நிலா நிலா ஓடி வா!

“அம்மா! நீ எதற்கும் பயப்பட வேண்டாம். நான் ரொம்ப தூரம் போகலை. பக்கத்துலதான் போறேன். ரொம்ப சீக்கிரம் திரும்ப வந்துருவேன். இந்த பயணம் என்னோட படிப்புக்கு ரொம்ப முக்கியம். நம்ப முன்னோர்கள் எப்படி வாழ்ந்தாங்க? எப்படி அழிஞ்சு போனாங்க? என்பதை படித்தால்தானே நம்ம தலைமுறையை காப்பாத்த முடியும் இதற்கு போய் பயப்படுறியே?” என்றாள் நிலா. “அதெல்லாம் பாடத்தில் இருக்கிறதுதானே அதை நேரில் போய் பார்க்கணுமா அந்த இடம் ரொம்ப பயங்கரமானது என்று எல்லோரும் சொல்றாங்களே!” – கவலைப் பட்டார் அம்மா. “பயப்படாமல் இரும்மா… நான் மட்டுமா தனியா போறேன் என்னோட மேலும் ரெண்டு, மூன்று மாணவர்கள் வர்றாங்க… பாதுகாப்புக்காக ஒரு ரோபோ படையே வருது. நீ என்னோட எப்ப வேண்டுமானாலும் பேசலாம்… வெறும் இரண்டரை மில்லியன் ஒளி ஆண்டு தூரம்தானே இதற்கு போய் இப்படி பயப்படறியே… நான் ஒன்றும் மனிதர்களே வசிக்காத கிரகத்துக்கு போகலை… நம்ம முன்னோர்கள் வாழ்ந்த பூமிக்குத்தானே போறேன்” என்றபடியே வீட்டைவிட்டு வெளியேறினாள் நிலா. நிலா – ஆன்ட்ரமீடா கேலக்ஸியின் வெஸ்டோ சூரிய குடும்பத்தின் நோவா கிரகத்தில் வசிப்பவள். இந்த 3016ம் ஆண்டிலும் மானுடவியல் படிக்கும் அரிய பிறவி. ஒருவகையில் இவளது இந்த படிப்புதான் இவளுக்கு பால்வீதி கேலக்ஸியில் முன்னோரு காலத்தில் மனிதர்கள் வாழ்ந்த பூமிக்கு செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தியது. நோவா கிரகத்திற்கு உணவுப் பொருட்களை வழங்கும் கெக் கிரகத்தில் ஏதோ பிரச்சினையாம். எனவே மனிதகுலம் தோன்றிய பூமிக்கு சென்று உணவு உற்பத்தி குறித்து ஆய்வு செய்வதற்கு நோவா கிரக அரசு நிலா தலைமையில் ஒரு குழுவை அமைத்திருக்கிறது. அக்குழுவில் ரவி, அபி, கிரி, பட் ஆகியோரும் உள்ளனர். இதில் ரவிதான் விண்கலத்தை செலுத்தப் போகும் வலவன். மற்ற மூவரும் நிலாவைப் போல ஆய்வு மாணவர்கள், ஆனால் அறிவியல் புலத்தை சேர்ந்தவர்கள். பல்கலைக் கழகத்திற்கு நிலா வரும்போது மற்றவர்கள் முன்னதாகவே வந்து நிலாவுக்காக காத்திருந்தார்கள். துறைத்தலைவர் புஷ், வழியனுப்ப வந்திருந்தார்.

“நீங்கள் செய்யப்போகும் பயணம் மிகவும் முக்கியமானது. நோவா கிரகத்தின் உணவுத் தேவை பெருகி வரும் நிலையில் இதுவரை உணவு வழங்கிவந்த கெக் கிரகத்தில் உணவைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் மனிதர்கள் பூமியில் செய்த தவறுகள் மீண்டும் நடக்கிறதோ என்ற சந்தேகம் கூட இருக்கிறது. அது குறித்து பின்னர் பேசலாம். இப்போது நீங்கள் பூமியில் இந்தியா என்று அழைக்கப்பட்ட நாட்டின் தென்பகுதிக்கு செல்லப்போகிறீர்கள். அதற்கும் ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. இந்தக் குழுவில் உள்ள ஐந்து பேரின் முன்னோர்களும் அந்தப்பகுதியில் வாழ்ந்தவர்கள். உங்கள் மரபணு அதை உறுதி செய்திருக்கிறது. எனவே அந்தப் பகுதியில் நீங்கள் ஆய்வு செய்வது பொருத்தமாக இருக்கும் என்று நோவா கிரக அரசு முடிவு செய்துள்ளது. உங்களைப் போல பல குழுக்கள் பூமியின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறார்கள். நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டிய மிக முக்கியமான அம்சம், உங்கள் பாதுகாப்பு! ஏனென்றால் நிலம், நீர், காற்று என்ற அனைத்தையும் மிகமோசமான சீர்குலைவுக்கு ஆளாக்கிய ஒரு பகுதிக்கு போகிறீர்கள். விண்கலத்தை விட்டு இறங்கும்போது அனைத்து பாதுகாப்பு சடங்குகளையும் நீங்கள் மறவாமல் செய்ய வேண்டும். மேலும் பூமியில் இந்த ஆண்டு முழுவதும் பகலாக இருப்பதால்
கடும் வெப்பம் நிலவுகிறது. ஆயிரம் வருடத்திற்கு முன் அப்பகுதியில் வாழ்ந்த மக்கள், சூரியனின் கதிர்கள் உடல்மேல் நேரடியாக படும்படி வாழ்ந்திருக்கிறார்கள். இப்போது அப்படி உங்கள் உடல்மேல் சூரியக்கதிர் நேரடியாக பட்டால் நீங்கள் தொலைந்தீர்கள். அதேபோல் அங்கிருக்கும் எந்தப் பொருளையும் நேரடியாக நீங்கள் வெறும் கையால் தொடக்கூடாது. பயங்கர ஆபத்தான சூழலிலும் சில உயிர்கள் அங்கே மீண்டும் உயிர்த்தெழுகின்றன. அதை ஆய்வு செய்யத்தான் நீங்கள் போகிறீர்கள். இந்த நோவா கிரகத்தில் நாம் வாழ்ந்தாலும், நமது கிரகத்தில் உயிர்களை உருவாக்க முடியவில்லை. இதற்காக அண்டை கிரகங்களுக்கு சென்று உயிர்களை உற்பத்தி செய்வதிலும் நிலைய பிரச்சினைகள் உள்ளன. ஒரு கிரகம் முழுமையாக அழிந்தபின்னரும், சூரிய ஆண்டில் ஓராண்டு முழுவதும் கடும் வெப்ப பகலாகவும் – ஓராண்டு முழுவதும் கடுங்குளிர் இரவாகவும் இருக்கும் நிலையிலும் பூமியில் உயிர்கள் துளிர்ப்பது நமக்கு நம்பிக்கையை தருகிறது. உங்கள் ஆய்வுமூலம் நமது நோவா கிரகத்திலும் உயிர்களை உற்பத்தி செய்ய முடிந்தால் நமது உணவுத்தேவைகளை இங்கேயே பூர்த்தி செய்யலாம்.

எனவேதான் இந்த பயணம். பாதுகாப்பாக போய் வாருங்கள். நிலா உனக்கு ஒரு கோரிக்கை. உன்னை நம்பி நான்கு ஆண்களை அனுப்புகிறோம். அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் பாதுகாப்பாகவும், வெற்றியோடும் திரும்ப வருவது உன் கையில்தான் உள்ளது” என்று நீளமாக பேசி முடித்தார், பேராசிரியர் புஷ். விண்கலம் பயணத்தை தொடங்கியது. அறிவியல் நிபுணர்களான அபி, கிரி, பட் ஆகியோர் பூமியில் எதை, எப்படி ஆராய வேண்டும் என்று திட்டமிட ஆரம்பித்தனர். ஏதோ ஒரு மின்னூலை படிக்க ஆரம்பித்த நிலாவிடம், விண்கலத்தை செலுத்திய ரவி கேட்டான், “நிலா! உன் பெயருக்கு பொருள் தெரியுமா?” நிலா பதில் சொன்னாள்: “என் பெயருக்கு மட்டுமல்ல, உன் பெயருக்கு என்ன பொருள் என்பதும் எனக்குத் தெரியும். அதைவிட முக்கியமாக எனக்கு விண்கலத்தை செலுத்தவும் தெரியும். நாங்கள் ஆய்வை முடித்துவிட்டு திரும்பவும் நோவா கிரகத்திற்கு திரும்பும்போது நீயும் எங்களோடு திரும்புகிறாயா அல்லது பூமியிலேயே ஒற்றை மனிதனாக தங்கிவிடப் போகிறாயா என்பதை முடிவு செய்து கொள்!”

###

அன்ட்ரமீடா கேலக்ஸியை தாண்டிய விண்கலம் பால்வீதி கேலக்ஸிக்குள் பிரவேசித்தது. பூமியை நெருங்க விண்கலத்திலிருந்து ஐந்து பேருக்கும் இனம் தெரியாத உணர்வுகள் ஏற்பட்டன. தங்களது முன்னோர்கள் பிறந்து, வாழ்ந்த இடத்திற்கு செல்லப்போகிறோம் என்ற ஆர்வம் மேலிட்டது. ஒரே இடத்தில் பிறந்து வாழ்ந்த முன்னோர்களை நினைத்து சிறிது பொறாமை ஏற்பட்டாலும், தற்போது மனிதர்களே வாழமுடியாத நிலைமையில் உள்ள பூமியை நினைத்து கவலையும், வருத்தமும்கூட ஏற்பட்டது. தற்போது நோவா கிரகத்தில் உயிர்கள் உற்பத்தி ஆகாத நிலையில் அண்டை கிரகங்களுக்கு மகப்பேறுகளுக்கு செல்லும் பெண்களையும், உணவுக்காகவும் மற்ற உயிரினங்களுக்காகவும் வேறு கிரகங்களை நம்பி இருக்க வேண்டிய தற்போதைய நிலையை நினைவு கூர்ந்த நிலா, பண்டைக்காலத்தில் பூமியில் மனிதர்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்ற கற்பனையில் மூழ்கினாள். இதற்குள் விண்கலம் பூமியை எட்டியிருந்தது. விண்கலத்தின் சாளரம் வழியாக பார்வையை செலுத்தினாள் நிலா. திரும்பிய பக்கமெல்லாம் மணல். அதன் மீது காட்சியளிக்கும் கானல் நீர். அப்பகுதியில் நிலவும் அனல் வெப்பத்தை விண்கலத்தின் உள்ளேகூட இலேசாக உணர முடிந்தது. விண்கலத்தில் இருந்த ஆய்வுக்கூட மானிட்டர்களை பார்த்தவாறே அபி, “ நோவா கிரகத்தைப் போல சுமார் 20 மடங்கு வெப்பம் இங்கு வீசுகிறது. இந்த வெப்பத்தில் இங்கு உயிர்கள் துளிர்க்கின்றன என்பதை நம்புவதற் கில்லை” என்றான். “பூமியில் இருக்கும் தண்ணீர் அனைத்தும் பாழாகிவிட்டது. மேலும் கொதி நிலையில் இருக்கிறது. இதில் எங்கிருந்து உயிர்கள் தோன்றும்?” என்றான் பட். “உயிர்கள் தோன்றும் முன்னால் நுண்ணுயிர்கள் தோன்ற வேண்டும். அந்த நுண்ணுயிர்களை உண்டுதான் பெரிய உயிர்கள் தோன்ற வேண்டும். இதுதான் அறிவியலின் அடிப்படை. இங்கு நுண்ணுயிர்கள் தோன்ற வாய்ப்பிருப்பதாக தோன்றவில்லை!” என்றான் கிரி. அதற்குள் குறுக்கிட்ட நிலா, “இந்த ரேடாரைப் பாருங்கள்! வேறு ஏதோ விண்கலம் இங்கு இருப்பதாக காட்டுகிறது. வேறு பகுதிக்கு செல்ல வேண்டிய யாரோ இங்கு தவறி வந்துவிட்டார்கள் போலிருக்கிறது” என்றாள். “நான் பேசலாமா” என்று அனுமதி கேட்ட ரவி, “நோவா கிரகவாசிகள் மட்டும்தான் இங்கு வரவேண்டுமில்லையே! வேறு கிரகங் களிலிருந்தும் இந்த பூமிக்கு நம்மைப் போலவே வேறு யாராவது வந்திருக்கலாமே!” என்றான். அவன் கூறுவது சரியாக இருக்கலாம் என்று மற்றவர்களும் ஆமோதித்தனர்.

அறிவியலின் பெயரால் ஏற்பட்ட அகந்தையும், ஆணவமுமே பூமிப்பந்தின் மனிதர்களை அழித்தது. இயற்கையை புரிந்து கொள்வதே அறிவியல் என்பதை உணராமல், முட்டாள்தனமாக இயற்கையை வெற்றி கொள்ள நினைத்து தோல்வி கண்டனர், உங்கள் முன்னோர்கள்!”

வலவனாக பலமுறை பயணம் செய்த ரவியின் தொழில்நுட்ப அறிவு தன்னிடம் இல்லை என்பதை உணர்ந்தாள். எனினும் ரவி தன்னைக் கவர்வதற்காக செய்த அரதப்பழசான அந்த முயற்சியை நினைத்து அவளுக்கு சிரிப்பு வந்தது. இதற்குள் பூமிக்கு வந்திருந்த அந்த மற்றொரு விண்கலத்தை கண்டுபிடித்திருந்தான் ரவி. அது மெகல்லன் கேலக்ஸியின் டோரா கிரகத் திலிருந்து வந்திருந்தது. டோரா கிரகத்தைப் பற்றி படித்திருக்கிறாள் நிலா. அது நோவா கிரகத்தைப்போல குடியேற்ற கிரகமல்ல. டோரா கிரகத்தில் உயிர்கள் உற்பத்தி ஆகும். டோரா கிரக வாசிகள் நோவா கிரகவாசிகளைவிட உயிரியல் ரீதியாக மேம் பட்டவர்கள். அவர்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாமா என யோசித்தாள் நிலா. அவளது சிந்தனையை புரிந்து கொண்டவனாக ரவி தொடர்பை ஏற்படுத்தினான். டோரா கிரகத்தின் விண்கலத்திலிருந்து பதில் சிக்னல் கிடைத்தது. இவர்களது விண்கலத்திற்கு அருகே வருவதாகவும், காத்திருக்குமாறும் செய்திகள் கிடைத்தன. அபி, கிரி, பட் ஆகிய மூவரும் பாது காப்பு கவசங்களை மாட்டிக்கொண்டு விண்கலத்தி லிருந்து வெளியே செல்ல முயற்சித்துக் கொண்டிருந்தனர். ஆனால் வெளியே புயல் போல காற்று வீசத்தொடங்கியது. புயலின் காரணமாக வெப்பம் மேலும் அதிகரித்தது. எனவே விண்கலத்தின் உள்ளே இருந்தவாறே நிலைமையை கண்காணிக்க முடிவு செய்தனர் அம்மூவரும். சற்று நேரத்தில் புயல் சற்றே பலம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியது. அப்போது அவர்களின் விண்கலம் அருகே மற்றொரு சற்று பெரிய விண்கலம் ஒன்று தரை இறங்கியது. நிலாவும் மற்றவர்களும் அதை உற்று நோக்க ஆரம்பித்தனர். தகவல் தொடர்பு சாதனம் மூலம் நிலாவையும் மற்றவர்களையும் உரிய பாதுகாப்பு கவசங்களுடன் கீழே இறங்குமாறு அந்த விண்கலம் வேண்டுகோள் விடுத்தது. சிறிது நேரத்திற்கு பின் அந்த கலத்திலிருந்து முழு பாதுகாப்பு உடை அணிந்த ஒரு மனித உருவம் இறங்கியது. அதைத் தொடர்ந்து சுமார் 25 குழந்தைகள் பாதுகாப்பு கவசத்துடன் இறங்கினர். குழந்தைகளைப் பார்த்தவுடன் நிலாவும், மற்றவர்களும் மெல்ல தங்கள் விண் கலத்தை விட்டு இறங்கினர். மெகல்லன் கேலக்ஸியின் டோரா கிரக விண்கலத்திலிருந்து இறங்கியவர் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டார். “வணக்கம்! நான் மேக். மெகல்லன் கேலக்ஸி, டோரா கிரகத்தில் ஒரு பள்ளி ஆசிரியர். எங்கள் பள்ளி மாணவர்களை கல்விச்சுற்றுலாவுக்காக இந்த பூமிக் கிரகத்திற்கு அழைத்து வந்திருக்கிறேன்.” “வணக்கம்! நான் நிலா. ஆன்ட்ரமீடா கேலக்ஸி. நோவா கிரகம். பூமியில் உயிர்கள் மீண்டும் துளிர்ப்பது குறித்து ஆய்வு செய்ய வந்திருக்கிறோம். இவர்கள் என் நண்பர்கள் ரவி, அபி, கிரி, பட்” “நல்லது. நாங்கள் பார்த்தவரை உயிர்கள் ஏதும் எங்கள் கண்களில் படவில்லை. எங்கள் கண்களில் படுவதெல்லாம் மணல், கடல் மட்டுமே. ஒரு காலத்தில் நன்னீர் வளம் நிறைந்த, பசுமையான பகுதியாக இந்த பூமி வாழ்ந்திருக்கிறது என்பதை என் மாணவர்கள் நம்புவதற்கான முகாந்திரமே இல்லை” “எங்கள் முன்னோர்கள் இங்கேதான் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களில் சிலர்தான் ஆன்ட்ரமீடா கேலக்ஸியின் சில கிரகங்களுக்கு குடி பெயர்ந்திருக்கிறோம். எப்படி ஏற்பட்டது இந்த பேரழிவு? எங்கள் முன்னோர்கள் எப்படி இந்த பூமிப்பந்தை சீரழித்தார்கள்?” கவலையோடு கேட்டாள் நிலா. “அகந்தை, ஆணவம்! அறிவியலின் பெயரால் ஏற்பட்ட அகந்தையும், ஆணவமுமே பூமிப்பந்தின் மனிதர்களை அழித்தது. இயற்கையை புரிந்து கொள்வதே அறிவியல் என்பதை உணராமல், முட்டாள்தனமாக இயற்கையை வெற்றி கொள்ள நினைத்து தோல்வி கண்டனர், உங்கள் முன்னோர்கள்!” வெறுப்புடன் சொன்னார், மேக். “தாம் பிறந்த பூமியை, தங்கள் கைகளாலேயை அழித்த மாபெரும் குற்றவாளிகள் இந்த பூமியின் மைந்தர்கள். இந்த பூமி மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று தவறாக நினைத்த மனிதர்கள், இங்குள்ள கடலை, காற்றை, நீரை, பூமியை என்று சகலத்தையும் சீரழித்தார்கள். தங்கள் உணவை சீரழித்த ஒரே உயிரினம் பூமிப்பந்தின் மனிதர்கள்தான். வெடிமருந்துகளை உரமாக பயன்படுத்தினார்கள். ஒரு மில்லியன் வருடத்தில் நடக்கும் இயல்பான மரபணு மாற்றத்தை, அறிவியல் கூடத்தில் சில பத்தாண்டுகளில் உருவாக்கி பொதுவெளியில் விட்டார்கள். அணு அறிவியல் என்ற பெயரில் தற்கொலைக் கருவிகளை உருவாக்கினார்கள். அழிவிற்கான அத்தனை வழிகளையும் அறிவியல் என்ற பெயரில் கண்டு பிடித்தார்கள். சக உயிரிகளை கொஞ்சம், கொஞ்சமாக கொன்றார்கள். சக மனிதர்களையும் பல்வேறு பெயர்களில் கொத்துக்கொத்தாக கொன்றார்கள். இவர்களின் அகந்தையும், ஆணவமும் இங்குள்ள மொத்த மனிதர்களையும் அழித்து தீர்த்தது. இதில் தப்பிய சிலர்தான் ஆன்ட்ரமீடா கேலக்ஸியின் சில கிரகங்களின் பிழைத்திருக்கிறீர்கள்!” என்று வருத்தத்துடன் கூறினார், மேக்.

“சரி. வாருங்கள் எங்கள் பள்ளிக் குழந்தை களுடன் இந்தப் பூமியின் சில பகுதிகளில் நடந்து பார்ப்போம்!” என்று அழைப்பு விடுத்தார் மேக். நிலாவும் அவளது நண்பர்களும் நடக்கத் தயாராயினர். டோரா கிரகத்தின் குழந்தைகள் மிகவும் ஆர்வமாகவும், அதே நேரத்தில் மிகவும் முன்னெச்சரிக்கையுடனும் பூமியில் காலடித் தடத்தை பதித்தனர். இந்த பூமியில் தங்கள் முன்னோர்களான மனிதர்கள் வாழ்ந்தபோது எவ்வாறு இருந்திருக்கும் என்று கற்பனை செய்ய முயன்றாள், நிலா. அவளது எண்ணத்தை புரிந்துகொண்ட மேக், “பெண்ணே! உன் முன்னோர் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்று கற்பனை செய்கிறாயா? அவை அனைத்தும் எங்கள் பள்ளிக்குழந்தைகளுக்கே தெரியும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த பூமியில் வசித்த மனிதர்களை நாங்கள் கண்காணித்தே வந்தோம். அவர்கள் வாழ்ந்த – அழிந்த வரலாற்றின் காட்சிப்பதிவுகள் எங்களிடம் உள்ளன. அவற்றில் சிலவற்றை இந்தக் குழந்தைகள்கூட பார்த்திருக்கிறார்கள். அறிவியல் வணிகமாகும் முன் அனைத்தும் சுகமாகவே இருந்திருக்கிறது. அறிவியல் வணிகமான பின்னர் அழிவே மிஞ்சி யிருக்கிறது. எங்கள் கிரகத்தின் அறிவியல் உங்கள் அறிவியலைவிட மிகவும் மேம்பட்டது. ஆனால் அது எக்காலத்திலும் வணிகமாகிவிடக்கூடாது என்பதனாலேயே எங்கள் மாணவர்களை நேரடியாக பூமிக்கு கூட்டி வந்து எச்சரிக்கிறோம்!” என்றார். நிலாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. எனினும், “நல்ல முயற்சி ஐயா! ஆனால் எங்கள் நோவா கிரகத்தில் உயிர்களை உற்பத்தி செய்ய முடியவில்லை. எனவே மனிதர் களான நாங்கள் இனவிருத்திக்காக அண்டை கிரகங்களுக்கு செல்கிறோம். உணவுக்காக முழுவதும் வேற்று கிரகங்களை நம்பியிருக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். எனவேதான் இந்த பூமியில் மீண்டும் உயிர்கள் துளிர்ப்பதை கேள்விப்பட்டு ஆய்வு செய்ய வந்திருக்கிறோம்” என்றாள்.

அறிவியல் வணிகமாகும் முன் அனைத்தும் சுகமாகவே இருந்திருக்கிறது. அறிவியல் வணிகமான பின்னர் அழிவே மிஞ்சியிருக்கிறது. எங்கள் கிரகத்தின் அறிவியல் உங்கள் அறிவியலைவிட மிகவும் மேம்பட்டது. ஆனால் அது எக்காலத்திலும் வணிகமாகிவிடக்கூடாது என்பதனாலேயே எங்கள் மாணவர்களை நேரடியாக பூமிக்கு கூட்டி வந்து எச்சரிக்கிறோம்

“நல்ல முயற்சிதான். ஆனால் அது உடனடியாக பலனளிக்கும் என்று தோன்றவில்லை. அதற் காக நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு தேவையான உதவிகளை நாங்கள் செய்ய முடியும். ஒரே ஒரு நிபந்தனை! அது என்ன வென்றால் எங்களிடம் கற்றுக்கொள்ளும் எந்த அறிவியல் தொழில்நுட்பத்தையும் வணிக ரீதியாக பயன்படுத்த மாட்டோம் என்ற உறுதிமொழி அளிக்க வேண்டும். இதை உங்கள் நோவா கிரக அரசிடம் எடுத்துக் கூறுங்கள்! இந்த நிபந்தனை உங்கள் நோவா கிரக அரசுக்கு சம்மதம் என்றால் எங்கள் டோரா கிரகம் உங்களுக்கு உதவி செய்யும்” என்றார் மேக்.

###

நிலாவும் அவளது நண்பர்களும், மெகல்லன் கேலக்ஸியின் டோரா கிரகவாசியான மேக்கை சந்தித்து பேசியது குறித்து, தமது துறைத்தலைவர் பேராசிரியர் புஷ்ஷ§க்கு தகவல் தெரிவித்தனர். அவர் அரசிடம் இதுகுறித்து கூறியபோது, அரசு செவி சாய்த்தது. எனவே ஆபத்தான பூமியில் ஆய்வை மேற்கொண்டு தொடரவேண்டாம் என்றும், திரும்ப வருமாறும் பேராசிரியர் புஷ்ஷிடமிருந்து செய்தி வந்தது. இதையடுத்து டோரா கிரகத்திலிருந்து வந்திருந்த பள்ளி ஆசிரியர் மேக்கிடமும், அவரது மாணவர் களிடமும் விடைபெற்று தங்களது விண்கலத்தில் ஏறினாள் நிலா. விண்கலத்தை இயக்கிய ரவி, ஒலிபெருக்கியை மெல்ல செயல்படுத்தினான். அதில் டோரா கிரகத்தின் குழந்தைகள் பாடிய பாடல் எதிரொலித்தது. “நிலா… நிலா… ஓடி வா… நில்லாமல் ஓடி வா…!”

ரவியை பார்த்த நிலா சிரித்தாள்!

புனைகதை

டார்வின் சார்வாகன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments