ஆகஸ்ட் 6 ஹிரோஷிமா தினம்: அணு உலை பாதுகாப்பு – கல்பாக்கம்

ஆகஸ்ட் 6 ஹிரோஷிமா தினம்: அணு உலை பாதுகாப்பு – கல்பாக்கம்

சமீபத்தில் நிகழ்ந்த, சென்னை அணுமின்நிலையப் பொறியாளர் திரு. பார்த்திபன் அவர்களின் மரணம் சர்ச்சைக்குரியதாகி உள்ளதுடன் பல சந்தேகங்களையும் அபாய எச்சரிக்கைகளையும் உருவாக்கியுள்ளது. சென்னை அணுமின்நிலையம் 1 இல் ஏற்பட்ட கனநீர் கசிவு காரணமாக இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் எனச் சொல்வதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. முதலில் இது தொடர்பாக தொழிற்சங்க நிர்வாகத்திற்கு எழுதிய கடிதத்தின் (19.05.2017) சுருக்கம்:

  1. சமீபத்தில் கனநீர் கசிவு பணியாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது நல்ல விஷயம் இல்லை.
  2. பல வருடங்களாக அணுஉலையின் (Reactor Building)காற்றோட்டம் (Ventilation) முறையாக இல்லை. குறிப்பாக அணுஉலை நிறுத்தப்பட்டு, பராமரிப்புப் பணிகள் நடைபெற வேண்டும் எனத் தொழிற்சங்கங்கள் பல முறை நிர்வாகத்திற்கு எழுதியும், அது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த முறை (9.5.2017) நடந்த கனநீர் கசிவு நடந்த சம்பவத்தில் இது தெள்ளத் தெளிவாக தெரிய வந்துள்ளது.
  3. முன்னர், சுகாதாரத்துறை அதிகாரிகள் அணுசக்தித் துறையின் வசம் இருந்து வந்தபோது ஒப்பீட்டளவில் ஓரளவு சுதந்திரத்தன்மையுடன் செயல்பட முடிந்தது. ஆனால் தற்போது அவர்கள், NPCIL வசம் இருப்பதால், அவர்கள் தலைமையின் கீழ் செயல்படுவதால் அவர்களால் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல், பிரச்சனை இருப்பது தெரிந்தும் மௌனமாக இருக்கத்தான் முடிகிறது.
  4. சமீபத்தில் கதிர்வீச்சுப் பணியின்போது அணிந்துகொள்ளும் உடை, (VP SUIT) குறைபாடுகளுடன் உள்ளது என தெரியவந்துள்ளது. அதில் காற்று வரும் பாதை முறையாகச் செயல்படுவதில்லை. ஆக, அது VP SUIT ஆ அல்லது கொள்ளும் உடையா (KILLING SUIT) எனத் தொழிற்சங்கம் பகிரங்கமாக தனது கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளது.
  5. பணியின்போது கடைப்பிடிக்கவேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் உரிய முறையில் கடைப்பிடிக்கமுடியாமல் போவதற்கு நிர்வாகத் தரப்பில் உள்ள மத்திய தர அதிகாரிகளின் போக்கே காரணம் என்றும், குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலை முடிந்தால் சரி எனும் மனப்போக்கே இதற்கு காரணம். இங்கு பணியாளர்களின் பாதுகாப்பு புறம் தள்ளப்படுகிறது. வளர்ச்சி என்பதோடு பாதுகாப்பு என்பதும் உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே பணியாளர்கள் மனநிறைவுடன், ஓய்வின்றி பணிபுரிய முடியும்.
  6. அணுஉலை வளாகத்தில் FAC (FIRST AID CENTRE) முதலுதவி மையத்தில் உரிய சிகிச்சை உபகரணங்கள், மருந்துகள் இல்லாமல் இருப்பது பல முறை சுட்டிக்காட்டப்பட்டும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
  7. நிர்வாகத்தின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பு விதிமுறைகளை உரிய முறையில் கடைபிடிக்கவும் தொழிற்சங்கங்கள் துணை நிற்கும் என உறுதியளிக்கிறோம்.

திரு. பார்த்திபன் இறப்பும், விதிமீறல்களும்

9.5.17 பகல், 1:45 மணிக்கு 3 டன் கனநீர்கசிவு, சென்னை அணுமின்நிலையம் 1-இல் பராமரிப்புப் பணியின்போது ஏற்பட்டது. ஏன் என இதுவரை முறையாக விளக்கப்படவில்லை. முதல் ஷிஃப்ட் பணியின்போது (காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை) இது நடக்கிறது. இரண்டாவது ஷிஃப்ட் பணியின்போது (பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை) கனநீர் கசிவு காரணமாக காற்றில் உள்ள கதிர்வீச்சின் அளவு 4003 DAC/hr என இருந்தது. அதுவும் Remote Sample இல். அதாவது, சம்பவ இடத்தில் இல்லது தொலைவில் உள்ள இன்னொரு இடத்தில் அளந்து அதன் மூலம் சம்பவ இடத்தில் கதிர்வீச்சு எந்த அளவிற்கு இருக்கும் என தோராயமாக முடிவெடுப்பது. பொதுவாக Remote Sample  அளவு மூலம் சம்பவ இடத்தில் கதிர் வீச்சை அளக்கும்போது கிடைக்கும் மதிப்பைவிட 5 மடங்கு கதிர்வீச்சு அதிகமாக இருந்துள்ளது என்பதே சென்னை அணுமின் நிலையத்தின் கடந்தகால வரலாறு.

விதிமுறை மீறல்கள்:

  1. கதிர்வீச்சின் அளவு வெளிப்படையாகத் தெரியப்படுத்த வேண்டும் என விதிமுறைகள் இருந்தும் அது (DISPLAY) செய்யப்படவில்லை.

2. கதிர்வீச்சின் அளவு 1000 DAC/hr என இருந்தாலே அவசரநிலை (PLANT EMERGENCY) பிரகடனப்படுத்த
வேண்டும் என்பது TECHNICAL SPECIFICATION விதி.

இவை இரண்டும் மீறப்பட்டுள்ளன நிர்வாகம் விளக்க முன்வருமா? மாறாக தொழிற்சங்கத்தினரை மிரட்டுவதும், பழி வாங்க நினைப்பதும் வேதனையான விஷயம்.

திரு. பார்த்திபனைப் பொறுத்தவரையில், அவர் அணிந்த VP SUIT உடை குறைபாட்டுடன் உள்ளதென நிர்வாகத்திடம் தொழிற்சங்கத்தினர் தெளிவாக எழுதியுள்ளனர். மேலும் அங்குள்ள காற்றோட்டம் (VENTILATION) முறையாக இல்லை என்பதை 9.5.2017 இல் நடந்த சம்பவத்தைத் தொழிற்சங்கத்தினர் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளனர். கதிர்வீச்சின் அளவு மிகவும் அதிகமாக இருந்ததால், அதுவும் அவரது மருத்துவ பிரச்னைக்குக் காரணமாக இருக்கலாம். அவர் பணியில் ஈடுபடுவதற்கு முன், பின் என அவரது உடல்நிலையில் பெருத்த வேறுபாடு இருந்துள்ளது. பணிக்குப் பிறகே அவரது உடல்நிலை மோசமாகியுள்ளது என்றும், இதுபோன்று அவருக்கு முன்பு நிகந்ததில்லை என்பதிலிருந்தும், கதிவீச்சு அதிகம் உள்ள இடத்தில் அவர் வேலை செய்தது அது அவரது இறப்பிற்குக் காரணமாக நிச்சயம் இருந்திருக்கலாம்.

இரண்டாவது ஷிஃப்ட் 4003 DAC /hr மறுநாள் முதல் ஷிஃப்ட் 1734 DAC/hr
மூன்றாவது ஷிஃப்ட் 1850 DAC/hr மறுநாள் இரண்டாவது ஷிஃப்ட் 524 DAC/hr

 

இதிலிருந்து பிரச்சனையின் வீரியத்தை எளிதில் கணிக்க முடியும். கதிர்வீச்சுப் பணியின்போது அணியப்படும் கவச உடையும் (VENTILATED PLASTIC SUIT) கொடுக்கும் பாதுகாப்பும் முழுமையானது அல்ல என்பது தெளிவாக உள்ளபோது ஏன் அவருக்கு கதிர்வீச்சால் இருந்திருக்கக்கூடாது?

பொதுமக்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லை என நிர்வாகம் கூறிவருகிறது. ஆனால் வெளியேறும் கதிர்வீச்சின் அளவு 271 curie என அணுசக்தி ஒழுங்குக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறையில் இருக்கையில் 9.5.2017 மற்றும் 10.05.2017 இல் 485.97, 391.96 curie என உள்ளது. நிர்வாகம் இதை மறுக்க முடியுமா?

ஆக, பாதுகாப்பை உறுதிப்படுத்தி மக்களின், பணியாளர்களின் சுகாதாரத்தை மேம்படுத்த இந்நாளில் நிர்வாகம் முன்வருமா?

தாராபூர் அணுமின் நிலையம் 3,4 PRESSURE TUBE பிரச்சனையின் காரணமாக (இதே பிரச்சனைதான் கல்பாக்கத்திலும், குஜராத்திலும் உள்ள கக்ரபார் அணுமின் நிலையத்திலும் உள்ளது) மூடப்பட்டுள்ளது. ஆக, அணுமின் நிலையப் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசும், அணுசக்தி நிர்வாகமும் முன்வருமா?

 

  • மருத்துவர் வீ. புகழேந்தி