RO தண்ணீர் நல்லதா கெட்டதா ?

RO தண்ணீர் குறித்தான இந்த சந்தேகம் நிறைய பேருக்கு ஏற்கனவே இருக்கிறது என்றாலும் சமீபத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் RO தண்ணீர் தடையை பற்றி வலியுறுத்திய பின்பு இந்த கேள்வி இன்னும் அதிகரித்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

தண்ணீரில் TDS அளவு 500 mg/L க்கு குறைவாக இருக்கும் இடங்களில் RO பயன்பாட்டினை தடை செய்ய கோரும் அறிவிப்பை இரண்டு மாதத்திற்குள் வெளியிடுமாறு தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த ஜனவரி 15ம் தேதி மத்திய சுற்றுசூழல் அமைச்சககம் வலியுறுத்துகிறது.

அதன் பின் அதே போல் TDS 500 mg/L க்கு கீழ் உள்ள பகுதிகளில் RO பயன்படுத்த கூடாது என மத்திய சுற்று சூழல் அமைச்சகம் ஒரு மாதிரி அறிக்கையை சமர்பிக்கிறது..

TDS என்றால் என்ன?  TDS 500க்கு கீழ் இருப்பதற்கும் RO பயன்படுத்துவதற்கும் என்ன தொடர்பு? என்று தெரிந்துக்கொள்வதற்கு முன் RO என சொல்லப்படும் Reverse Osmosis (எதிர்திசை சவ்வூடுபரவல்) முறையை பற்றி தெரிந்துக்கொள்வோம்.

எதிர் திசை சவ்வூடுபரவல் என்பது மென்படல வடிகட்டுதலை ஒத்த ஒரு முறை ஆகும். நீர் சுத்திகரிப்பு முறைகளுள் ஒன்றான இது நுண்ணிய துளைகளைக்கொண்ட மூலக்கூறுகளாக அமைக்கப்பட்டுள்ள மேன்படலத்தினால் ஆக்கப்பட்ட அமைப்பினைப் பயன்படுத்தி நீரை வடிகட்டும் ஒரு முறையாகும். இது அதிக அழுத்தத்தை பயன்படுத்தி நீரில் ஒரு மென் படலத்தின் மூலம் கரைசலை தள்ளுகிறது மற்றும் கரைப்பான் தக்க வைத்திருக்கும் சுத்தமான நீரை ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு கடந்து செல்ல அனுமதிக்கிறது.

 

இப்படி சுத்திகரிக்க படும் RO தண்ணீர் என்பது ஒரு சுத்தமான நீராகும். ஆனால் நாம் குடிக்கும் நீர் சுத்தமாக இருப்பது மட்டும் போதாது. நம் உடலுக்கு தேவையான Calcium, Magnesium,Sodium, Pottasium போன்ற தனிமங்கள் நீரில் இருத்தல் நமக்கு அவசியமாகிறது.

நீரின் மூலக்கூறு வாய்ப்பாடு H2O என்று நாம் படித்திருப்போம். ஆனால் உண்மையில் இயல்பாக நமக்கு கிடைக்கு குடிநீரில் வெறும் Hydrogen, Oxygen கூறுகளை தாண்டி அதில் நிறைய, கனிமங்களும் , தாது உப்புகளும், வாயுக்களும், கரிமப் பொருட்களும் கலந்திருக்கின்றன.

அப்படி தண்ணீரில் இருக்கும் அனைத்து கனிமங்களையும் தாதுக்களையும் முழுமையாக நீக்கிவிடும் வல்லமை கொண்டது தான் இந்த RO. எனும் எதிர் திசை சவ்வூடுபரவல் முறை.

தண்ணீரில் கரைந்து இருக்கும் கனிமங்கள் தாதுக்கள் மற்றும் இதர பொருட்களை நாம் TDS (Total Disolved Solids) என்று குறிப்பிடுகிறோம்.

RO இயந்திரத்தில் Input Water (சுத்திகரிக்கப்பட வேண்டிய நீரை) நாம் உள்செலுத்தும் பொழுது அது அந்த நீரில் உள்ள 90% TDS ஐ
குறைத்த பிறகு சுத்திகரிக்க பட்ட கனிமங்கள் நீக்கப்பட்ட Demineralized தண்ணீரை நமக்கு தருகிறது.

 

ஒரு உதாரணத்திற்கு நாம் உள்செலுத்தும் நீரின் TDS அளவு 500 mg/L என்றால் RO சுத்திகரிப்பானால் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரின் TDS அளவு 50 mg/L தான் இருக்கும்.

ஒரு மனிதன் ஆரோக்கியமான வாழ்வை வாழ அவன் பருகும் ஒரு லிட்டர் தண்ணீரில் 120 முதல் 150 mg/L TDS இருத்தல் அவசியமாகிறது.

TDS அளவு 500 mg/L க்கு மிகாமல் இருந்தால் அது நல்ல பாதுகாப்பான குடிநீர் என்று BIS (Bureau of Indian Standards) கூறுகிறது. இதனால் தான் TDS 500mg/L க்கு குறைவாக உள்ள இடங்களில் RO பயன்படுத்த அவசியம் இல்லை என்று அரசாங்கம் சொல்கிறது.  சர்வதேச தரக்கட்டுபாட்டு முறைகளின் படி நல்ல குடிநீரில் TDS 300 mg/L க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று வரையறை செய்யப்பட்டிருக்கிறது.  ஆனால் எந்த தரக்கட்டுபாட்டு முறைகளும் குடிதண்ணீரில் குறைந்த பட்சம் TDS இவ்வளவு இருக்க வேண்டும் என சொல்லவில்லை, இது தான் இங்கு பிரச்சனை க்கு காரணம்.

 

குறைந்த பட்ச TDS அளவிற்கென தர நிர்ணயம் இல்லை என்பதால் இது வரை அவசியம் உள்ளதா இல்லையா என்று கூட பாராமல் தங்கு தடை இன்றி அனைவரும் RO பயன்படுத்தி வந்தோம்.

ஆனால் குறைந்த TDS இருக்கும் தண்ணீரை பருகுவதால் உடலுக்கு தேவையான Calcium Magnesium போன்ற கனிமங்கள் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் அதனால் அது சார்ந்த உடல் உபாதைகள் (தலைவலி, காய்ச்சல், சோர்வு, தசை பிடிப்பு போன்ற குறுகிய கால அறிகுறிகளும், எலும்பு அடர்த்தி குறைப்பு, நீரழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நீண்ட கால நோய்களும்) ஏற்பட காரணமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

மருத்துவர்களும் ஆய்வறிக்கைகளோ இப்படி கூற , RO உற்பத்தியாளர்களும் LMES போன்ற RO ஆதரவாளர்களோ நாம் பருகும் தண்ணீரில் இருந்து வெறும் 6% தான் Calcium Magnesium நம் உடலுக்கு கிடைப்பதாகவும் , மீதமுள்ள 94% Calcium Magnesium உணவில் இருந்து தான் நமக்கு கிடைகிறது எனவும் அதனால் RO பயன்பாட்டினால் மட்டும் ஒருவருக்கு Calcium Magensium பற்றாக்குறை ஏற்பட்டு விடாது என்று வாதிடுகிறார்கள்.

ஆனால் உண்மையில் தண்ணீரில் உள்ள Calcium Magnesium அளவு பகுதிக்கு பகுதிக்கு மாறும் . இந்தியாவை பொறுத்தவரை தண்ணீரை பருகும் போது அதில் Calcium magnesium போன்ற அத்தியாவசைய கனிமங்கள் சரா சரியாக 10% இருக்கின்றன.

மீதமுள்ள 90% Calcium magnesium நமக்கு உணவில் இருந்து தான் கிடைகிறது என்பது உண்மை தான் என்றாலும், இந்த RO  ஆதரவாளர்களை பார்த்து நாம் கேட்க வேண்டிய கேள்விகள் :

  1. இந்தியாவில் எத்தனை பேர் தேவைக்கு குறைவாக அதாவது உடலுக்கு கிடைக்க வேண்டியதில் >50% Calcium மட்டும் எத்தனை பேர் உட்கொள்கிறார்கள் ? பதில்: 44% இந்தியர்கள். (அதிகப்படியாக மகாராஷ்டிரா வில் 65% மக்கள், தமிழகத்தில் குறைந்தபட்ச பாதிப்பாக 35% மக்கள்).
  2. இந்தியாவில் எத்தனை பேர் Magnesium குறைப்பாட்டுடன் இருக்கிறார்கள்.? பதில்: இந்தியாவில் இது தொடர்பான முறையான ஆய்வு இல்லை . அமெரிக்கா ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட 60% மக்களுக்கு போதுமான அளவு Magnesium கிடைப்பதில்லை என  ஆய்வுகள் கூறுகின்றன. அமேரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலே இந்த நிலைமை என்றால், 73 மில்லியன் மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் இந்தியா போன்ற ஏற்ற தாழ்வுகள் மிக்க நாட்டில் Magnesium குறைபாடு எந்த அளவிற்கு இருக்கும் என சிந்தித்து பாருங்கள்.

இப்படி உணவில் இருந்து கிடைக்க வேண்டிய Calcium Magnesium பற்றாகுறையாக இருக்கையில் தண்ணீரில் இருந்து கிடைக்க வேண்டியதும் கிடைக்கவில்லை என்றால் அது சிக்கல் இல்லையா ?

 

  1. உணவில் இருக்கும் Calcium Bio Availability யை விட தண்ணீரில் இருக்கும் Calcium Bio Availability அதிகம் இல்லையா ?

Bio Availability என்றால் ஒரு பொருளானது உடலின் Circulation இல் கலக்கும் அளவு. தண்ணீரில் Calcium Bio Availability என்பது கிட்ட தட்ட பாலின் Calcium Bio Availability இணையாக உள்ளதாக தெரிகிறது.

 

  1. RO தண்ணீரை சமைக்க பயன்படுத்தும் பொழுது காய்கறிகளில் உள்ள Calcium Magnesium க்கு என்ன ஆகிறது ?

பதில்: RO தண்ணீரில் சமைக்கும் பொழுது காய்கறிகளில் உள்ள 60% Calcium Magnesium நீக்கப்படுகின்றன.

இதை பற்றியெல்லாம் RO வை ஆதரிக்கும் LMES விரிவாக பேச மாட்டார் ஏன் என்றால் அவருக்கு எல்லாம் Simple ஆக இருந்தால் போதும்.

KIDNEY Dialysis செய்யப்பட்ட நோயாளிகளை உடல் இயல்பாகும் வரை RO தண்ணீர் மட்டும் தான் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
ஆனால் அதே குறைந்த TDS உள்ள RO தண்ணீரை சாதாரண நபர் நீண்ட நாட்களுக்கு பருகும் பொழுது அது உடல் பாதிப்புகள் வர காரணமாக அமைகிறது.

நபர்களுக்கு ஏற்ப , இடத்திற்கு ஏற்ப , உள்செலுத்தும் தண்ணீரின் TDS அளவிற்கு ஏற்ப ஒரே RO வரமாகவும் சாபமாகவும் இருகின்றது.

உதாரணத்திற்கு:

உள்செலுத்தும் (Input Water) தண்ணீரின் TDS 1200mg/L இருக்கும் பட்சத்தில் (கடற்கரை அருகில் மற்றும் தொழிற்சாலைகள் அருகில் உள்ள பூமி தண்ணீர் இப்படி அதிக TDS உடன் இருக்கும்) அங்கு RO சுத்திகரிப்பான் அவசியமாகிறது. இங்கு 90% TDS யை நீக்கிவிட்டு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை 120 TDS உடன் தருகிறது. இந்த இடத்தில் RO சரியான தேர்வாகிறது.

ஆனால் ஏற்கனவே பல அடுக்கு சுத்திகரிப்பு செய்யப்பட்ட Corporation Piped Water இன் TDS அளவு பெரும்பாலும் 250 முதல் 400 mg/L TDS தான் இருக்கும். இங்கு RO தேவையற்றதாக ஆகிறது.  எனவே தான் மத்திய சுற்று சூழல் அமைச்சகம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் 500 mg/L க்கு குறைவான TDS இருக்கும் இடங்களில் RO பயன்படுத்த தடை விதித்துள்ளது.

 

RO தண்ணீரில் இன்னொரு பெரிய பிரச்சனை அதில் இருந்து வெளிவரும் RO Reject என சொல்லப்படும் வீணாக வெளியேறும் நீரின் அளவு.

ஒரு RO சுதிகரிப்ப்பானில் 1 லிட்டர் நீர் சுத்திகரிக்க 3 லிட்டர் நீர் வீணாக்கபடுகிறது. ஒரு லிட்டர் என்று பார்க்கும் பொழுது இந்த அளவு சிறியதாக தெரியலாம் ஆனால் ஒரு கல்லூரியை எடுத்துகொள்ளுங்கள் ஒரு நாளைக்கு 1000 லிட்டர் தண்ணீரை RO முறையில் சுத்திகரிக்க 3000லிட்டர் நீரை வீணாக்குகிறது. ஒரு தொழிற்சாலையை எடுத்துக்கொள்ளுங்கள் ஒரு நாளைக்கு மட்டும் 3000-4000 லிட்டர் நீரை சுத்திகரிக்க 10,000 முதல் 12,000 லிட்டர் நீரை வீணாக்குகிறது.
காலநிலை மாற்றத்தினால் இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகள் கடும் வறட்சியில் பாதிக்கும் என்று பன்னாட்டு விஞ்ஞானிகள் எச்சரிக்கும் பொழுது, இந்தியா முழுக்க ஏற்கனவே பரவலாக தண்ணீர் பிரச்சனை இருக்கும் வேளையில், இவ்வளவு தண்ணீரை வீணாக்குவது முக்கிய சூழலியல் சீர்கேடாகவே பார்க்க பட வேண்டும்.

 

RO Reject தண்ணீரை வீணாக்காமல் வீட்டின் இதர தண்ணீர் பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என RO ஆதரவாளர்கள் கூறுகிறார்கள், ஆனால் RO கழிவு தண்ணீரின் அதிக அளவில் TDS இருப்பதால் அந்த கழிவு தண்ணீரின் தன்மையை தெரியாமல் அப்படிபொதுவாக பயன் படுத்த முடியாது.

உதரனத்திற்கு :

  1. கார் கழுவ பயன்படுத்துதல்: TDS அளவு 1500 க்குள் இருந்தால் தான் அந்த நீர் உங்கள் வாகனத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் இருக்கும்.
  2. செடிகளுக்கு: நீங்கள் வளர்க்கும் செடிகளுக்கு RO கழிவு தண்ணீர் பயன்படுத்த வேண்டும் என்றால் அது 2100 TDS க்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். அதில் Sodium அளவு (Na/Na+Ca+Mg = <60%) க்கு குறைவாக இருக்க வேண்டும்.
  3. வீட்டின் தரை துடைக்க பயன்படுத்தல்: TDS அளவு 2000 mg/L மேல் இருக்கும் பட்சத்தில் அது தரைகளில் தாது உப்புகள் படியவும் கரைகளை ஏற்படுத்தவும் காரணமாகின்றன.
  4. துணி துவைக்க பயன்படுத்தல்: RO REJECT நீரில் துணி துவைக்கும் பொழுது சில வகை துணிகள் வீணாகிவிட அதிக வாய்ப்பு உள்ளது.
  5. இது தவிர்த்து RO கழிவு நீரை Toilet Flushing க்கு பயன்படுத்தலாம் , ஆனால் Toilet Seat இல் தாது உப்புகள் படியாத வகையில் பராமரிப்பது அவசியம்.

 

RO தண்ணீர் பயன்பாட்டிர்க்கும் RO Reject பயன்பாட்டிற்கும் சரி வர தர அளவுகோல் இல்லாத சூழலில் RO பயன்பாட்டிற்கு தரக்கட்டுபாடு செய்ய வேண்டும் என்றும் 500mg/L TDS க்கு குறைவாக இருக்கும் இடங்களில் RO வை தடை செய்ய வேண்டும் எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியிருப்பது வரவேற்கதக்கது தான் என்றாலும் , நமது அரசாங்கம் வழங்கும் சுத்திகரிக்கப்பட்ட இலவச குழாய் குடிநீரின் தரத்தை கருத்தில் கொள்ளும் பொழுது இந்த சூழலில் RO தண்ணீரை தடை செய்வதன் மூலம் மக்களுக்கு இன்னும் தீவிரமான நீர் சார்ந்த நோய்களை உண்டுபண்ண இது காரணமாக இருந்துவிடும் என்பது தான் எதார்த்த உண்மை.

 

இதை ஏன் சொல்கிறேன் என்றால் கடந்த 2019 நவம்பர் மாதம் மத்திய அரசு ஜல் சக்தி திட்டத்தின் கீழ் ஒரு ஆய்வை மேற்கொண்டது. BIS Bureau of Indian Standards மேற்கொண்ட இந்த ஆய்வின் மூலம் இந்தியாவில் உள்ள 20 பெரும் நகரங்களின் ஒவ்வொரு நகரத்திலும் 10 இடங்களை தேர்வு செய்து அந்த இடங்களில் உள்ள அரசு வழங்கும் குழாய் நீரின் (piped water) தரத்தை (44 Drinking water Parameters) ஆராய்ந்தது.  இந்த ஆய்வின் முடிவில் சென்னையில் அரசு வழங்கும் குழாய் குடிநீரில் Boron, Chloride, Fluoride, Turbidity, Ammonia போன்றவையும் நோய் தொற்றை ஏற்படுத்தும் Coliforms, E-Coli போன்ற பாக்டீரியா க்களும் அளவை விட அதிகமாக இருப்பதாக தெரிய வந்திருக்கிறது.

கிண்டி, வேளச்சேரி, அடையார், சோளிங்கனல்லூர், முகப்பேர், அயனாவரம், பெரம்பூர், கொளத்தூர், எழும்பூர், தி.நகர் போன்ற சென்னையின் 10 இடங்களிலும் மக்கள் பாதுகாப்பற்ற குடிநீரையே குடித்து வருகிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவல் தெரியவந்திருக்கிறது . இந்த 10 இடங்களும் Random ஆக தேர்வு செய்ய பட்ட இடங்கள். இதை விட மோசமான குடிநீர் வழங்கப்படும் இடங்கள் வட சென்னையில் அதிகம் உள்ளது. புளியந்தோப்பு, வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவற்றியூர் பகுதிகளில் குழாய் நீரின் தரம் மிகவும் மோசமாக இருப்பதை பூவுலகின் நண்பர்கள் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த ஆய்விற்காக நாங்கள் புளியந்தோப்பு பகுதியில் உள்ள ஒரு குடிசை குடியிருப்பிருக்கு சென்றிருந்தப் பொழுது அங்கு உள்ள வீடுகளில் இந்த குழந்தை கடந்த வாரம் மலேரியாவால் பாதிக்கப்பட்டது, இது காலரா வந்து மருத்துவ மனையில் இருந்து நேற்று Discharge ஆன குழந்தை என ஒவ்வொரு நீர் தொற்று வியாதிக்கும் ஒரு குழந்தையை உதாரணாமாக கொண்டு வந்து காட்டுகிறார்கள்…

தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனையிலோ வயிற்று போக்கினால் அவதிப்படும் நோயாளிகள் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்திருப்பதாகவும் இதற்கு காரணம் தண்ணீர் தான் எனவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

நிலைமை இப்படி இருக்க, மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை இலவசமாக வழங்க வேண்டிய அரசுகள் அதை செய்யாமல் , இப்பொழுது RO வையும் தடை செய்வது என்பது மேலும் பல நீர் தொற்று வியாதிகளுக்கு வித்திடும் என்பது தான் எதார்த்தமான உண்மை. அது மட்டுமில்லாமல் புட்டி நீரை விட RO தண்ணீர் விலை குறைவு என்பதும், ஒரு வருடத்திற்கு புட்டி நீருக்கு ஆகும் தொகை தான் ஐந்து வருடங்களுக்கு RO சுத்திகரிப்பனுக்கு தேவை படும் என்பதால் நடுத்தர மக்களுக்கு RO ஒரு வர பிரசாதமாகவே இருந்து வந்தது.
இலவச பாதுகாப்பான குடிநீரை அரசு உத்தரவாதம் செய்யாமல் RO வை மட்டும் தடை செய்தால் அது தண்ணீரை (Commodity) வர்த்தகமாக மாற்றுவதோடு  புட்டி நீர் தொழிலுக்கான மறைமுக ஆதரவாகவும் அமைந்து விடும்.

எனவே RO தண்ணீரை தடை செய்வதற்கு அரசு காட்டும் அதே முனைப்பை இலவச குடிநீரை பாதுகாப்பாக வழங்குவதிலும் காட்ட வேண்டும் என்பதே பூவுலகின் நண்பர்களின் கோரிக்கை.

 

பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மக்களுக்கு பரிந்துரைப்பது:

  1. நீங்கள் சுத்தமான தண்ணீர் தான் குடிகிறீர்களா என்று நீங்கள் தண்ணீரின் தரத்தை தெரிந்து குடிப்பது நல்லது. இதற்காக அருகாமையில் இருக்கும் அரசு மற்றும் தனியார் நீர் பரிசோதனை மையத்தை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
  2. குழாய் நீரையும், 500 TDSக்கு குறைவாக உள்ள நீரையும் RO சுத்திகரிப்பானில் சுத்திகரித்து பருகுவதை தவிர்க்கவும்.
  3. குழாய் நீரை (மாநகராட்சி தண்ணீரை) 100 டிகிரீக்கு (Rolling Boiling) கொதிக்க வைத்து பருகுவதன் மூலம் நீர் தொற்று பரவுவதில் இருந்து பாதுகாக்கலாம்.
  4. TDS அதிகமாக உள்ள பகுதிகளில் TDS இன் அளவுக்கு ஏற்ப RO வை தேர்வு செய்யலாம். ( TDS 1000- 1200 mg/L இருந்தால் RO பயன்படுத்தாலம், 75% TDS Reduction செய்யும் சில RO சுத்திகரிப்பாண்களும் சந்தையில் கிடைகின்றன. தண்ணீரில் TDS மட்டும் அதிகமாக (500-800 mg/L) இருக்கும் இடங்களில் இந்த வகை RO க்களை பயன்படுத்தலாம்.
  5. நீங்கள் குடிக்கும் புட்டி நீரின் தரத்தை கண்டறிவதும் அவசியமாக உள்ளது . சமீபத்தில் ஒரு முன்னணி நிறுவனத்தில் 1 லிட்டர் புட்டி நீரையும் , 25 லிட்டர் புட்டி நீரையும் சோதனைக்கு உட்படுத்தியதில் அதன் ஒரு லிட்டர் புட்டி நீர் நல்ல தண்ணீராகவும் 25 லிட்டர் தண்ணீர் குடிப்பதற்கு உகந்ததாக இல்லததாகவும் இருந்தது. சந்தையில் முன்னணியில் இருக்க கூடிய ஒரே நிறுவனம் அளவுக்கும் விலைக்கும் ஏற்றால் போல் தண்ணீரின் தரத்தை குறைத்து மக்களுக்கு கொடுக்க முடிகிறது என்றால் நம் வீடுகளுக்கு மலிவு விலை புட்டி தண்ணீர் கொடுக்கும் நிறுவங்களின் நீரை எப்படி தரப்பரிசோதனை செய்யாமல் நாம் குடிக்க முடியும்?
  6. பெரும்பாலான மலிவு விலை புட்டி நீர் நிறுவனங்கள் RO செய்து அந்த தண்ணீரையே நமக்கு விநியோகிக்கின்றனர். புட்டி நீர் RO, UV,UF, Ozonation என எந்த முறையில் சுத்திகரிக்கபடுகிறது என நமக்கு முதலில் தெரிந்திருத்தல் அவசியம்.
  7. மாநகராட்சி குடிநீர் பாதுகாப்பானதாக இருக்கும் இடங்களில் RO பயன்பாட்டினை தவிர்ப்பதும், உங்கள் பகுதி மாநகராட்சி குடிநீர் தரமற்றதாக இருக்கும் பட்சத்தில் அதை தரமானதாக தர வலியுறுத்துவதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

 

-பிரபாகரன் வீரராசு

Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Rakesh
Rakesh
1 year ago

Useful message

John Vinoth
John Vinoth
1 year ago

ஆரோ குறித்த விழிப்புணர்வு உபயோகமாக இருந்தது