தமிழ்நாடு சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் அரசியல் கட்சிகளின் பங்களிப்பும் தாக்கமும்

0 Comments

 

“TamilNadu Environmental Report Card 2021″

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் அரசியல் கட்சிகளின் பங்களிப்பும் தாக்கமும் ஆய்வறிக்கை வெளியீடு.

சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனைகள் அதிகரித்து வரும் இக்காலக்கட்டத்தில் கால நிலை மாற்றம் பெரும் பேசு பொருளாக மாறி வருகிறது. உலகளவில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு மக்கள் இடத்தில் பெரும் அளவு உள்ளது. வளர்ந்த நாடுகளில் அரசியலை தீர்மானிக்கும் அளவிற்கு சூழலியல் சார்ந்த பிரச்சனைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழகத்திலும் அரசியல் கட்சிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு சமீபகாலமாக முக்கியத்துவம் அளித்து வரும் சூழலில். தமிழக சட்டமன்ற தேர்தல்- 2021 நடைபெற உள்ள இவ்வேளையில் அனைத்து அரசியல் கட்சிகளும் சுற்றுச்சூழல் சார்ந்த அம்சங்களை தங்கள் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக வழங்கியுள்ளனர். இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நடந்த சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் அரசியல் கட்சிகளின் பங்களிப்பையும் அதன் தாக்கத்தையும் ஆய்வுக்குபடுத்தி ” TamilNadu Environmental Report Card 2021″ என்கிற அறிக்கையை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தயாரித்துள்ளது.

சூழகியல் செயற்பாட்டாளர் நித்தியானத் ஜெயராமன் இதுகுறித்து பேசுகையில் ” காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம், சென்னை சேலம் எட்டு வழிச்சாலை போன்ற திட்டங்களில் அரசியல் கட்சிகள் எடுத்துள்ள எதிர் நிலைப்பாடு மற்றும் தொழிற்சாலைகளை விட விவசாயத்தையே முக்கிய நினைப்பது அரசியல் கட்சிகளின் அணுகுமுறையில் மாற்றம் உண்டாகியிருப்பதை காட்டுகிறது. தொழிற்சாலைகளை விட விவசாயத்தைதான் தமிழ் அடையாளமாக வரையறுப்பதையும் பார்க்க முடிகிறது” எனக் கூறுகிறார்.

காலநிலை மாற்றத்தினால் அதிகரித்து வரும் வெள்ளம், புயல், வறட்சி போன்ற இயற்க்கை பேரிடர்கள், மணல் கொள்ளை, குடிநீர் தட்டுப்பாடு, மாசு பாதிப்பு, போன்ற மனித சமுகத்தால் உண்டாகிய பிரச்சனைகள் உலகம் முழுக்க பெரும் பாதிப்புகளை உண்டாக்கியது. தமிழகத்திலும் இது போன்ற பல பிரச்சனைகள் தொடர்ந்து இருக்கக் கூடியதுதான். குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில் இது போன்ற பிரச்சனைகள் தமிழ்நாட்டில் மிகவும் அதிகரித்துள்ளது. புயல்களின் எண்ணிக்கையும் தீவிரமும் அதிகரித்துள்ளது. அரசின் அலட்சிய போக்குகளில் வெள்ள பாதிப்புகளும் அரங்கேறின. இதுமட்டுமல்லாமல், இலாப வெறிக்கு மணல் சூறையாடப்படுவதால் நிலத்தடி நீர் மட்ட பாதிப்பு, மீத்தேன் போன்ற திட்டங்களால் டெல்டா பகுதிகளில் பாதிப்பு, கூடங்குளம் அணுஉலை போராட்டங்கள், சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு காடுகள், மலைகள் அழிப்பு, விவசாய நிலங்கள் கையப்படுத்துதல், நியுட்ரினோ திட்டம், சென்னையை வெள்ள அபாயத்தில் தள்ள போகும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் போன்ற திட்டங்களுக்கு மக்கள் போராட்டங்களையும் மீறி அரசு இத்திட்டங்களை செயல்படுத்தவே முயல்வதை இந்த ஆய்வறிக்கை மூலம் அறிய முடிகிறது.

இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் கூறியதாவது ” தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைமைகள் இன்னும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. அதற்கு ஆதாரமாக இந்த ஆண்டு தேர்தல் அறிக்கைகளில் பெரும்பாலான முக்கிய கட்சிகள் யாரும் காலநிலை மாற்றம் குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடாததை கூறலாம். பொதுமக்களும் சில சமூக செயல்பாட்டு அமைப்புகளும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும் இன்னும்கூட கருத்தொருமித்த செயல்பாடுகள் முன்னெடுப்பதில் குறைபாடுகள் உள்ளது” என்று கூறினார்.

இந்த ஆய்வறிக்கையில் கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகம் சந்தித்த சுற்றுச்சூழல் சார்ந்த பல்வேறு பிரச்சனைகள், அதன் பாதிப்புகள், மக்கள் போராட்டங்கள், அதற்காக தொடரப்பட்ட வழக்குகள் அரசியல் கட்சியின் நிலைப்பாடுகள், அரசின் செயல் திட்டங்கள் போன்றவை விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆய்வறிக்கை தயாரிப்பில் பங்கேற்ற பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் ” இந்த தேர்தலில் சுற்றுச்சூழல் குறித்த பிரச்சினைகள் முக்கிய பேசுபொருளாக அமைந்துள்ளன. கூடங்குளம் முதல் காட்டுப்பள்ளி வரை திட்டங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் வாடிக்கையாகி விட்டன. இது ஒரு ஆரம்பம்தான். இன்னும் தீவிரமான செயல்பாடுகளை அரசியல் கட்சிகள் வரும் காலங்களில் முன்னெடுக்கும். 2021 சட்டமன்றத் தேர்தல் அதற்கான விதையாக அமைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புக்கு :- பிரபாகரன் +91 7395-891230, பூவுலகின் நண்பர்கள்

TN ENV REPORT CARD 2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *