கட்டிடங்கள் கட்டப்படும் போது அல்லது இது மாதிரியான ஒரு கேளிக்கை விடுதிகள் கட்டப்படுகிற போது அதனுடைய இயல்பான வலசைகள் பாதிக்கப்படும் அதை பாதிக்க கூடாது என்பதுதான் அது. பாதிக்காமல் இருக்கிறபோதுதான் யானைகளை நலமாக வாழ முடியும். ஆகவே இந்த காடுகளுக்கு வெளியே யானைகள் பயன்படுத்துகின்ற அது Elephant corridor இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. பயன்படுத்துகின்ற எல்லா இடங்களிலும் நிலம் மாற்றம் நடைபெறுவதை தடுப்பதற்கான ஒரு சட்டம் நமக்கு தேவைப்படுகிறது. அந்த சட்டம் இதுவரையிலும் இல்லை. அதை கட்டுப்படுத்த ஒரே ஒரு ஒரு அதிகாரமற்ற Hill Area Conservation Authority என்று ஒன்று மட்டும் தான் தமிழகத்தில் இருக்கிறது. மற்றபடி வேறு எதுவும் இல்லை. அப்படி ஒரு அதிகாரம் படைத்த ஒரு அமைப்பு வேண்டும் என்றால் ஒரு சட்டம் இயற்றப்படவேண்டும் அதற்கான கோரிக்கை, இன்றைக்கு யானைகளுக்காக குரல் கொடுக்கின்ற எல்லோரும் அத்தகைய சட்டத்திற்கான குரலை நாம் எழுப்ப வேண்டும்.

அதே போல் யானையை காப்பாற்ற வேண்டும் என்று இந்தியாவின் பாரம்பரிய விலங்காக இந்திய அரசு அறிவித்திருக்கிறது. சட்டப்படி அது அட்டவணை ஒன்றில் இருக்கக்கூடிய விலங்காக இருக்கிறது. ஆனால் யானைகளை காப்பாற்ற அரசு என்ன செய்திருக்கிறது என்பதை நாம் பார்க்கின்ற போது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. Project Tiger என்று ஒன்று உண்டு. Project Elephant என்று ஒன்று உண்டு. அந்த Project Tiger க்கு ஒதுக்கப்படுகிற நிதி. நான் தவறு என்று சொல்லவில்லை, ஒதுக்கப்பட வேண்டும், ஆனால் சென்ற ஆண்டு Project Tigerக்கு 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த முப்பது elephant reserves க்கு மூன்று கோடி ரூபாய் தான் ஒதுக்கப்பட்டது. இந்தியா முழுக்க இருபத்தி ஏழு ஆயிரம் யானைகளை காப்பாற்ற அவர்கள் ஒதுக்கி இருக்கிற தொகை மூன்று கோடி ரூபாய் தான். மிகச் சொற்பமான தொகை.

தமிழகத்தில் இன்னொரு அவலம் இருக்கின்றது. நீங்கள்  இதையெல்லாம் கவனித்தால் தான் இந்த யானை பாதுகாப்பிற்கு நாம் எந்த அளவிற்கு இன்னும் அதிகமாக யோசிக்க வேண்டும் என்று தெரியும். அரசுகள் யானை பாதுகாப்புக்காக யானை மனித முரண் என்பதைப் பற்றி மட்டும் எல்லோரும் அதிகமாக பேசுகிறார்கள் ஒரு யானையால் மனிதர்கள் அடிபட்டால் உடனே பேசுகிறோம் அல்லது மனிதர்களால் யானை தாக்கப்படுகிறது போது ஒரு பக்கம் இயற்கை ஆர்வலர்கள் வருத்தப் படுகிறோம். யானை மனிதர்கள் தாக்கினால் அது விளைநிலங்கள் சேதப்படுத்தினால் அதை சார்ந்தவர்கள் யானைக்கு எதிரான குரல் கொடுக்கிறார். ஆனால் இந்த முரண் எங்கிருந்து வருகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றால் இந்த முரணை கலைவதற்கான அரசின் திட்டங்களில் என்ன இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் மட்டும் யானையை காப்பாற்ற முடியாது, அதற்கு வெளியிலும் காப்பாற்ற வேண்டும். அந்த வெளியில் ஏற்படக்கூடிய இது மாதிரியான கேளிக்கை விடுதிகள் உட்பட கட்டிடங்களை பெரும் கட்டிடங்கள் அது எதுவாக இருந்தாலும் சரி, அது ஆசிரமம் ஆக இருந்தாலும் சரி, பள்ளிக்கூடங்கள் ஆக இருந்தாலும் சரி, கல்லூரிகளிலும் இருந்தாலும் சரி, அவற்றை அனுமதிப்பதற்கு அறிவார்ந்த சமூகத்தின் ஆலோசனை பெற்று தான் அறிவிக்க வேண்டும். எல்லாவற்றையும் அனுமதிக்கக் கூடாது. HACA வலுவிழந்த சட்டம்தான் என்றாலும் அதனுடைய ஒப்புதல் கூட இல்லாமல் பெரும் கட்டிடத்தை கட்டி விட்டு, உலகத்திற்கு எல்லாம் நாம் அமைதி போதிக்கிறேன் என்று சொல்லக்கூடியவர்கள் எல்லாம் இங்கு இருக்கிறார்கள், அவர்களை நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம், கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி வேண்டும் என்ற ஒரு சிறிய  ஒரு உண்மை கூட அதை கூட அறியாதவர்களா அவர்கள், தெரியும் அவர்களுக்கு. அவர்களுக்கு இன்னொன்றும் தெரியும், அது யானையின் உடைய பாதை என்பதும் தெரியும். அனுமதி கிடைக்காது என்று  தெரிந்துதான் கட்டினார்கள். பிறகு  சர்வ வல்லமை படைத்தவர்களாக மாறிய பிறகு பிற்பாடு அனுமதியை வாங்கி இருக்கிறார்கள். இது தான் சோகம். இந்த சோகம் எல்லாம் களைய வேண்டும் என்றால், நாம் ஒரு கொள்கை வாழ்விடத்தை யானையின் வாழ்விடம் காட்டிற்கு, வெளியே இருக்கிற வாழ்விடத்தை காப்பாற்றுவதற்கான அரசின் அக்கறை அதிகமாகி, அதை காப்பாற்றுவதற்கான ஒரு  சட்ட அங்கீகாரம் கிடைக்க வேண்டும். அதேபோல் tiger reserves, அதற்கு கொடுக்கப்பட்டிருக்கிற அங்கீகாரம் elephant reservesக்கு கொடுக்கப் படுவதில்லை. அதற்கும் கொடுக்கப்பட வேண்டும். அதற்கான சட்ட அங்கீகாரம், நிதி அதிகாரம், நிதி ஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும். இந்த கூடலூர் பகுதியை பொறுத்தளவில் கூடலூர் காலங்காலமாக எப்போதும் காட்டுயிர்கள் வாழக்கூடிய இடம். ஆனால், அங்கே இன்றைக்கும் 1969ஆம் ஆண்டு இந்த ஜமீன்தார் முறை ஒழிக்கப்பட்ட போது ஏறக்குறைய 80 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் உள்ள ஒரு பகுதியை நிலம்பூர் கோவில் வசமிடருந்து பெற்று அரசுடைமையாக்கப்பட்டது.

தமிழகத்தில் அதில் கவனம் செலுத்தாமல் விட்டதன் விளைவாக அதற்குள் குத்தகைதாரர்களாக இருந்தவர்கள் வழக்கு தொடுத்து, அந்த வழக்கு நடக்க நடக்க ஏராளமானவர்கள் வெளிமாநிலங்கள் இருந்து வந்து அந்த இடத்தை கைப்பற்றி காட்டை அழித்தனர். அந்த காட்டை அழித்த பிறகு அதற்கு ஏற்கனவே சொந்தக்காரராக இருந்தவர்கள் நீதிமன்றத்திற்கு போன பிறகு ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்றி ஐந்தாம் ஆண்டு நீதிமன்றம் அவ்வளவு ஒரு கடுமையான சாடலை வெளிப்படுத்தியது. அவ்வளவு காடுகள் அழிக்கப்பட்டதாக, இன்னும் மிச்சம் இருக்கிறது. இருபதாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட காடுகள். அந்த காடுகள் ஏறக்குறைய No man land என்கின்ற நிலைமையில் இருக்கிறது. அரசு விரைந்து யானைகள் வாழிடத்தில் இருக்கக்கூடிய அந்த இடத்தை கைப்பற்றி யானைகளுக்கு தேவையானது மக்களுக்கு தேவையானது. பிரித்து கொடுக்க வேண்டிய ஒரு துரித நடவடிக்கை எடுத்தால் அங்கு யானைகள் நலமாக வாழும்.

அதோடு கூடலூர் பகுதியில் எப்போதும் மழை பெய்கிறது. அங்கு புல்வெளிகள் இருக்கும். யானையின்  உணவில் பெரும்பகுதி புற்கள் தான். அந்த புட்கள் அறுபது விழுக்காடு மேல் யானையின் உடைய உணவில் பூக்கள் இருக்கும். புற்கள் விளைந்த பகுதிகளையெல்லாம் நாம் பல்வேறு இடங்களில் மாற்றம் செய்து வைத்து இருக்கிறோம். அதை மீட்டெடுத்து அவற்றிற்கான உணவு தேவை அதிகரிக்கும் போது உணவு, உணவு கிடைக்கின்ற இடங்களை அதிகரிக்கின்ற போது அது பெரும்பகுதி மனித குடியிருப்புகளுக்கு வருவதை தவிர்க்கவும். அதே போல் காட்டில் மண்டிக்கு இருக்கிற களைச்செடிகள் அகற்றுவது போன்ற இன்னொரு பக்கம் அதற்கான புதிய நிதி ஒதுக்கி இவற்றை அகற்ற வேண்டும். அதை விட கொடுமையான இன்னொரு செயல் நடக்கிறது. பல நேரங்களில் வனத்துறை மீது  பல நேரங்களில் நாம் கோவப்படுவோம். அவற்றில் கோபப் படுவதற்கான பல சம்பவங்கள் நடந்து இருக்கலாம். ஆனால், உண்மையில் ஒரு பரிதாபத்திற்கு உரிய அரசால் புறக்கணிக்கப்பட்ட துறையாக அந்த துறை இருக்கிறது.

அங்கே அவர்கள்தான் காட்டையும் காட்டுயிர்களையும் மேலாண்மை செய்ய வேண்டும். காடுகளுக்குள் அவர்கள் மேலாண்மை செய்ய முடிகிறது. ஆனால், காட்டிற்கு வெளியே நடக்கிற எந்த செயல்பாடுகளையும் தடுக்கிற அதிகாரம் அவர்களுக்கு கிடையாது. ஆனால், அவர்கள் தடுக்க முனைகின்ற போது, அரசின் பிற துறைகள் அனைத்துமே அவர்களுக்கு எதிராக  தங்களுடைய வெளிப்பாடுகளை காட்டுகிறார்கள். ஆகவே ஒரு கைவிடப்பட்ட துறையாக வனத்துறை இருக்கிறது. அதிலும் சோகம் என்னவென்றால், அதற்கு ஒதுக்கப்படுகிற நிதி மிக மிக குறைவு. இந்த வேளாண் குடிகள் காட்டை ஒட்டி இருக்கக்கூடிய பகுதிகளில் யானைகளால் மற்ற காட்டுயிகளால் அந்த வேளாண்மை பாதிக்கப்படுகின்ற போது அப்போது, அவர்கள் ஒரு வேட்டைக்காரர்களை போலவோ, ஒரு பணத்திற்காக ரிசாட் நடத்துபவர்களை போலவோ அவர்களை நாம் பார்க்க வேண்டியது இல்லை. அவர்கள் அங்கு விவசாயம் செய்பவர்.

அந்த இடத்தில் காட்டுயிர்கள் போய் சேதம் ஏற்படுத்தினால் தங்கள் வாழ்வாதாரம் பறிபோகிறது. அந்த கோபத்தில் அவர்கள் எதிர்வினை ஆற்றுவார்.  அப்படி எதிர்வினை ஆற்றாமல் இருப்பதற்காக தான் அவர்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று நாம் கோரிக்கை வைத்திருக்கிறோம். ஆனால், இழப்பீட்டு தொகை நிர்ணயம் செய்வதிலேயே மிகப்பெரிய குளறுபடிகள் உண்டு. சந்தை விலைக்கேட்ப நிர்ணயம் செய்வதில்லை. இழப்பீடும் பெரும் முறையும் சரியாக இல்லை. அதை விட மோசம். சோகமான செய்தி என்னவென்றால், இந்த ஆண்டு பொதுவாக மார்ச் மாதத்தில் இருந்து பிறகு ஏப்ரல் மாதத்தில் இருந்து ஒரு திட்ட நிதி ஒதுக்கீடு தொடங்கும். இந்த இரண்டாயிரத்தி இருபது இருபத்தி ஒன்றாம் ஆண்டுக்கு ஏறக்குறைய இன்னும் இரண்டு மாதங்கள் தான் உண்டு. இந்த பத்து மாதங்களில் ஒரு பைசா கூட இந்த இழப்பீட்டு தொகைக்கு அரசு ஒதுக்கவில்லை. இது மிகப்பெரிய சோகம். இழப்பீடு அடைந்தவர்கள் விவசாயிகள். அவர்கள்  தன்னுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட விண்ணப்பித்த உடனே கிடைக்க வேண்டும். விண்ணப்பிக்கிற முறை தவறு, ஏற்கனவே அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிற நிதி குறைவு. அந்த நிதி கூட  ஏறக்குறைய பத்து மாதம் ஒரு பைசா கூட ஒதுக்க படாமல் இருக்கிறது என்றால் இங்கே யானைகளை காப்பாற்ற அரசின் அக்கறை எங்கே இருக்கிறது என்கிற கேள்வியை நாம் எழுப்ப வேண்டும். இதை எல்லாம் அரசின் கவனத்தில் இருக்கிறதா என்று நமக்கு தெரிய வேண்டும். இவற்றை எல்லாம் நாம் கொடுக்கின்ற அழுத்தம், இந்த காட்டு உயிர்களை, குறிப்பாக யானை போன்ற பேருயிர்கள் மீது நாம் அதை காப்பாற்றுவதற்காக இப்படி எல்லா கோணத்திலும், நாம் நம்முடைய அழுத்தம் அதிகரிக்கும் போது தான் எல்லா அரசுகளின் பார்வையும் அதற்குள் வரும்.

எனக்கு தெரியும் இந்த இரண்டு நாளில் நூற்றுக்கணக்கானவர்கள் தங்களுடைய ஆதங்கங்களை சமூக ஊடகங்கள் மூலமாக செலுத்திக்கொண்டு இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் இந்த இந்த சம்பவத்தை பார்த்து வருத்தப்படுகிறார்கள்.   அப்படியானால் அரசு ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். அவ்வளவு இயற்கை ஆர்வலர்கள் இந்த இந்த செய்திக்குப் இந்த இந்த யானைகளுக்கு பின்னால் காட்டுயிர்களுக்கு பின்னால் இருக்கிறார்கள். அவர்களுடைய எண்ணம் இவற்றை காப்பாற்ற வேண்டும் என்பதே.

இயற்கை ஆர்வலர்கள் இந்த பகுதியினுடைய சுற்றுலாவை கட்டுப்படுத்த குரல் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். இப்போதாவது அந்த குரலை அதிகப்படுத்த வேண்டும். நீதிமன்றங்கள் சில நேரத்தில் தலையிட்டு தான் காட்டுயிர்கள் வாழும் பாதைகளை எல்லாம் இரவு நேரப் போக்குவரத்தையாவது தடை செய்திருக்கின்றன.

இது Human Centric World அல்ல, Bio Centric World உயிர்களின் உலகம் நாமும் ஒரு அங்கம். நம் பிள்ளைகள் நலமாக வாழ வேண்டும் என்றால் எல்லா உயிரோடும் தான் வாழ வேண்டும் என்பது தெரியும். ஆனால் வாழ்வுக்காக யாசிக்கும் பேருயிர்கள் என்று ஒரு தலைப்பு எடுத்துள்ளார்கள். யானை நம்மிடம் யாசகம் பெறுகிறதா, யானையிடம் இருந்துதான் நாம் யாசகம் பெற வேண்டும். ஏன் என்று கேட்டால் அவை கானகத்தை உருவாக்கின்றன, கானகத்தை நம்பி நம் வாழ்க்கை இருக்கிறது. மனிதர்கள் வல்லமையானவர்களாக இருக்கலாம். அந்த வல்லமையில் யானைகள் அழிந்து போகலாம். ஆனால் யானைகள் அழிந்து போனால் அந்த அழிவு நம் தலைமுறையினா் அழிவு என்பதை புரிந்து கொண்டு தான் இது மாதிரி யானைகளை காக்க யானைகளுக்கு எதிரான எல்லா நிகழ்வுகளையும் தடுக்கிற ஒரு புதிய அறிவார்ந்த சமூகமாக ஒட்டுமொத்த சமூகம் மாற வேண்டும். அந்த சமூக மாற்றம் தான் எல்லா  கொள்கைகளையும் மாற்றும். மாற்றகூடிய அளவில் நாம் நம்முடைய சிந்தனைகள், நம்முடைய செயல்பாடுகள் திரும்பும், திரும்ப வேண்டும். இந்த பூவுலகின் நண்பர்கள்  அமைப்பு தமிழகத்தில் அக்கறையோடு அவர்கள் ஆற்றுகிற, களப்பணியை நாம் அனைவரும் அறிவோம். அவர்களுடைய அழைப்பின் பேரில் இந்த குறுகிய காலத்தில் என்னுடைய உணர்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள கிடைத்த, இந்த வாய்ப்புக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்.

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments