இயற்கை பாதுகாப்பு

தொடர்

காட்டுக்குள்ளே கேமரா, ஆக்...ஷன்


உலகப் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்
அல்போன்ஸ் ராயின் சாகசங்கள் - இரண்டாம்பாகம்

உடைந்த பாலம் எங்கே?

"நான் ஒரு கேமராமேனாக வேண்டும் என்ற ஆசையை என்னிடம் உருவாக்கியவர் எனது அப்பாதான். அவர் பெயர் யோகேஸ்வரமூர்த்தி. ஓரளவுக்குப் படித்துவிட்டு, ரயில்வேயில் வேலை பார்த்தார். லீவு நாட்களில் கேமராவை எடுத்துக் கொண்டு போட்டோ எடுக்கக் கிளம்பி விடுவார். அப்போது அவரிடம் சாதாரணமான கேமராதான் இருந்தது.

அந்த நேரத்தில் தாமிரபரணி ஆற்றில் திடீரென வெள்ளம் வந்து ரயில் பாலம் உடைந்துவிட்டது. திருநெல்வேலி நகரமே திரண்டு வேடிக்கை பார்த்த காட்சி அது. ஆனால் யாருக்கும் அதை போட்டோ எடுக்க வேண்டும் என்று தோன்றவில்லை. என் அப்பா, யோகேஸ்வரமூர்த்தி மட்டும் அந்தக் கூட்டத்துக்கு நடுவே பாலத்தைப் படமெடுத்தார்.

ஆற்றில் வெள்ளம் வடிந்தவுடன் உடைந்த பாலத்தைச் சீரமைத்தார்கள். பாலம் உடைந்து பதினைந்து நாட்கள் கழித்து மத்திய அமைச்சர் வந்து பார்த்தார். "உடைந்த பாலம் எப்படி இருந்தது. எனக்குக் காட்டுங்கள்" என்று அவர் கேட்டார். அதிகாரிகள் திகைத்துப் போனார்கள். என் அப்பாவை தேடிப் பிடித்து அமைச்சர் முன்பு கொண்டு போய் நிறுத்தினார்கள். உடைந்த பால போட்டோக்களை என் அப்பா மத்திய அமைச்சரிடம் காட்டினார். "இனிமேல் நீங்கள் டிக்கெட் கலெக்டர் இல்லை. ரயில்வே துறையின் போட்டோ கிராபர்" என்று என் அப்பாவுக்கு அமைச்சர் புது வேலை கொடுத்துவிட்டார். தெற்கு ரயில்வேயின் முதல் போட்டோகிராபர் என் அப்பாதான். அல்போன்ஸ் ராய் திருநெல்வேலிக்காரராக இருந்தும் அல்போன்ஸின் பெயர் மட்டும் வித்தியாசமாக இருக்கிறதே என்ற கேள்வி தோன்றலாம். அவரது அப்பாவுக்கு சிஸ்டர் அல்போன்சா மீது மதிப்பு உண்டாம். மேலும் சத்யஜித் ராயின் பெயரில் பாதியை இணைத்து அல்போன்ஸ் ராய் என்று பெயர் வைத்துவிட்டார். கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள அல்போன்ஸ் ராயின் வீட்டின் முன்பகுதியில் சிஸ்டர் அல்போன்சா சிலை வைக்கப்பட்டுள்ளது.

(தொடரும்)

(நன்றி: குமுதம்)