இயற்கை பாதுகாப்பு

தொடர்

காட்டுக்குள்ளே கேமரா, ஆக்...ஷன்


உலகப் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்
அல்போன்ஸ் ராயின் சாகசங்கள் - முதல் பாகம்

அடர்ந்த காடு, வின்னைத் தொட யத்தனிக்கும் மரங்கள், சூரியவெளிச்சம் உள்ளே புக முடியாத அளவுக்கு இலைகள் அடர்ந்துள்ளன. கரடுமுரடான இயற்கை பாதை... இதில் சற்று மறைந்து மறைந்து செல்கிறார் ஒரு மனிதர், கையில் கேமரா, சற்று தூரத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் இரண்டு புலிகளை சப்தமின்றி படமெடுத்துக் கொண்டிருக்கிறார் அவர்.

இன்னும் சில அடிகள் எடுத்து வைத்தால், "க்ளோஸ்-அப்பில் அவற்றை படமெடுத்துவிடலாமே" என்ற யோசனையுடன் அந்த மனிதர் நகர, ஒரு சின்னக் கல் இடறி பள்ளத்தில் உருள்கிறது. இரண்டு புலிகளும் அவரை வெருண்டு பார்க்கின்றன.

ஏதோ கனவில் வருகிற காட்சி என்று நினைத்து விடாதீர்கள். காட்டுயிர்களை படமெடுக்கும் கேமராமேன்களுக்கு அடிக்கடி ஏற்படும் அனுபவம்தான் இது.

சினிமா கேமராமேன் வேலை கடினம் என்றால், அதைவிடக் கடினமானது காட்டில் வாழும் விலங்குகளைப் படமெடுப்பது. புலி, சிங்கம், யானை என்று நாம் நேரிலோ, நெருங்கியோ பார்க்க வாய்ப்பு குறைவான விலங்குகளை படமெடுப்பதாலோ, என்னவோ உலகெங்கிலும் காட்டுயிர் ஒளிப்படங்களுக்கு என்றுமே வரவேற்பு அதிகம்.

கேமராமேன் அல்போன்ஸ் ராய், இது போன்ற காட்டு விலங்குகளை நெருங்கிப் போய் படமெடுக்கிறவர். சென்னை தரமணி திரைப்பட நிறுவனத்தில் படித்தவர். திரைப்பட நிறுவனத்தில் படிப்பவர்கள் பெரும்பாலும் சினிமா உலகில் அடியெடுத்து வைக்கவே விரும்புவார்கள். ஆனால் அல்போன்ஸ் ராய் ஆரம்பம் முதலே காட்டுயிர்களை படமெடுப்பதில்தான் தீவிர ஆர்வம் காட்டினார். அந்த ஆர்வம் இந்தியாவின் மிகச் சிறந்த காட்டுயிர் கேமராமேனாக அவரை உயர்த்தி இருக்கிறது. இந்திய காட்டுயிர்கள் பற்றி அவர் எடுக்கும் விவரணப் படங்களை டிஸ்கவரி, நேஷனல் ஜியாகிரபிக், அனிமல் பிளானெட் போன்ற உலகத் தொலைக்காட்சிகள் பெருமையோடு ஒளிபரப்பி வருகின்றன.

அமெரிக்காவில் சிறந்த சினிமாவுக்கு வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகளுக்கு இணையானவை, திரைப்பட நிகழ்ச்சிகளுக்கு வழங்கப்படும் எம்மி விருதுகள். மதிப்புமிக்க இந்த விருதுகளை ஒளிப்பதிவுக்காக பெற்ற பெருமைக்குரியவர் அல்போன்ஸ். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக காட்டுயிர் படமெடுத்தலில் ஈடுபட்டுள்ள அல்போன்ஸ் ராய்க்கு காடுகளில் ஏற்பட்ட அனுபவங்கள் புதியவை, சுவாரசியமானவை, ஆச்சரியமளிப்பவை. அந்த அனுபவங்களை நம்முடன் இனிமேல் அவர் பகிர்ந்து கொள்கிறார்.