அப்போது பொழிந்த வெள்ளை மழை

‘சென்னை கிண்டி மேம்பாலம் அருகில், ஒரு வேனிற்கால மதிய வேளையில் தீ மூட்டி குளிர்காய்ந்து என் நண்பர்களுடன் வார இறுதியை கழித்தபின், கடுமையான பனிப்பொழிவின் காரணமாக விரைவில் வீடு திரும்பினேன்’ என சமூக வலைதளத்தில் பதிவு செய்தால் எப்படி இருக்கும்? வெயிலின் தாக்கத்திற்கு அஞ்சி மதிய வேளையில் வீட்டினுள் பதுங்கியிருக்கும் நாம் ஒருவேளை இரண்டு போர்வைகளின் சுழலுக்குள் அடைப்பட்டு தெருக்களில் உலா வந்துக்கொண்டு இருந்தால்? தமிழகத்தில் ஏதோ ஓர் கிராமத்தில் கிரிக்கெட் விளையாடும் சிறார்கள், பனிப்பாறைகளில் சறுக்கி விளையாடிக்கொண்டு இருந்தால்? ஏன் உலகம் முழுக்க பனிப்பாறைகளால் சூழப்பட்டோ அல்ல சூழ்வதற்கு சாத்தியங்களோடோ இருந்தால்?

ஆம்! நாம் வாழும் இந்த பூமி தோன்றிய 450 கோடி ஆண்டுகளில் 5 முறை இப்பூமியின் பெரும்பாலான நிலப்பரப்புகள் பனியால் சூழ்ந்திருந்த்துப் பதிவாகியுள்ளதை அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். அப்படிப் பனியால் உலகம் சூழப்பட்டக் காலம் பனியுகம் (Ice Age) எனப்படும். சுமார் 240 கோடி ஆண்டுகளுக்கு முன்னர், முதன்முறையாக பூமியின் பெரும்பாலானப் பகுதிகளை பனி சூழத் தொடங்கியது. அக்காலம் ஹுரோனியன் பனியுகம் (Huronian Ice age) என்றழைக்கப்படுகிறது. அந்தப் பனியுகத்தில் உலகம் சுமார் 30 கோடி ஆண்டுகள் பனியால் தொடர்ந்து சூழப்பட்டிருந்தது.

குறிப்பிட்ட சில கோடி ஆண்டுகள் இடைவெளியில் பூமியின் பெரும்பாலான நிலப்பரப்புகள் பனியால் சூழப்பட்டும் பின் சில காலங்கள் குறைவானப் பகுதிகளில் பனியால் சூழப்பட்டும் இருந்திருக்கிறது. குறைந்த நிலப்பரப்புகளில் பனிப்பாறைகள் சூழும் காலம் இடைப்பனியுகம் (Interglacial) எனப்படும். பனியுகக்காலம் தொடங்கிய சில ஆயிரம் ஆண்டுகள் கழித்து  உலகளாவிய அளவில் இயற்கையாகவே அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக பனிப்பாறைகள் உருகி மீண்டும் நிலப்பரப்புகளாக உருப்பெறும். தற்போது நாம் வாழும் காலமும்  இடைப்பனிக்காலம் ஆகும். கிரீன்லாந்து, ஆர்டிக் மற்றும்  அண்டார்டிக் பகுதிகளில் மட்டும் தான் இப்போது நம்மால்  பனிப்பாறைகளையும், பனியால் சூழப்பட்ட பகுதிகளையும் காண முடிகிறது. அவை பனியுகக் காலம் இருந்தமைக்கு அடையாளமாக இருக்கிறது. மேலும் அப்பனிப்பகுதிகளில் எடுக்கப்பட்ட மாதிரிகளும் அதனை உறுதிப்படுத்திகின்றன.  கிரயோஜெனியன் (Cryogenian 85 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்), ஆண்டியன்-சஹாரான் (Andean-Saharan 46 லட்சம் ஆண்டுகளுக்கு முன்), கரூ (karoo 36 லட்சம் ஆண்டுகளுக்கு முன்), குவாட்டனரி (Quaternary 26 லட்சம் ஆண்டுகளுக்கு முன்) என பதிவாகி இருக்கும் பிற நான்கு  பெரும் பனியுகக்காலங்கள் ஆகும்.

16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றி 18 நூற்றாண்டின் இடைப்பகுதி வரை வளர்ந்த பனியுகமே, கடந்த பதினோராயிரம் ஆண்டுகளில் அதிக நாட்கள் நிலைத்த குறுகிய கால பனியுகமாக பதிந்துள்ளது. கடைசி பனியுகமான  குவாட்டனரி பனியுகத்தின் இடைப்பனியுகத்திற்கு பின்பு தான், மனித இனம் தோன்றியது குறிப்பிடத்தக்கது. அப்போது நிலவிய  வெப்பநிலையும், காலநிலையும் பூமியில் மனித இனம் நிலைத்து வாழ ஏதுவான சூழல் உருவாகி இருந்தது.

புவிவெப்பமயமாதல் அதிகரித்துக் கொண்டுவரும் தற்போதைய சூழலில், மீண்டும் பனியுகம் ஏற்படுவதற்கு சாத்தியம் உண்டா? எனும் கேள்வி உங்களில் பலருக்கு ஏற்படலாம். நீண்ட காலம்  இருந்த சந்தேகத்திற்கு இப்போது ஓர் விடையை என்னால் கண்டுபிடிக்க முடிந்தது. அதற்கு பெரிதும் உதவியவர் மிலுட்டின் மெலன்கோவிட்ச் (Milutin Melankovitch) எனும் செர்பிய அறிஞர். இம்மாறுதலுக்கான விடையை முதன்முதலில் கண்டறிந்த அவர் அதற்கு “மெலன்கோவிட்ச் சுழற்சி” (Melankovitch Cycle) என பெயரிட்டு விளக்கவும் செய்கிறார். மெலன்கோவிச், பனியுகத்திற்கு மூன்று காரணிகளை முன்னிறுத்துகிறார். அவை புவி நீள்வட்ட பாதையின் மாற்றம், பூமியின் சாய்வுத்தன்மை மற்றும் துருவம் சுழலும் தன்மை ஆகிவற்றின் மாறுதல்களின் விளைவாக பூமியில் பெரும்பாலான நிலப்பரப்புகள் பனிப்பாறைகளால் சூழப்படுகிறது என்கிறார். மேலும் அவர் வடதுருவ பகுதியில் விழும் சூரிய ஒளியின் அளவும், பூமியின் சாய்வுத்தன்மையும் முக்கியமான கருவியாக அவர் முன்னிறுத்தி அதற்கான விளக்கத்தையும் தருகிறார். தென்துருவ பகுதிகளை ஒப்பிடுகையில் வடதுருவப் பகுதிகளில் நிலப்பகுதிகள் அதிகம்.நீரினை விட நிலப்பகுதிகள் குறைந்த அளவிலான வெப்பத்தை உள்வாங்கிக்கொள்ளும். குறைந்த அளவிலான வெப்பத்தினை உள்வாங்கிக்கொள்வதால் நிலப்பகுதிகள் விரைவில் பனிக்கட்டிகளாக மாறுகிறது. அதனால் அதிக நிலப்பகுதியுள்ள வடதுருவ பகுதிகள் பனியுகக் காலம் ஏற்பட முக்கியப்பங்கு வகிக்கிறது என விளக்கிய அவர்
மேலும் தான் முன்வைத்த மூன்று முக்கியக் காரணிகளையும் பின்வருமாறு விளக்குகிறார்.

புவி நீள்வட்ட பாதையில் மாற்றம்:

பூமி ஓர் நீள்வட்ட பாதையில் சூரியனை சுற்றிக்கொண்டு, தன்னைத்தானே சுழன்றுக்கொண்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த நீள்வட்ட பாதையிலும் மாற்றங்கள் நிகழும். சனி, மற்றும் வியாழன் கோள்கள் பூமியின் அருகில் வரும்போது பூமியின் நீள்வட்ட பாதையில் மாற்றம் உண்டாகும். இந்நிகழ்வ்வு சுமார் ஒரு லட்சம் ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும்  நிகழ்வு ஆகும். அவ்வாறு மாறுதல் நிகழும்போது நீள்வட்ட பாதையானது, ஓர் வட்ட பாதையாக மாறும். அம்மாறுதல் நிகழும்போது, சூரியஒளி பூமியில்விழும் அளவில் மாறுதலை உண்டாக்கும். இப்போது நாம் காணுகிற பெரிலியன் (Perilion – பூமி சூரியனுக்கு அருகில் இருக்கும் நாள்) மற்றும் அபிலியன் (Aphelion- பூமி சூரியனுக்கு மிக தொலைவில் இருக்கும்  நாள்) இவற்றில் மாறுதல் உண்டாக்கும். சூரியஒளியில் மாறுதல் ஏற்பட்டால் தட்பவெப்ப நிலையிலும், காலநிலையிலும் மாறுதலை உண்டாக்கும்.

பூமியின் சாய்வு அச்சு (Earth Tilt Position):

பூமியின் மைய அச்சு அதிகபட்சமாக 24.5° டிகிரியிலும், குறைந்தபட்சமாக 22.1° டிகிரி அளவிலும் சாய்வாக இருக்கும். பூமி தற்போது 23.5° சாய்வாக உள்ளது. கடந்த 1 மில்லியன் ஆண்டுகளில் 22.1° டிகிரியிலிருந்து 24.5° டிகிரி வரை சாய்ந்து, பின்  10 ஆயிரத்தி 500 ஆண்டுகளுக்கு முன் பூமி தற்போது நாம் காணுகின்ற நிலையிலும் (23.5°), தன் குறைந்த சாய்வு நிலையான (22.1°) டிகிரியை மேலும் 41ஆயிரம் ஆண்டுகளில் அடையும். குறைந்த சாய்வு நிலையில் பூமி இருக்கும்போது சூரிய ஒளி அதிக அளவில் வடதுருவத்தில் பதியாது. எனவே அதிக  பனிப்பாறைகள் உருவாக ஏற்ற சூழல் உருவாகும். அதிக பனிக்கட்டிகள் உருவானால் சூரியசக்தி உள்வாங்கப்படாமல் பிரதிபலித்து சென்றுவிடும். பூமியின் சாய்வுத்தன்மை மிக முக்கிய காரணியாக விளங்குகிறது.


பின் துருவங்கள் சுழலும்முறை, சூரியன்  மற்றும் நிலவின் ஈர்ப்பு விசை காரணமாக பூமி சுழலும்போது தள்ளாட்டம் ஏற்படும். சாய்வுத்தன்மையில் உள்ள பூமி, ஒரு முகப்பு முன்பக்கமும், பின் பக்கமும் சாய்ந்து வரும். ஒரு சுழற்சி முடிய 25 ஆயிரம் ஆண்டுகள் ஆகும். இப்போது பெரிலியன் நாளில் வடதுருவத்தில் பனிக்காலமும், தென் துருவத்தில் கோடைக்காலமுமாக உள்ளது. முன்பக்க முகப்பு பின்பக்கம் செல்லும் போது  பெரிலியன் நாளில் தலைகீழான மாற்றம் ஏற்படும். மேலும்   வடக்கின்  அடையாளமாக இப்போது இருக்கும் துருவ நட்சத்திரத்திற்குப் (Polaris) பதிலாக சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கோச்சப் (Kochab) எனும் நட்சத்திரம் வடதுருவமாக இருந்தது. மேலும் நீள்வட்ட பாதையுமே சூழலுக்கு உட்படும் அதை “Apsidal Precession” எனப்படும். இம்மாற்றம் ஒரு லட்சத்து பன்னிரெண்டாயிரம் ஆண்டுகளில் நீள்வட்ட பாதையுமே சுழலும். இந்த அனைத்து காரணிகளால் தான் பூமியில் அதிக நிலப்பரப்புகள் பனியால் சூழப்படுகிறது என மெலன்கோவிட்ச் விளக்குகிறார்.

இடைப்பனியுகத்தில் அதிகரிக்கும் உலகளாவிய வெப்பத்திற்கும், தற்போது நாம் வாழும் காலத்தில் அதிகரிக்கும் வெப்பத்திற்கும் ஒப்பிடுதல் கூடாது. இடைப்பனியுகத்தில் நூறு ஆண்டுகளுக்கு இயற்கையாகவே 0.1°C  அளவில் வெப்பம் அதிகரிக்கும். ஆனால் தற்போது நிலவும் கால நிலை மாற்றத்தால் பத்து ஆண்டுகளில் சராசரியாக 1°C  அளவில்  உயருகிறது. மேலும் அடுத்த ஆண்டில் 1.5°C அளவிற்கு புவியின் வெப்பம் உயருமென தரவுகள் கூறுகின்றன. அபாயகரமான அளவில் அதிகரித்து வரும் வெப்பநிலை இத்தனை கோடி ஆண்டுகளாக ஓர் முறையை பூமி பின்பற்றி வந்தது. 10ஆயிரம் ஆண்டுகளோ அல்ல 20ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னரோ நாம் இல்லாவிடினும் தற்போது மாறியிருக்கும் சிறு சிறு மாறுதல்களுக்கான எதிர்வினைகளை நம் கட்டாயம் சந்தித்தே தீருவோம்.

-லோகேஷ் பார்த்திபன்

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments