கூடங்குளத்தில் ரூ.50 ஆயிரம் கோடியில் 5, 6-வது அணு உலைகள்

கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள்

கூடங்குளத்தில் ரூ.50 ஆயிரம் கோடியில் 5, 6-வது அணு உலைகள்

கூடங்குளத்தில் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பில் 5 மற்றும் 6-வது அணுமின் உலைகளை அமைப்பதற்கான ஒப்பந்தம் முறைப்படி நேற்று முன்தினம் கையெழுத்தானது. இதேபோல் இந்தியாவில் புதிய இடங்களில் ரஷியாவின் சார்பில் அணுமின்நிலையங்களை அமைப்பது உள்ளிட்ட மேலும் 10 ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின.

கூடங்குளம் அணுமின்நிலையத்தில் ரஷியா அமைத்த முதலாவது அணுஉலை 2013-ம் ஆண்டில் இருந்தும், 2-வது அணுஉலை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இருந்தும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தலா ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 3, 4-வது அணுஉலைகளை அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இந்த 2 உலைகளும் 2022-ம் ஆண்டில் இருந்து இயங்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூடங்குளத்தில் 5, 6-வது அணுமின் உலைகள் அமைக்கப்பட இருப்பது குறித்து இந்திய அணுமின்சக்தி கழகத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான எஸ்.கே.சர்மா நிருபர்களிடம் கூறியதாவது: இந்த இரு மின் உலை திட்டங்களும் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பில் நிறைவேற்றப்படும். ரஷிய அணுமின்சக்தி கழகத்தின் ஒரு பிரிவான ஆட்டம்ஸ்டிராய் எக்ஸ்போர்ட் நிறுவனம் இவற்றின் கட்டுமான பணிகளில் ஈடுபடும். 5-வது அணுமின் உலை அடுத்த 66 மாதங்களில் நிறுவப்படும். 6-வது உலை அமைக்க மேலும் 6 மாதங்கள் ஆகும்.

இந்த திட்டம் 70-க்கு 30 என்னும் விகிதப்படி கடன்-பங்கு தொகை மூலம் நிறைவேற்றப்படும். இதில் பங்கு தொகையை இந்திய அணுமின் சக்தி கழகமோ அல்லது மத்திய அரசோ வழங்கும். இந்த 2 மின்உலைகளை அமைப்பதற்கும் ரஷியா, இந்தியாவுக்கு 4.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.28,320 கோடி) கடனாக அளிக்கும். ரஷியாவின் தற்போதைய அதிநவீன தொழில்நுட்பம் இவற்றில் பயன்படுத்தப்படும்.