நகரக் கட்டுமானங்களைப் பசுமையாக்குவது சாத்தியமா?

நவீன கட்டுமானங்களில் சிமெண்ட், கம்பிகள், மணல் போன்ற முக்கியக் கட்டுமானப் பொருட்கள் அதிகக் கரிம மற்றும் நீர்வழித்தடம் உடையவை என்பது நாம் அறிந்ததே. (இவற்றிற்கான மாற்று குறித்து இன்னொரு பதிவில் பின்னர் பார்க்கலாம்.)  ஆனால், இட நெருக்கடியும் நிலத்தின் மதிப்பும் மிகுந்த பெரு நகரங்களில் முழுமையான சூழலுக்கு இசைவான கட்டுமானங்கள் இப்போது இருக்கும் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரத்தின் அடிப்படையில் சாத்தியமற்றவை. எனினும் நவீன நகரக் கட்டுமானங்களில் சூழலுக்கு இசைவாக என்னென்ன செய்ய முடியும் என்பதை இங்குப் பார்க்கலாம்.

முதலாவதாக கட்டுமானப் பொருட்களின் பயன்பாடு எவ்வளவுக்கு எவ்வளவு குறைவாக இருக்கிறதோ அந்த அளவுக்குப் பணமும் மிச்சமாகும் சூழலும் பாதுகாக்கப்படும். எனவே நம்முடைய நோக்கம் முதன்மையாகக் குறைந்த கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்துவதாகவும் அடுத்ததாக பயன்படுத்தப்படும் பொருட்கள் சூழலுக்கும் உடல்நலனுக்கும் தீங்கு விளைவிக்காதவை என்பதை உறுதிசெய்வதாகவும் இருக்க வேண்டும். அடுத்ததாகச் சூழலுக்கு இசைவான பொருட்களாகவே இருந்தாலும் அவற்றை நெடுந்தொலைவிலிருந்து தருவிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

கட்டிடத்தின் உட்பகுதியில் சிமெண்ட் பூச்சைத் தவிர்ப்பது இன்று பரவலாக ஒரு trend ஆகிவருகிறது. அது சிமெண்ட் மற்றும் பெயிண்டுகளின் தேவையைக் குறைத்துப் பணத்தை மிச்சப்படுத்துவதோடு  கன்ணுக்குப் புதுமையான விருந்தாகவும் அமைகிறது. உண்மையில் சிமெண்ட் கலவையால் சுவர்களைப் பூசுவதால் (cement plastering) கட்டிடத்தின் உறுதித் தன்மை எதுவும் அதிகரிப்பதில்லை.  கூரையின் அடிப்பகுதி மற்றும் (குறைந்தபட்சம் சில) சுவர்களில் பூச்சுவேலையைத் தவிர்ப்பதன் மூலம் கட்டுமானச் செலவைப் பெருமளவில் குறைப்பதோடு  சூழலையும் பாதுகாக்கலாம்.

 

சுவர்களுக்கு செங்கற்களைப் (Red Bricks) பயன்படுத்தும்போது வழக்கமான செங்கல் அடுக்கும் முறைக்கு (English bond) பதிலாக Rat Trap bond எனப்படும் முறையில் செங்கற்களை அடுக்குவதால் 30% வரைச் செங்கற்களை சேமிக்க முடிவதோடு சுவரில் உருவாகும் இடைவெளியால் அறையின் வெப்பநிலையையும் குறைக்க முடியும். சுட்ட செங்கற்களைவிட Stabilized compressed blocks (இன்னொரு பதிவில் விரிவாகப் பார்க்கலாம்) எனப்படும் அழுத்தப்பட்டச் செங்கற்கள் கரிமவழித்தடம் குறைந்தவை. சூழலுக்கு இசைவானவை. இன்று பரவலாகத் தமிழகத்தின் பல பகுதிகளில் இத்தகையச் செங்கற்கள் கிடைக்கின்றன. முடிந்தவரைக் காங்கிரீட் செங்கற்களைத் தவிர்ப்பது நல்லது.

 

மாலை நேரச் சூரிய ஒளி நேரடியாகப் படுக்கை அறைச் சுவர்களில் விழாதவாறு வீட்டை வடிவமைப்பதன் மூலம் இரவில் சுவர்களின் வெப்ப உமிழ்வு குறைவதால் குளிரூட்டும் செலவைக் குறைக்க முடியும். மொட்டைமாடியில் மாடித்தோட்டம் அமைப்பதும் கூரையின் மீது விழும் வெப்பத்தைக் குறைத்து இரவு நேர வெப்ப உமிழ்வைக் குறைக்கும். சிலர் கட்டிடம் உறுதியாக இருக்கட்டும் என்று தேவைக்கு அதிகமாக இரும்புக் கம்பிகளைக் காங்கிரீட்டில் பயன்படுத்துவர். அது செலவை அதிகரிப்பதோடு எதிர்மறை விளைவையே ஏற்படுத்தும். அனுபவம்பெற்ற Structural Engineer ஐக் கொண்டு மட்டுமே கட்டிடத்தின் வடிவமைப்புக்கான வரைபடம் (Structural Drawings) பெறப்பட்டு அதன்படியே கம்பிகள் பயன்படுத்தப்பட வேண்டும்.

வீட்டின் ஒவ்வொரு சதுர அடியும் மதிப்புமிக்கது. எனவே வீட்டின் முழுப்பரப்பளவும் கொள்ளளவும் முழுமையாகப் பயன்படுத்தும்படியாக வடிவமைக்கப்பட வேண்டும். வீட்டினுள் passage போன்ற வழிப்பாதைகள் இடத்தை விரையமாக்குபவை. ஒரு நல்ல architect ஐ கட்டிட வரைபடம் தயாரிக்க  பயன்படுத்துவதன் மூலம் இவ்விரயங்களைத் தவிர்க்க முடியும். பெரிய மரங்கள் உங்கள் மனைக்குள் இருப்பின் முடிந்தவரை அவற்றை அகற்றாமல் கட்டிடங்களை வடிவமையுங்கள்.

ஒவ்வொரு குடும்பத்தின் தேவைகளும் தனித்துவமானவை. லாரி பேக்கர் பாணியிலானக் கட்டுமானத்தின் முக்கிய அடிநாதமாக விளங்குவது இது. உதாரணமாக கடவுள் நம்பிக்கையற்ற ஒருவருக்குப் பூஜையறை வீட்டில் தேவையில்லை. அதுபோல வீட்டிற்கு வருபவரை நேராக வரவேற்பறைக்கு அழைத்துப் பேசும் பழக்கம் உள்ளவர்களுக்கோ இல்லை வெளியே நிற்க வைத்தேப் பேசியனுப்பும் பழக்கம் உள்ளவர்களுக்கோ Sitout / foyer எனப்படும் காத்திருப்பு அறை தேவையில்லை. ஒருவருக்கு வரவேற்பறைச் சிறியதாக இருந்தாலும்கூட வாசிப்புக்கான சிறு நூலகம் தேவைப்படலாம். இன்னொருவருக்கோ பிள்ளைகள் ஓடி விளையாட ஒரு பெரிய வரவேற்பறை தேவைப்படலாம். ஒவ்வொருவரும் தமது தனிப்பட்டத் தேவைகளின்படி கட்டிடத்தை வடிவமைத்தால்தான் அது நமக்கான வீடாக இருக்கும்.

கட்டிட உறுதிக்கோ அல்லது பயன்பாட்டுக்கோத் தேவையற்ற முகப்பு வேலைப்பாடுகள் (Elevation works) வெறும் அந்தஸ்தைக் காட்டுவதற்காகவன்றி அவற்றால் பொருட்செலவேயன்றி எதுவும் பயனில்லை. எனவே பிரம்மாண்ட வேலைப்பாடுகள் அதிலும் குறிப்பாக அவற்றில் stone cladding போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். Car porch போன்ற பகுதிகளை காங்கிரீட்டுக்குப் பதிலாக எடைகுறைந்த Sheet roofing மூலம் அமைப்பதுச் சிறந்தது.

கட்டிடத்தில் தேவையற்ற மின்னலங்காரங்களைத் தவிர்ப்பதும் தேவையான இடங்களில் மின் சிக்கனம் மிக்க எல்ஈடி பல்புகளைப் பயன்படுத்துவதும் மின்செலவைக் குறைப்பதோடு சூழலையும் காக்கும். கூரையில் சூரிய மின்தகடுகளைப் பொருத்துவது தண்ணீர் சூடுபடுத்த சூரிய சக்தியைப் பயன்படுத்துவது சிறப்பு.

அத்தியாவசியத் தேவை இல்லாவிடில் மேற்கத்தியப் பாணியிலானக் கழிப்பறையைத் தவிர்த்து இந்தியப் பாணிக் கழிவறையை அமைப்பது தண்ணீர்ச் சிக்கனத்துக்கும் உடல்நலனுக்கும் நல்லது. காற்றின் திசைக்கேற்ப வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை முந்தையப் பதிவில் ஏற்கெனவே பார்த்துவிட்டோம்.

ஏற்கெனவே சொந்த வீடுகளில் இருப்பவர்கள் முதலீடு என்ற பெயரில் புதிதாய் வீடுகள் கட்டுவதைத் தவிர்ப்பதோ இல்லை ஓய்வுக்காகத் தனிவீடுகள் கட்டிக்கொள்வதுகூடத் தவிர்க்கப்பட வேண்டியதே. எல்லாவ்ற்றிற்கும் மேலாக ‘நகரங்கள்’ காலநிலை மாற்றத்தின் விளைவுகளுக்கும் முன் தோல்வியடைந்து வருகின்றன. நகரங்கள் வாழத் தகுதியற்றதாகிக் கொண்டிருக்கின்றன. நகரங்களில் தொடர்ந்து முதலீடுகள் செய்வது நீண்டகால அளவில் நிச்சயம் சரியான முடிவாக இருக்கப்போவதில்லை.

மரபும் நவீனமும் இணைந்த லாரிபேக்கர் கட்டிட முறைகளைப் பற்றி தொடர்ந்து அடுத்தப் பதிவில் தெரிந்துகொள்வோம்.

– ம.ஜீயோ டாமின்

முந்தைய பதிவுகள்

நோயூட்டும் கட்டிடங்கள் (Sick Building Syndrom)

 

உங்கள் கனவு இல்லத்திற்குள் தென்றல் வரவேண்டுமா?

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments