எப்பொழுது தணியும் இந்தத் தீ ?

 

2020-ஆம் ஆண்டு கொரோனா ஏற்படுத்திய ஊரடங்கிற்கு பின், காற்று மாசு கணிசமாகக் குறைந்திருக்கிறது, கரியமில உமிழ்வு கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது, தூரத்தில் இருந்து பார்த்தாலே மலைகள் தெரிகிறது, சுற்றுச்சூழல் பற்றிய புரிதல் மனிதர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று ஒரு பக்கம் நாம் பேசி முடிப்பதற்குள், 2021-ஆம் ஆண்டு துவங்கி  இன்னும் ஒரு மாதம் கூட நிறைவடையாத சூழலில், தமிழகத்தின் மேற்குப் பகுதியில், தற்போது வரை மட்டுமே மனித – யானை  மோதல் காரணமாக மூன்று யானைகள் உயிரிழந்துள்ளன.  இதன் உச்சபட்சமான நிகழ்வாக தான், நீலகிரி மாவட்டம் மசினகுடியை அடுத்துள்ள வனப்பகுதியில், கேளிக்கை விடுதியை நெருங்கிய யானையின் தலையில் தீயை வைத்து, இது தான் சுற்றுச்சூழல் பற்றிய எங்கள் அறிவும், புரிதலும் என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது மனித இனம்.

 

நம்முடைய மூதாதையர்கள் இயற்கையோடு இணக்கமாக வாழ்ந்தனர் என்று கூறுகின்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்களை நம்பாதீர்கள். தொழிற்புரட்சிக்கு முன்பே பெரும்பாலான தாவர இனங்களையும் விலங்கு இனங்களையும் அழித்தப் ஹோமோ சேப்பியன்சுக்கு இருக்கிறது என்கிறார் வரலாற்றாளர் யுவால் நோவா ஹராரி.

 

தீவைப்புத் தொடர்பாக நீலகிரியில் உள்ள மாவநல்லாப் பகுதியைச் சேர்ந்த ரேமண்ட் மற்றும் பிரசாந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்ட ரையன் என்பவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர். மூன்று பேர் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றியக் காணொளி சமூக வலைதளத்தில் தீவிரமாக பரவத் துவங்கியதை அடுத்துக் கிளம்பிய கடுமையான கண்டனங்கள் கூட இத்தகைய நடவடிக்கை எடுக்க ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம்.

 

சரி, எப்பொழுது தான் தீரும் இந்த மனித – யானை மோதல்?

 

எப்பொழுது தீரும் இந்த மோதல் என்று தெரிந்துக் கொள்வதற்கு முன், எப்பொழுது துவங்கியது இந்த மோதல் என்று தெரிந்துக் கொள்வதும் அவசியம். இலக்கியச் சுவைக்காக ஏற்றப்படும் ‘புனித பிம்பம்’ போல, இயற்கையும் இன்றுப் பலநேரங்களில் புனிதப்படுத்தப்படுகிறது. ‘நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை’, ‘நம் முன்னோர்கள் இயற்கையை போற்றி பாதுகாத்தனர்’ என்று எழும் குரல்களை நாம் பரிசீலிப்பதற்கு முன், மனித குலத்தின் சுருக்கமான வரலாற்றை ‘சேபியன்ஸ்’ என்னும் படைப்பின் மூலம் நமக்கு கொடுத்த யுவால் நோவா ஹராரி, அந்த புத்தகத்தில் எழுதியுள்ள இந்த வரிகளை படியுங்கள். “நம்முடைய மூதாதையர்கள் இயற்கையோடு இணக்கமாக வாழ்ந்தனர் என்று கூறுகின்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்களை நம்பாதீர்கள். தொழிற்புரட்சி நிகழ்வதற்கு நெடுங்காலத்திற்கு முன்பாகவே பெரும்பாலான தாவர இனங்களையும் விலங்கு இனங்களையும் அழிவு நிலைக்கு கொண்டு போய்ச் சேர்த்த பெருமை ஹோமோ சேபியன்சுக்கு இருந்தது. மனிதர்கள் சக்கரத்தையும், இரும்பு கருவிகளையும், எழுத்தையும் கண்டுபிடிப்பதற்கு நெடுங்காலம் முன்பாகவே ஹோமோ சேப்பியன்ஸ் இவ்வுலகின் பெரிய விலங்குகளில் ஐம்பது சதவீதத்தை பூண்டோடு அழித்து விட்டனர்” என்கிறார் ஹராரி.

 

இந்த வரிகளை நியாயப்படுத்தும் ஏராளமான சான்றுகளையும் தனதுப் புத்தகத்தில் அவர் குறிப்பிட்டிருப்பார். அவருடையக் கூற்று ‘மனித – யானை’ மோதலில் எவ்வளவு உண்மைத் தன்மை வாய்ந்தது என்பதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

 

 

மனிதயானை மோதல் பற்றிய ஓர் வரலாற்று பார்வை :

 

யானை ஒரு வனவிலங்கு. அட்டகாசம் செய்வதோ இல்லை, சொத்து சேர்ப்பதோ அதன் நோக்கம் அல்ல. யானை ஒரு நாளைக்கு சராசரியாக 18 மணி நேரம் உணவுத் தேடலில் ஈடுப்படும் விலங்கு. ஒரு நாளைக்கு சராசரியாக அதற்குத் தேவைப்படும் 100 முதல் 300 கிலோ-விற்கான உணவு தேடலிலும், 150 லிட்டருக்கான தண்ணீர் நாடலிலும், காட்டு வழித்தடத் தேவையிலும், மனிதன் தலையிடுவதையே நாம் மனித – யானை மோதல் என்கிறோம்.

 

இந்தத் தலையீடு சமீப காலமாக நடந்துவரும் ஒரு நிகழ்வு இல்லை. பெரியக் குழி தோண்டி, அதை இலைகளாலும் சருகுகளாலும் மறைத்து யானையைப் பிடிப்பதைப் பழைய எம்.ஜி.ஆர் மற்றும் ரஜினி படங்களில் பார்த்திருப்போம். யானையை பழக்குவதற்காக, இப்படி அதன் இயல்பு வாழ்க்கையில் மனிதன் தலையிடும் இந்தச் செயல் கூட சங்க இலக்கிய காலம் முதல் இருந்து வந்திருக்கிறது. இந்த முறையை குறிப்பதற்கு, சங்க இலக்கியங்களில் ‘பயம்பு’, ‘கொப்பம்’, அல்லது ‘பெருங்குழி’, ஆகிய சொற்களை பயன்படுத்தி இருப்பதாக ‘ஆதியில் யானைகள் இருந்தன’ என்ற புத்தகத்தில் சூழலியல் எழுத்தாளர் கோவை சதாசிவம் குறிப்பிடுகிறார். மேலும், யானைகளின் பூர்வக் காடுகளை அழித்து வேளாண் தொழிலுக்கு மக்கள் பயன்படுத்தியதையும், வேளாண் நிலத்தில் பயிர்களை மேய்ந்த யானைகளை விரட்டியதையும், இரக்கமற்று கொன்றதையும் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றப் பல பாடல்களில் காண முடிவதாக அவர் கூறுகிறார்.

 

சான்றாக, கேழ்வரகுக் காட்டில், முதுகில் தைத்த அம்போடு அலையும் ஒரு யானையைக் கபிலர் காட்சிப் படுத்துவதையும், மலைவாழ் மக்கள் தாங்கள் பயிரிட்ட கேழ்வரகு காட்டில் புகுந்த யானைகளை வில்லம்போடு துரத்துவதை சேந்தன் கூத்தனார் தமது பாடலில் விவரிப்பதையும் குறிப்பிடுகிறார். அதே நேரத்தில், சோற்றை ஆக்கி யானையின் வாயில் கவளம் கவளமாக உருட்டி ஊட்டினால் நிலமும், விளைச்சலும் மிச்சப்படும், அவைகளுக்கும் பலநாள் உணவு கிடைக்கும். ஆனால் யானையை விளைந்த நிலத்தில் விட்டால் அதன் வாய்க்குள் போவதைக் காட்டிலும் காலில் மிதியுண்டு வீணாவது அதிகம் என்பதை,

 

“நூறு செரு வாயினும் தமித்துப்புக்கு உணின்

வாய்புகு வதினினும் கால் பெரிது கெடுக்கும்”

 

என்று கவனப்படுத்தும் பிசிராந்தையார் பாடலையும் அந்த புத்தகத்தில் சுட்டிக் காட்டியிருப்பார். எனவே, ஏதோ இப்பொழுது தான் நாம் கொடூரக்காரர்களாக மாறியது போலவும், பழங்காலத்தில் பிற மிருகங்களிடம் மிகவும் அன்பானவர்களாக இருந்ததாகவும் சித்தரிப்பதில் முழு உடன்பாடு இருக்க முடியாது. அப்பொழுது வேல் கம்பும், ஈட்டியும் என்றால் இப்பொழுது மின் கம்பங்கள் என்பது தான் வேறுபாடு. இவ்வாறாக, சங்க காலத்தில் துவங்கிய மனித – யானை மோதல், சமீபத்தில் நடந்த மசினகுடி சம்பவம் வரை தொடர்கிறது.

 

“மசினகுடி பகுதியில் உள்ள யானைகளின் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள கட்டடங்கள் அகற்றிட உச்சநீதிமன்றம் குழு அமைத்துள்ளது. அதற்கான உத்தரவையும் பிறப்பித்துள்ளது. இருந்தும் ஆக்கிரமிப்புகள் தொடர்வதால் இது போன்ற வன விலங்குகளின் உயிர்ச் சேதங்கள் ஏற்படுகின்றன. எனவே மசினகுடி பகுதியைச் சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகள் குறித்து தெரிந்து கொள்வதற்கான சுற்றுலாத் தலமாக மாற்ற வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார் இயற்கை ஆர்வலர் மற்றும் செயற்பாட்டாளர் ஓசை காளிதாசன் அவர்கள்.

 

நடவடிக்கை எடுக்குமா அரசு?

தீருமா இந்த மனித – யானை மோதல்?

 

இந்தக் கேள்விகளைப் பற்றிச் சிந்திக்கும் போது சமீபத்தில் சூழலியல் செயற்பாட்டாளர் திரு.நித்யானந் ஜெயராமன் அவர்கள் ஒரு நேர்காணலில் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது. “இங்கு ஒரு நவீன தீண்டாமை இருக்கிறது. பல நேரங்களில், நம்மிடம் சூழலைப் பாதுகாக்க அறிவியலோ, தொழில்நுட்பமோ இல்லாமல் இல்லை. காரணம், ஒரு துளி கீழே சிந்தாமல் பாலையும், பெட்ரோலையும் எடுத்துச் செல்லும் லாரிகள், தண்ணீரை மட்டும் சாலை முழுவதும் இறைத்துச் செல்கிறது என்றால், நம்மிடம் தொழில்நுட்பம் இல்லாமல் இல்லை. ஆனால் தண்ணீருக்கு நம் அரசு கொடுக்கும் மதிப்பு அவ்வளவு தான் என்பதையே இது உணர்த்துகிறது” என்கிறார் அவர். அதுபோலத்தான் மற்ற சூழல்பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் அரசின் மெத்தனத்தைப் பார்க்கமுடிகிறது.

 

 

யானைமனித மோதலுக்கானச் சில தீர்வுகள் :

 

1) 2017-இல் Wildlife Trust of India (WTI) நடத்திய ஒரு ஆய்வில், இந்தியாவில் மொத்தம் 101 யானை வலசை பாதைகள் (Elephant Corridors) உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் 28 தென் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் தென்னிந்தியாவில் உள்ள 93% வலசை பாதைகளை யானைகள் தொடர்ந்து பயன்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் எந்த சமரசமுமின்றி பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும். 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது. நீலகிரி மலைப்பகுதியில் அத்துமீறிக் கட்டப்பட்டுள்ள 39 ஹோட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளை சீல் வைக்க வேண்டும் அல்லது இழுத்து மூட வேண்டும் என்பதே அந்த சிறப்பு வாய்ந்தத் தீர்ப்பு. இதைத் தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும்.

 

2) வலசைப்பாதைகளிலும் யானைகள் வாழும் காடுகளிலும் சாலைகள் உட்பட எந்த் வளர்ச்சித் திட்டங்களையும் (!) அரசு அனுமதிக்கக் கூடாது.

 

3) யானை ஒரு ஆதார விலங்கினம் (Keystone Species) என்ற அறிவியல் கூற்றை மாணவர்களிடமும், மக்களிடமும் பரவலாக கொண்டு சேர்க்கும் பொழுது தான் “எங்கோ அவதிக்குள்ளாகும் யானைகள் பற்றி நாம் ஏன் அக்கறை பட வேண்டும்?” என்று அனைவரும் புரிந்துக் கொள்வார்கள். ஆதார விலங்கினங்களை பற்றிய தேவையை உணர்ந்து பாடத்திட்டத்தில் முதன்மைப்படுத்த வேண்டும்.

 

4) குழந்தைகளை இயற்கை நடை, பறவைக் காணல், தாவரங்கள் அறிதல் ஆகிய செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டும். அப்படியாவது அடுத்த தலைமுறை குழந்தைகள் ஒரு கம்பெனியில் நேர்காணலுக்கு செல்லும்போது, உங்கள் பொழுதுபோக்கு (hobby) என்ன என்ற கேள்விக்கு – ‘தொலைகாட்சி பார்ப்பது’ என்பதை மறந்தும் சொல்லாமல், பறவைகள் காண்பது, இயற்கையை அறிந்துக் கொள்வது என்று சொல்லட்டும். ஏனெனில், நமக்கு பொறியியலாளர்களும், மருத்துவர்களும் மட்டுமல்லாமல் கானுயிர் ஆய்வாளர்களும், இயற்கை செயற்பாட்டாளர்களும் தேவை.

 

சுருக்கமாக சொல்லவேண்டுமானால், அக்காலத்தில் கவளம் கவளமாக சோறாக்கி யானைக்கும் தரும் அளவுக்கு யானைகளைப் பற்றிய புரிதல் இருந்தாலும், அந்தப் புரிதல் அவற்றை பாதுகாக்கும் நோக்கத்துடன் இல்லை. ஆனால் இன்று, மசினகுடி போன்ற சம்பவங்களுக்கு எழும் கண்டனங்களை பார்க்கும் போது, யானைகளை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு ஆங்காங்கே இருந்தாலும், யானைகளை பற்றிய புரிதல் குறைவாகவே இருக்கிறது. யானை என்னும் பேருயிரையும், சுற்றுச்சூழல் என்னும் அறிவியலையும் அரசாங்கமும், மக்களும், ஊடகங்களும் புரிந்துக் கொள்ளாத வரை ஓயாது இந்த மனித – யானை மோதல்.

 

–  சரவணன், விசை

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments