எங்களைப் பற்றி

பூவுலகின் நண்பர்கள் இயக்கம்

ஒரு சுயேச்சையான, மக்கள் நலன் அமைப்பு. சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது அறிவியல் அடிப்படையில் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை கையாள வலியுறுத்துவோம். உலகமயமாக்கம் மற்றும் ஆதிக்க சக்திகளின் சுரண்டலுக்கு எதிராக வளங்குன்றா வளர்ச்சி தொடர்பான அறிவு-விழிப்புணர்வை அதிகரிப்பது மற்றும் அனைத்து வர்க்க மக்களுக்கும் சுற்றுச்சூழல்நீதி கிடைக்கச் செய்வது இந்த இயக்கத்தின் அடிப்படை நோக்கம்.

பொருளாதார லாபங்களை மட்டுமே முன்வைக்கும் வளர்ச்சி , கட்டுமீறிய நிலச் சீரழிவு, கட்டுப்படுத்தப்படாத தொழில்மயமாக்கம் வெளியிடும் நச்சு போன்றவற்றால் தமிழகத்தின் சுற்றுச்சூழல் சீர்கெட்டு வருகிறது. வறுமை, எழுத்தறிவின்மை, ஏற்றத்தாழ்வு போன்ற சிக்கல்கள் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை மேலும் தீவிரமாக்குகின்றன.

இன்றைய சூழ்நிலையில் . . .

தமிழகம் சந்திக்கும் முக்கிய சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான ஒட்டுமொத்த புரிதலை உருவாக்க முயற்சிப்பது, அதற்கான தீர்வுகளை பரிந்துரை செய்வது; சுற்றுச்சூழலை புரிந்து கொள்ளுதல் மற்றும் விழிப்புணர்வை பெறுவதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது; இயற்கை ஆதாரங்கள் சந்தைப்படுத்தப்படும் சூழ்நிலையில், இயற்கை மற்றும் இயற்கை வளங்களை (நிலம், நீர் உள்ளிட்டவை) சூழலியல் பாதுகாப்பு பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு வளங்குன்றாத வகையில் பயன்படுத்துவதை உறுதிப்படுத்துவது மற்றும் பாதுகாக்கும் பண்பை ஊக்குவிப்பது; மாசுபடுத்துதல் மற்றும் வீண் நுகர்வை குறைக்க வலியுறுத்துவது; தமிழகத்தில் அழியும் ஆபத்தில் உள்ள உயிரினங்கள்-தாவரங்கள் மற்றும் உறைவிடங்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்துவது; இயற்கையை அழித்தல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுதலை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக மக்களிடம் கூருணர்வை ஏற்படுத்துவது ஆகியவை எங்களது விரிவான நோக்கங்கள்.

பல்லுயிரியத்துக்கு எதிரான ஆபத்துகள் அதிகரித்து வரும் நிலையில் . . .

இயற்கையுடன் மனிதர்கள் இசைந்து வாழ்வதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து, செயல்படுத்த ஊக்குவிப்பதன் மூலம் எதிர்காலத் தலைமுறைக்கு இயற்கை வளமும்,இயற்கை அற்புதங்களும் செழித்துள்ள உலகை விட்டுச்செல்ல வலியுறுத்துவோம்.

எங்கள் பணிகள்

சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் தகவல்களை ஆவணப்படுத்துதல்

பதிப்பித்தல்-பரப்புதல், சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பரிந்துரைத்தல்-ஆதரவை திரட்டுதல், தொடர்பியல் கருவிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி அளித்தல், சட்ட ஆலோசனை வழங்குதல், ஒத்துணர்வுள்ள அமைப்புகளுடன் இணைந்து செயல்படுதல் - இவை மூலம் அனைத்து வர்க்க மக்களிடமும் விழிப்புணர்வை உருவாக்குதல்.