உணர்வுப் பிறழ்வை நோக்கிய பரிணாம வளர்ச்சிக்கான வேண்டுதல்…

110 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னான பரிணாம வளர்ச்சியில், நிறங்களின் உணர்திரனற்ற என் கண்களை எண்ணி முதல்முறை அழுகிறேன்!

இன்று அதிகாலை இழுதுமீன் என நினைத்து நான் உண்ட நெகிழித் துண்டு என் சிறுகுடலை அடைத்துக் கொண்டிருக்கிறது!

என்னால் நீந்த முடியவில்லை! நீந்துவதென்ன?அசையக்கூட முடியவில்லை! இந்த ராட்சத மூலக்கூற்றை எதிர்கொண்ட என் உடலின் நோயெதிர்ப்பு அணுக்கள் பயந்துபோய் ஒரு மூலையில் ஒளிந்து கொண்டிருக்கின்றன!

இந்த நெகிழியை வெளிக்கொணர பதினெட்டு மணிநேரமாக முயன்று கொண்டிருக்கிறேன்… அடிவயிற்றில் ஏதோ பலமாக அழுத்துவதுபோல் உள்ளது!

ஒரு மாதத்திற்கு முன்தான் நான் பிறந்த மணற்பரப்பிற்கு சென்று முட்டையிட்டு வந்தேன்… 124 முட்டைகளைச் சுமந்துகொண்டு நீந்தும்போது கூட என் அடிவயிறு இவ்வளவு பாரமாக இல்லை!

நான் பிறந்த இடம் முன்போலில்லை! இத்தனை ஆண்டுகளாக என் மூளையில் படிமங்களாய் பதிந்திருந்த காட்சிகளுக்கும் சமீபத்திய காட்சிகளுக்கும் அப்பப்பா… 600 வித்யாசங்கள்!!! என் மைய நரம்பு மண்டலத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டிருக்க வேண்டும்!

என் குடலை அடைத்துக்கொண்டிருக்கும் இதன் வாசனை எனக்குப் புதிது போலில்லை! அந்த கடல்பரப்பின் மணலும் இதைப்போல் தான் மணத்தது!

மணலின் வெப்பமும் வழக்கத்தைவிட அதிகமாகவே இருந்தது! அதன் முப்பது டிகிரிக்கும் அதிகமான வெப்பம், முட்டைகளில் பெரும்பான்மைக்குப் பெண்ணுடல்

கண்களை விரித்துச் சுற்றிப்பார்க்கிறேன். வேறு வேறு அளவுகளில்… வேறு வேறு வடிவங்களில்… நெகிழி…நெகிழி…நெகிழி… எனக்கு வாயைத் திறக்கவே பயமாயிருக்கிறது! என் அனைத்து மெல்லுறுப்புகளையும் ஓட்டுக்குள் அடக்கிக்கொள்ள வேண்டும் போலிருக்கிறது! என் துர்பாக்கியம்! நான் நன்னீர் ஆமையல்ல! உலகத்தின் 71 சதவிகித மேற்பரப்பை சொந்தம் கொண்டாடும் பாவப்பட்ட கடலாமை!

கண்களை மட்டும் இறுக மூடிக்கொள்கிறேன்! இன்னும் கொஞ்சநாளில் குஞ்சுபொறித்து வெளிவரப்போகும் என் பிள்ளைகள் நெகிழியுண்டு வலியில் துடிக்கும் கொடூரக்காட்சி!

அடிவயிற்றில் அழுத்தம் இன்னும் அதிகமாகிறது! ஆற்றாமை என் தலையையும் சேர்த்து அழுத்துகிறது! என் மையநரம்பு மண்டலத்தில் உண்மையாகவே ஏதேனும் பிறழ்வு ஏற்பட்டு, என் அத்தனை உணர்வுகளும் துண்டிக்கப்பட்டால் எவ்வளவு நிம்மதியாக இருக்கும்!

நிவேதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *