இந்திய நகரங்களால் அடிக்கடி பெய்யும் பெரும் மழையைத் தாங்கமுடியுமா?

இந்தியாவின் பல நகரங்களில் பெருமழை பெய்து வெள்ளம் பெருகுவது அடிக்கடி நிகழ ஆரம்பித்துள்ளது. நம்முடைய நகர்ப்புறங்களால் இதனை எதிர்கொள்ள முடியுமா?

எஸ்.கோபிகிருஷ்ண வாரியர் | தமிழில்: டெக்ஸ்

இந்த ஆண்டு சுதந்திர தினத்தை பெங்களூரு நகரவாசிகளால் மறக்க முடியாது. கொட்டித் தீர்த்த மழையின் காரணமாக நகரம் முழுவதும் தண்ணீரில் மூழ்கியிருந்தது. அன்றைய தினத்திற்கு முதல் நாள் நகரம் உறங்கிக்கொண்டிருந்தபோது, கன மழை பெய்ய ஆரம்பித்தது. விடிவதற்குள் 128 மில்லி மீட்டர் மழை அங்கு பெய்திருந்தது. ஆகஸ்ட் 21ஆம் தேதி இதே போன்ற கன மழை சண்டீகரில் பெய்தது. அன்று திங்கட்கிழமை. சண்டீகர்வாசிகள் அவசர அவசரமாக வேலைக்குக்கு புறப்பட்டுக்கொண்டிருந்தபோது, கன மழை பெய்ய ஆரம்பித்தது. மதியத்திற்குள் 112 மி.மீட்டர் மழை அங்கு கொட்டித் தீர்த்துவிட்டது. சிறிது நேரத்தில் இந்தியாவிலேயே மிகச் சிறப்பாகத் திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகரத்தின் நிர்வாகம், செய்வதறியாது கைகளைப் பிசைந்தது. ஜூலை 26-27ஆம் தேதியன்று குஜராத்தின் அகமதாபாத் நகரில் இதே போன்று கன மழை பெய்தது. 24 மணி நேரத்தில் 200 மி.மீ. மழை!! சபர்மதி நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் கன மழை பெய்ததால் ஆற்றை ஒட்டிக் குடியிருந்த சுமார் 10,000 பேர் வெளியேற்றப்பட்டனர். ஆகஸ்ட் 11, 12 ஆகிய தேதிகளில் திரிபுராவின் அகர்தலா மாவட்டத்தில் இதேபோல பெருமழை கொட்டித் தீர்த்தது. முதல் நாளில் 102 மி.மீ. மழையும் அடுத்தடுத்த நாட்களில் 94, 102 மி.மீ. மழையும் பெய்தது. அகர்தலா நகரமே ஸ்தம்பித்துப்போனது. இம்மாதிரி திடீர் திடீரென பெருமழை பெய்யும் நிகழ்வுகள் இந்தியா முழுவதும் அதிகரிக்க ஆரம்பித்துள்ள நிலையில், சில கேள்விகளை நாம் கேட்டாக வேண்டும். கால நிலை மாற்றத்தின் காரணமாகத்தான் இம்மாதிரி தீவிர மழை அல்லது கடும் வெயில் போன்ற பருவநிலை மாற்றங்கள் நடக்கின்றனவா? இம்மாதிரி நிகழ்வுகளைச் சமாளிக்க இந்திய நகரங்கள் தயாராக இருக்கின்றனவா? அம்மாதிரி நிகழ்வுகளை சமாளிக்கும் வகையில் நகரங்களை மேம்படுத்த முடியுமா? இம்மாதிரி பருவநிலை நிகழ்வுகளின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே போவதை சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டுவதாக பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்சில் உள்ள இன்டர்டிசிப்ளினரி சென்டர் ஃபார் வாட்டர் ரிசர்ச்சின் (இக்வார்) தலைவர் பிரதீப் மஜும்தார் கூறுகிறார். 2015ஆம் ஆண்டில் நவம்பர் 8ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 4ஆம் தேதிக்குள் சென்னையில் ஐந்து முறை இம்மாதிரி பெருமழை பெய்தது. ஒரு மழையிலிருந்து மீள்வதற்கு முன்பாகவே இன்னொரு மழை. இதன் உச்சகட்டமாக செம்பரம்பாக்கம் ஏரி அடையாற்றில் திறந்துவிடப்பட்டது. நகருக்குள் கரைகளை மீறி வெள்ளம் பாய்ந்தது. அடையாறு ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த சென்னை விமான நிலையத்தின் இரண்டாவது ரன்வே நீரில் மூழ்கியது. விமான நிலையம் பல நாட்களுக்கு ஸ்தம்பித்தது. நகரை விட்டு வெளியேற விரும்பியவர்கள் விமான நிலையத்தில் சிக்கிக்கொண்டார்கள். அரக்கோணத்தில் உள்ள இந்திய கடற்படைக்குச் சொந்தமான விமான நிலையத்திலிருந்து பயணிகள் விமானம் பறக்க அனுமதிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளில் சென்னை, ஹைதராபாத், பெங்களூர் ஆகிய நகரங்களில் ஏற்பட்ட வெள்ள நிகழ்வுகளை இக்வார் ஆராய்ந்து வருகிறது. பெங்களூரைப் பொறுத்தவரை, இம்மாதிரி தீவிர பருவநிலை நிகழ்வுகள் அதிகரிப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. பெங்களூரில் உள்ள அட்ரீ எனப்படும் அசோக டிரஸ்ட் ஃபார் ரிசர்ச் ஈகாலஜி அண்ட் என்விரோண்மெண்ட் அமைப்பும் இந்த முடிவை உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த நூறு ஆண்டுகளில், இந்த நகரத்தில் 100 மி.மீட்டருக்கு மேல் மழை பெய்யும் நிகழ்வுகள் அதிகரித்திருப்பதை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது. ஆனால், இந்த ஒரு விவகாரத்தை மட்டும்வைத்து, சூழல் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. 2015 டிசம்பர் 1ஆம் தேதி சென்னையில் பெய்த மழைக்கு சூழல் மாறுபாடு காரணமில்லையென தில்லி ஐஐடி, பிரிட்டனின் ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. இந்திய வானிலை ஆய்வு மையமும் சில தனியார் வானிலை ஆய்வாளர்களும் ஒரு நகரத்தில் மழைபெய்யப் போவதைக் கணிக்கிறார்கள். ஆனால், எவ்வளவு பெரிய மழை பெய்யும் அந்த நகரத்தில் அது என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தும் என்பதை அவர்களால் கணிக்க முடிவதில்லை. நகரங்களில் பெரும் எண்ணிக்கையில் அடர்த்தியாக மக்கள் வசிப்பதால், இம்மாதிரி பெரும் மழையால் ஏற்படும் உயிரிழப்பு, சேதம் ஆகியவை கிராமங்களோடு ஒப்பிடுகையில் நகரங்களில் அதிகமாகவே இருக்கும். 2015 நவம்பர் – டிசம்பரில் சென்னையில் மழையால் ஏற்பட்ட இழப்பு 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் என சர்வதேச காப்பீட்டு நிறுவனமான மியூனிக் ரே மதிப்பிட்டது. ஒரு பக்கம், இம்மாதிரி அதீத மழை பெய்யும் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே போகும் சூழலில், நகரங்களில் உள்ள கட்டமைப்பு வசதிகளும் மிக மோசமாகவே இருக்கின்றன. நாம் நிலத்தைப் பயன்படுத்தும் விதமும் நகர்ப்புற வெள்ளத்திற்கு ஒரு காரணமாக அமைகிறது. நகர்ப்புறத்திற்கு வெளியில் உள்ள நிலத்தில் பெய்யும் மழையில் 80 சதவீதம் நிலத்திற்குள் செல்கிறது. நகருக்குள், முழுவதும் தார்ச் சாலைகளும் காங்க்ரீட் வீடுகளுமாக இருப்பதால், பெய்யும் மழை சுத்தமாக நிலத்திற்குள் செல்ல முடிவதில்லை. இதனால் நகர்ப்புறப் பகுதிகளில் வெள்ளத்தின் அளவு அதிகரிக்கிறது. ஜூலை மாதத்தில் அகமதாபாதில் பெய்த மழை ஒன்றும் வரலாறு காணாத மழையில்லை. ஆனால், அதனால் ஏற்பட்ட தாக்கம் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இருந்தது. காரணம், நகருக்குள் எந்த இடத்திலும் பூமிக்குள் தண்ணீர் செல்லவே வழியில்லை. சென்னையில் 2015 டிசம்பர் 1ஆம் தேதியன்று செம்பரம்பாக்கம் ஏரி நீரை அடையாறு ஆற்றில் திறந்துவிட்டதுதான் நகரில் ஏற்பட்ட மாபெரும் வெள்ளத்திற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆனால், ஏற்கனவே பெய்த மழை நீர் பூமியில் இறங்க வழியில்லாமல் ஆற்றில் சேர்ந்து, செம்பரம்பாக்கத்திலிருந்து திறந்துவிடப்பட்ட நீரும் சேரவே பெரும் வெள்ளம் ஏற்பட்டதாக பிந்தைய ஆய்வுகள் தெரிவித்தன. இந்தியாவின் பெரும்பாலான நகரங்கள் எல்லாமே கிராமங்கள், சிறு நகரங்களிலிருந்து மனம்போன போக்கில் வளர்ந்தவைதான். ஆகவே, போதுமான கட்டமைப்பு இந்த நகரங்களில் இருக்காது. தற்போது உள்ள கட்டமைப்பு பெரும் மழையைத் தாங்கும் அளவுக்கு இல்லை. பெரும் மழைப் பொழிவுகளை எதிர்கொள்ளும்வகையில் நம் நகரங்கள் அதன் கட்டுமானங்களையும் சமூக அமைப்புகளையும் மாற்றிக்கொள்ள வேண்டும். அதாவது, பெரும் மழை, நீண்ட நேரம் பெய்யும் மழை, அடிக்கடி பெய்யும் மழை ஆகிவற்றை எதிர்கொள்ளும் வகையில் நகரங்கள் இருக்க வேண்டும். ஏனென்றால் இப்போது இவை அடிக்கடி நடக்க ஆரம்பித்துவிட்டன. அப்போதுதான் எதிர்காலத்தில் நமது நகரங்கள் இம்மாதிரி இயற்கைப் பேரிடர்களை ஓரளவுக்காவது தாங்கும்.

இந்தியா கிளைமேட் டயலாக் இதழில் 28 ஆகஸ்ட் 2017ல் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments