சுற்றுச் சூழல்

இந்தியாவில்...

நம் நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் அடுப்பெரியவும், போக்குவரத்துக்கும் கச்சா எண்ணெய் பொருட்களையே பெருமளவு சார்ந்துள்ளோம். சமையலுக்கு மண்ணெண்ணெய், எரிவாயு போன்றவற்றையும், போக்குவரத்துக்கு டீசல், பெட்ரோலையுமே நாம் நம்பியுள்ளோம். நகரங்களில் பெரும்பாலான ஏழைகள் சமைக்க பயன்படுத்தும் மண்ணெண்ணெய்க்கு 5 சதவிகிதம் வரி விதிக்கப்படுகிறது. எரிவாயு விலை 15 சதவிகிதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. டீசலுக்கு 34 சதவிகிதம் வரி விதிக்கப்படுகிறது. பெட்ரோல் விலை பற்றி சொல்ல வேண்டியதில்லை. பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்படும் முறை,கணிதத்தில் புலி என்று சொல்லப்படுபவர்களைக்கூட குழப்பக் கூடியது.

இந்தியாவில் விற்கப்படும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை அமெரிக்கா (ரூ. 44.25), ரஷ்யா (ரூ. 42.27), சீனா (ரூ. 31.30), பாகிஸ்தான் (ரூ. 44.80), மலேசியா (ரூ. 25.40) போன்ற நாடுகளைவிட அதிகம். இந்தியாவில் மட்டும்தான் பெட்ரோல் விலை அதிகமாக இருப்பதற்குக் காரணம் வரி, வரி, வரி.

இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ. 52 ரூபாய் என வைத்துக் கொள்வோம். அதில் உண்மையான பெட்ரோல் விலை ரூ. 22 மட்டுமே. எஞ்சிய 30 ரூபாயில் பெருமளவு தொகை மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் வரியாகச் செல்கிறது. இறக்குமதி ஆயத்தீர்வை ரூ. 14.25, கல்வி வரி 50 பைசா, விநியோகஸ்தர் கமிஷன் ரூ. 1, வாட் வரி ரூ. 5.50, கச்சா எண்ணெய்க்கான சுங்க வரி ரூ. 1, பெட்ரோலுக்கான சுங்க வரி ரூ. 1.50, போக்குவரத்துச் செலவு ரூ. 6. இப்படி ஒவ்வொருவரும் போடும் பெட்ரோல், டீசலில் இருந்து கிடைக்கும் வரியை நம்பியே இந்தியாவின் பட்ஜெட்டே போடப்படுகிறது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். கடந்த ஆண்டு கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 80 அமெரிக்க டாலர்கள். அப்போது இந்திய அரசுக்கு வரி மூலம் ஆண்டுக்கு ரூ. 91,000 கோடி வருவாய் கிடைத்தது. கச்சா எண்ணெய் பேரல் ஒன்று 130 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்படும் நிலையில், அரசு வழங்கும் மானியம் ரூ. 25,000 கோடிதான்.

எப்பொழுதும் வருவாயாகக் கிடைக்கும் கோடிகளைப் பற்றி மத்திய அரசு மூச்சே விடுவதில்லை. மானியமாக வழங்கும் தொகையைப் பற்றி மட்டுமே உரக்கப் பேசுகிறது. இப்படி நாட்டை ஆளும் அரசே பெட்ரோல், டீசல் வரி வருவாயை நம்பி செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மற்றொரு பக்கம் இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனங்களும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தால் கொள்ளை லாபம் அடைந்து வருகின்றன.

இந்தியாவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பணம் செய்யும் உரிமையை ரிலையன்ஸ், எஸ்ஸார், கெய்ர்ன்ஸ் ஆகிய நிறுவனங்கள் பெற்றுள்ளன. அந்த நிறுவனங்கள் எண்ணெய் துரப்பணம் செய்ய அனுமதிக்கப்பட்டபோது, ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை வெறும் 30 அமெரிக்க டாலர்கள்தான். தற்போது அந்நிறுவனங்கள் ஒரு துரும்பைக்கூட நகர்த்தாமல், ஒரு பேரலுக்கு 100 அமெரிக்க டாலர்கள் வரை தற்போது லாபம் பெற்று வருகின்றன. அத்துடன் இந்த தனியார் நிறுவனங்கள் கச்சா எண்ணெயை சுத்திகரிக்க ஒரு பேரலுக்கு அரசு 15 அமெரிக்க டாலர் மானியம் வழங்குகிறது. இப்படி கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள் ஒன்றுக்கு இரண்டாக லாபத்தை அள்ளி வருகின்றன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், உடனே மக்கள் தலையில் அதை சுமத்தத் தயாராக இருக்கும் அரசு, இந்த தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஒரு பைசாவைக்கூட கூடுதலாக வசூலிப்பதில்லை. இது எவ்வளவு பெரிய முரண்?

மற்றொருபுறம் நாட்டின் எரிசக்தி தேவையை ஈடுகட்ட வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து, விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் இந்தியன் ஆயில் கார்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் ஆயில் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் தொடர் விலையேற்றத்தால் நஷ்டத்தைச் சந்திக்கின்றன. இப்படி இந்திய அரசின் அணுகுமுறை பொதுத் துறை நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவதாகவும், தனியார் நிறுவனங்கள் லாபத்தை குவிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையும், வளர்ச்சியும்தான் முக்கியம் என்று மத்திய அரசு கருதினால் பொதுப் போக்குவரத்து வசதிகளை அதிகரித்தல், எரிபொருள் சிக்கனம் மற்றும் ரேஷன் முறையை நடைமுறைப்படுத்துதல், மாற்று எரிபொருள் பயன்பாட்டை அதிகரித்தல் போன்ற செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும்.

'ஊருக்கு இளைத்தவன் தலையில் மிளகாய் அரைப்பது' என்ற கதையாக எல்லா பொருளாதார நெருக்கடிகளையும் சாதாரண மக்கள் மேல் சுமத்துவதை அரசு முதலில் கைவிட வேணடும். ஏ.சி. கார்களில் சொகுசாகச் செல்லும் கனவான்களிடமும், கொள்ளை லாபம் அடிக்கும் தனியார் நிறுவனங்களிடமும் கூடுதலாக வரி வசூல் செய்தாலே இந்தியாவை ஒளிரச் செய்ய முடியும்.