காட்டுயிர் மீதான மதத்தின் வன்முறை: கோவில் யானைகள்

யானைகளை கோவிலில் வைத்துப் பராமரிப்பதும் ஆண்டுக்கொரு முறை புத்துணர்வு முகாம்களுக்கு அனுப்பவதும் பண்டிகைகளில் ஊர்வலமாக அழைத்துவரப்படுவது குறித்தான விமர்சனங்களும் விவாதங்களும் பெருமளவில் இந்திய தமிழ்ச்சமூகத்தில் முன்னெடுக்கப்படவில்லை. காரணம், இந்திய தமிழ்ச்சமூகத்தின் பெரும்பாண்மையான இயற்கை/காட்டுயிர் ஆர்வலர்கள் இந்து மதத்தின் புனிதக்குறியீடான பசுமாட்டை காப்பதே தங்களது ஆகச்சிறந்த செயல்பாடாக கருதுவதாலும் கோவிலில் யானைகளை வளர்ப்பது கோவிலுக்கு பெருமை சேர்க்கும் குறியீடாக (அவர்களுக்கு) தெரிவதாலும் இப்பேருயிரின் இன்னல்கள் இச்சனாதன வைதீக இயற்கையார்வளர்களுக்கு ஒரு பொருட்டாகத் தெரிவதில்லை என்ற முடிவுக்கு நாம் வரவேண்டியுள்ளது.

யானைகளும் மனித நாகரீகமும்:

ஹரப்பா மற்றும் மொஹெஞ்சதாரோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதைமடிம முத்திரைகளில் எருது, பன்றி, கழுதை உருவங்களோடு யானைகளின் மீது கயிறு சுற்றியவாறு சில முத்திரைகளும் காணக்கிடைத்தன. இதன் மூலமாக, யானைகள் வேளாண் தேவைக்காகவோ பிற நோக்கிற்காவோ தொல் சமூகத்தினர் பழக்கப்படுத்த முனைந்துள்ளதாகத் தெரிகிறது. முன்னதாக, மம்மோத் என்றழைக்கப்படுகிற பேருருவ யானைககளை உணவுக்காக வேட்டையாடிய வேட்டைச்சமூக மக்கள், நாகரீக வளர்ச்சிப் பெற்ற சூழலில் பிற வேலைகளை செய்வதற்காக யானைகளை பழக்க முற்படுகிறார்கள். மனித நாகரிகத்தின் தொடக்கக் கட்டத்தில் மம்மோத் போன்ற பேருரு யானைகள் இந்நிலத்திலிருந்து அழிந்துபட்டிருந்தன.

சிந்து சமவெளி நாகரிகத்தில், மையப்படுத்தப்பட்ட அரசு உருவாகவில்லை என்பதும் தலைமை ஏற்பாடு ஏதும் இல்லை என்பது இங்கு ஈண்டு நோக்கத்தக்கது. மாறாக, பண்டைய நாகரீக வீழ்ச்சிக்கு பின்பாக, இனக்குழு சமூகத்தினர் பிற இனக்குழுவினரை அழித்தும் அடிமைப்படுத்தியும்  மையப்படுத்தப்பட்ட பேரரசை உருவாக்கிய காலகட்டத்தில் யானைகள், மன்னர்களின் போர்த் தேவைக்காகவும் பட்டத்து யானை வழக்கத்திற்காகவும் பழக்கப்படுத்தும் மரபு உருவாகிறது. தமிழகத்தை ஆண்ட மன்னர்களுக்கும் யானைகளுக்குமான உறவை பல சங்க இலக்கியப் பாடல்கள் பேசுகிறது. குறிப்பாக, போர்த்தேவைக்காக காட்டிலுள்ள தாய் யானையிடமிருந்து பிரித்துப் பிடித்துவரப்படுகிற குட்டி யானைகளை பழக்கப்படுத்துவது குறித்தான சான்றோன்றை புறநானூறு பாடல் ஒன்று உருக்கத்துடன் பதிவுசெய்கிறது.

கோவிலில் யானை வளர்ப்பு:

மன்னர்களின் போர் நடவடிக்கைகளுக்கும் ஊர்வலங்களுக்குமாக பழக்கப்படுத்தப்பட்டு வந்த காட்டு யானைகள் மன்னர்களின் சமயப் பற்றுதல்கள் காரணமாக அவர்கள் கட்டியெழுப்பிய கற்றளிகளில் இறையியல் சேவை செய்வதற்கும் விரிவிபடுத்தப்பட்டிருக்கலாம். குறிப்பாக சொல்லப்போனால், கோவிலில் யானைகளை பராமரிக்கும் மரபானது பக்தி இயக்கத்தின் உச்ச கட்ட காலமான எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்ச்சமூகத்திற்கு அறிமுகமாகியிருக்க வேண்டும். ஏனெனில், இக்காலத்திலேயே கோவிலை மையமாகக் கொண்ட அதிகார மையங்கள் பார்ப்பனர்களால் தமிழகமெங்கிலும் பரவலாக்கப்பட்டன. முன்னதாக பல்லவர்களின் கற்றளி கட்டுமானங்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்த சோழ, பாண்டிய மன்னர்கள், பார்ப்பனர்களின் கொண்டுள்ள நெருங்கிய உறவின் காரணமாக  தங்கள் நிலப்பரப்பில் ஏராளமான பெரும் கற்றளிகளை கட்ட முனைந்தனர். நிலத்தின் மீதான ஆளுமையை தக்கவைத்துள்ளவும் உழைப்பில் ஈடுபடாமால்  சமூகத்தின் அரசியல்-பொருளாதார-பண்பாட்டு மேலாண்மையை பேணவும் தொடர்ந்து பிரமம்தேய நிலங்களை மன்னர்களிடமிருந்து  இலவசமாகப் பெறவும் பார்ப்பனர்களுக்கு கோவில் என்ற கட்டுமானம் அவசியப்பட்டது. மறுபக்கமோ, பார்ப்பன அடிமைகளாக தங்களை அறிவிக்காமல் அறிவித்துக்கொண்ட தமிழக மன்னர்களும் பெருஞ்செல்வத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களின் உழைப்பையும் உறிஞ்சிக் கோவில் என்கிற அதிகார மையங்ககளை தன்முனைப்புடன் கட்டியெழுப்பினார்கள். இவ்வாறாக உழைக்கும் மக்களின் மீதான சுரண்டலைத் தக்கவைத்துக்கொள்ள சமூக அமைப்பை மேல்  கீழாக பிளந்த பார்ப்பனக் கருத்தியலும் அதன் பொருண்மை வடிவாக கோவில் கட்டுமானங்களும் தமிழகமெங்கும் புற்றீசலாகப் பெருக அதில் காட்டுயிர்களின் பேருயிரான யானைகளை சேவை செய்ய வைக்கும் போக்கு இறுக்கம் பெறுகிறது. இது வேறு எந்த மதங்களிடமும் நடைமுறையில் இல்லாத மரபாகும். ஆறாம் நூற்றாண்டில் இறுதியில் வாதாபியின் வழியாக தமிழகத்தில் நுழைந்த பிள்ளையார் வழிபாடாகட்டும், இந்திரனின் வாகனமாக உருவகப்படுத்தப்பட்ட வெள்ளையானை ஆகட்டும் யானை குறித்தான பல்வேறு புராண கதைகளும் உருவங்களும் இந்து மத மரபில் தொடர்ச்சியாக காணமுடிகிறது. பிள்ளையார் ஊர்வலங்கள் பெரு விழாவாக கொண்டாடப்படுகிற இன்றைய சூழலில், பிள்ளையாருக்கு பாலும் நெய்யுமாக ஊத்தி வழிபாடு செய்யும் வேளையில், காட்டில் வாழத் தகவமைந்துள்ள யானைகள், வீட்டு விலங்கு போல தனித்து கட்டிவைத்து வளர்த்தால் அதற்கேற்படும் இன்னல்கள் குறித்து எந்த சமயவியலாளர்களும்/ஆத்திகர்களும் அக்கறை கொள்ளாதது வியப்பாக உள்ளது.

யானைகள்: (காடுகளில்)உயிர் வாழ்வும் (கோவிலில்)உயிர்ப்பற்ற வாழ்வும்

யானைகள் வெப்பமண்டலக்காடுகளில் வாழும் பேருயிராகும். உலகின், நிலவாழ் விலங்குகளின் யானைகளே மிகப்பெரியவை. ஆப்பிரிக்க யானைகளில் இரு இனங்கள், ஆசிய இன யானைகள் என மூன்று இன யானைகள் தற்போது உலகினில் வாழ்ந்துவருகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட ஏனைய இனங்கள் பரிணாமப் பாதையில் அழிந்துவிட்டன. இந்தியாவில், தமிழகத்தில் உள்ள யானைகள் ஆசிய யானைகளாகும். ஒப்பீட்டு அளவில் ஆப்பிரிக்க யானைகளை விட ஆசிய யானைகள் அளவிலும் எடையிலும் சிறியவை. நன்கு முதிர்ந்த ஆப்பிரிக்க யானைகள் ஏழாயிரம் முதல் எட்டாயிரம் கிலோ வரை வளரும். ஆசிய யானைகள் நான்காயிரம் முதல் ஐந்தாயிரம் கிலோ எடை கொண்டதாக இருக்கும். பொதுவாக, யானைகள் கூட்டமாக வாழும் பண்புடையவை. ஓர் யானைக்கூட்டதில் ஆண், பெண், குட்டிகள் என பத்து முதல் பதினைந்து எண்ணிக்கையிலான கூட்டமாகவாழ்கின்றன. இக்கூட்டத்திற்கு பெண் யானையொன்று தலைமை ஏற்கும். இச்சிறு கூட்டம் எல்லாம் ஒன்று சேர்ந்து இருநூற்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பெருங்கூட்டமாக வாழும் பண்புள்ளவையாக ஆப்பரிக்க யானைகள் உள்ளன. உணவுத் தேடி நாளொன்றுக்கு பத்து முதல் பதினைந்து கிலோ மீட்டர் வரை யானைகள் நடந்து திரிகின்றன. இவ்வாறாக காடுகளில் இயைந்து பொருந்தி வாழ்ந்து வருகின்ற யானைகளை இளம் குட்டிகளாக இருக்கும்பொழுதே அதன் குடும்பத்திடமிருந்து பிரித்துவரப்பட்டு  கோவிலில் வளர்ப்பு விலங்காக ஆக்கப்படுகிறது. அதன் இயல்பான கூட்டுக் குடும்ப வாழ்வுமுறை, பால் உணர்வு மற்றும் நடத்தைகள் கோவில் சுவர்களுக்குள் முடக்கப்பட்டு உயிர்ப்பற்ற பொம்மை உயிராக யானைகளை மாற்றுகின்றனர். நாளொன்றுக்கு பதினெட்டு மணிநேரத்திற்கு மேலாக பல மைல்களுக்கு அலைந்து திரிந்து உணவு உட்க்கொள்வதால் யானைகளின் உணவுச்சமநிலை இயல்பிலேயே பேணப்படுகிறது. மாறாக, கோவிலில் யானைகளைத் தேடி உணவு வழங்கப்படுவதாலும் அலைந்து திரிந்து நடப்பதற்கு வாய்ப்பற்று போவதாலும் கோவில் யானைகளின் எடை வழமைக்கு மாறாக அதிக எடையுள்ளதாக இருக்கின்றன. .உதாரணமாக, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும்  கள்ளழகர் கோவிலில் வளர்க்கப்படுகிற யானைகள் இயல்பை விட ஐநூறு கிலோ அளவுக்கு கூடுதலான எடை உள்ளமையால் பல்வேறுவிதமான சிக்கல்களை எதிர்கொள்கின்றன. நடைபயிற்சி, உணவுக்கட்டுப்பாடு என உடனடி சீர்திருத்தங்களில் ஆர்வம் செலுத்துகிற கோவில் நிர்வாகத்தினருக்கு காட்டில் வாழ்கிற யானைகளை காடுகளில் விட்டால் என்ன என்று யோசனை வர மறுக்கும் காரணம்தான் விளங்கவில்லை! பரிணாம வழியில் காட்டில் தகவமைந்த யானைகளை நகரங்களில் உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்துகிற  மூட வழக்கத்தை மதத்தின் பெயரால் நிகழ்த்தும் கொடுமையை என்னவென்று சொல்வது?

வடகலையும் தென்கலையும்:

இந்நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்துள்ளது என பராசக்தி படத்தில் சிவாஜி கணேசன் பேசும் வசனமொன்று படம் பார்த்தவர்களுக்கு நினைவிருக்கலாம். அதற்கோர் எடுத்துக்காட்டாக, 1918-19 ஆண்டில் விசித்திரமான வழக்கொன்று மெட்ராஸ் ராஜதானியையும் தாண்டி லண்டன் பிரசிடன்சி கவுன்சில் வரை சென்றது. காஞ்சிபுரத்து கோவில் யானைக்கு என்னவிதமான நாமக் குறியீடு இடவேண்டும் என்று இரு பார்ப்பன பிரிவினர்களிடையே ஏற்பட்ட மோதல் லண்டன் நீதிமன்றத்திற்குச் சென்றது. வழக்கே எள்ளி நகையாடவேண்டியதாக இருக்கும்வேளையில், இவ்வழக்கிற்கு வழங்கப்பட்டத் இறுதித்தீர்ப்போ அதைவிட நகைப்பிற்குரியதாக இருந்தது. அதாவது ஒரு மாதத்திற்கு வடகலை நாமமும் ஓர் மாதத்திற்கு தென்கலை நாமும் யானைக்கு இடலாம் என்று தீர்ப்பளித்தார்கள் மேதகு நீதிமான்கள். இவர்களின் பிடுங்கல் தாங்கமாட்டாமல் அடுத்த சில நாட்களிலே அக்கோவில் யானை சங்கிலியை அறுத்தெறிந்துவிட்டு ஓடியது தனிக்கதை.! வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த இவ்வழக்கு குறித்து தந்தை பெரியார் ஒரு மாநாட்டில் இவ்வாறு பேசுகிறார்.

“இதில் வடகலை நாமமாதென்கலை நாமமாஎன்ற சண்டை எவ்வளவு நாள் நடக்கிறது? 150 வருடங்களாக நடக்கின்றன. இன்னமும் அந்த வழக்கு முடியவில்லை. நமது ஊர்களில் வழக்கு என்றால் அது எப்பொழுதுமே வெள்ளிவிழாபொன்விழாவைர விழாநூற்றாண்டு விழாவை எல்லாம் முடித்து விடுவார்கள். வழக்கு போட்டவரும் இருக்கமாட்டார். வழக்கை விசாரித்தவரும் இருக்கமாட்டார். வழக்கை நடத்திய வழக்கறிஞர்கள் இருக்கமாட்டார்கள். ஆனால் வழக்கு மட்டும் இருக்கும். அதே மாதிரி காஞ்சிபுரம் யானைப் பிரச்சினை இருக்கிறது பாருங்கள்இது 150 வருடமாக இருக்கிறது. இதுவரையில் யானை,  10 யானை மாறிப்போய்விட்டது. ஆனால் அந்த வழக்கை நிறுத்தவே இல்லைவெள்ளைக்கார நீதிபதிக்குப் புரியவில்லை.

இப்பொழுதுதான் உச்ச நீதிமன்றம் என்றால் டில்லிக்குப் போகிறோம். இதற்கு முன்னால் பிரிவி கவுன்சில் என்ற வெள்ளைக்காரர்கள் அமைப்புதான் நீதிமன்றம். வெள்ளைக்கார நீதிபதிகள் House of Lords தான் பிரிவி கவுன்சில். இதில் வெள்ளைக்கார வழக்கறிஞர்கள் தான் இரண்டு கட்சிக்காரர்களுக்கும் வாதாடுவார்கள்.

வெள்ளைக்காரர்களுக்கு வடகலையும் தெரியாது. தென்கலையும் தெரியாது. நீதிபதி கேட்டார், ‘‘What is Vadakalai and Thenkalai. I Cant understand. சுருக்கமாக சொல்லுங்கள் என்று சொல்லுகின்றார். இவர்கள்அதில் இருக்கிறது. இதில் இருக்கிறது என்று எதை எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். வழக்கறிஞர்களுக்கு இந்த மாதிரி புத்திசாலித்தனம்தான் வேண்டும். வழக்கு வெற்றி பெறுவதற்கு. அவர் உடனே சொன்னார். ஓ மை லார்டு மிக சுருக்கமாகப் புரியும்படி சொல்லிவிடுகிறேன் என்று அப்படியாசொல்லுங்கள் என்று ஆங்கில நீதிபதியும் கேட்டார். These two fight between ‘Y’ and ‘U’ என்று சொன்னார் (சிரிப்பு) பாதம் வைத்த நாமம்.

ஏ.பி.சி.டி ஆகிய 26 எழுத்துகளில் அதாவது என்கிற எழுத்து பாதம் வைத்த நாமம். என்கிற எழுத்து பாதம் வைக்காத நாமம். இன்றைய வரையில் அந்த சண்டை முடியவில்லை. நீதிபதி வீராசாமி அண்மையில் தான்இறந்தார். 95வயது வரைக்கும் இருந்தார். தலைமை நீதிபதியாக இருந்தவர். அவரிடம் ஒருமுறை இந்த வழக்குவந்தது. அவர் ரொம்ப கெட்டிக்காரத்தனமாகச் சொன்னார். ஒருவாரம் இந்த நாமம் போடுங்கள். ஒருவாரம் அந்த நாமம் போடுங்கள் என்று சொன்னார்.

அப்படி சொல்லி கூட இந்த வழக்கு முடியவில்லை. இந்துக்களே ஒன்று சேருங்கள்ஒன்று சேருங்கள் என்று சொல்லுகின்றீர்கள். முதலில் இரண்டு நாமக்காரனையும் ஒன்று சேர்ப்பதை விட்டு விட்டு எங்களிடம்சண்டைக்கு வந்தால் என்ன அர்த்தம்?

கொடுமைக்கு முடிவுண்டா?

கோவிலிலும், பிற வணிக நோக்கத்திற்கும் யானைகளை வளர்ப்பதற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், மதுரை நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு பொறுப்புடன் பதிலுரைக்கவேண்டியக் கடமை அரசுக்கு உள்ளது. சுதந்திரமாக காடுகளில் சுற்றுத்திரியும் யானைகளை கோவில் அடைந்து வளர்க்கப்படும் மோசமான வழக்கத்திற்கு அரசு தடைவிதிக்கவேண்டும். தமிழக கோவில்களில் வளர்க்கப்படுகிற ஐம்பதிற்கும் மேற்பட்ட யானைகளை காட்டில் விடுவிக்கவேண்டும். அதேநேரம் தமிழகக் காடுகள், வேகமாக சுருக்கப்பட்டுவருவதால் அதிகரிக்கிற யானை-மனித மோதலும் நாம் இங்கு கருதத்தக்கது. காட்டிலுள்ள யானைகள் மட்டுமல்லாது புலிகள், சிறுத்தைகள் என அனைத்து விலங்கினங்களுக்கும் உறைவிடமான காடுகளை அரசு பாதுகாக்கவேண்டும். ஆனால் மக்களைக் காக்கவே நேரமில்லாத அரசுக்குக் காட்டுயிர்களைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் மேழுழும்ப வாய்ப்பிருக்குமா? தெரியவில்லை…

குறிப்புகள்:

அழியும் பேருயிர் யானைகள்- முகமது அலி & யோகானந்த்

http://www.bbc.co.uk/tamil/india/2012/08/120805_obeseelephant.shtml

http://thamizhoviya.blogspot.in/2010/07/blog-post_8987.html

 

 – அருண் நெடுஞ்செழியன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments