இயற்கை பாதுகாப்பு

புத்தக அறிமுகம் - 'இயற்கை : செய்திகள், சிந்தனைகள்'

ச.முகமது அலி எழுதி பொள்ளாச்சி இயற்கை வரலாற்று அறக்கட்டளை சமீபத்தில் வெளியிட்டுள்ள 'இயற்கை : செய்திகள், சிந்தனைகள்' என்ற புத்தகம் இயற்கை வரலாறு தொடர்பான ஒரு குறு கலைக்களஞ்சியம். வெகுமக்களை கருத்தில் கொண்டு எழுதப்பட்டுள்ள இப்புத்தகம், தமிழ் இயற்கையியல் புத்தகங்களில் ஒரு மைல்கல்.

தமிழின் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் மட்டுமே உள்ள காட்டுயிர் எழுத்தாளர்களில் ச. முகமது அலி முதல் வரிசையில் இருப்பவர். அவர் எழுதிய 'இயற்கை: செய்திகள்-சிந்தனைகள்' எனும் புத்தகம் சமீபத்தில் வெளிவந்துள்ளது. முன்னோடி முயற்சியான இந்தப் புத்தகம், தமிழின் மிகச் சிறந்த காட்டுயிர் புத்தகங்களில் ஒன்றாகத் திகழும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

இயற்கையின் பல்வேறு கூறுகளை, முக்கிய தலைப்புகளின் கீழ் இப்புத்தகம் தொகுத்துள்ளது. தற்போதுள்ள நிலையில் அறிவியல் தகவல்கள், அதை முன்வைக்கும் பாங்கு, நடை காரணமாக புத்தகம் சிறப்பாக உள்ளது. இதை மேம்படுத்தும் வகையில் அகர வரிசைப்படி, பகுப்பு முறைகளின் கீழ் தகவல்களைத் தொகுக்கலாம். ஓவியங்களை அதிகரித்து அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு கலைக்களஞ்சியமாக, காலகாலத்துக்கும் முன்னோடி முயற்சியாக இப்புத்தகத்தை ஆக்க வேண்டும் என்று இப்புத்தகத்தை படித்து முடித்தவுடன் யோசனை தோன்றியது. தமிழில் காட்டுயிர்கள் பற்றி மா. கிருஷ்ணன், சு. தியடோர் பாஸ்கரன் உள்ளிட்ட சிலரே வெகுமக்களுக்கு தொடர்ச்சியாக எழுதியுள்ளனர். தமிழில் காட்டுயிர்கள் தொடர்பாக 20க்கும் குறைவான சிறந்த புத்தகங்களே வந்துள்ளன. அவற்றில் முதல்வரிசையில் வைத்து பாராட்டத்தக்க முன்னோடி புத்தகம் இது.

அவரது வார்த்தைகளிலேயே சொல்வதானால் முகமது அலி ஒரு 'தீவிரமான இயற்கை விரும்பி'. இயற்கை வரலாற்று அடிப்படையைப் புரிந்து, நுகர்ந்து இயற்கை வளம் காக்கும் பொருட்டு எந்த வகைப் பரிமாணங்களையும் எதற்கும் விட்டுக் கொடுக்காதவர். அவரது இந்த அரிய முயற்சியை நெஞ்சு நிமிர்த்தி வரவேற்க வேண்டும்.

'இயற்கை: செய்திகள், சிந்தனைகள்', ச. முகமது அலி, வெளியீடு: இயற்கை வரலாற்று அறக்கட்டளை, ஆல்வா மருத்துவமனை வளாகம், அம்பராம்பாளையம், பொள்ளாச்சி - 642 103, தொலைபேசி: 04259 - 253252, 253303, பக்கங்கள்: 200