பூச்சத்தம் கேளுங்கள்

நான் சொல்ல விரும்புவதை, வால்டர் ஹேகன் என்பவர் அழகாக, சுருக்கமாக, நறுக்கெனச் சொல்லிவிட்டார்: “ஒரு சிறு வருகைக்காகத்தான் நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள். எனவே துரிதப்படாதீர்கள், கவலைப்படாதீர்கள். போகும் வழியில் பூக்களை முகர்ந்திட மறக்காதீர்கள்.” நம்மில் பெரும்பாலானோர் பணம், பதவி, புகழ், காமம், கவுரவம், காலாதீதம் என ஏதேதோ இலக்குகளை நோக்கி வேகமாக நடப்பதால், முண்டியடித்துக்கொண்டு ஓடுவதால், பூக்களை முகர்வதற்கான தேவையோ, விருப்பமோ, நேரமோ இருப்பதில்லை. இந்த (அதிக பட்சம்) 36,500 நாட்கள் நீடிக்கும் பூவுலகு வருகையின்போது, இரண்டு விதமாக பூக்களை முகரலாம். துரிதப்பட்டு, கவலைப்பட்டு எதையோ நோக்கி வேக வேகமாக நடக்கும்போது இன்னொரு வேலையாக பூக்களை முகர்வதா? அல்லது பூக்களை முகர்வதற்காகவே நடப்பதா? நம்மில் ஒருசிலர் ஒரு சின்ன ஆர்வத்துடன் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டு, முதல்வகை முகர்தலை முறையின்றிச் செய்கிறோம். பூக்களை முகர்வதற்காகவே நடப்பவர்கள் மிகவும் குறைவு. அவர்களுக்கு உலகம் சோம்பேறி, பைத்தியக்காரன், பிழைக்கத் தெரியாதவன் என்றெல்லாம் பல்வேறு பெயர்களைச் சூட்டி முறியடிக்கிறது. ஒரு கதை சொல்வார்களே? நமது ஊர் முனுசாமி ஒரு பாறை மீது அமர்ந்து சூரியன் மறைதலைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந் தாராம். அப்போது ஓர் அமெரிக்கன் அந்த வழியாக நடந்து வந்தாராம். இளம்வயது முனுசாமியைப் பார்த்து, “தம்பி, என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டாராம்.

சூரியன் மறைவதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறேன். ஐய்யய்யோ, இப்படி இளமைப் பருவத்தை வீணாக்கலாமா? நீங்கள் கடுமையாக உழைத்து நிறைய சம்பாதிக்க வேண்டும்!

அப்புறம்?

அதில் கொஞ்சத்தை எடுத்து பல்வேறு தொழில்களில் முதலீடு செய்ய வேண்டும்!

அப்புறம்?

அப்படி சேமித்து சேமித்து செல்வத்தை மென்மேலும் பெருக்க வேண்டும்!

அப்புறம்?

அப்படி பெரும் செல்வம் சேரும் போது, விடுமுறையாக எங்காவது போய் சூரியன் மறைவதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கலாம். நமது முனுசாமி சொன்னாராம்: “ஐயா, அதைத்தானே நான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன்?”

மேற்குறிப்பட்ட இரண்டு வகை முகர்தலையும் இந்தக் கதை விவரிக்கிறது. “டேக் இட் ஈசி” அணுகுமுறையைத்தான் ஹேகன் பூக்களை முகரும் குறியீட்டால் உணர்த்துகிறார். ஏன் பூக்களை மட்டும் குறிப்பிட்டுச் சொன்னார் அவர்?

பூக்கள் முழுமையானவை என்பதாலோ? அவை பார்வைக்கு அழகையும், சுவாசத்துக்கு நறுமணத்தையும், செவிக்கு (நம்மால் கேட்க முடியாத) இசையையும், வாய்க்கு நல்ல உணவையும், வயிற்றுக்கு நல்ல மருந்தையும், தொடுதலுக்கு பரவசத்தையும் தருகின்றன. பூ (தாவர) வாழ்க்கையின் ஆதாரம் என்பதாலோ? செடி வளர்ந்து மொட்டாகி, மொட்டு பூவாகி, பூ காயாகி, காய் கனியாகி, கனி விதையாகி, விதை மீண்டும் செடியாகி (தாவர) வாழ்க்கைச் சங்கிலியின் மையப்புள்ளியாக இருப்பவையே பூக்கள்தான். பூக்கள் இனப்பெருக்கத்துக்கு ஆதார மாக இருப்பதாலோ? இனப்பெருக்கம்தான் பூவின் தலையாயக் கடமை. ஒரே பூவுக்குள், அல்லது இரண்டு பூக்களுக்குள் உறைந்திருக்கும் விந்துவையும், முட்டையையும் இணைத்து இனப்பெருக்கம் நடக்கலாம். பூச்சிகளையும், விலங்குகளையும் கவர்ந் திழுத்து, காற்றையும், தண்ணீரையும் கவனமாய் கையாண்டு தனது இனப்பெருக்கத் தேவைக்கு பயன்படுத்திகொள்ளும் சாதுரியமும் பூக்களுக்கு உண்டு. பூ கருத்தரிப்பின் குறியீடு. எனவேதான் மனிதகுலத்திலும் பூப்படைந்தப் பெண்ணை பூவை என்றழைக்கிறோம். பூக்களை முகர்வது இருக்கட்டும். இந்த உலகத்திலுள்ள பூக்களைப் பற்றி, அதாவது பூக்களின் உலகத்தைப் பற்றி, பூவுலகு பற்றி எப்போதாவது சிந்தித் திருக் கிறோமா? பூ மென்மையானது, மிகவும் கவன மாகக் கையாளப்பட வேண்டியது. எனவேதான் பூ போன்ற உலகை பூவுலகு என்கிறோம். பூக்கள் இல்லாத உலகை சிந்தித்துப் பாருங்கள். அது வண்ணமில்லா வானவில்லைப் போன்றிருக்கும். தண்ணீரில்லா நதியைப் போன்றிருக்கும்.
சிரிப்பில்லா முகத்தைப் போன்றிருக்கும். பூக்கள் எப்படித் தோன்றின? உலகில் எத்தனை வகைப் பூக்கள் இருக்கின்றன? அவை எப்படி தங்கள் நிறங்களை, வடிவங்களை, மணங்களை, சுவைகளைப் பெறுகின்றன? அவற்றில் மகரந்த சேர்க்கை, இனப்பெருக்கம் எப்படி நிகழ்கிறது போன்றவற்றை படிப்பதல்ல இந்தக் கட்டுரையின் நோக்கங்கள். தமிழ் மண்ணில், தமிழர் வாழ்வில், தமிழர் படைத்த இலக்கியங்களில் பூக்களின் இருப்பை தூரத்தில் நின்று லேசாகத் தொட்டுச் செல்வதுதான் இதன் நோக்கம்.

பூக்களின் பல்வேறு பருவ நிலைகளைக் குறிப் பதற்கே தமிழில் அற்புதமான வார்த்தைகள் பல இருக்கின்றன:

அரும்பு — அரும்பும் தோன்றுநிலை

நனை – அரும்பு வெளியில் நனையும் நிலை

முகை – நனை முத்தாகும் நிலை மொக்குள்- “முகை மொக்குள் உள்ளது நாற்றம்” (குறள்)

முகிழ் – மணத்துடன் முகிழ்த்தல்

மொட்டு – கண்ணுக்குத் தெரியும் மொட்டு

போது மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலை

மலர் – மலரும் பூ

பூ – பூத்த மலர்

வீ – உதிரும் பூ

பொதும்பர்- பூக்கள் பலவாகக் குலுங்கும் நிலை

பொம்மல்- உதிர்ந்து கிடக்கும் புதுப் பூக்கள்

செம்மல் உதிர்ந்த பூ பழம்பூவாய்ச் செந்நிறம் பெற்று அழுகும் நிலை

பூக்களின் பருவநிலைகளுக்கே இத்தனை பெயர்கள் இருந்தால், தமிழ் மண்ணில் எத்தனை எத்தனையோ பூக்கள் இருந்திருக்க வேண்டுமே? கடந்த 2010-ஆம் ஆண்டு ஜுன் மாதம் கோயம்புத்தூரில் நடைபெற்ற உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மலர் தமிழ் மண்ணில் பூத்துக் குலுங்கிய தொண்ணூற்றி ஒன்பது வகை பூக்களை அட்டவணைப் படுத்துகிறது: 1.செங்காந்தாள் (தமிழீழ தேசிய மலர்) 2.ஆம்பல் 3. அனிச்சம் 4.குவளை5.குறிஞ்சி 6.வெட்சி7.செங்கோடுவேரி 8.தேமா 9.மணிச்சிகை (செம்மணி) 10.உந்தூழ் (பெருமூங்கில்) 11.விளம் (வில்வம்) 12. எறுழம் 13.கள்ளி 14.கூவிரம் 15.வடவனம் 16.வாகை 17.குடசம் (வெட்பாலை)18. எருவை (கோரை) 19.செருவிளை (காக்கணம், சங்கு) 20.கருவிளை 21.பயினி 22.வாணி (ஓமம்) 23.குரவம் 24.பசும்பிடி (இலமுகிழ்) 25.வகுளம் (மகிழம்) 26.காயா 27.ஆவிரை 28.வேரல் (சிறு மூங்கில்) 29.சூரல் 30.பூளை 31.கன்னி (குன்றி மணி)32.குருகிலை (முருங்கிலை) 33.மருதம் 34.கோங்கம் 35.போங்கம் 36.திலகம் 37.பாதிரி 38.செருந்தி 39.அதிரல் (புனலி) 40.சண்பகம் 41.கரந்தை 42.குளவி (காட்டுமல்லிகை) 43.கலிமா 44.தில்லை 45.பாலை 46.முல்லை 47.குல்லை 48.பிடவம் 49.மாறோடம் 50.வாழை 51.வள்ளி 52.நெய்தல் 53.தாழை (தென்னம்பாளை) 54.தளவம் 55.தாமரை 56. ஞாழல் 57.மொவ்வல் 58.கொகுடி 59.சேடல் (பவளமல்லிகை) 60.செம்மல் 61.செங்குரலி 62.கோடல் 63.கைதை (தாழை) 64.வழை (சுரபுன்னை) 65.காஞ்சி 66.நெய்தல் 67.பாங்கர் 68.மரா (கடம்பு) 69.தணக்கம் (நுணா) 70.ஈங்கை 71.இலவம் 72.கொன்றை 73.அடும்பு 74.ஆத்தி 75.அவரை 76.பகன்றை 77.பலாசம் 78.பிண்டி 79.வஞ்சி 80.பித்திகம் 81.சிந்துவாரம் (நொச்சி) 82.தும்பை 83.துழாய் (துளசி) 84.தோன்றி 85.நந்தி (நந்தியாவட்டம்) 86.நறவம் 87.புன்னாகம் 88.பாரம் (பருத்தி) 89.பீரம் (பீர்க்கு) 90.குருக்கத்தி 91.ஆரம் (சந்தனம்) 92.காழ்வை (அகில்) 93.புன்னை 94.நரந்தம் (நாரத்தம்) 95.நாகம் 96.நள்ளிருள் நாறி (இருவாட்சி) 97.குருந்து (காட்டு எலுமிச்சை) 98.வேங்கை 99.புழகு (மலை எருக்கு)

சங்க இலக்கியத்து தமிழ் நூல்களில் ஒன்றான குறிஞ்சிப்பாட்டு எனும் ஒரே ஒரு நூலில் மட்டும் கூடி விளையாடிய தமிழ்ச் சிறுமியர் குவித்து விளையாடிய மலர்களாக கீழ்க்காணும் பூக்கள் குறிப்பிடப்படுகின்றன:

ஒரு பெரும் பூக்காடாகவே இருந்திருக்கிறது நம் தமிழகம். இவற்றுள் அதிரல் எனும் ஒரே ஒரு பூவை மட்டும் எடுத்துக் கொள்வோம். இது மரத்தில் படரும் ஒரு வகைக் கொடியில் (Derris scandens) பூக்கும் பூவாம். இது பூனைப் பற்கள் அளவில் காணப்படுகிறது. சங்ககால ஆண்களும், பெண்களும் இதனைத் தனியாகவும், பிற பூக்களோடு சேர்த்துக் கட்டியும் அணிந்தனராம். இளவேளிற்காலத்தில் மிகுதியாக பூக்கும் அதிரல் இரவில் அல்லது வைகறைப் பொழுதில் மலரும். இதனை ‘புனலிக்கொடி’ என்று நச்சினார்க்கினியரும், காட்டுமல்லிகை என்று அரும்பதவுரையாசிரியரும், மோசிமல்லிகை, என்று அடியார்க்கு நல்லாரும் குறிக்கின்றனர். அதிரல் மொட்டின் வடிவம் கூர்மையானதாகவும், நீளமானதாகவும், வெண்மையானதாகவும் இருக்கும். பச்சையில் சிறு காம்பும், அடர் பச்சையில் நீள் வட்ட இலைகளும், மலருமாக அழகாக இருக்கும். வாசமில்லா மலராக இருந்தாலும், இதன் வெண்மை நிறமும், நீண்ட இதழ்களும் இந்தப் பூவுக்கு அழகானத் தோற்றத்தைக் கொடுக்கின்றன.

பூஜைக்கு உகந்ததாகவும், திருமணச் சடங்கில் முக்கியப் பங்கு வகித்த மலராகவும் அதிரல் இருந்திருக்கிறது. தலைவன் தலைவியை அதிரல் அங்கண்ணி என விளித்ததாகவும், அதிரல், பாதிரி, மாரோடம் போன்ற மலர்களைச் சேர்த்துக் கட்டி மகளிர் கூந்தலில் அணிந்துகொண்டதாகவும், குவளைப் பூவோடு சேர்த்துக் கட்டியும் அணிவர் என்றும், பெண்கள் நள்ளிரவில் அணிந்து கொள்கிற இந்தப் பூவை ஆண்களும் சூடிக் கொள்வர் என்றும் சங்ககாலப் பாடல்கள் குறிக்கின்றன. நவீன இலக்கியத்திலும் பூக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. “கண்ணம்மாவின் எழில்” பற்றி பாடும் பாரதியார் இப்படிக் குறிப்பிடுகிறார்

எங்கள் கண்ணம்மா நகை புது ரோஜாப் பூ;

எங்கள் கண்ணம்மா விழி இந்த்ர நீலப் பூ!

எங்கள் கண்ணம்மா முகஞ் செந்தாமரைப் பூ

இலக்கியத்தில் பூக்கள் எனும் தலைப்பில் மட்டுமே பற்பல முனைவர் பட்டத்துக்கான ஆய்வுகள் மேற்கொள்ள முடியும். “காதுல பூ” என்று தொடங்கி “மோப்பக் குழையும் அனிச்சம்” வரை பூக்கள் பற்றி பலவாறாக சிந்திக்கிறோம், இயம்புகிறோம், பேசுகிறோம், எழுதுகிறோம்.
அன்றாட வாழ்வில், பூக்கள் அழகுக்காகவும், மணத்திற்காகவும், உணவுக்காகவும், மருத்துவ குணங்களுக்காகவும் உலகெங்கும் விரும்பி வளர்க்கப்படுகின்றன. தென் தமிழகத்தின் குமரி முனையருகே பூ விவசாயம் பெரும் லாபகரமானத் தொழிலாக நடக்கிறது. பூ வியாபாரம் செய்வதற்கு சிறப்புச் சந்தையே இருக்கிறது. தமிழ்ச் சமூக நிகழ்வுகளிலும், வழிபாடுகளிலும், சந்திப்புக்களிலும், சங்கடங் களிலும்கூட பூக்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. சில பூக்கள் ஒவ்வாமை போன்ற நோய்களை உருவாக்குகின்றன. அவை பொல்லாத அரசியல் பிரச்சினைகளையும்கூட உருவாக்கலாம். எடுத்துக்காட்டாக, தண்ணீரைக் கொதிக்க வைக்க ஆபத்தான அணுஉலையை நிறுவும்போது, “பூப்பறிக்க கோடரி எதற்கு?” என்று கேட்பது போல.

பூக்களை முகர்வதற்காகவே நடக்க முடியவில்லையா? கவலை வேண்டாம், நடந்துகொண்டிருக்கும்போதே பூக்களை முகருங்கள். கணினி, கைப்பேசிகளை எல்லாம் விட்டெறிந்துவிட்டு, அவ்வப்போது சும்மா இருங்கள். குழந்தைகளோடு விளையாடுங்கள். மனைவிக்கு பூ வாங்கிக் கொடுங்கள் அல்லது நண்பர்களுக்கு ஒரு பூவை சமைத்துக் கொடுங்கள். பூவுலகில் பூக்களை முகர்வது இப்படித்தான்.

அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கம் மற்றும் பச்சை தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்.

முனைவர் சுப.உதயகுமாரன்

Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
gate io
9 months ago

I may need your help. I tried many ways but couldn’t solve it, but after reading your article, I think you have a way to help me. I’m looking forward for your reply. Thanks.