காவிரி டெல்டாவில் மீண்டும் ஹைட்ரோகார்பன் எடுக்கும் முயற்சி. தமிழ்நாடு அரசு தடுத்திட கோரிக்கை.

எண்ணெய்/எரிவாயு வள சிறு வயல்கள்(DSF) மூன்றாம் கட்ட ஏல அறிவிப்பில் புதுக்கோட்டை மாவட்டம் வடதெரு பகுதியும் இடம் பெற்றிருப்பதற்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கண்டனம்.

இந்திய அரசின் நிறுவனங்களான ONGC, OIL போன்றவற்றால் ஏற்கெனவே எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயும் இருக்கும் இடங்களாக அறியப்பட்ட வயல்களில் இருந்து ஹைட்ரோகார்பன் வளங்களை எடுத்து வருவாய் மேற்கொள்ள முடியாமல் இருந்த பகுதிகளை  தனியார் நிறுவனங்களுக்கு ஏலத்தில் விட்டு வருவாய் பங்கீடு ஒப்பந்தம் மூலம்  வருவாய் ஈட்டுவதற்காக 2015ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதுதான் Discovered Small Field Policy (DSF). இந்த கொள்கை மூலம் 2016ஆம் ஆண்டில் ஒரு ஏலமும் 2018ஆம் ஆண்டில் ஒரு ஏலமும் நடைபெற்றது. தற்போது மூன்றாம் கட்டமாக  75 எண்ணெய் வயல்கள் 32 ஒப்பந்த பகுதிகள் மூலமாக ஏலம் விடப்படவுள்ளது. இந்தியா முழுவதுமுள்ள 13 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 230MMT ஹைட்ரோகார்பன் இதில் கிடைக்கும் என பெட்ரோலியத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற மூன்றாம் கட்ட ஏல அறிவிப்பில் காவேரி படுகையின் புதுக்கோட்டை மாவட்டம் வடதெரு பகுதி மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் பவளப்பாறைகள் வளமிக்க கடல் மற்றும் நிலப் பகுதியை உள்ளடக்கிய 463.2 சதுர கிலோமீட்டர் பகுதியும் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களின் சில பகுதிகளை உள்ளடக்கிய காவேரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டம் இயற்றியுள்ளது. இதன் மூலம் எவ்வித புதிய ஹைட்ரோகார்பன் திட்டங்களையும் தமிழ்நாட்டில் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தெரிந்தும் கூட தொடர்ச்சியாக ஹைட்ரோகார்பன் ஏலங்களில் காவேரி டெல்டா பகுதிகளை மத்திய அரசு இடம்பெறச் செய்வது எதேச்சதிகாரமாக உள்ளது.

இந்த குறிப்பிட்ட 463.2 சதுர கிலோமீட்டர் பகுதியில் வடதெரு பகுதிக்கு ஏற்கெனவே ONGC நிறுவனம் 2027ஆம் ஆண்டு வரை Petroleum Mining Lease- ஐ பெற்றுள்ளதாக ஏல அறிவிப்பு ஆவணத்தில் பெட்ரோலியத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனைக் காட்டி காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணியை ஏலத்தில் எடுக்கும் நிறுவனம் மேற்கொள்ள முயன்றால் அதை தடுக்க தமிழ்நாடு அரசு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். பெட்ரோலியத்துறை அமைச்சகம் காவிரி படுகையை இந்த ஏல அறிவிப்பிலிருந்து நீக்கவும் மேற்கொண்டு எந்த ஏல அறிவிப்பிலும் காவேரி டெல்டா பகுதியை சேர்க்கக் கூடாது என்பதையும் அழுத்தமாக ஒன்றிய அரசிற்கு தமிழ்நாடு அரசு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

 

ஏல அறிவிப்பு

http://online.dghindia.org/dsf3/Files/pdf/NIO_DSF-III.pdf

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments