முன்னோடி

நண்பர்களின் நினைவலைகள்

போராளி அசுரனின் அடியொற்றி...

நண்பர்களின் நினைவலைகள்

சுற்றுச்சூழல் எழுத்தாளர், மனிதஉரிமைப் போராளி அசுரனின் நினைவுக் கூட்டம் சென்னை தியாகராயநகர் செ.தெ. நாகயம் பள்ளியில் உழைப்பாளர் தினமான மே 1ம் தேதி நடைபெற்றது.

ஒரு கலந்துரையாடல் கூட்டமாக நடந்த இந்த நினைவரங்கில் பேசத் தொடங்கிய பலரும் ''அசுரன் மிக நல்ல மனிதர்'' என்று அழுத்தமாகக் கூறினர். கலகலப்பாக அனைத்து தரப்பு மனிதர்களுடனும் பழகியவர். எளிமையாக வாழ்ந்தவர்.

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு தொடங்கி பல்வேறு போராட்டங்களில் அனைத்து தரப்பினைரையும் ஒருங்கிணைக்கக்கூடிய அமைப்பாளராகச் செயலாற்றினார். இந்த பாத்திரம் மிக முக்கியமானது. தன்னுடைய உடல் உபாதைகளைத் தாண்டி செயலாற்றிய அவரை, பொதுவாழ்க்கைக்கான முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்று பேசிய பலரும் வலியுறுத்தினர்.

'விழிப்புணர்வு' காமராஜ்

மருத்துவமனையில் அவரைச் சென்று சந்தித்தபோது, 'புதிய தென்றல்' வடிவமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். உடல் நலிந்திருந்தாலும் இதழை கொண்டு வரும் ஆர்வத்துடன் முழுமையாக இயங்கிக் கொண்டிருந்தார். தன்னால் முழுமையாக இயங்க முடியாத நிலையில், மற்றவர்கள் இயங்க அதிகம் ஊக்குவித்தார்.

தேவநேயன், தோழமை அமைப்பு

ஆழ்ந்த சிந்தனையும், தீவிர அக்கறைகளும் கொண்டவர் அசுரன். எப்பொழுதும் சிரித்த முகத்துடன், எளிமையாக வாழ்ந்தவர். அர்ப்பணிப்பு உணர்வு அதிகம் கொண்டவர். கொள்கையை சமரசம் செய்து கொள்ளாமல் முன்மாதிரியாக வாழ்ந்தார். இது நாம் அவரிடம் இருந்து வசப்படுத்திக் கொள்ள வேண்டிய பண்பு.

அந்தோனிசாமி, தமிழ்நாடு சுற்றுச்சூழல் கழகம்

ஆழ்ந்த சிந்தனையும், தீவிர அக்கறைகளும் கொண்டவர் அசுரன். எப்பொழுதும் சிரித்த முகத்துடன், எளிமையாக வாழ்ந்தவர். அர்ப்பணிப்பு உணர்வு அதிகம் கொண்டவர். கொள்கையை சமரசம் செய்து கொள்ளாமல் முன்மாதிரியாக வாழ்ந்தார். இது நாம் அவரிடம் இருந்து வசப்படுத்திக் கொள்ள வேண்டிய பண்பு.

டி.எஸ்.எஸ். மணி, மனித உரிமை ஆர்வலர்

89-90களில் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்போது, ஆர்வமும் துடிப்பும்மிக்க மாணவராக அசுரன் அறிமுகமானார். பெயரே வித்தியாசமாக தொனித்தது. நிறைய விமர்சன கருத்துகளை முன்வைப்பார். பின்னால் அவரே திண்டுக்கல் அமைதி அறக்கட்டளையில் பணியாற்றியதை பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. கூடங்குளம் அணுஉலை தொடர்பான செய்திகளை கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து நண்பர்களுக்குக் கடத்தி வந்தார். மக்கள் கருத்துகேட்பு கூட்டங்களை அதிகாரிகள் ரகசியமாக நடத்த முயற்சித்த நிலையில், தகவலை பரப்பி நண்பர்களை பங்கேற்கச் செய்தார்.

அந்தக் காலத்தில் இருந்தே அறிவாளிகளை ஒருங்கிணைக்கக் கூடிய ஒரு சிறந்த அமைப்பாளராக அவர் செயல்பட்டு வந்துள்ளார். இந்த பாத்திரம் மிக முக்கியமானது.

தன்னுடைய உடல் உபாதைகளைத் தாண்டி செயலாற்றிய அவரை, பொதுவாழ்க்கைக்கான முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும். 'பூவுலகின் நண்பர்கள்' நெடுஞ்செழியனுக்குப் பிறகு பெரும் பங்களிப்பு செய்தவர் அசுரன்.

சித்த மருத்துவர் சிவராமன்

1995ல் அசுரன் எனக்கு அறிமுகம் ஆனார், மாற்று மருத்துவ கருத்துகளை மக்களிடம் எப்படி எடுத்துச் செல்வது, எழுதுவது என்பதில் உதவி புரிந்தார். அலோபதி மருத்துவத்தின் தீமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த நேரடி உதாரணங்களை தேடிச் சென்றார்.

நீண்டநாட்களாக அவரை நேரில் சந்திக்கவில்லை. தொலைபேசியில் எப்பொழுது பேசினாலும் குரல் தொய்வின்றி இருக்கும், தான் பெறும் சிகிச்சை பற்றி மிகக் குறைவாகவே பேசுவார். 'பூவுலகின் நணர்பகள்' தொட்டுக் காட்டிய விஷயங்களை நாம் தொடர வேண்டும். சுற்றுச்சூழல் அக்கறைகளை வெளிப்படுத்த ஒரு களத்தை ஏற்படுத்த வேண்டும்.

தேவநேயன், தோழமை அமைப்பு

புதிய கல்வியில் தொடர்ந்து எழுதி வந்த நான், அடிக்கடி அசுரனிடம் கலந்துரையாடிக் கொண்டிருந்தேன். திண்டுக்கல்லில் அவர் இருந்த காலத்தில் புதிய கல்வி அலுவலகத்தில் சில முறை அவரை நேரில் சந்தித்துள்ளேன். மற்றபடி தொலைபேசி, கடிதம் வாயிலாகவே அனைத்து தொடர்புகளும். அவர் அங்கிருந்து விலகும் வரை தொடர்ச்சியாக புதியகல்வியில் எழுதினேன். அந்தக் காலத்தில்தான் சுற்றுச்சூழல், காட்டுயிர், சூழலியல் சார்ந்து செயல்படும் பலரையும் நேர்காணல் கண்டு புதியகல்வியில் வெளியிட்டேன். பல மொழிபெயர்ப்பு நேர்காணல்களை செய்தேன். காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் எஸ்.யு. சரவணக்குமாருடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. அவரது தவளை ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டு ஒரு தொடரை இணைந்து எழுதினேன். காட்டுக்குள் ஒரு கேமராவின் பயணம் என்ற பெயரில் அந்தத் தொடர் வெளியானது. சூழலியல் எழுத்தாளர் சு. தியடோர் பாஸ்கரன் உட்பட பலர் அந்தத் தொடரைப் பாராட்டினர். சூழலியல் சார்ந்து அப்பொழுதுதான் முதன்முதலாகவும் தொடர்ச்சியாகவும் எழுதத் தொடங்கினேன். இன்று இதழ்கள் தொடங்கி புத்தகம் வரை எனது கவனம் சூழலியலில் குவிந்திருப்பதற்கு, அசுரன் அளித்த சுதந்திரம், ஊக்குவிப்பே பெரும் முதலீடு.


'பசுமைத்தாயகம்' அருள்

பூவுலகின் நண்பர்கள் நெடுஞ்செழியன்தான் தமிழகத்தில் சுற்றுச்சூழல் அக்கறைகள் பரவலாக முக்கிய காரணம். அவரைப் பின்பற்றி அசுரன், வாழ்க்கை முழுக்க ஒரு போராளியாகவே வாழ்ந்தார். சுற்றுச்சூழல், மனிதஉரிமைகளுக்காக அயராது போராடினார். அவர்களது பணியைத் தொடர ஒரு பொதுத்தளம் தேவை

பத்திரிகையாளர் அருள்எழிலன்

அசுரன் என் ஆத்மார்த்தமான நண்பர். அரியவகை மண் எடுக்கும் மத்திய அரசு நிறுவனத்தின் திட்டங்களால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் பற்றி 2002ல் எழுதுமாறு என்னிடம் கூறினார். அந்தப் பிரச்சினை பற்றி எழுதினேன். அதன்பிறகு ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பிரச்சினை பற்றி எழுதுமாறு தொடர்ந்து கூறிக் கொண்டே இருப்பார்.

ஒரு கட்டத்தில் தீவிரமாக கூடங்குளத்தை எதிர்த்தவர்கள் அந்த நிறுவனத்தின் ஒப்பந்ததாரர்களாக மாறியிருந்தனர். பத்திரிகையாளர்களது அக்கறையும் இது போன்ற விஷயங்களில் திரும்பவில்லை. அப்பொழுதுதான் மேற்கண்டது போன்ற விஷயங்களை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று அசுரன் என்னைத் தூண்டினார். மனித அக்கறைகள் சார்ந்து ஆழமாக எழுதத் தொடங்கினேன்.

பின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவமனையில் அவரைச் சந்தித்தபோது, மிகவும் மோசமான நிலைமையில் இருந்தார். மருத்துவமனைச் சூழலில் அவரது குடும்பத்தினர் அசுரனை நன்கு கவனித்துக் கொண்டனர். அங்கும் எழுதிக் கொண்டும், தீவிரமாக வாசித்துக் கொண்டும் இருந்தார். எப்பொழுது தொலைபேசியில் பேசினாலும் உடல்நிலை பற்றி பேசமாட்டார். எனக்கு நெருக்கமான எடிசன் அண்ணன், எனது தாய் ஆகிய இருவரது இழப்புக்குப் பிறகு அசுரனது இழப்பு ஒரு பேரிழப்பு..

பாரதிதாசன், அருளகம்

பூவுலகின் நண்பர்கள் நெடுஞ்செழியன், எனது நண்பர் அருள் ஆகிய இருவரது இழப்புகளுக்குப் பிறகு அசுரனது இழப்பு கடுமையாக பாதித்தது. எனது இரண்டு நூல்கள் வெளியாக அவரே அடித்தளம். மருத்துவமனையில் இருந்தபோதுகூட நூலக ஆணைக்கான புத்தகம் ஒன்றை கடைசி நேரத்தில் எனக்கு தயாரித்துக் கொடுத்தார். உடல் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த கடைசி காலத்தில், வாழ வேண்டும் என்ற பிடிப்பு அவருக்கு இருந்தது. பலருடன் உறவாடியவர். எனக்கு பல நெருங்கிய நண்பர்கள் உருவாக, இணைப்புப் பாலமாக செயல்பட்டார். சமூக அக்கறை கொண்டு செயலாற்றுவோர் தங்கள் உடல்நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற பாடத்தை அசுரனது இழப்பில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

ஆர்.ஆர். சீனிவாசன், விவரணப் பட இயக்குநர்

2004ல் சுனாமி பற்றி விவரணப் படம் எடுத்தபோது அசுரனைப் பார்த்தேன். மிக மோசமான நிலையில் இருந்தார். அப்பொழுது அரைமணி நேரம் பேட்டி எடுத்தோம். அதன் பிறகு அவருடனான நட்பு வலுப்பட்டது.

உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரால் சுயமாக எழுந்து நிற்க முடியாத நிலை இருந்தது. 2007ம் ஆண்டு அவருக்காகவே நண்பர்கள் கூடி ஒரு பயணத்தை ஏற்பாடு செய்தோம். அவர் எங்கெல்லாம் போகவேண்டும் என்று நினைத்தாரோ, அங்கெல்லாம் கூட்டிச் சென்றோம். இறுதியில் ஒரு குடும்ப சந்திப்பு கூட்டமும் நடந்தது. 2007ல் நோய் உக்கிரமாகத் தாக்கியிருந்தபோதும், அவரது முகம் பிரகாசமாக இருந்தது.

அவரது இறுதிச் சடங்குக்குப் போனபோது எனக்கு பெரும் வேதனையாக, கோபமாக இருந்தது. இதேபோன்ற நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை எனக்குத் தெரிந்த ஒரு மருத்துவர் குணப்படுத்தியிருந்தார். அவரிடம் சிகிச்சை பெறுமாறு அசுரனிடம் வலியுறுத்தி வந்தேன். ஆனால் அதை ஏற்க அசுரன் மறுத்துவிட்டார் என்பதே அதற்குக் காரணம். குறுஞ்சேதிகளை (எஸ்.எம்.எஸ்.) ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தியவர் அவர்தான். இடைவெளி இல்லாமல் குறுஞ்சேதிகளை அனுப்புவார். நாளிதழ் செய்தி, தமிழ்தேசியம், சூழலியல் என தீவிர அக்கறைகளை கூறுவதாக அந்தச் செய்திகள் இருக்கும்

அசுரனுக்கு எதிரிகளே கிடையாது. எல்லா கட்சிக்காரர்களிடம் சென்று சுற்றுச்சூழல் அக்கறைகளை வெளிப்படுத்தி பேசியவர் என்று ஒரு முறை நேர்ப்பேச்சில் பாமரன் என்னிடம் குறிப்பிட்டார். இது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். தமிழ் தேசியம், மார்க்சியம் போன்ற கொள்கைகள் சார்ந்து இயங்கினாலும், கடைசி காலத்தில் காந்தியவாதியான ஜே.சி. குமரப்பாவின் கொள்கைகளையே அசுரன் வலியுறுத்தினார். சுற்றுச்சூழலை சீரழிக்காமல், எளிமையான கிராமப்புற வாழ்க்கையே குமரப்பாவின் கொள்கை. அசுரனது தத்துவத் தேடல் ஜே.சி. குமரப்பாவில் நிறைவடைந்தது.

குடும்ப சந்திப்பின்போது அவரது பெயரை மாற்ற வேண்டும் என்று நாங்கள் அன்பாகக் கோரிக்கை விடுத்தபோது, என்ன பெயர் வைக்கலாம் என்று ஆலோசனை வந்தது. அவரது பூர்வ பெயரான ஆனந்த ராம்குமார் என்பதையே வைத்துக் கொள்ளலாம் என்று முடிவானது. நான் நகைச்சுவையாக ஆனந்த குமரப்பா என்று வைத்துக் கொள்ளலாம் என்று கூறினேன். அதையே ஏற்றுக் கொண்டு அந்தப் பெயரில் கட்டுரைகள் எழுதினார்.