ஐம்பூதம்–கருத்தரங்கம்.
ஐம்பூதம்–கருத்தரங்கம்.

'மண் திணிந்த நிலனும்,
நிலம் ஏந்திய விசும்பும்,
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்,
தீ முரணிய நீரும், என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போல... என்கிறது புறநானூறு.
காற்றும் இனிது.தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது.
ஞாயிறு நன்று;திங்களும் நன்று.வானத்துச் சுடர்களெல்லாம்
மிக இனியன ……..என்றான் பாரதி.
ஐம்பூதங்களின் அடிப்படையில் அமைந்தது வாழ்வு என்பதை தெளிந்து உணர்ந்திருந்தனர் நமது முதுமக்கள். உலகின் அனைத்து பாரம்பரிய மருத்துவத்தின் அடிப்படை இந்த ஐம்பூதங்களும்தான் என்கின்றன பல்வேறு நாகரீங்களைச் சேர்ந்த பழங்கால மருத்துவக்குறிப்புகள்.

தமிழ் தொன்ம வரலாற்றில் ஐம்பூதங்கள் குறித்த துல்லியமான புரிதல் இருந்ததை சங்க இலக்கியம் முதல் பாரதி வரை அறிய முடியும். இன்று அவை எந்த அளவில் தமிழ்சூழலில் பயன்படுத்தப்படுகிறது? நவீனகால மாற்றங்கள் அவற்றின் மீது செலுத்தியிருக்கும் தாக்கங்கள் என்னென்ன?3000 வருட பாரம்பரியம் கொண்ட தமிழ் தொன்மத்தின் மகத்துவத்தை நினைவுப்படுத்துவதும் அதன் நவீன செயல்பாடுகளை குறித்து விவாதிப்பதுமே பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைக்கும் ஐம்பூதம் நிகழ்வின் நோக்கம்.

ஆதி தமிழ் பரப்பில் ஐம்பூதங்களின் நிலை தொடங்கி தற்கால தமிழ் சமூகத்தில் அவை எதிர்கொள்ளும் நெருக்கடிகள் வரை பேசவும் பகிரவும் விவாதிக்கவும் கலந்துரையாடவும் தமிழின் முக்கியமான ஆய்வாளர்களும் எழுத்தாளர்களும் ஐம்பூதம் நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

ஐந்து திணைகளை இப்படி வரலாற்று நோக்கிலும் சமகால பார்வையிலும் வைத்து விவாதித்த ஐந்திணை விழா, நீரின் மகத்துவம் சொன்ன முந்நீர் விழவு போன்ற நிகழ்வுகளை தொடர்ந்து பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைக்கும் ஐம்பூதம் நிகழ்வும் வரலாற்றுப் பார்வையுடன் புதிய யுகத்தில் ஐந்து பொருண்மைகளும் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும் அவற்றுக்கான தீர்வுகளையும் முன் வைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.தமிழ் தொன்மத்தை கொண்டாடும் இந்த விழாவில் வழமை போல இசைக்கும் உணவுக்கும் முக்கிய பங்கு உண்டு. புத்தக அரங்குகள், புகைப்பட கண்காட்சிகள் தவிர தமிழ் பழங்குடியினரின் கலை நிகழ்வுகளும் ஐம்பூத விழாவில் இடம்பெறும். சூழல் குறித்த 20 புத்தகங்களும் அன்றைய நிகழ்வில் வெளியிடப்படும். நிகழ்வின் இறுதியாக சிறுதானிய பாரம்பரிய உணவு திருவிழாவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

சுற்றுசூழல் பற்றிய கரிசனங்களை, மாற்று சிந்தனைகளை இயன்ற தளங்களில் பகிர்ந்து வரும் உங்களை போன்றவர்களும் உங்களது நிறுவனங்களும் இந்நிகழ்வை சாத்தியப்படுத்த எங்களோடு கைகோர்க்க வேண்டும் என்று விரும்புகிறோம். முழுநாள் நிகழ்வை நடத்துவதற்கான நிதி ஆதாரங்களை சேகரிக்க முடிந்த அளவு உதவுவதோடு உரிய தளங்களில் இந்த ஐம்பூத விழா பற்றி செய்திகளை பகிரவும் பரப்பவும் வேண்டுகிறோம்.

ஐந்திணை விழா, முந்நீர் விழவு போல ஐம்பூதமும் தமிழ் சூழலில் ஒரு முக்கிய நிகழ்வாக, வரலாற்று ஆவணமாக திகழும் என்று எதிர்பார்க்கிறோம். ஐம்பூதத்தின் வெற்றி எங்களுடையது மட்டுமல்ல, அது தமிழ் சமூகத்தின் வெற்றி. அந்த வெற்றியை சாத்தியப்படுத்தவும் அதில் பங்கு கொள்ளவும் உங்களை அழைக்கிறோம்

நன்றி
பூவுலகின் நண்பர்கள்