குஜராத் மக்களை விட தமிழர்களின் உயிரும் வாழ்வாதாரமும் மலிவானதா? – அறிக்கை

குஜராத் மக்களை விட தமிழர்களின் உயிரும் வாழ்வாதாரமும் மலிவானதா? மித்திவிர்தியைப் போல கூடங்குளம் விரிவாக்க திட்டத்தையும் மத்திய அரசு கைவிட வேண்டும்

கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் தேதி, குஜராத் சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் இம்ரான் கடிவால் பாவ்நகர் மாவட்டம் மித்திவிர்தியில் அமைய திட்டமிடப்பட்டிருந்த 6 அலகுகளை கொண்ட அணு உலை பூங்கா குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி, “புகுஷிமா விபத்திற்கு பிறகு அணுவுலைகளால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று மக்கள் அச்சமும் கவலையும் கொண்டுள்ளதால் இப்போது மட்டுமல்ல எப்போதுமே மித்திவிர்தியில் அணுவுலைகள் அமைக்கப்படமாட்டாது, அந்த திட்டத்தை தேசிய அணுமின் கழகம் கைவிட்டுவிட்டதாக” தெரிவித்தார்.

அதே புகுஷிமா விபத்திற்கு பிறகு கூடங்குளம் அணுவுலைகளுக்கு எதிராக இடிந்தகரையில் உள்ள மக்கள் இந்த தேசத்தின் மனசாட்சியை உலுக்கிய அமைதிவழி போராட்டதை மூன்றாண்டுகளுக்கு மேலாக முன்னெடுத்தார்கள். மக்களின் எதிர்ப்பையும் உணர்வுகளையும் மீறி அரசு முதல் இரண்டு அணுவுலைகளை தொடங்கியது. அதன் பிறகு 3,4 அலகுகளுக்கான பணிகளையும் துவக்கியது. இப்போது 5&6 உலைகளுக்கான கட்டுமான ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்திற்கு வழங்கி அதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது மத்திய அரசின் தேசிய அணு மின் கழகம்.

இத்தனைக்கும் முதல் இரண்டு உலைகளும் கடந்த ஏழு ஆண்டுகளாக சரியாக இயங்காமல் 100க்கும் மேற்பட்ட முறை பழுதடைந்து நின்றுள்ளன. முதல் இரண்டு உலைகளுக்கான அணுக்கழிவுகளை மேலாண்மை செய்ய கட்டுமானங்களை உருவாக்கவில்லை. கூடங்குளத்தில் போன்ற மென்நீர் உலைகளிலிருந்து வரும் அணுக்கழிவுகளை கையாள அல்லது மறுசுழற்சி செய்யும் தொழிநுட்பம் இந்தியாவிடம் கிடையாது. அணுக்கழிவுகளை நிரந்தரமாக “புதைக்க” ஆழ்நில அணுக்கழிவு மையம் (deep Geological repository) எங்கே அமைப்பது என்று முடிவுசெய்யப்படவில்லை. இந்த பின்னணியில் கூடங்குளத்தில் மேலும் இரண்டு உலைகளுக்கான கட்டுமானங்களை துவக்குவது அறிவிற் சிறந்த செயலாக இருக்கமுடியாது.

அணுவுலையை எதிர்ப்பதில், தம் வாழ்வாதாரம், எதிர்காலம் பற்றி கவலை கொள்வதில் குஜராத் மக்களுக்கும் இடிந்தகரை மக்களுக்கும் ஒரே மாதிரியான அச்சமும் உணர்வும்தானே மேலோங்கியிருக்கும்? குஜராத் முதல்வர் தன் மாநில மக்களின் அச்சத்திற்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்தால் பாராட்டுவதும் அதே கோரிக்கையை தமிழ்நாட்டு மக்கள் முன் வைத்தால் தேசத்துரோக குற்றச்சாட்டை அவர்கள் மீது ஏவுவதும் என்ன மாதிரியான நிலைப்பாடு? இந்த இரட்டை வேட நிலைப்பாட்டை கண்டிக்காமல் என்ன செய்வது?

தமிழர்களின் உயிரும் வாழ்வாதாரமும் மட்டும் என்ன மலிவானதா?

குஜராத் மக்கள் மீது கொண்ட அக்கறையில் கொஞ்சமாவது தமிழக மக்களிடமும் அணு மின் சக்தி கழகமும் மத்திய அரசும் காட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து கீழ் கண்ட கோரிக்கைகளை முன் வைக்கிறோம்:-

1. கூடங்குளம் அணுவுலை வளாகத்தில் விரிவாக்கம் செய்கிற வகையில் மேற்கொள்ளப்படும் 3,4,5&6 அலகுகளுக்கான பணிகளை நிறுத்தி விரிவாக்க திட்டத்தை கைவிடவேண்டும்
2. முதல் இரண்டு உலைகள் குறித்த நிலையை ஆய்வு செய்ய அணுசக்தி துறையை சாராத விஞ்ஞானிகளையும் பொறியாளர்களையும் உள்ளடக்கிய குழுவை கொண்டு ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்.
3. மக்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பபெறவேண்டும்.

கூடங்குளம் அணுவுலைகள் தென்னிந்தியாவின் சோகமாக மாறிவிடும் என்று இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் திரு.கோபாலகிருஷ்ணன் தெரிவித்ததை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் சமூக இயக்கங்களும் இதுகுறித்து குரல் கொடுக்க கேட்டுக்கொள்கிறோம். – பூவுலகின் நண்பர்கள்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments