தொழிற்சாலை மாசு கண்காணிப்பில் அலட்சியம் காட்டும் தென் மாநிலங்களுக்கு எதிராக பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு

OCEMS எனப்படும் மாசு கண்காணிப்பு அமைப்பை தென் மாநிலங்கள் முறையாக பயன்படுத்தக் கோரி பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

Paryavaran Suraksha Samiti v. Union of India 2017 வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் “ஒவ்வொரு மாநில மாசு கட்டுப்பாடு வாரியமும் தங்கள் மாநிலங்களில் உள்ள தொழிற்சாலைகள் வெளியிடும் மாசு/கழிவுகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் OCEMS-Online Continuous Emission/Effluent Monitoring Sensors ஏற்படுத்த வேண்டும்” என்று கூறியிருந்தது.
OCEMS என்பது இணையம் வாயிலாக மாநிலத்தில் உள்ள எல்லா தொழிற்சாலைகளிலும் வெளியேறுகிற கழிவு மற்றும் மாசு அளவை அந்த மாநில மாசுக்கட்டுப்பாடு வாரிய இணையதளத்தின் மூலம் பொதுமக்கள் அறிந்து கொள்வதற்கு வாய்ப்பளிக்கும் ஒரு அமைப்பாகும். இதன் மூலம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை தவிர பொதுமக்களும் தங்கள் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும். இதன் மூலம் பொதுமக்கள் தங்களின் அடிப்படை உரிமையான சுத்தமான காற்றை சுவாசிப்பதும் சுகாதாரமான குடிநீரை குடிப்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

2017 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து பல மாநிலங்கள் இந்த OCEMS அமைப்பை உருவாக்கின. இன்னும் சில மாநிலங்கள் இந்த அமைப்பை உருவாக்காமலும், பாதி செயல்படுத்தியும் உள்ளன. இது தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் தர்மேஷ் தாக்கல் செய்த மனுவில்
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் அந்தமான் அரசுகள் உடனடியாக தங்கள் மாநிலங்களில் அமைப்பை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதற்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.

தற்போதைய நிலை

• புதுச்சேரி
புதுச்சேரியில் அதிக மாசுபாடு ஏற்படுத்தக்கூடிய பல தொழிற்சாலைகள் இருந்தும் இந்த OCEMS அமைப்பு இன்னும் ஏற்படுத்தப்படவில்லை.

• கர்நாடகா
கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் OCEMS மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தாலும் இதை பொதுமக்கள் யாரும் பயன்படுத்தும் வசதி ஏற்படுத்தப்படவில்லை.

 

• தெலங்கானா

OCEMS இருந்தும் கூட முறையாக தரவுகள் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை.

• ஆந்திர பிரதேசம்
‘Real Time Pollution Monitoring System’ என்ற அமைப்பு உள்ளது. ஆனால் OCEMS அமைப்பிற்காம தகவல்கள் அதில் இல்லை.

• தமிழ்நாடு மற்றும் கேரளா
OCEMS இருந்தாலும் பழைய தரவுகளை பார்க்க முடிவதில்லை. பல நேரங்களில் சரியாக வேலை செய்வதில்லை.

தர்மேஷ் ஷாவின் மனு மீதான விசாரணை மார்ச் 3ஆம் தேதி(இன்று) தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் தாய்பால் தாஸ் குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த சுற்றுச்சூழல் வழக்கறிஞர் ரித்விக் தத்தா மற்றும் ஸ்டான்லி ஆகியோர் வாதாடினர். மனுதாரரின் கோரிக்கையை ஏற்று மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட தீர்ப்பாயம் இம்மனு குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களும் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டார்.

 

– சதீஷ் லெட்சுமணன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments