உலகம் வியந்து போற்றும் , மரங்களின் தாய் வாங்கரி மாத்தாய்

 

 

சுற்றுச்சூழல் , வளர்ச்சி , மக்களாட்சி ஆகிய மூன்றும் தனித்தனியானவை அல்ல , மேற்கண்ட மூன்றும் ஒன்றோடொன்று சார்ந்தே இயங்குபவை என்பதை வலியுறுத்தி , அதற்காக பல முன்னெடுப்புகளை தனது ” பசுமைப் பட்டை இயக்கம் ” மூலம்  செய்து , வியக்கத்தக்க வகையில் அதில் வெற்றியும் கண்ட மரங்களின் தாய் என நம் எல்லோராலும் போற்றப்படுகிற , அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற முதல் ஆப்பிரிக்க பெண்மணியான வாங்கரி மாத்தாய் அவர்களின் பிறந்த தினம் இன்றைய நாள் …

 

காடழிப்பையும் மற்றும் இயற்கைவள சுரண்டல்களையும் கண்டு , நம்மால் என்ன செய்துவிட முடியும் என விரக்தியில் ஒதுங்காமல் , மரங்களை கோடிக்கணக்கில் உருவாக்கி அதன் மூலம் இழந்த பசுமையை மீட்டெடுக்க முடியும் என முடிவு செய்து அதனை செயல்படுத்தி வெற்றியும் கண்ட , கென்ய நாட்டை சேர்ந்த வாங்கரி மாத்தாய் , உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முன்னோடியாக திகழ்கிறார்  , அவரைப் பற்றியும் அவரது செயல்பாடுகளை பற்றியும் இந்தக் கட்டுரையில் காண்போம் வாருங்கள் …

 

1940 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி கென்யா நாட்டின் இகிதி எனும் சிற்றூரில் பிறந்த வாங்கரி மாத்தாய்  , தனது தேசத்தில் பெண்களுக்கு எந்த உரிமையும் கொடுக்கப்படவில்லை , ஜனநாயகம் மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய எந்த புரிதலும் பெண்களுக்கு இல்லை என்பதை உணர்ந்து , நாம் இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என முடிவு செய்த வாங்கரி மாத்தாய்  ,  ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்காவுக்கு சென்று பல போராட்டங்களுக்கு இடையில் இளங்கலை பட்டம் மற்றும் முதுகலை பட்டம் பெற்றார்  ,  அதோடு மட்டுமில்லாமல் கென்யாவின் முதல் டாக்டர் பட்டம் பெற்ற பெண்மணியும் இவரே என்கிற பெருமையையும் பெற்றார் …

 

இதற்கு அடுத்து தான் துவங்கியது இவரின் சுற்றுச்சூழல் பணிகளும் , அதை சார்ந்த பெண்களின் வளர்ச்சி , ஜனநாயக வளர்ச்சி உள்ளிட்டவைகளுக்கான பணிகளும் …

 

1977ஆம் ஆண்டு தனது பேராசிரியர் பணியை துறந்த வாங்கரி மாத்தாய் , தனது சுற்றுச்சூழல் பணியை சுற்றுச்சூழல் தினமான 1977 ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி துவங்கினார் …

 

தனது வீட்டின் ஒரு பகுதியில் 9 மரக்கன்றுகளை நட்டு

” பசுமைப் பட்டை இயக்கம் ” என்கிற அடையாளத்துடன் தனது சுற்றுச்சூழல் பணியே அன்றைய தினத்தில் தொடங்கினார் …

 

1973 ஆம் ஆண்டிலிருந்து 1976 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலங்களில்  ,  தேசிய பெண்கள் ஆணையத்தின் உறுப்பினராக இருந்த வாங்கரி மாத்தாய்  ,  தனது நாட்டுப் பெண்களை சந்திக்கும்போது அவர்களின் தேவைகள் பற்றி பேசக்கூடிய சூழலில் அறிந்துகொண்ட தகவல்களே  , 1977ஆம் ஆண்டிலிருந்து வாங்கரி மாத்தாய் அவர்கள் சுற்றுச்சூழல் பணிகளில் ஈடுபட காரணமாக அமைந்தது …

 

தூய்மையான குடிநீர் ,  உண்ண உணவு ,  வீடுகளை அமைக்க தேவையான கட்டுமான பொருட்கள் , வீடுகளை பாதுகாத்துக்கொள்ள வேலி அமைப்பதற்கு தேவையான பொருட்கள்  , உணவுகளை சமைப்பதற்கு தேவையான விறகுகளின் தேவை மற்றும் இவை அனைத்திற்கும் மேலாக எங்கள் மண்ணின் பாதுகாப்பு ஆகிய அனைத்தும் தங்களின் தேவைகளாக இருக்கின்றன என கென்ய பெண்கள் வாங்கரி மாத்தாயிடம் கூற , மேற்கண்ட தேவைகளை பூர்த்தி செய்ய நாம் மரங்களை நட்டு வளர்க்கலாமே என்கிற எண்ணம் வாங்கரி மாத்தாய் அவர்களுக்கு தோன்றி அதை அவர்களிடம் வெளிப்படுத்த , அதன் விளைவாக உருவானதே ” பசுமைப் பட்டை இயக்கம் ” மற்றும் வாங்கரி மாத்தாய் அவர்களின் சுற்றுச்சூழல் ,  ஜனநாயகம் மற்றும் பெண்கள் வளர்ச்சிக்கான அனைத்து பணிகளும் …

 

உலகத்தில் பெரும் மாற்றங்களை உருவாக்கிய அனைத்து விஷயங்களும் ,  தொடக்க காலத்தில் பெரும் இகழ்ச்சியை சந்தித்தவை தான் என்கிற உலக நியதியின் அடிப்படையில்  ,  வாங்கரி மாத்தாயின் பசுமைப்படை இயக்கத்தின் தொடக்க கால முன்னெடுப்புகளும் பல இகழ்ச்சிகளை கண்டது  ,  ஆனால் நாளடைவில் பலரின் ஆதரவையும் பெற்று 5 கோடி மரங்கள் வரை நட்டு வளர்க்கப்பட , வாங்கரி மாத்தாய் அவர்களின் சுற்றுச்சூழல் பணிகளும் , பசுமைப் பட்டை இயக்கமும் காரணமாக அமைந்தது என்பதே வரலாறு கூறும் செய்தி  …

 

மேற்கண்ட 5 கோடி மரங்கள் வரை நட்டு வளர்க்கப்பட காரணமாக விளங்கிய வாங்காரி மாத்தாய் அவர்கள் இந்த சாதனையை எளிதாக ஒன்றும் சாதித்து விடவில்லை  …

 

அரசாங்கத்தின் மூலம் பல இன்னல்களுக்கு ஆளாகி , சிறை வாழ்வுகள் , தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டு வீச்சுகள் ஆகியவற்றையெல்லாம் எதிர்கொண்ட பின்தான் மேற்கண்ட சாதனையை அவரால் நிகழ்த்த முடிந்தது  …

 

கென்யாவின் நைரோபி நகரத்தில் இருந்த ஒரே ஒரு பூங்காவான உகூரு பூங்காவை அழித்துவிட்டு  , அந்த இடத்தில் 62 அடுக்குகளை கொண்ட மாடி கட்டிடத்தை அந்த நாட்டு அரசாங்கம் உருவாக்க முனைந்தபோது  , அதை எதிர்த்து வாங்கரி மாத்தாய் நடத்திய போராட்டங்களால்  அந்த முயற்சி தடுக்கப்பட்ட நிகழ்வுதான்  ,  வாங்கரி மாத்தாய் மீது மொத்த உலகமும் தனது பார்வையை வியந்து செலுத்த காரணமானது …

 

2002ஆம் ஆண்டில் கென்யா நாட்டில் ஜனநாயக ரீதியில் நடைபெற்ற தேர்தலில் ,  வாங்கரி மாத்தாய் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதோடு மட்டுமில்லாமல்  , சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டு அதன் மூலம் தனது சுற்றுச்சூழல் பணிகளையும் , அதை சார்ந்து பெண்களின் வளர்ச்சிக்கான பல முன்னெடுப்புக்களை செய்தார் …

 

2004 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை யாருக்கு வழங்கப் போகிறார்கள் என உலகமே உற்று நோக்கிக் கொண்டிருந்த வேளையில் , அந்த பரிசுக்கான நபராக அறிவிக்கப்பட்டார் வாங்கரி மாத்தாய்  …

 

அமைதிக்கும் சுற்றுச்சூழலுக்கும் என்ன தொடர்பு உள்ளது , இதை ஏன் வாங்கரி மாத்தாய்க்கு வழங்குகிறார்கள் என பெரும் சர்ச்சை எழுந்த நிலையில்  , சூழலியல் பாதுகாப்பு எனும் விஷயத்தை அடிப்படையாகக் கொண்டு  , அதன் மூலம் அமைதி ,  வளர்ச்சி மற்றும் மக்களாட்சி கட்டமைப்பு ஆகியவை மேம்படுவதற்கான பணிகளை மேற்கொண்டதால் , வாங்கரி மாத்தாய்க்கு 2004 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்குகிறோம் என அறிவித்தார்கள் நோபல் பரிசு தேர்வுக் குழுவை சார்ந்தவர்கள் …

 

இந்தியாவின் மிக அதிக பரிசு தொகை கொண்ட காந்தி அமைதி விருது  உள்ளிட்ட மேலும் பல விருதுகளை பெற்றுள்ள , ஆப்பிரிக்காவின் முதல் நோபல் பரிசை பெற்ற பெண்மணியான வாங்கரி மாத்தாய் அவர்கள் , சூழலியல் பாதுகாப்பு என்பது நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்களாட்சி அமைப்பு ஆகியவற்றோடு சேர்ந்து செயல்படும் ஒன்றே என்பதை  உலகிற்கு உணர்த்தி சென்றுள்ளார்  …

 

அவரது பிறந்தநாளான இன்று நாம் அனைவரும் அவரை போற்றும் விதத்தில்  , நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்களாட்சி அமைப்போடு சார்ந்துள்ள சூழலியலை பாதுகாக்க உறுதி ஏற்போம் , நன்றி …

 

ச.ஆசைதமிழ்  ,

சூழலியல் ஆர்வலர் & சமூக ஆர்வலர்  ,

நிறுவனர் – காடுகள்.காம் சூழலியல்  இணையதளம்  ,

அலைபேசி எண்  – 8695327924

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments