பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் உறுப்பினரும், சித்த மருத்துவருமான கு.சிவராமன், கடந்த நவ. 11ஆம் தேதி தருமபுரி பத்திரிகையாளர் சங்கம் நடத்திய சிறப்புச் சந்திப்பில், “நலம் வாழ” என்ற தலைப்பில் பேசியதன் சுருக்கம்!

ஒரு காலத்தில் உலக மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் பிளேக் உள்ளிட்ட தொற்று நோய்களுக்கு பலியாகினர். அன்று மருத்துவம் உள்ளிட்ட அறிவியல் வளர்ச்சிகள் உருவாகாத, பரவலடையாத காலம். மனித குலத்தின் தொடர் முயற்சியாலும், தேடலாலும் கண்டறியப்பட்ட அறிவியல் முடிவுகளும், மருத்துவமும் இந்த நோய்களில் இருந்து மனிதர்களைக் காப் பாற்றியது. மனிதர்களுக்கு நீண்ட ஆயுளை வழங்கியது. இதுபோன்ற நோய்களில் இருந்து தப்பிய மனிதர்கள் இன்று வாழ்வியல் நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். உணவுப் பழக்கம், வாழ்வியல் சூழல், பல்வேறு கலாச்சார மோகம் மற்றும் நுகர்வு, சுற்றுச்சூழல் பாதிப்பு, உணவில் ரசாயனங்கள் கலப்பு போன்றவையே இந்த வாழ்வியல் நோய்களுக்குக் காரணம். சர்க்கரை நோயும், புற்றுநோயும் மரபியல் காரணமாக மட்டுமே சிலருக்கு வந்து கொண்டிருந்த நிலை மாறி இன்று எல்லோரையும் தாக்கி வருகிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களில் அரிதாக சிலருக்கு கருப்பை வாய்ப் புற்றுநோய் வரும். ஆனால், இன்று நிறைய பெண்கள் மார்பகப் புற்றுநோய்க்கு ஆளாகின்றனர். மஞ்சள் தூளை நம் உணவில் தொடர்ந்து பயன்படுத்தி வந்தபோது குடல் புற்றுநோய் நெருங்கியதில்லை. இன்று பீசா, பர்கரை விரும்பும் சமூகமாக மாறி விட்டோம். கல்லூரி களில் இவ்வகை உணவுகள் தாராளமாக விற்பனையாகின்றன. அதில் கொட்டப்படும் ரசாயனங்கள், ஐஸ்கிரீமில் சேர்க்கப்பட்டுள்ள ரசாயனங்கள் பற்றியெல்லாம் கவலையின்றி உண்கிறோம். எந்த நோயும் இல்லாதவர்கள் அதிர்ஷ்ட வசமாக நோயின்றி வாழ்கிறோமே தவிர, உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என நம்பிவிட வேண்டாம். அந்தளவுக்கு சூழல் மோசமாகி இருக்கிறது. சர்க்கரை நோயுடன் இருப்போர் அல்லது சர்க்கரை நோய் வந்துவிடுமோ என அச்சத்தில் இருப்போர் என இரு தரப்பினர்தான் நாட்டில் உள்ளனர். ஒரு காலத்தில் திருமணம் செய்யாதவர்களுக்கு மட்டுமே ஏற்பட்ட மார்பகப் புற்றுநோய் தற்போது 30 முதல் 40 வயதுக்குட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் வரும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதற்கான முதல் காரணம், உணவு தானிய உற்பத்தியில், உணவு தயாரிப்பில், பரிமாறுதலில் நடந்த மாற்றம், நம்முடைய பண்பாட்டில் நடந்த மாற்றம்தான் நம்மை நோயாளிகளாக மாற்றியிருக்கிறது. இரண்டாவது முக்கியமானது மனம். எதைக் கண்டு மகிழ்வது, எதற்காக வருந்துவது, எதற்காக கோபப்படுவது என்பதை யெல்லாம் நாம் முடிவு செய்வதில்லை. ஊடகங்கள் முற்றிலும் நம் மனத்தை ஆக்கிரமித் திருக்கின்றன. மூன்றாவதாக சுற்றுச்சூழல் நாம் யோசிக்க முடியாத அளவுக்கு மாசடைந்திருக்கிறது. இவற்றையெல்லாம் அடுத்த தலைமுறைக்குப் புரியவைக்காவிட்டால் பெரும் சிக்கல் நேரிடும். ஒரு மருத்துவரால், ஒரு சூழலியல்வாதியால் மட்டுமே இந்த வேலையைச் செய்ய முடியாது. பல்வேறு தளங்களில் பணியாற்றும் அனைத்துத் தரப்பினரும் இணைந்துதான் சமூக மாற்றத்தை விதைக்க வேண்டும். தினம் தினம் நாம் உண்ணும் காய்கறிகளில் 18 வகையான பூச்சிக்கொல்லிகள் நுண்ணிய அளவில் இடம்பெற்றிருக்கின்றன. உலக நாடு களால் தடை செய்யப்பட்ட 80 வகையான ரசாயனங்கள் நம் நாட்டில் விவசாயத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் பின்னால் பெரும் வணிகம் இருக்கிறது. 48 மணி நேரத்தில் கெட்டுப் போகக்கூடிய உணவுப் பொருள்களை 180 நாட்கள் கெடாமல் வைத்திருக்க ஏராளமான ரசாயனங்களைக் கொட்டி விற்பனை செய்கிறார்கள். இரண்டு நிமிடங்களில் தயாராகும் நூடுல்ஸ் உணவை 2 ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மக்கிப் போகாத பிளாஸ்டிக் பொட்டலங்களில் விற்பனை செய்கிறார்கள்.

உணவுப் பொருள்களில் சேர்க்கப்படும் நிறமூட்டிகளும், சில வகையான தடுப்பூசிகளில் சேர்ந்துள்ள நுண்ணிய அளவு பாதரசமும்தான் ஆட்டிசம் குறைபாட்டோடு குழந்தைகள் பிறப்பதற்குக் காரணம் என சந்தேகிக்கப்படுகிறது. யாருக்கெல்லாம் பிரச்னை வரும் என்பதை அனுமானிக்க முடியாத நிலையில் இருக்கிறோம். குளிர்பானங்களுக்கு மாற்றாக விற்பனைக்கு புட்டிகளில் வந்திருக்கும் பழச்சாறுகளில் 80க்கும் அதிகமான ரசாயன உப்புகள் கலந்திருக் கின்றன. கம்பு, கேழ்வரகு, திணையில் உள்ள நிறமிகள் மட்டுமே ஏராளமான சத்துகளை நமது உடலுக்குத் தருகின்றன. வேறெதிலும் இல்லாத இரும்புச் சத்து கம்பில் இருக்கிறது, வேறெதிலும் இல்லாத கால்சியம் கேழ்வரகில் இருக்கிறது. ஆனால், இப்போது எல்லாவற்றுக்கும் மாத்திரைகள் வந்துவிட்டது நல்லதல்ல. உடல் சதை போடும் எனச் சொல்லி வாழைப் பழத்தை நம்மிடமிருந்து பிரித்தார்கள். கொழுப்பு சேரும் எனச் சொல்லி தேங்காயை நம்மிடமிருந்து பிரித்தார்கள். மரபணு மாற்றம் என்பது அன்றாடம் சாப்பிடும் அனைத்து தானியங்கள், உணவுப் பொருட்களிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கொண்டு வரப்படுகிறது. மரபணு மாற்றம் செய்யப்படும் கடுகுச் செடி, பக்கத் திலுள்ள நாட்டுக் கடுகுச் செடியையும் மாற்றிவிடும் அபாயம் இருக்கிறது. மகிழ்ச்சியோடு இருக்கும்போதும், துக்கமாக இருக்கும்போதும் மது அருந்துவது பழக்கமாகி விட்டது. ஈரல் சுருக்க நோய் வந்தால் 3 ஆண்டு களுக்குத் தான் உயிரோடு இருக்க முடியும். ஈரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ரூ. 38 லட்சம் வரை செலவாகும்.

2020ஆம் ஆண்டில் உலகிலேயே ஈரல் நோயால் பாதிக்கப்பட்டோர் அதிகமாக இருக்கும் இடத்தில் இந்தியா வந்துவிடும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உடலில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் அழகூட்டிகள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் புற்றுநோயை ஏற்படுத்துபவை. எனவே, அறிவியல் வளர்ச்சி என்பது சூழலைச் சிதைக்காத, அறம் சார்ந்த அறிவியலாக இருக்க வேண்டும். கூடவே அறம் சார்ந்த மருத்துவமும் அவசியம் என்றார் சிவராமன். தருமபுரி மாவட்டக் கல்வி அலுவலர் சி. ராஜசேகரன், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கே. கோவிந்தசாமி, அனை வருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கத் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி, அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சி. முனுசாமி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தருமபுரி பத்திரிகையாளர் சங்கத் தலைவர் ஆர். ராதா கிருஷ்ணன், செயலர் எஸ். ராஜாசெல்லம், பொருளாளர் மாரிமுத்து, இணைச் செயலர் குமரவேல், நிர்வாகக் குழு உறுப்பினர் மா. தண்டபாணி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் செய்திருந்தனர்.

நிகழ்வுகள்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments