முன்னோடி

தோழன் அசுரன் - சில நினைவுகள்...

"சொல்லுங்க தோழா" என்ற சிநேகபாவம் மிகுந்த அந்தக் குரல் இனிமேல் ஒலிக்காது.

அந்தக் குரல் அசுரன் என்று அழைக்கப்படும் தி. ஆனந்த ராம்குமார் உடையது.

அசுரன் என்று பெயரைக் கொண்டிருந்தாலும் சன்னமான குரல், மெலிந்த தேகம், தீர்க்கமான கண்களைக் கொண்ட அவர் சுற்றுச்சூழல் போராளி. மனித உரிமை ஆர்வலர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆதளவிளையைச் சேர்ந்த அசுரன் படித்தது கணினி பட்டயம். படிக்கும் காலத்தில் இருந்தே அவருக்கு தமிழ்உணர்வு அதிகம். குமரியை தமிழகத்துடன் இணைக்கக் காரணமாக இருந்த மார்ஷல் நேசமணியில் சிலைக்கு இளம் வயதிலேயே 1992ல் மாலையணிவித்துள்ளார். இளமைக்காலத்தில் அவர் நடத்திய 'தீவெட்டி'யை சிற்றிதழ் வாசகர்கள் நன்கு அறிவர்.

தமிழ் சிந்தனை உலகிலும்,அதன் வெளிப்பாடாக உள்ள சிற்றிதழ்-புத்தக துறையிலும் சுற்றுச்சூழல் அக்கறைகள் இரண்டாம்பட்சமாகவே பார்க்கப்பட்டு வந்தன. பல்வேறு பரிமாணங்களில் அந்த அக்கறைகளின் அவசியத்தை வலியுறுத்தி பேசியவர்களுள் அசுரன் முக்கியமானவர். பூவுலகின் நண்பர்கள் நெடுஞ்செழியனுடன் இணைந்து பல்வேறு பணிகள் புரிந்துள்ளார்.

2001ம் ஆண்டில் இருந்து 'புதிய கல்வி' இதழில் நான் எழுதத் தொடங்கினேன். அந்தக் காலத்தில்தான் அங்கு அசுரன் பணிக்குச் சேர்ந்திருந்தார். பாமயன் என்ற பெயரில் எழுதும் சுற்றுச்சூழல் எழுத்தாளரான மு. பாலசுப்பிரமணியன்தான், அதற்கு முன் புதியகல்வியின் நிர்வாகஆசிரியராக செயல்பட்டார். ஒரு கருத்தரங்கில் ஏற்பட்ட அறிமுகத்தைத் தொடர்ந்து 'புதிய கல்வி'யில் அசுரன் இணைந்தார். 'சிட்டு' என்ற அவரது புனைப்பெயர் ஆசிரியர் குழுவில் முதலில் இடம்பெற்றது.

பின்னர் அசுரனுக்கு இணை ஆசிரியர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. புதியகல்விக்கான கட்டுரைகளை காளீஸ்வரி தட்டச்சு செய்து தந்துவிடுவார். ஆனால், கட்டுரைகளை ஆசிரியர்களிடம் கேட்டு வாங்குவது, வடிவமைப்பு, அட்டை உருவாக்கம், இணைய வெளியீடு என பல்வேறு பணிகளை செய்து வந்தார். அதற்கு அவர் ஊதியமாகப் பெற்றது மிகச் சொற்பமான தொகைதான். சமூக அக்கறை காரணமாகவே இந்தப் பணியில் அவர் செயல்பட்டார்.

புதியகல்வியின் வீச்சை பரவலாக்கியதில் அசுரனின் பங்கு மிக முக்கியமானது. அதற்கு முன்னர் நல்ல வடிவத்தை பெறத் தொடங்கி இருந்த புதியகல்வி, பரவலான கவனம் பெற்றதற்கு முழுக்க முழுக்க அவரது உழைப்பே காரணம். சுற்றுச்சூழல் அக்கறைகள் கொண்ட பலரிடமும் தொடர்ந்து பேசி, எழுத வைத்துக் கொண்டிருந்தார். அச்சில் மட்டுமின்றி, இணையத்தில் புதியகல்வி வெளிவரக் காரணமாக இருந்தார். அத்துடன் நியு எட் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்துக்காக பல்வேறு பணிகளை செய்துள்ளார். நியாய வணிகம், தண்ணீர் தொடர்பான முக்கிய புத்தகங்களை உருவாக்கினார்

அசுரனின் நெருங்கிய நண்பரான மருத்துவர் ரமேஷ் கூடங்குளம் அணுமின்நிலையம் பற்றி நிலத்தியல் விளக்கங்களுடன் எழுதிய புத்தகம், பாரதிதாசனின் பசுமை சிந்தனை போன்ற புத்தக உருவாக்கங்களில் அசுரன் முக்கிய பங்காற்றினார்.

புதிய கல்வியில் தொடர்ந்து எழுதி வந்த நான், அடிக்கடி அசுரனிடம் கலந்துரையாடிக் கொண்டிருந்தேன். திண்டுக்கல்லில் அவர் இருந்த காலத்தில் புதிய கல்வி அலுவலகத்தில் சில முறை அவரை நேரில் சந்தித்துள்ளேன். மற்றபடி தொலைபேசி, கடிதம் வாயிலாகவே அனைத்து தொடர்புகளும். அவர் அங்கிருந்து விலகும் வரை தொடர்ச்சியாக புதியகல்வியில் எழுதினேன்.அந்தக் காலத்தில்தான் சுற்றுச்சூழல், காட்டுயிர், சூழலியல் சார்ந்து செயல்படும் பலரையும் நேர்காணல் கண்டு புதியகல்வியில் வெளியிட்டேன். பல மொழிபெயர்ப்பு நேர்காணல்களை செய்தேன். காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் எஸ்.யு. சரவணக்குமாருடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. அவரது தவளை ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டு ஒரு தொடரை இணைந்து எழுதினேன். காட்டுக்குள் ஒரு கேமராவின் பயணம் என்ற பெயரில் அந்தத் தொடர் வெளியானது. சூழலியல் எழுத்தாளர் சு. தியடோர் பாஸ்கரன் உட்பட பலர் அந்தத் தொடரைப் பாராட்டினர். சூழலியல் சார்ந்து அப்பொழுதுதான் முதன்முதலாகவும் தொடர்ச்சியாகவும் எழுதத் தொடங்கினேன். இன்று இதழ்கள் தொடங்கி புத்தகம் வரை எனது கவனம் சூழலியலில் குவிந்திருப்பதற்கு, அசுரன் அளித்த சுதந்திரம், ஊக்குவிப்பே பெரும் முதலீடு.

2004ம் ஆண்டு வரை புதியகல்வியில் அவர் பணிபுரிந்தார். அங்கிருந்து விலகி சிறிது காலம் மதுரையில் தங்கி பாரம்பரிய மருத்துவம் படிப்பு படித்தார். அசுரனின் தந்தை சிறீ. திருப்பதி ஆசான் புகழ்பெற்ற வர்ம மருத்துவர். மதுரை படிப்பு முடிந்த பின் தந்தையிடம் பயிற்சியைத் தொடரும் திட்டத்தைக் கொண்டிருந்தார். மதுரை காக்காத்தோப்பில் உள்ள அன்பு அச்சகத்தில் சில பணிகள் செய்தார். அங்கு தங்கியிருந்ததாகவும் ஞாபகம்.

அவர் நடத்திய 'தீவெட்டி', 'அனலி' உள்ளிட்ட சிற்றிதழ்களை இன்று வரை பலரும் நினைவுகூர்கிறார்கள். சிற்றிதழ்கள் பெருகாத காலத்தில் வெளிவந்து கவனிப்பைப் பெற்ற இதழ்கள் அவை. சுற்றுச்சூழல் சிந்தனைகளை பரவலாக எடுத்துச் சென்ற சில இதழ்களுள் குறிப்பிடத்தக்கது 'புதிய கல்வி'. அந்த இதழ் பரவலான அங்கீகாரம் பெற்றதற்கு அசுரனின் உழைப்பே காரணம். அந்தக் காலம் முதலே இணைய இதழான திண்ணை.காம்-மில் கருத்துகளைப் பதிவு செய்து வந்தார்.

சிறிது கால இடைவெளிக்குப் பின் அவரது உடல்நல பாதிக்கப்பட்டது. முதலில் முதுகுத்தண்டு பாதிப்பு தெரிய வந்தது. இதற்காக சோதனை நடத்தியபோது, சிறுநீரக பாதிப்பு எனும் அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது. ஒப்பீட்டளவில் முதுகுத்தண்டு பாதிப்பு சிகிச்சை அளிக்கவும், சமாளிக்கவும் கூடியது. சிறுநீரக பாதிப்பு பெரும் ஆபத்து. இரண்டுமே அவரைத் தாக்கியிருந்தன. எந்த நோய்க்குறியும் தலைகாட்டாமல் திடீரென அவர் பாதிக்கப்பட்டது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நோயின் தாக்குதல், அதற்கான சிகிச்சை பற்றி குழப்பமாக இருந்தது. நீண்டநேரம் உட்கார முடியாதது, சிறுநீரக சுத்தகரிப்பின்மை போன்ற பிரச்சினைகள் அசுரனை தீவிரமாக பாதித்தன.

அவரது சிறுநீரகப் பிரச்சினைக்கு ஓர் அரிய மூலிகை தேவைப்பட்டது. அது மலேசியாவில் கிடைக்கும் என்பதால் அங்கிருந்து வாங்கி வர ஏற்பாடுகள் நடந்தன. கடந்த ஆண்டு தொடக்கத்தில் அசுரனின் நண்பர்கள் சேர்ந்து ஒரு குடும்ப விழாவை ஜனவரி மாதம் நடத்தினர். அதில் அசுரன் பங்கேற்றார்.

கூடங்குளம் அணுமின்நிலையம் தொடங்கி மக்களை பாதித்த பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த அசுரனை உடல்நிலை பாதிப்பு முடக்கியது. நண்பர்கள், எழுத்து, போராட்டம் என்று பயணித்து வந்த அவருக்கு உடல்நலமின்மை சற்று அயர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் எந்தப் பணியையும் அவர் கைவிடவில்லை. நண்பர்களுடன் இணைந்து 'அனலி' பத்திரிகை நடத்தினார். சேதுசமுத்திர திட்டம், டாடா டைட்டானியம் திட்டத்துக்கு எதிராக சுற்றுச்சூழல்-மனித உரிமை அக்கறைகளை உரத்துப் பேசினார். படிக்க வேண்டும், எழுத வேண்டும் என்ற தாகம் அவரிடம் குறையவேயில்லை. தொடர் ஆலோசனைகளுக்குப் பிறகு, மருத்துவர் ராஜேந்திரனின் ஆதரவுடன் 'புதிய தென்றல்' இதழ் தொடங்கப்பட்டது. தென் தமிழகத்தில் இருந்து வரும் இதழ்களில் குறிப்பிடத்தக்கதாகவும், மருத்துவத்தில் கவனம் செலுத்தும் இதழாகவும் மாறியது.

கொல்லா மரம் எனப்படும் முந்திரி உட்பட பல்வேறு தாவரங்கள் பற்றி தென்றலில் அவர் எழுதி வந்தார். பல்வேறு துறை கட்டுரைகளை அந்த இதழில் எழுதியுள்ளார். மண்ணாங்கட்டி என்ற பெயரில் சாதாரண மக்களின் பார்வையில் இருந்து சமூகப் பிரச்சினைகளை புதிய கல்வியில் அலசியுள்ளார்.

சிட்டு, மாடசாமி என்ற பல பெயர்களில் எழுதி வந்தார். ஆனந்த், ஆனந்த ராம்குமார் என்ற பெயர்களில் சில கட்டுரைகள் வெளியாகியுள்ளன. எனக்கேகூட இந்தப் பெயர்கள் அவருடையது என்று தெரியாது. எல்லோருக்கும் அசுரன் என்ற பெயர் மட்டுமே பரிச்சயம்.

சேதுசமுத்திரத் திட்டம் தமிழர்களின் கனவுத் திட்டம் என்ற முகமூடியுடன் சிலர் பைகளை நிரப்பத் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் அது ஏற்படுத்த உள்ள பாதிப்புகள், மக்கள் பாதிக்கப்பட உள்ளது பற்றி தீவிரமாகப் பேசினார். டாடா டைட்டானியம் திட்டம் பற்றி அவசர அவசரமாக குரல் கொடுத்த அரசியல் கட்சிகள் அதே அவசரத்தோடு அடங்கிவிட்ட நிலையில், அது பற்றி பொருளாதார ஆய்வை மேற்கொள்ளவும், பின்னர் சிறுபிரசுரம், இணையப் பதிவு வெளிவரவும் முக்கிய காரணமாக இருந்தவர் அசுரன். தான் மட்டுமின்றி, சக நண்பர்கள் மூலமாகவும் இதுபோன்ற கருத்துகள் தொடர்ந்து வெளிப்படக் காரணமாக அமைந்தார். ஒரு கட்டத்தில் குறுஞ்சேதிகள் மூலமாக பல்வேறு தகவல்களை நாள் தவறாமல் நண்பர்களுக்கு அனுப்பி வந்தார்.

தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் படுக்கையில் இருந்ததால் உடல் பலவீனமடைந்தது. சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை, டயாலசிஸ் சிகிச்சை மேற்கொள்ள முயற்சிகள் தொடங்கின. அதன் ஒரு கட்டமாகவே திருவனந்தபுரத்தில் டயாலசிஸ் சிகிச்சை மேற்கொள்ள அசுரன் சென்றார். அங்கு சென்ற தொடக்கத்தில் டயாலசிஸ் காரணமாக சற்று அயர்ச்சியாகக் காணப்பட்டார். சிறிது நாட்களுக்குப் பிறகு உற்சாகம் பெற்றார். டயாலசிஸ் சிகிச்சை முடிந்து ஊர் திரும்ப இருந்த நேரத்தில் யாரும் எதிர்பாராத நிலையில் பக்கவாதம் போன்ற திடீர் நடுக்கம் ஏற்பட்டு அசுரன் மரித்துள்ளார். அவருக்கு ஏதாவது ஒரு பிரச்சினை மட்டும் இருந்தால் பாரம்பரிய மருத்துவத்தால் சரி செய்திருக்க முடியும் எனவும், இரண்டு எதிரெதிர் பிரச்சினைகளுக்கு மருந்து கொடுக்கும்போது அவை எதிர்வினை புரிந்து சிக்கல் ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


-ஆதி வள்ளியப்பன்