நோயூட்டும் கட்டிடங்கள் (Sick Building Syndrom)

“இந்த வீட்டுக்கு வந்ததுல இருந்து ஒரே பிரச்சினையா இருக்குது. ஒருத்தர் மாத்தி ஒருத்தருக்கு ஏதாவது உடம்பு சரியில்லாமப் போகுது” என்று பல நேரங்களில் பலரும் சொல்வதைக் கேட்டிருப்போம். இதற்கு உளவியல் காரணங்கள் கூட இருக்க முடியும் என்றாலும் அது Sick Building Syndrome எனப்படும் ‘நோயூட்டும் கட்டிடங்களால்’ ஏற்படும் நோய்க் குறியாகவும் இருக்கலாம்
ஒரு கட்டிடத்தில் பணிபுரிபவரோ அல்லது வாழ்பவரோ அந்தக் கட்டிடத்தினால் குறிப்பிட்ட நோய்க் குறிகளுக்கு ஆளாவதை Sick Building Syndrom (SBS) என்று குறிப்பிடுகிறார்கள். இது கட்டிடத்தின் வெறும் சுகாதாரக் குறைபாட்டால் மட்டும் ஏற்படும் பிரச்சினை அல்ல. மாறாகக் கட்டிட வடிவமைப்பு மற்றும் கட்டுமானப் பொருட்கள், கட்டிடத்தின் உள்ளிருக்கும் பொருட்களால் ஏற்படும் நோயாகும்.


பல நேரங்களில் இந்த நோய்க்குறிகள் கட்டிடத்தில் குறிப்பிட்ட நபர் எவ்வளவு நேரம் செலவிடுகிறார் என்பதைப் பொறுத்து வீரியமடையவோ இல்லை மறையவோ செய்யும். 1984 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு உலகம் முழுவதும் 30% புதிய அல்லது புதுப்பிக்கப்பட்டக் கட்டிடங்கள் ‘உள்ளறை வளி மாசுபாட்டால்’ (Indoor Air Pollution) பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறது.
நம் கட்டிடங்கள் மற்றும் மேஜை நாற்காலிகளின் வண்ணப் பூச்சுகள், சிந்தட்டிக் பொருட்களில் இருந்து வெளியேறும் வாயுக்கள், மேலும் பலவிதமான தினசரிப் பயன்பாட்டில் வெளிப்படும் VOC எனப்படும் எளிதில் ஆவியாகும் பொருட்களினால் காற்று நச்சாக்கப்படுகிறது. உள்ளறை வளி மாசுபாட்டை உருவாக்கும் VOC குறித்த விரிவான பூவுலகின் நண்பர்கள் காணொளிளை இந்த இணைப்பில் (https://www.youtube.com/playlist?list=PLSu91m11qzN03_9VHTUtNY58bE8atQOTz) பார்க்கலாம்.
VOC கள் மட்டுமின்றி போதுமான சூரிய ஒளி மற்றும் காற்றோட்டத்திற்கான வாய்ப்பின்மை, வாய்ப்புகள் இருப்பினும் எப்போதும் கதவு ஜன்னல்களை மூடிவைப்பது போன்றவையும் SBS பிரச்சினைக்குக் காரணமாக அமைகின்றன. ஏர்கண்டிஷனர்களின் வேலை அறையின் காற்றைக் குளிர்விப்பது மட்டுமே சுத்திகரிப்பதோ இல்லை – வெளிக்காற்றை சுழற்சி செய்வதோ அல்ல என்பதை இங்கு நினைவுகூர வேண்டியிருக்கிறது. மேலும் கட்டுமானப் பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் நச்சுப் பொருட்கள், பூச்சிகொல்லிகள் (எறும்புக்கு வரையும் வெள்ளைக்கோடு கூடப் பூச்சிக்கொல்லிதான்) போன்றவற்றின் நச்சுக்கள் போன்றவையும் உள்ளறை மாசுபாட்டை உருவாக்குகின்றன.
SBS இன் நோய்க்கூறுகள் தலைவலி, கண் – மூக்கு – தொண்டை எரிச்சல், சோர்வு, தலை சுற்றல், வயிற்றுக்கோளாறுகள் போன்றப் பொதுவான அறிகுறிகளாக இருக்கும் தீவிரமான நாள்பட்ட நோய்களாகவும் இருக்கலாம். நோயூட்டும் கட்டிடங்கள் சார்ஸ் போன்றத் தொற்றுநோய்ப் பரவலுக்கும் காரணமாக இருந்துள்ளது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா பரவலுக்கும் குளிரூட்டப்பட்ட அறைகளுக்குமான தொடர்பையும்கூட நாம் இயற்கைக் காற்றோட்டத்தைப் பெறும் வண்ணம் வடிவமைக்கப்படாதக் கட்டிடங்களின் வடிவமைப்புக் கோளாறாகப் பார்க்க முடியும்.


நல்ல காற்றும் சூரிய ஒளியும் உள்ள பகல் பொழுதுகளில்கூட மின் விளக்குகள், மின்விசிறிகள் தேவைப்படும் கட்டிடங்கள் நிச்சயமாய் சுகாதாரக் குறைபாடுடையவை எனச் சொல்ல முடியும். இங்குக் குறிப்பிடப்பட்டிருக்கும் WHO அறிக்கையும்கூட இதையே உணர்த்துகிறது.
SBS ஐ நவீனக் கட்டுமானத்தின் தோல்வியாகத்தான் பார்க்க முடியும். காற்று அதிகம் பெறும் பகுதியாயிருந்தாலும் சரி குறைவாகப் பெறும் பகுதியாக இருந்தாலும் சரி நாலுக்கு நாலு ஜன்னல்கள் – குளிரானப் பகுதியாக இருந்தாலும் சரி வெப்பத்தில் தகிக்கும் இடமாக இருந்தாலும் சரி ஒன்பது அங்குலச் சுவர்கள் என்று வெவ்வேறு வகையானப் பிரச்சினைகளுக்கும் தேவைகளுக்கும் ஒரே தீர்வை அளிக்க முயல்கிற நவீனக் கட்டிடங்கள். இதில் வடக்கிலிருந்து காற்று வந்தாலும் சரி தெற்கிலிருந்து காற்று வந்தாலும் சரி வாசலை கிழக்கு மேற்காக வைக்கவேண்டும் என்கிற வாஸ்து எனும் கோமாளித்தனம் வேறு.
இந்த SBS பிரச்சினைகளுக்கு முழுமையானத் தீர்வு அந்தந்தப் பகுதிக்கான மரபுக் கட்டுமான முறைகளை (Vernacular Construction) மீட்டெடுப்பதுதான். இங்கும் பாரம்பரியத்தைப் பிடித்துதான் தொங்க வேண்டுமென்பதில்லை. லாரி பேக்கர் போன்ற அறிஞர்கள் நவீன அறிவியலை மரபின் போதாமைகளில் இட்டு நிரப்பி மேலும் வளப்படுத்தியது போலத் தேவைக்கேற்ப நவீன அறிவியலையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
எனினும் சென்னை போன்ற அடுக்குமாடி தேவைப்படும் நகரங்களில் முழுமையான மரபுக் கட்டுமானங்களுக்கான சாத்தியமில்லை எனினும் குறைந்தபட்சம் நல்ல சூரிய ஒளிக் காற்றோட்டத்தையாவது உறுதி செய்வது அவசியம். முகப்பு அலங்காரங்களுக்காக நாம் செய்யும் செலவினங்கள் சூழலையும் பாழ்படுத்துபவை,
கட்டிடங்கள் நாம் வாழ்வதற்கானவை; நம் அந்தஸ்தைக் காட்டுவதற்கானவை அல்ல. அவற்றை வாழ்வதற்கானதாக வடிவமைத்து நம்மையும் நம் சூழலையும் காப்போம்.
(தொடரும்)

-ஜீயோ டாமின்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments