சுற்றுச் சூழல்

'பூவுலகின் நண்பர்கள்' இயக்கம் 80களில் தொடங்கப்பட்டது. தங்கள் ஓய்வு நேரத்தையும் ஓயாத உழைப்பையுமே மூலதனமாகக் கொண்டு,நிகழ்காலச் சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வுவை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்ற இலக்குடன் செயல்படும் இளைஞர்களின் தொகுப்பாக அந்த இயக்கம் உருவாகி இருந்தது.

தொடங்கப்பட்ட காலம் முதல் பொறுப்பாளராகச் செயல்பட்ட திரு. நெடுஞ்செழியன் 'புதிய கல்வி' இதழுக்கு 1998ம் ஆண்டு வழங்கிய பேட்டி, நிறுவிய உறுப்பினர்களின் பார்வையை மிகத் தெளிவாக முன்வைக்கிறது.

 • பூவுலகின் நண்பர்கள் அமைப்பைப் பற்றி...

எங்களது அமைப்பு முழுக்க முழுக்க சூழலியலில் ஆர்வமுள்ள, மனிதஉரிமை மற்றும் மூன்றாம் உலகப் பொருளாதார நிலைமை பற்றி சிந்திக்கக் கூடியவர்களாக இணைந்து 1985ல் தொடங்கப்பட்டது. சூழலியல் பற்றிய செய்திகளை புத்தகங்கள், சிறு வெளியீடுகள் மூலம் மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இதன்மூலம் மக்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும், மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்று நம்புகிறோம். கோவை, நாமக்கல், கும்பகோணம், தூத்துக்குடி, சிதம்பரம், புதுச்சேரி ஆகிய ஊர்களில் 'பூவுலகின் நண்பர்கள்' இயக்கம் செயல்பட்டு வருகிறது. மற்றும் பல்வேறு பகுதிகளில் எங்களோடு தொடர்புடைய நண்பர்கள் உள்ளனர்.

 • 'பூவுலகின் நண்பர்கள்' இயக்கத்தை தொடங்க என்ன காரணம்?

இதைத் தொடங்க முக்கிய காரணமாக அமைந்ததும், நாங்கள் முதன்முதலில் எடுத்துக் கொண்டதும் மனிதஉரிமைச் சிக்கலேயாகும். இதை நாங்கள் சிந்தித்துப் பார்த்தபோது சூழலியல் சிக்கலும் மனிதஉரிமைச் சிக்கலில் முக்கியமான ஒன்றாக இருப்பதால், சூழலியல் சிக்கல்களுக்குக் காரணம் என்ன? மீட்க என்ன வழி? என்பதைக் கண்டறிவது என்றும், அதற்குத் தேவையான கல்வியை மக்களுக்குக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்றும் முடிவுக்கு வந்தோம். அதோடு 'கிரீன் பீஸ்' அமைப்பு இதுபோன்ற பணிகளில் இறங்கி வெற்றி பெற்றதும் எங்களுக்கு ஊக்கமளித்தது.

 • உங்கள் அமைப்பு சாதித்த அல்லது சந்தித்த சூழல் சிக்கல்கள் குறித்து...

எங்கள் அமைப்பு எந்தச் சூழல் சிக்கலையும் நேரடியாகச் சந்திக்கவில்லை. தூத்துக்குடி ஸ்டெர்லைட், கும்மிடிப்பூண்டி தாப்பர் டூபாண்ட், பொள்ளாச்சி மாட்டிறைச்சி ஆலை, கொல்லிமலை நீர்மின்திட்டம் போன்ற சிக்கல்களை ஆராய்ந்து, அது சூழலுக்கும் மக்களுக்கும் எந்த விதத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை விளக்கி புத்தகங்கள் வெளியிட்டோம். உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து அதை மக்களிடம் கொண்டு சென்றோம். அது குறிப்பிடத்தக்க அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சந்தித்த சிக்கல்கள் என்று எடுத்துக் கொண்டால், போடிநாயக்கனூர் பகுதியிலுள்ள ராசிங்காபுரம் என்ற இடத்தில் ஸ்டெர்லிங் தேக்குமர வளர்ப்புத்திட்டம் பற்றிய பிரச்சினையில் நாங்கள் நேரடியாக களம்இறங்கியபோது, அந்த நிறுவனத்தினர் எங்களைத் தாக்க வந்தனர். அதுபோல் கிழக்குக் கடற்கரைச் சாலை பற்றிய விடியோ படம் எடுக்கும்போது வழிமறித்து தகராறு செய்தார்கள்.

 • உங்கள் வெளியீடுகள் பற்றி...

மூன்றாம் உலகச் சிக்கல்கள் குறித்த புத்தகங்களை வெளியிட்டுள்ளோம். ஸ்டெர்லைட் ஆலை, டங்கல் திட்டம், இயற்கை வேளாண்மை பற்றிய வெளியீடுகள், சூழலியல் பற்றி புத்தகங்கள், தற்போது 'மூன்றாம் உலகப் போர் தண்ணீருக்கா?'' என்ற புத்தகம் வரை வெளியிட்டுள்ளோம். எதிர்காலத்தில் மக்களுக்கு எந்த மாதிரியான விழிப்புணர்வை கொடுக்க முடியும், கொடுக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டுதான் நாங்கள் முக்கியமாக வெளியிட்டுள்ளோம். 'பூவுலகு' என்ற விழிப்புணர்வுச் செய்தியிதழைக் காலாண்டிதழாக நடத்தி வருகிறோம்.

 • சூழல் சிக்கல்கள், மனிதஉரிமைச் சிக்கல்கள் ஆகியவற்றுக்காக மக்களைத் திரட்டிப் போராடும் எண்ணம் இருக்கிறதா?

நாங்கள் மக்களைத் திரட்டிப் போராடவில்லை, ஏனென்றால் மக்களை முன்னிறுத்திப் போராடக் கூடிய இயக்கங்கள் தமிழகத்தில் நிறைய இருக்கின்றன. அவர்களுக்கு எங்களது அமைப்பு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறது. நாங்கள் சந்தித்த பல்வேறு சூழல் சிக்கல்களுக்கு எங்கள் முழு ஆதரவையும் கொடுத்து வருகிறோம்.

 • 'வளர்ச்சி' பிரச்சினையைப் பற்றி...

இந்தச் சொல்லுக்கு இப்போது மதிப்பு போய்விட்டது. ஏனென்றால் இன்றைக்கு வளங்குன்றா வளர்ச்சியே நிலைத்த ஒன்றாகிவிட்டது. விவசாய அலுவலர்களே இப்போது இயற்கை உரத்தைப் பயன்படுத்தத் சொல்கிறார்கள். அவர்களே வளங்குன்றா வளர்ச்சியை ஆதரிக்கிறார்கள்.

தொழிற்புரட்சியின் விளைவாக வந்த வளர்ச்சியை நாங்கள் எதிர்க்கவில்லை. சூழல் கேட்டை உருவாக்கக்கூடிய, வெளிமாநிலங்களிலிருந்து துரத்தப்பட்ட தொழிற்சாலைகள் எல்லாம் இங்கு அமைக்கப்படுவதைத்தான் எதிர்க்கிறோம். திருப்பூர், கரூர் சாயப்பட்டறைகள், திண்டுக்கல், வாணியம்பாடி தோலாலைகள் போன்றவை முறையான சுத்திகரிப்புடன் செயல்பட்டால் நாங்கள் ஏன் அதை எதிர்க்கப் போகிறோம்?

 • பசுமைப்புரட்சியைப் பற்றி...

பசுமைப்புரட்சியை ஆதரித்து வளர்த்தவர்களான எம்.எஸ். சுவாமிநாதன், சி. சுப்பிரமணியன் போன்றவர்களே இன்றைக்கு வளங்குன்றா விவசாயம் பற்றிப் பேசுகிறார்கள். பசுமைப்புரட்சி தொடங்கப்பட்டபோது பயன் இருந்தது போலத் தெரிந்தது. பின்பு எல்லாம் கெட்டுவிட்டது. தற்போது பஞ்சாபில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு காரணமே பசுமைப் புரட்சிதான் என்று வந்தனா சிவா போன்றவர்கள் சொல்கிறார்கள்.

பசுமைப்புரட்சியில் அதிக உள்ளீடு கொடுத்தால் வெளியீடு/மகசூல் அதிகமாக இருக்கும். ஆனால் வளமான பல்லுயிரியம் அழிந்து, அரிசி மட்டுமே சாப்பாடு என்றாகிவிட்டது. பசுமைப்புரட்சியால் திணை, கேழ்வரகு, சாமை, கம்பு, பருப்பு வகைகள் அழிந்து போய்விட்டன. இயற்கைச் செல்வம் அழிந்துவிட்டது. நெல் குட்டையாகிப் போய்விட்டது. இதனால் கால்நடைகளுக்குத் தீவனம் கிடைக்கவில்லை. நிலம் பாழாகிப் போய்விட்டது.

 • தற்போதுள்ள முக்கிய சூழல் சிக்கலாக எதைக் கருதுகிறீர்கள்?

இன்றைக்கு உள்ள முக்கிய சூழல்சிக்கல் என்று எடுத்துக் கொண்டால், தண்ணீர் சிக்கல்தான் பெரிதாக இருக்கிறது. சூழலியலில் அடிப்படையே தண்ணீர்தான். குளங்கள், ஏரிகள் பெருவாரியாக கட்டடங்களாக மாற்றப்பட்டுவிட்டன. சில ஆறுகள் முற்றிலும் மாசுபட்டு விட்டன. அதை மீட்டெடுப்பது மிகவும் கடினம்.

அடுத்ததாக, தற்போது பூமி வெப்பமடைந்து, அதனால் ஏற்படும் கடுமையான காலநிலை மாற்றங்களால் பூமி ஆபத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது. நிறைய மாநாடுகள் நடத்தப்படுகின்றன. ஆனால் எந்தச் சிக்கலையும் தீர்க்கவில்லை. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் வளங்குன்றா வளர்ச்சியே எதிர்காலத்தை தீர்மானிக்கும்.

 • சிங்காரச் சென்னை திட்டம் பற்றி...

சிங்காரச் சென்னை திட்டம் என்பது 'விஷன் 2000', சென்னைக்கான 'வளங்குன்றா வளர்ச்சித் திட்டம்' என்ற இரண்டு திட்டங்கள் இணைந்தது. ஆனால் இரண்டிலும் நிறைய முரண்பாடுகள் உள்ளன. விஷன் 2000 திட்டம் உலக வங்கி உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதில் நடைபாதை வியாபாரிகள், குடிசைகளை அப்புறப்படுத்த கட்டாயப்படுத்தப்படுகிறது. ஆனால் 'சென்னை வளர்ச்சித் திட்டம்' என்பது மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு நடைபாதை வியாபாரிகள், குடிசை வாழ்மக்கள் பாதிக்கப்படாமல் வேலை நடைபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறது. இதற்கு ஐ.நா. அமைப்பின் 'மனிதக் குடியேற்ற மையம்' பணஉதவி செய்கிறது. இப்படியாக சிங்காரச் சென்னைக்கான இரண்டு திட்டங்களிலும் அடிப்படை முரண்பாடுகள் நிறைய உள்ளன. ஆனால் சென்னைக்கான 'வளங்குன்றா வளர்ச்சித் திட்டம்' சூழலியாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 • இனியும் சூழலைக் காப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?

இன்றைக்கு மக்களிடம் அதிகரித்து வரும் விழிப்புணர்வைப் பார்க்கும்போது அந்த நம்பிக்கை நிறைய இருக்கிறது. இன்றைக்கு விவசாயிகளே சூழல் சிக்கல்களைப் பற்றிப் பேசுகிறார்கள். அவர்களே சிக்கலை கையில் எடுத்து, தடுத்து நிறுத்த முடியும் என்ற நிலைமை உள்ளது. இன்றுள்ள சூழல் அமைப்புகள் திறம்பட செயல்பட வேண்டும். மரம் வளர்ப்பது மட்டும் சூழல்காப்பு நடவடிக்கை இல்லை. சூழல்சிக்கல் என்பது பரந்துபட்டது. முன்னெச்சரிக்கையாக சர்வதேச முடிவுகள் எடுத்து, சூழல் கேட்டைத் தடுத்து நிறுத்த வேண்டும். வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளில் சூழலை பாதிக்கும் தொழிற்சாலைகள் அமைப்பதை நிறுத்த வேண்டும். நிச்சயம் சூழல் காப்பாற்றப்படும்.

 • உங்களின் எதிர்காலத் திட்டம் பற்றி...

இன்றைக்கு உள்ள தொழிற்சங்கங்கள் சூழலியாளர்களை எதிரியாக நினைக்கிறார்கள். சூழல்சிக்கல் என்பது பொதுவானது. இதில் தொழிற்சங்கங்களின் பங்கு முக்கியமானது. எனவே, தொழிற்சங்கங்களை அணுகி சூழல் சீர்கேடு உங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும். சூழல் பாதிப்புக்கு எதிராக அவர்களையும் ஒருங்கிணைக்க வேண்டும்.

கல்வித்திட்டத்தில் சூழல் பாடங்களைக் கொண்டுவர வேண்டும். சூழல் கேடு அடித்தட்டு மக்களைத்தான் அதிகம் பாதிக்கிறது. அவர்களை ஒன்றிணைத்துப் போராட வேண்டும். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க வேண்டும். சூழல் கேடு அனைவருக்கும் பொதுவானது என்பதை அழுத்தமாக உணர வைக்க வேண்டும்.

 • இந்தியாவும் பாகிஸ்தானும் அணுகுண்டுகள் வெடித்துள்ளதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? (1998 மே மாதம் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியிருந்தது)

இந்தியாவில் இயங்கும் அணுமின் நிலையங்கள் அணுகுண்டுகளை உருவாக்குவதற்கான மூலப்பொருட்களான யுரேனியத்தையும் புளூடோனியத்தையும் உருவாக்குவதற்காகத்தான் அமைக்கப்பட்டிருக்கின்றன என்று சூழலியலாளர்கள் கூறி வந்தனர். தற்போது நடத்தப்பட்டுள்ள இந்திய அணுகுண்டு வெடிப்புகளில் தமிழகத்திலுள்ள கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உருவாக்கப்பட்ட யுரேனியம் பயன்படுத்தப்பட்டுள்ளது அக்கூற்றை உண்மையாக்கி இருக்கிறது.

இந்தியாவில் அணுஆற்றல் துறையில் தொடர்ந்து ஆய்வுகள் நடந்து கொண்டிருந்தாலும், இந்தியாவிடம் அணுகுண்டு இருக்கிறது என்பது உலகிற்கு நன்கு தெரிந்துள்ள இக்கால கட்டத்தில் மதவாத பா.ஜ.க. கூட்டணி அரசு அணுகுண்டை வெடித்தது ஏன்? பாகிஸ்தான் இந்தியா மீது போர்தொடுக்கும் என்ற பொய்ப் பிரசாரத்தை முடுக்கிவிட்டு, அதன்மூலம் உள்நாட்டுச் சிக்கல்களைத் திசைதிருப்புவதற்கான முயற்சியே இந்த அணுகுண்டு வெடிப்பு. இந்த அணுகுண்டுக்கு 'சக்தி' என்று பெயரிட்டு, இதை இந்துத்வா குண்டாக மாற்ற பா.ஜ.க முயற்சி செய்துள்ளது. இதன்மூலம் உள்நாட்டில் வீழ்ந்துவிட்ட தனது இமேஜை தூக்கி நிறுத்த முயற்சிக்கிறார் வாஜபேயி.

மேலும், இது நாட்டுநலனைப் புறக்கணித்துவிட்டு, இது நாட்டின் கௌரவம் என்பது போன்ற மாயையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணுகுண்டு வெடிப்பின் மூலம் தெற்காசியாவில் அமைதியற்ற நிலை உருவாகியுள்ளது. இந்தியா அணுகுண்டு வெடித்ததால், நெருக்கடிக்கு உள்ளான பாகிஸ்தானும் அணுகுண்டுகளை வெடித்துள்ளது. ஏற்கெனவே தங்களது நாட்டு மக்கள் நலனைப் பற்றி கவலைப்படாமல், பெரும் தொகையை ராணுவ படைத்துறைக்கு செலவிட்டு வரும் இந்தியாவும் பாகிஸ்தானும், 'அணு ஆயுதப் போட்டி' என்ற வகையில் மேலும்மேலும் அதிக பணத்தை இனி ராணுவ படைத்துறைக்கு ஒதுக்கும். இதன் விளைவுகள் இருநாட்டு மக்களையும் மிக மோசமாக பாதிக்கும்.

சுற்றுச்சூழலுக்கும் உலக அமைதிக்கும் எதிரான விளைவுகளை உருவாக்கும் இந்த அணுகுண்டு வெடிப்புகளை பூவுலகின் நண்பர்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.