கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை கூடங்குளம் வளாகத்திலேயே வைக்க முயலும் மத்திய அரசின் முயற்சிக்கு கண்டனம். – பூவுலகின் நண்பர்கள் அறிக்கை.

கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை கூடங்குளம் வளாகத்திலேயே வைக்க முயலும் மத்திய அரசின் முயற்சிக்கு கண்டனம். – பூவுலகின் நண்பர்கள் அறிக்கை.

கூடங்குளம் அணுஉலை தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் 2013ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்  15 நிபந்தனைககைக் கூறி உலை செயல்பட அனுமதித்தது. அதில் முக்கியமான நிபந்தனையானது அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே வைப்பதற்கான (away from reactor) வசதியை 5 ஆண்டுகளில் உருவாக்க வேண்டும் என்பதாகும். 5ஆண்டு கால அவகாசம் 2018 மார்ச் மாதமே முடிந்த நிலையில் மேலும் 5 ஆண்டுகள் கால அவகாசம் வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் கடந்த 2018 பிப்ரவரி மாதம் தேசிய அணுமின் கழகம் மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த AFR வடிமைமைப்பதிலுள்ள தொழில்நுட்பம் முழுவதுமாக கைவராத நிலையில் அதை அமைப்பதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறோம் என்றும் அதனால்தான் மேலும் 5ஆண்டுகள் அவகாசம் வேண்டும் எனக் கூறியிருந்தது. மேலும் அதே மனுவில், இதைப்போன்ற மென்நீர் உலைகள்  இந்தியாவில் முதல்முறையாக கூடங்குளத்தில் உள்ளதால் இதுமிகவும் சவாலான பணியாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தது.

ஆனால், அணுக்கழிவுகளை உலைகளுக்குள்ளேயே சேகரித்து வைப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது, ஆகவே AFR கட்டி முடிக்கப்படும் வரை கூடங்குளத்தில் உள்ள 2உலைகளில் இருந்து மேலும் கழிவுகள் உண்டாகமல் இருக்க வேண்டும் என்பதால். இந்திய அணுசக்தி கழகத்தின் கோரிக்கையை நிராகரித்து விட்டு AFR மற்றும் DGR வசதிகளை ஏற்படுத்தி முடிக்கும்வரை இரண்டு உலைகளிலும் மின்னுற்பத்தியை நிறுத்தி வைக்க வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் சார்பில் மனுத்தாக்கல் செய்திருந்தோம். அந்த வழக்கை கடந்த ஆண்டு விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை அமர்வு, கூடங்குளம் அணு உலையில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள என்ன என்ன நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என 2018 ஜூலை முதல் வாரத்திற்குள் அணு உலை ஒழுங்குமுறை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் ஆய்வறிக்கை தாக்கல் செய்ய  வேண்டும் எனக் கூறியது.

அதன்படி தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூடங்குளம் அணுவுலையில் உள்ள Fuel Pool அதன் முழு கொள்ளளவை இன்னும் எட்டவில்லை என்றும் மேலும் 5ஆண்டுகள் கால அவகாசம் வழங்கினால்  AFR வசதியைக் கட்டி முடித்துவிடுவோம் எனவும் கூறியிருந்தது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் 2022ற்குள் AFR கட்டி முடிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். இதன் தொடர்ச்சியாக கூடங்குளம் வளாகத்திற்குள்ளாகவே Away From Reactor வசதியைக் கட்டுவதற்கு பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் வருகிற ஜூலை மாதம் 10ஆம் தேதி நெல்லை மாவட்டம் இராதாபுரத்தில் நடைபெறும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

அணுக்கழிவுகளை நிரந்தரமாக சேமித்து வைக்க உலக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் “ஆழ்நிலை கருவூலம்” (Deep Geological Repository) அமைப்பதற்கான இடமும், தொழில்நுட்பமும் இன்று வரை இந்தியாவிடம் இல்லாத நிலையில் AFR போன்ற தற்காலிக  வசதியை நம்பி தொடர்ந்து கூடங்குளத்தில் கழிவுகளை உற்பத்தி செய்வது மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கும் நம்மை ஆழ்த்தும் விஷயமாகும்.

கூடங்குளத்தில் நடக்கும் இந்த விவகாரங்கள் குறித்து மாநில அரசு துளியும் கண்டுகொள்ளாமல் இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. உலகம் முழுவதும் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக வைக்க தொழில்நுட்பத்தை எந்த நாடுகளும் கண்டுபி டிக்கமுடியவில்லை, அது பெரிய சவாலாக உள்ளது. இந்நிலையில் சோதனை எலிகளாக தமிழ் மக்களை  மாற்றும் இந்த விபரீதமான விசயத்திற்கு, கூடங்குளத்தில் AFR அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது. நிரந்தர கழிவு மையம் அமைப்பது குறித்த தெளிவான திட்டத்தை மத்திய அரசு உருவாக்கும் வரையில் கூடங்குளத்தில் இரண்டு உலைகளிலும் மின்னுற்பத்தியை நிறுத்த வேண்டும், மேற்கொண்டு நான்கு உலைகள் கட்டுவதையும் கைவிடவேண்டும்  வேண்டும் என்று  பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.

ஜப்பான் நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட புகுஷிமா அணுஉலை விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளைவிட அதன் கழிவுகளால் ஏற்பட்ட பாதிப்புக்கள்தான் அதிகம். அணுஉலை கழிவுகளை கையாளும் தொழில் நுட்பம் இல்லை என்று கடந்த ஆண்டே வெளிப்படையாக மத்திய அரசு ஒத்துக் கொண்ட நிலையில் மத்திய அரசும் தமிழக அரசும் இனியும் காலம்தாழ்த்தாமல், பாதுகாப்பற்ற, பேராபத்தை விளைவிக்கும் இந்த முயற்சியை கைவிட வைப்பதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அமைப்புகளும், கட்சிகளும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments