குடி கெடுக்கிற பிரதமரும் கூடங்குளத்தில் புதிய அணு உலைகளுக்கான ஒப்பந்தமும்

1

 வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு  மோடி  கிளம்பியபோது,இந்த முறை எத்தனை குடி கெடுக்கிற ஒப்பந்தத்தை போட்டு வரப்போகிறாரோ என்ற பேச்சு முகநூலில் எழுந்தன.இந்த பேச்சை உண்மையாக்கிகுற விதமாக மோடியின் ரஷ்யப் பயணத்தில் கூடங்குளத்தில் புதிதாக 5 ஆவது 6 ஆவது அணு உலைகளை கட்டுவதற்கான ஒப்பந்தத்தில் ரஷ்ய அதிபருடன் மோடி அரசு  கையெழுத்திட்டுள்ளது.
 நாட்டு மக்களின் குடி கெடுக்கிற திட்டத்தை கொண்டுவருவதில்   மற்ற பிரதமர்களையெல்லாம் மூன்றே ஆண்டுகளில் பின்னுக்கு தள்ளிவருகிறார் மோடி.தனது தலைமையிலான பாஜக  ஆட்சியின் மூன்றாம் ஆண்டு ஆட்சி நிறைவுக் கொண்டாட்டத்தை துவக்கிய கையோடு இறைச்சிக்காக மாடு ஒட்டகத்தை கொல்வதற்கு தடைச் சட்டம் கொண்டு வந்து,நாட்டு மக்களின் உணவுப் பழக்கத்தின் மீது பண்பாட்டு போர் தொடுத்துவிட்டு,ஜெர்மனியில் தனது நிகழ்ச்சி நிரலுக்கு இடையில்,இந்திய நடிகையுடனான சந்திப்பை முடித்த கையோடு ரஷ்யாவிற்கு சென்று, அந்நாடு அதிபரிடம் நாட்டின் தற்சார்பு ஆற்றல் கொள்கையையும் நாட்டு மக்களின் பாதுகாப்பையும் அடகு வைக்கிற வகையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மோடியின் செயல்பாடுகள்  ரோமின் நீரோ மன்னனையே வெக்கி தலைகுனிய வைக்கும் வகையில் அல்லவா உள்ளது!
நவீன கால லூயி போனாபோர்டான அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தற்காப்புவாத கொள்கைப் போக்கால் எங்கே உலக அரங்கில் தனிமை பட்டுவிடுவோமோ என்ற கருத்தை காங்கிரஸ் மற்றும் இதர  லிபரல் அறிவுஜீவிகள் முன்வைத்து வருகிற நிலையில்,அமெரிக்காவுடனான சிவில் பயன்பாட்டிற்கான அணு உலை ஒப்பந்தங்கள் இன்னும் நடைமுறைக்கு வராத சூழலில்,ரஷ்யாவுடனான இந்த ஒப்பந்ததிற்கும்  கையெழுத்திட்டுள்ளது மோடி அரசு.
 உலகரங்கில்,அமெரிக்காவின் ஒற்றை அதிகார மையம் தகர்ந்து பல்முனை  அதிகார மையங்கள்  எழுந்து வருகிற நிலையில் ,குறிப்பாக ஒரே மண்டலம் ஒரே சாலை நகர்வின் மூலமாக சீன முகாம் பலம் பெற முயற்சித்து  வருகிற சூழலில்,சீனத்தின் இத்திட்டத்தில் பங்கேற்காமல்  இந்தியா புறக்கணித்தது.அதே நேரத்தில் சீனாவை  பெரிதும் ஆதரித்து நிற்கிற ரஷ்யாவிடம் குழைந்து  நிற்கிற மோடியின் வெளிநாட்டு கொள்கையை யாராலும் பாராட்டாமல் இருக்க இயலாது.
ரஷ்யாவிடம் ராணுவ ஆயுதங்கள்,ஹெலிகாப்ப்டர்கள் வாங்க ஒப்பந்தங்கள் போடுகிற மோடி அரசு,ரஷ்யாவின் மற்றொரு நெருங்கிய கூட்டாளியான பாகிஸ்தானின் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக அதை பயன்படுத்தப் போவதாகவும்,நாட்டின் பாதுகாப்பை உறுதிப் படுத்தப் போவதாகும் தேசியாவாதவும்  வெறிக் கூச்சல் போடுகிறது!
சென்ற ஆண்டின் இறுதியில் ஜப்பானுடன் அணு உலை ஒப்பந்தங்களை மோடி அரசு போட்டு வந்தது நினைவிருக்கலாம். புகிசிமா அணு உலை விபத்திற்கு பின்பாக, உள்நாட்டில் தேக்கம் பெற்றிருந்த அணு உலை சந்தையை வெளிநாடுகளுக்கு விரிவாக்குவதற்கு ஜப்பான் தீவிரம் காட்டி வந்தது.அதன் விளைவாக வியட்நாம், துருக்கியைத் தொடந்து இந்தியாவிற்கும் தனது அணு உலைகளை ஏற்றுமதி செய்வதற்கு ஜப்பான் ஒப்பந்தம் போட்டது.
அதேபோல அமெரிக்காவின் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனத்தின் ஆறு அணு உலைகளை ஆந்திர மாநிலம் கொவ்வாடாவில் நிறுவவும் ஒப்பந்தம் போட்டது.ஜப்பானின் டோஷிபா, அமெரிக்காவின் வெஸ்டிங்ஹவுஸ்,பிரான்சின்  அரிவா, ரஷ்யாவின் ரோசடாம் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் மூலதன விரிவாக்கத்திற்கும், சுரண்டலுக்கும் நாட்டைக் கொடுத்து  ஜப்பான், அமெரிக்கா, ரஷ்யா, பிரான்சு ஏகாதிபத்தியத்திடம் மண்டியிட்டுள்ளது மோடி அரசு. ஏகாதிபத்திய நாடுகளின் அணு உலை சந்தைக்கான நிலப்பரப்பாக மாற்றுவதில்  காங்கிரசுக்கும் பாஜகவிற்கு எந்த வேறுபாடும் இல்லை.ஆற்றல்துறையில் தற்சார்பை அழித்தொழிக்கிற அணுக்காலனிய யுகத்தில் காங்கிரசும் பாஜகவும் நாட்டை  தள்ளியுள்ளது.ஆனால் இவர்கள்தான் நாட்டின் தேசப் பக்த வேடம் பூண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
இந்தியாவின் மின்சாரத் தேவையில் மூன்று சதவீதத்தை மட்டுமே பூர்த்தி செய்கிற அணுமின் நிலையங்களை ஒட்டுமொத்த இந்தியாவிற்கான ஆற்றல் தேவையைப் பூர்த்தி செய்யும் சர்வரோக நிவாரணியாக ஆளும் அரசுகள் விதந்தோம்பி வருவது  நகைப்பிற்குரியதாகும்.அதோடு திரு ஹோமி பாபாவால் முன்வைக்கபட்ட மூன்று கட்ட அணு சக்தித் திட்டம் அப்பட்டமாகத் தோல்வயடைந்தும் கூட,இவ்வுண்மையை ஆளும் அரசுகள் ஒப்புக் கொள்ள மறுக்கிறது.மாறாக,மேலும் மேலும் மூர்க்கத்துடனேயே அணுவுலைகளைக் கட்டத் துடிக்கின்றன.இது  சனநாயக அமைப்பிற்குச் செய்யும் துரோகமாகம்,
2
சமகால வரலாற்றில்,அணுசக்திக்கு எதிராக இந்திய அளவிலும் உலகளவிலும் மிகப்பெரும் மக்கள் திரள் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் இடிந்தகரை மக்கள்.கூடன்களும் அணு உலைத் திட்டத்தை எதிர்த்து இம்மக்கள் முன்னெடுத்த தீரமிக்க போராட்டம்,பல நூறு நாட்களாக தொடர்ந்து வருகிறது. இத்திட்டத்திற்கு எதிராக போராடிய  மக்கள் மீது அரசுக்கு எதிரான யுத்தம் தொடுத்தல்,தேசத் துரோக வழக்குகள் என முன்னூறுக்கும் மேற்பட்ட வழக்குகளை போட்டு ஒடுக்கியது.உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலையும் மதிக்காமல் 248 வழக்குகளை மட்டுமே திரும்பப் பெற்றுள்ள.இன்னும் ஒரு லட்சம் மக்கள் மீது 132 வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளது.
துப்பாக்கிச் சூடுகளின் மூலமாகவும் வழக்குகள் போட்டும்  மக்கள் திரள் போரட்டத்தை ஒடுக்கி,முதலாளிய சக்திகளுக்கு எடுபிடிகளாகவே ஆளும் அரசுகள் இயங்கி வருகிறன.மக்கள் நலனைப் புறக்கணித்து  கூடன்குளத்தில் கட்டப்பட்ட  ஒன்று மற்றும் இரண்டாம் அலகு அணுவுலைகள் மூச்சித் திணறி திணறி இயங்கியும் முடங்கியும் வருகின்றன.
இதே நிலைதான் மூன்று மற்றும் நான்காம் அலகிலும்.இந்திய அணுசக்தித் துறையைக் சேர்ந்தவர்களும் ரஷ்ய அதிபரும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்துவருகின்றனர்.இச்சூழலில் கூடன்குளத்தில்,மேலும் ஐந்து மற்றும் ஆறாம் அணுவுலைகளைக் கட்டுவதற்கு ரஷ்யாவுடன் தற்போது இந்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.
முன்னதாக முதல் இரண்டு அணுவுலைகளில் இருந்து வந்துள்ள அணுவுலைக் கழிவுகளுக்கான தீர்வென்ன,இதுவரை கட்டியுள்ள அணுவுலைகளின் உபகரணங்களின் பாதுகாப்புத்தன்மை,உபகரணங்களின் தரம் குறித்த உத்தரவாதம் என்ன என்ற கேள்விகளுக்கு இந்த மக்கள் நல அரசிடம் இருந்து பதில் இல்லை.
இந்நிலையில், புதிதாக கட்டவுள்ள(ஐந்து,ஆறு) அணுவுலைகளுக்கான வடிவமைப்பை ரஷ்யா செய்யுமென்றும் அணுவுலைக்கான உபகரணங்களை இந்திய நிறுவனங்கள் உற்பத்தி செய்து வழங்கும் என சொல்லப்படுகிறது. அவ்வாறு இருந்தால்,இங்கு உற்பத்தி செய்யப்படுகிற உபகரணங்களின்  பாதுகாப்புத்தன்மையை யார் உறுதி செய்யப்போகிறார்கள்?உறுதி செய்தாலும் அரசின் சார்புநிலை இல்லாமல் இருக்குமா?போன்ற  பல கேள்விகள் நம்முன் எழுகின்றன.
அணுவுலை திட்டங்களின் போதும், தொடங்கிய பின்னும் ஏற்படுகிற தாமதங்கள்,உபகரணங்களின் தொடர்ந்து ஏற்படுகிற பழுதுகள்,கதிர் வீச்சு மற்றும் அணுக்கழிவு ஆபத்துகள் என அனைத்து வகையிலும் தோல்வியடைந்து ,மக்களுக்கு பேரச்சமாக  எழுந்து நிற்கிற இக்கொலைக் கள  அணுவுலைகளை கட்டுவதற்கும் விற்பதற்கும் ரஷ்ய அரசு ஏன் இவ்வளவு மூர்க்கமாக செயல்படுகிறது?அதன் பின்னணிதான் என்ன?
3
ரோசடோம் எனும் பூதம்:
2000 ஆம் ஆண்டின் மத்தியிலிருந்து ரஷ்யாவின் சிவில் மற்றும் இராணுவ அணுசக்தி திட்டங்களை கட்டுப்படுத்துகிற அமைப்பாக  ரோசடோம் உள்ளது.இந்நிறுவனம் ரஷ்ய அரசிற்கு  சொந்தமானது.சோவியத் ஒன்றியமாக இருந்தபோது 1941 ஆம் ஆண்டில் ரோசடோம் துவங்கப்பட்டது.சோவியத் தகர்ந்த பிற்பாடு, ரஷ்யா கூட்டமைவு அரசில் சேர்க்கப்பட்டது.பல பத்தாண்டுகளுக்கான முதலீடுகள்,பரந்த அளவில் அணுசக்தி தொடர்புடைய உள்கட்டுமானங்கள்,அதில் பணி செய்கிற லட்சக்கணக்கான தொழிலாளர்கள்  என அணுசக்தியில் முடி சூடா மன்னனாக திகழ்கிற ரோசடோம்,இன்றளவிலும் சிவில் மற்றும் ராணுவத்திற்கான அணுசக்தி பயன்பாட்டை பெரியளவில் வேறுபடுத்தவில்லை.
உலகிலேயே ஆபத்துமிக்கவையாக ரோசடோமின் அணுவுலைகள் திகழ்வது அதன் வரலாற்றில் நிரூபணம் ஆகிவருகிறது.தற்போது ரஷ்யாவில் ஒன்பது அணுவுலைகள் கட்டுமானப் பணியில் உள்ளது.இதில் மூன்று அணுவுலைகள் சோவியத் தகர்விற்கு முன்பாக 1991 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது.ஆறு  அணுவுலைகள் 2007 ஆம் ஆண்டிற்கு பிற்பாடு  துவங்கப்பட்டது.
சர்வதேச அளவில் அணுசக்தி வல்லமை மிக்க சக்தியாக நிறுவிக்கொள்வது,சர்வதேச அணுசக்தி திட்டங்களின் ஒப்பந்தப் புள்ளிகளில் பங்கேற்பது,கைவிடப்பட்ட அணு உலைத் திட்டங்களைக் கைகொள்வது போன்றவை அணுசக்தி தொடர்பான முதலீடுகளை ஈர்ப்பதற்கு ரோசடோமின் ஊடாக ரஷ்யா மேற்கொள்கிற பிரதான யுக்திகளாகும்.
ரோசடோமோடு அணுசக்தி ஒப்பந்தங்களை மேற்கொள்கிற நாடுகள் உலகின் மோசமான விபத்துக்களை அதன் வரலாறு தோறும் எதிர்கொண்டு வருகிறது.1986 ஆம் ஆண்டில் உக்ரைனில் ஏற்பட்ட செர்நோபில் அணுவுலை விபத்து இதற்கோர் உகந்த உதாரணம்.அரசியல்-சமூக-சூழலியல்-பொருளாதார  ரீதியாக பெரும் தாக்கத்தை செர்நோபில் விபத்து ஏற்படுத்தியது.
மெய்யாகவே மக்களின் நலனில் அக்கரையுள்ள அரசுகள் அணுசக்தி மீதான மோகத்தை இப்பெரு விபத்திற்கு பிற்பாடு நிறுத்தியிருக்கவேண்டும்,ஆனால் இவ்வரசுகளோ  சலுகைகள்,ஊக்குவிப்புகள் என மென்மேலும் அணுவுலை விரிவாக்கத்தை மேற்கொள்கின்றன.
பொருளாதார ரீதியிலும் சூழலியல் ரீதியல் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய செர்நோபில் விபத்திற்கு பிற்பாடும் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அணு உலைத் திட்டங்களை ரஷ்ய அரசு தீவிரப்படுத்தியது.குறிப்பாக ஆசியாவில் தங்களது அணுவுலைத் திட்டங்களை விற்பதில் அது தீவிர கவனம் செலுத்தியது என்றேக் கூறலாம்.மேற்குலகமோ,குறிப்பாக அமெரிக்கா,பிரான்சு போன்ற நாடுகள்  அணுசக்தி விவகாரத்தில்  ரஷ்யாவை  அப்படியே பிரதிபலித்தது எனச் சொல்லலாம்.அணுசக்தி மறுமலர்ச்சி யுகம் என்ற முழக்கத்தோடு அது அணுவுலை விரிவாக்கத் திட்டங்களை தீவிரமுடன் முன்னெடுத்தது.
இத்தகைய சூழலில்தான் கடந்த 2011 ஆம் ஆண்டில் சப்பானில் ஏற்பட்ட  புகுசிமா அணுவுலை விபத்தானது மிகப்பெரிய அளவில் மனித இழப்புகளையும்,சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தியது.புகுசிமா அணுவுலை வெடிப்பிற்கு பிற்பாடு அணுவுலை திட்டங்களின் மிகப் பெரும் போதாமைகளான பாதுகப்புத்தன்மை,உற்பத்தி செலவுகள் குறித்த விவாதங்களை தீவிரப்படுத்தின.இதன் விளைவாக சர்வதேச அளவல் அணு உலை சந்தை வீழ்ச்சியை நோக்கி சிறுதி காலத்திற்கு பயணப்பட்டது.
சர்வதேச அளவில் அணுசக்தி சந்தை வீழ்ச்சியடைந்து வந்தாலும்  இந்தியா,சீனா,தென் கொரியா போன்ற நாடுகள் மூர்க்கமான வகையில் அணுவுலை விரிவாக்கத்தை மேற்கொண்டு வருகின்றன.
4
மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை உறுதி செய்கிற  சேம நல அரசு என்ற பண்பையும் ,அரசின் கட்டுப்பாட்டில் பெரும் தொழில் நிறுவனங்களை வைத்ததுக் கொள்வது என்ற அரை சோசலிச பாணியிலான பண்பையும் மோடியின் தலைமையிலான பாஜக அரசு நொறுக்கி இடித்தி வருகிறது.இந்தியாவின் அறுபதாண்டுகால முதலாளித்துவ ஜனநாயக வரலாற்றில் முக்கிய பண்பு மாற்ற போக்கை நிகழ்த்தி வருகிற மோடி அரசானது ஏகாதிபத்திய நாடுகளின் நேரடியான வேட்டை காடாக நாட்டின் அனைத்து வளங்களையும் திறந்துவிட்டுள்ளது.மேக் இன் இந்தியா என கூவி கூவி நாட்டை அந்நிய ஏகாதிபத்திய மூலதனத்திற்கு அடகு வைத்து வருகிற இந்த நவீன தேச பக்தர்கள் மக்களின் வாழ்வாதரத்தை பணயமாக வைத்து நாட்டை நாசம் செய்கின்றனர்.
செல்லாக் காசு அறிவிப்பு என்ற பெயரிலான வங்கிகளின் மூலதன ஒன்றுகுவிப்பு,சேவை வரி மசோதா,தனியார்மயாகிற நீர் விநியோகம்,தனியார் மயமாகிற பாதுக்காப்புத் துறை,மாநில அதிகாரப் பறிப்பு,மரபீனி மாற்று பயிர் அனுமதி என மோடி அரசின் நடவடிக்கை பன்னாட்டு நிறுவனங்களுக்கான நலன் பேணுகிற அரசாக உள்ளது.அதன் ஒரு பகுதியே தற்போதைய புதிய அணு உலைகளுக்கான ஒப்பந்தம்.
நாட்டை ஏகாதிபத்திய சக்திகளுக்கு அடகு வைக்கிற மோடி அரசுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைவது காலத்தின் தேவையாக உள்ளது.
– அருண் நெடுஞ்செழியன்