சுற்றுச் சூழல்

பெட்ரோல் விலை உயர்வு, உண்மை என்ன? (அல்லது) எகிறும் பெட்ரோல் விலை பற்றியெரியும் சாமானியர் வயிறுகள்
பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் மாப்பிள்ளையா, அப்ப ரொம்ப பணக்காரராகத்தான் இருப்பார்.

கார்களை இனிமேல் மியூசியத்தில்தான் வைக்க வேண்டும்

சென்னை சாப்ட்வேர் இன்ஜினியர் சைக்கிளில் செல்கிறார்... இப்படித் தொடங்கி,

இனிமேல் மாட்டுவண்டிதான் சிறந்த வண்டி என்பது வரை நகைச்சுவை துணுக்குகள் தொடங்கி, பரபரப்புச் செய்திகள் வரை எல்லாமே பெட்ரோல் விலை ஏற்றத்தைப் பற்றியதாக மாறிவிட்டன.

நகைச்சுவை துணுக்குகள் ஒரு பக்கம் இருக்க, உண்மை நிலைமை எளிய மக்களின் வயிற்றில் அடிப்பதாக இருக்கிறது. உணவுப் பொருள் தட்டுப்பாடு, அத்தியாவசியப் பொருள்கள் விலையேற்றம், பணவீக்க விகிதம் அதிகரிப்பு போன்ற கடுமையான பொருளாதார நெருக்கடிகளால் இந்தியா படுகுழிகளில் விழுந்து தடுமாறி நடக்க முடியாமல் ஊர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், தலையில் இடியாய் வந்து இறங்கியுள்ளது கச்சா எண்ணெய் விலை உயர்வு. சர்வதேச சந்தையில் ஐந்தே மாதங்களில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 90 டாலர்களில் இருந்து 130 டாலராக உயர்ந்தது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது போக்குவரத்தை மட்டும் பாதிப்பதில்லை. காய்கறி, பால் உள்ளிட்ட பெரும்பாலான அத்தியாவசியப் பொருள்கள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு லாரி, மினிலாரி போன்ற வாகனங்கள் மூலமாகவே எடுத்துச் செல்லப்படுகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், நம் வீடுகளில் அடுப்பெரிவது திண்டாட்டமாகிவிடுகிறது. இந்த விலை உயர்வுக்கு இயல்புக்கு மாறான காரணம் ஏதாவது இருக்கிறதா?

அளவில் ஒரு நாளுக்கான கச்சா எண்ணெய்த் தேவை 8.5 கோடி பேரல்கள். கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் ஈடுபடும் முக்கிய வளைகுடா நாடுகள் ஓபெக் என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை நிர்ணயிப்பதில் இந்த நாடுகளின் பங்கு தற்போதைய நிலையில் குறைவாக இருக்கிறது.

இயல்புக்கு மாறாக கச்சா எண்ணெய் விலை அமெரிக்க வர்த்தக நகரமான நியூயார்க்கில் நிர்ணயிக்கப்படுகிறது. அங்கு நிர்ணயிக்கப்படுவதற்குக் காரணம் என்ன?

உலகை அலற வைத்துள்ள இந்த விலையேற்றத்துக்கு அங்குள்ள கோல்ட்மேன் சாக்ஸ், சிட்டிகுரூப், ஜே.பி. மார்கன் சேஸ், மார்கன் ஸ்டேன்லி யூக வணிக நிறுவனங்கள்தான் மூலகாரணம். முதலீடு செய்வதில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனங்கள் தங்கள் லாபத்தை பெருக்குவதற்காக கச்சா எண்ணெய் விலையை இஷ்டத்துக்கு உயர்த்துகின்றன. இன்று ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 130 அமெரிக்க டாலர் என்றால், அதில் 30 டாலர்தான் உண்மையான விலை. எஞ்சிய 100 டாலர் இந்த நிறுவனங்களுக்கு லாபமாகச் செல்கிறது.

யூக வணிக நிறுவனங்களின் செயல்பாட்டை அமெரிக்க அரசு எந்த வகையிலும் கட்டுப்படுத்தவில்லை. அமெரிக்க பொருளாதார சட்டங்கள் யூக வணிக நிறுவனங்கள் லாபம் கொழிக்க ஏற்ற வகையிலேயே இருக்கின்றன. மேலும் டாலர் விலை வீழ்ச்சியையும், சரிந்துவிட்ட பொருளாதார சூழ்நிலை போன்றவற்றை சமாளிக்க முடியாமல் திணறிய அமெரிக்க அரசு, கச்சா எண்ணெய் விலை உயர்வை தனக்குச் சாதகமான ஒன்றாகப் பயன்படுத்திக் கொள்கிறது. அமெரிக்க அரசு மட்டுமல்ல, இந்திய அரசு யாருக்குச் சார்பாகச் செயல்படுகிறது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.