இயற்கை பாதுகாப்பு

தமிழ்நாட்டுக் காட்டுயிர்கள்

தமிழக கானுயிர்ச் செல்வத்தின் முக்கியப் பரிமாணம் பல்வகையான உயிரினங்கள்தான். வெப்ப நாடான இந்தியாவின் சிறப்பிற்குரிய ஒரு வளம் பல்லுயிரியம். மரங்கள், செடிகொடிகள், பாலு£ட்டிகள், புள்ளினம், ஊர்வன, நீர்வாழ்வன, நண்டு போன்ற நீர்-நில வாழ்வன, பூச்சிகள், வளர்ப்புப் பிராணிகள் போன்ற பல்வேறு உயிரினங்கள் அனைத்தும் இந்தப் பல்லுயிரியத்தில் அடங்குகின்றன.

தமிழ்நாட்டிலுள்ள நீலகிரி, ஆனைமலை, பொதிகைமலை போன்ற மலைப் பிரதேசங்கள், புதர்க்காடுகள், ஏரிகள், நதிகள், கழிமுகங்கள், உப்பங்கழிகள், கடற்கரைகள், சதுப்பு நிலங்கள் போன்ற பல்வேறு விதமான புவியமைப்புகள், எண்ணிலடங்கா உயிரினங்களுக்கு உறைவிடங்களாக அமைந்துள்ளன. மக்கள் வாழும் இடங்களுக்கு அருகிலுள்ள தோட்டங்கள், வயல்வெளிகள், குளங்கள், வெட்ட வெளிகள் போன்றவையும் பல உயிர்களுக்கு வாழிடங்களே.

ஆனால் கடந்த ஒரு நு£ற்றாண்டில் இந்த உறைவிடங்களும், அவற்றில் வாழும் கானுயிர்களும் மனிதர்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் நாசமாக்கப்பட்டு வருகின்றன. இந்த அழிப்பில் நம் எல்லோருக்கும் பங்கு உண்டு. காபி, தேயிலை போன்ற தோட்டப் பயிர்களுக்காக மலைத் தொடர்ச்சிக் காடுகள் அழிக்கப்படுகின்றன.செயற்கைத் துணியிழை மற்றும் காகிதத் தொழில்களால் காடுகள் சீரழிக்கப்படுகின்றன. நதிகளில் ரசாயன நச்சுப் பொருள்களின் கலப்பு, பூச்சிக்கொல்லி மருந்துகளின் தீயவிளைவு, நிலவேட்டையால் ஏரிகள் நிரப்பப்பட்டது, யானைத் தந்த வியாபாரம் போன்றவற்றால் காட்டு உயிரினங்கள் அழிந்து வருகின்றன. காடுகள், நீர்நிலைகள் போன்ற உறைவிடங்கள் அழிந்துவிட்டதால், காட்டுயிர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துபோனது.

அரிய உயிரினங்களில் சில தமிழ்நாட்டுக் காடுகளில், அழிவின் விளிம்பில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றன. இதில் குறிப்பிடத்தக்கது ஆனைமலைப் பகுதியில் வாழும் சிங்கவால் குரங்கு. களக்காடு, ஆனைமலை போன்ற சரணாலயங்களின் அடர்ந்த மழைக்காடுகளில் மர உச்சியிலேயே வாழக்கூடிய இந்தக் குரங்கினம், சர்வதேச அளவில் அறிவியலாளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. நீலகிரியிலுள்ள கருமந்தியும் அவ்வாறே. பாறைகள் நிறைந்த மலை முகடுகளில் வாழும் வரையாடு எனும் அரிய விலங்கு, வேட்டைப் பிரியர்களால் கொன்று குவிக்கப்பட்டதால், எண்ணிக்கையில் மிகக் குறைந்துவிட்டது. அதுபோல், ஆயிரக்கணக்கில் கூட்டம்கூட்டமாகத் திரிந்த திருகுக் கொம்புடைய வெளிமான், இப்போது கோடிக்கரை, கிண்டி முதலிய சரணாலயங்களில் மட்டுமே காணக்கிடைக்கிறது. இதைத் தவிர ஏற்காடு மலைகளில் உள்ள மூங்கணத்தான் என்று அறியப்படும் சிறு விலங்கு போன்று, தமிழ்நாட்டில் மட்டுமே காணக்கூடிய அரிய ஜீவராசிகளும் உண்டு.

பல அபூர்வப் பறவையினங்களுக்கும் தமிழகக் கானகங்கள் இருப்பிடமாக உள்ளன. பசுமையான சோலைக் காடுகளில் மட்டுமே வாழக்கூடிய வான்கோழி அளவுள்ள இருவாசி மற்றும் கானாங்கோழி போன்ற புள்ளினங்கள் இதில் அடங்கும். கடந்த நு£ற்றாண்டில் தமிழ்நாட்டில் அற்றுப்போன உயிரினங்களில், சத்தியமங்கலம் புதர்க்காடுகளில் காணப்பட்ட சிவிங்கிப் புலியும், ஹோகனேக்கல் அருகே இருந்த வரகுக் கோழியும், கழிமுகங்களில் வாழ்ந்த உப்புநீர் முதலையும் முக்கியமானவை. காவிரியில் இருந்த கருப்புக் கெண்டை மீன் இன்று இல்லை.

சோலைக் காடுகள், மன்னார் வளைகுடாவில் உள்ள கடலடிச் செடிகொடிகள் போன்ற தாவர இனங்களும் அற்றுப்போகும் நிலையிலுள்ளன. ஆற்றங்கரைக் காடுகள் மறைந்தேவிட்டன. மண் அரிப்பு, கால்நடைத் தீவனப் பற்றாக்குறை, தண்ணீர் தட்டுப்பாடு, வெள்ளம், வறட்சி போன்றவற்றுக்கு மூல காரணம் காடுகள் நாசமானதுதான். இங்கு நாம் மனங்கொள்ள வேண்டியது, இத்தகைய சிதைவால் ஏழைகளே மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே.

சில தீரா நோய்களுக்கு மருந்து, உணவுப் பற்றாக்குறைக்கு நிவாரணம் என பல தீர்வுகள் இப்பல்லுயிரியத்தில் மறைந்திருக்கலாம். சகல உயிர்களுக்கும் ஆதாரமான சூழலியல் செயலாக்கங்களுக்கு இந்த உயிரின வளம்தான் அடிப்படை என்பதையும், மக்களின் நல்வாழ்விற்குப் பல்லுயிரியமே ஆதார சுருதி என்பதையும் நம் முன்னோர்கள் உணர்ந்திருந்தார்கள் என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு. பல்லுயிர் ஓம்புதல் (322) என்று வள்ளுவர் குறிப்பிடுவதும் இந்த அக்கறையையே. இந்த உயிர்வளம் நமது வம்சாவளிச் சொத்து. இழந்துபோனால் மீட்க முடியாத செல்வம். ஆனால் இதை ஒரு பெருமைக்குரிய மரபுச் செல்வமாக நாம் இனம் காண்பதில்லை.

எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள அதிக கற்பனை தேவையில்லை. தற்போது ஆங்காங்கு ஒட்டிக்கொண்டுள்ள இயற்கை வடிவமைப்புகள் ஒட்டுமொத்தமாக அழிந்து போகும். காட்டுயிர்கள் ஒவ்வொன்றாக அழிவை நோக்கி பயணிக்கத் தொடங்கும். அவற்றில் பல மனிதர்களால் பார்க்கப்படாதவையாகவும், வகை பிரிக்கப்படாதவையாகவும் இருக்கும்.

இன்று இந்த மரபுச் செல்வத்திலிருந்து நாம் மிகவும் அன்னியப்பட்டுப் போய்விட்டோம். வயற்புறம் மற்றும் காடுகளில் காணப்படும் உயிரினங்கள் பற்றிய நாட்டுப்புற மக்களின் பட்டறிவு, பதிவு செய்யப்படாமல் மறைந்து போகிறது. இந்த அறிவும் அது சார்ந்த சொற்களும் மீட்கப்பட்டு புழக்கத்துக்குக் கொண்டுவரப்பட வேண்டும். பறவைகள், விலங்கினம் இவற்றின் பாரம்பரிய தமிழ்ப் பெயர்களை நாம் மறந்துவிட்டோம்.

உயிரினங்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாததாலும், காட்டுயிர் மீது, அவை பற்றிய விவரங்களில் நாம் அக்கறை காட்டாததாலும் அப்பெயர்கள் வழக்கொழிந்துவிட்டன. பெயர்களுடன் அவை பற்றிய பட்டறிவும் மறைந்துவிட்டது. அலங்கு என்ற சிறிய விலங்கு கிராமங்களில் இரவில் காணப்படுவது. இன்று அது எங்காவது பிடிபட்டால் 'எறும்புத்தின்னி' என்னும் விநோத மிருகம் என்று நாளிதழ்களில் செய்தி வருகிறது. கிஸீt மீணீtமீக்ஷீ எனும் ஆங்கிலப் பெயரை, மொழிபெயர்த்து எறும்புத்தின்னியாக்கி விட்டார்கள். மற்ற பல பறவைகள், விலங்குகள் பெயர்களுக்கும் இதே கதிதான். நல்லவேளையாக தாவரங்களின் பெயர்கள் மறக்கப்படவில்லை. சித்த மருத்துவர்களால் அவை பாதுகாக்கப்படுகின்றன. ஆனால் பல காட்டு உயிரினங்களின் தமிழ்ப் பெயர்கள் மறைந்து வருகின்றன.

பாரம்பரிய அக்கறைகள்

ஏரி போன்ற நீர்நிலைகளும், நதிகளும், மலைகளும், காடுகளும் நாட்டுக்கு இன்றியமையாதவை என்றார் வள்ளுவர்.

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு

நமது மூதாதையர்கள் சுற்றுச்சூழலின் முக்கிய அம்சங்களையும், காட்டுயிர்களை பேண வேண்டியது பற்றியும், இயற்கை சமநிலையைப் போற்ற வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்திருந்தார்கள். இதற்கு போதிய சான்றுகள் உள்ளன. இமயத்தில் வசிக்கும் மலைவாசிகளாயினும், தமிழ்நாட்டுக் குடியானவர்களாயினும், சூழல் பற்றி அக்கறை, அவர்களின் பாரம்பரியங்களில் இழையோடுவதைக் காணலாம்.இன்றும் சில பழங்குடியினர் அடர்ந்த காட்டுப் பகுதிகளைப் புனிதத் தோப்பு என்று பாதுகாக்கிறார்கள்.

நீர், காடு, நிலம் போன்ற இயற்கைச் செல்வங்களை அழிக்காமல் பேணி நலம் பெறும் முறையிலேயே நமது சமூகவாழ்வும் அமைக்கப்பட்டிருந்தது என்று சமூகவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். வேளாண்மை முறைகளும் இயற்கை சமநிலையைப் பேணும் முறையிலேயே அமைந்திருந்தன.

பொழுதுபோக்கிற்காக உயிரினங்களைக் கொன்று மகிழும் கொடிய பழக்கம் அன்று இல்லை. ஆனால் இன்று நம் வாழ்வில் இயந்திரங்களும், வணிக நோக்கும் வந்தபிறகு, இந்த நம்பிக்கைகள் வெறும் குறியீடுகளாக எஞ்சிவிட்டன. பாரம்பரியம் தரும் பாடங்களை மறந்துவிட்டோம். நம் வாழ்க்கை முறை மூலம் சுற்றுச்சூழலை சீரழிப்பதில் போட்டி போடுகிறோம். இந்நிலை மாற இயற்கைச் சூழலைப் போற்றும் வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். தமிழ் மக்களிடையே சுற்றுச்சூழல், பல்லுயிரியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த, ஓர் ஆழ்ந்த அக்கறையை உருவாக்க துறைச் சொற்கள் புழக்கத்தில் கொண்டு வரப்பட வேண்டும். அப்போதுதான் சூழியல் சார்ந்த கருதுகோள்களை, எளிய தமிழில் வெளிப்படுத்த முடியும்.