சுற்றுச் சூழல்

நம்பிக்கை அடையாளங்கள்

இருந்தபோதும், நம்பிக்கை வற்றிவிடவில்லை. அழிவை ஏற்படுத்தும் வளர்ச்சி நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் மக்கள் தெரிவிக்கும் எதிர்ப்பு, அதிகரித்து வருவது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. அவற்றில் சில: வர்த்தக மீன்பிடித்தல் மற்றும் மீன் பண்ணைகளுக்கு எதிராக பாரம்பரிய மீனவர்கள் வெளிப்படுத்தும் எதிர்ப்பு, சீர்குலைக்கப்படாத இயற்கைகாட்சிகளை அழிக்கும் ஆபத்தை விளைவிக்கும் பேரணைகளுக்கு எதிராக சிக்கிம் புத்தத்துறவிகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தெரிவிக்கும் எதிர்ப்பு, கோகோ கோலா தொழிற்சாலைகளை மூட வேண்டும் என்று கிராமமக்கள் வற்புறுத்துவது, சிறப்புப் பொருளாதார மண்டலம் எனும் புதிய பைத்தியக்காரத்தனத்துக்கு தங்கள் நிலங்களைத் தர மறுக்கும் விவசாயிகள் என்று பல நம்பிக்கை ஒளிக்கீற்றுகள் ஆங்காங்கு தென்படுகின்றன

மற்றொரு நம்பிக்கை அமைதியான ஒன்று.மாற்றுகளை முன்வைக்கும் புரட்சியை உள்ளடக்கமாகக் கொண்டது: மகாராஷ்டிராவில் பரவிவரும் இயற்கை வேளாண் வலையமைப்புகள்,ராஜஸ்தானில் உள்ள ஆல்வாரில் வறட்சி தாக்கக்கூடிய பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட மையப்படுத்தப்படாத நீர் சேகரிப்புத் திட்டங்கள், ஒரிசா, உத்தராகண்ட், மகாராஷ்டிரா, நாகாலாந்து மற்றும் பல மாநிலங்களின் ஆயிரக்கணக்கான கிராமங்களில் தன்னார்வமாக நடைபெறும் காடு மற்றும் காட்டுயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் முக்கியமானவை.

இவைதவிர, சில தனியார் நிறுவனங்கள் வேறு முறைகளை கையாண்டு வியாபாரத்தை நடத்தத் தொடங்கியுள்ளன. அதேநேரம், 'தனியார் நிறுவனங்களின் சமூகப்பொறுப்பு' என்ற பெயரில் ஊதிப் பெருக்கப்பட்ட நடவடிக்கைகள், பெரும்பாலும் கண்துடைப்புத்தன்மை கொண்டவை.

நம்மை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கும் காலநிலை மாற்றப் பிரச்சினையைக்கூட, நம்பிக்கை அளிக்கும் ஒன்றாகப் பார்க்க வாய்ப்பு உள்ளது. பிரதமர் உண்மையிலேயே அக்கறையுடன் பேசினார் என்று வைத்துக்கொண்டால், பொது போக்குவரத்து மற்றும் எரிசக்தி சேமிப்பு போன்ற நடவடிக்கைகள் ஊக்கப்படுத்தப்படும். அதேநேரம் உலக அளவிலான தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றால், எல்லாம் மூழ்கிப்போக நேரிடும் என்பதை இந்தியாவின் மூலதனச் சந்தை உணர வேண்டும்.

தோல்விகள் பலவற்றைச் சந்தித்து இருந்தாலும், தொந்தரவுக்கு உள்ளாகியுள்ள பூவுலகின் பிரச்சினைகளுக்கு தீர்வு உருவாக வாய்ப்புள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. அறிவு சார்ந்த பன்னெடுங்காலப் பாரம்பரியம் கொண்ட பல சமூகங்கள் இன்னமும் நம் நாட்டில் வாழ்ந்து வருகின்றன. நவீன காலத்திய புத்தாக்கச் சிந்தனை கொண்ட சிறந்த சிந்தனையாளர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் நம் நாட்டில் உள்ளனர். உண்மையிலேயே புரட்சிகரமான தொழில்நுட்பங்கள் மற்றும் நிறுவனங்களை அவர்கள் அமைத்துள்ளனர்.

ஒடுக்குமுறைகளை சுமத்தும் வலிமையான சக்திகளைக்கூட அசைக்கக்கூடிய, அமைதியான வெகுமக்கள் இயக்கங்களை ஒருங்கிணைக்கும் திறன் நம்மிடம் உள்ளது. அதிகாரம் பரவலாக்கப்பட்ட நிர்வாக அமைப்பு தொடர்பாக நாம் மேற்கொண்ட பரிசோதனைகள் எதிர்காலத்திலும் பலனளிக்கக் கூடியவையே. இன்னும் சில பத்தாண்டுகளில் விடுதலை நு£ற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், சூழலியல் மற்றும் சமூகப்புரட்சியை ஒருங்கிணைக்கும் தொலைநோக்குப் பார்வை நமக்குக் கிடைக்கும். இயற்கையுடன் இயைந்த வாழ்க்கையை அந்தப் பார்வை மீட்டெடுக்கும் என்று நம்புவோம்.