மறுசுழற்சி எனப்படும் குறைசுழற்சி

Colored trash bins used to recycle paper, plastic and glass. Digital illustration.

மெரிக்கர்கள் தேர்தலில் வாக்களிப்பதை விட அதிகமாகப் பொருட்களை மறுசுழற்சி செய்வதில் ஈடுபாடு காட்டுகிறார்கள் என்கிறார் சூழியல் எழுத்தாளரான ஆனிலியோனார்ட். கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் சூழல் நலனுக்குத் தங்களின் பங்களிப்பைச் செய்வதில் கிடைக்கும் மகிழ்ச்சி வாக்களித்துத் தம் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் ஜனநாயகக் கடமை கொடுக்கும் மகிழ்ச்சியைக் காட்டிலும் அதிகமாக இங்கு வெளிப்படுவதைப் பார்க்க முடிகிறது. தன்னுடைய பொருட்களின் கதை புத்தகத்தில் “மறுசுழற்சி மிகவும் விநோதமானது – சிலர் இதனால் உற்சாகப்படுத்தப்படுகிறார்கள்; சிலர் இது குறித்து கர்வம் கொள்கிறார்கள்; வேறு சிலரோ இது குறித்து சலிப்படைந்துள்ளனர்; நம்பிக்கையற்றுள்ளனர் அல்லது கோபப்படுகின்றனர்” என்று குறிப்பிடுகிறார் ஆனிலியோனார்ட்.

ஒருவருக்குப் பெருமை தரும் ஒரு விஷயம் எப்படி இன்னொரு வருக்கு நம்பிக்கை இழக்கச் செய்வதாக இருக்க முடியும்? மறுசுழற்சியின் பின்னிருக்கும் அறிவியல் – உளவியல் – அரசியலை அலசுவோமா?

பயன்படுத்திய உலோகப் பொருட்கள், கண்ணாடி, காகிதங்கள், நெகிழிப்பொருட்கள் போன்றவற்றைச் சேகரித்து மீண்டும் ஆலைகளின் பலகட்டச் செயல்பாடுகளுக்கு உட்படுத்திப் பயன்படக் கூடிய மாற்றுப் பொருட்களாக வார்த்து மீட்டெடுப்பதை மறுசுழற்சி என்கிறோம்.

மறுசுழற்சி புதிய மூலப்பொருட்களின் தேவையைக் குறைக்கிறது. பழைய -பயன்படுத்தியப் பொருட்கள் எரிக்கப்படுவதையோ அல்லது குப்பைகளில் கொட்டப்படுவதையோத் தடுக்கிறது. இதனால் சூழல் மாசுபாடு தவிர்க்கப்படுவதோடு அரிய இயற்கை மூலப் பொருட்கள் மீண்டும் தொடர்ந்து பயன்படுத்தப்பட வழி ஏற்படுகிறது. மறுசுழற்சி ஏராளமான முறைசாராத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. அது புதிய தொழில் வாய்ப்புகளைத் திறந்து விட்டிருக்கிறது. சூழல் அக்கறையுள்ள ஒருவருக்கு மறுசுழற்சியைக் குறிக்கும் முக்கோண வடிவ ஒன்றை ஒன்று துரத்தும் அம்புக்குறிகள் புத்துணர்வை ஊட்டுகின்றது. மறுசுழற்சி குடிமைச் சமூகத்தைச் சூழல் செயல்பாடுகளில் பங்கேற்கத் தூண்டுகிறது. அவர்களுக்கு ஒரு மனநிறைவையும் பெருமையையும் கூடத்தருகிறது. ஒரு மறுசுழற்சி செய்யத்தக்கப் பொருளை பயன்படுத்துவது குப்பைகள் குறித்தக் குற்ற உணர்வைக்களையச் செய்கிறது. மறுசுழற்சி தீர்க்கப்பட முடியாதச் சிக்கல்களைத் தீர்த்து வைக்கும் தொழில் நுட்பமாய்த் தோன்றுகிறது.

இவையெல்லாம் மறுசுழற்சி எனும் நாணயத்தின் ஒருபக்கம் தான். இவை அனைத்துமே பெரும்பாலும் உண்மையும் தான். எனினும் மறுசுழற்சியைப் பற்றிப் பெரிதாய் கண்டுகொள்ளப்படாத இன்னொரு பக்கமும் இருக்கிறது. பொதுவாக மறுசுழற்சி செய்யப்படும் பொருட்களையும் அவை எவ்வாறு புதுப்பொருட்களாய் வார்க்கப்படுகின்றன என்பதையும் தெரிந்துகொள்வது அதன் இருண்டபக்கங்களையும் நாம் தெரிந்து புரிந்துகொள்ள உதவும்.

முதலில் காகிதத்தை எடுத்துக்கொள்வோம். அதன் மூலப்பொருள் மரங்கள் என்று நமக்குத் தெரியும். சில மாற்றுப்பொருட்கள் இருந்தாலும் இன்றும் பெரும்பாலானக் காகிதங்கள் புதிய மரங்களிலிருந்தேப் பெறப்படுகின்றன. மரக்கட்டைகள் கூழாக அரைக்கப்பட்டுப் பல்வேறு வேதிச்செயல் பாடுகளுக்கும் இயந்திரச் செயல்முறைகளுக்கும் உட்படுத்தப்பட்டு அழுத்தி உலர்த்தப்பட்டு நாம் பயன்படுத்தும் காகிதம் பெறப்படுகிறது. கொஞ்சம் உறுதியான பளிச்சென்ற வெள்ளைக்காகிதங்கள் முதலாய் மங்கலான கருப்பு அல்லது பல வண்ணங்களில் அச்சிடப்பட்ட நாளிதழ்கள் வரை நாம் நம் வீடுகளில் பார்த்திருப்போம்.

உறுதியானவை – உறுதியற்றவை, மெல்லியவை -சில தடிமனானவை, அச்சிடப்பட்டவை –அச்சிடப்படாதவை – எழுதப்பட்டவை, வழுவழுப்பானவை – சொரசொரப்பானவை, கடுமையான நெடியுடையவை – நெடி குறைவானவை, வண்ணமுடையவை – வெண்மையானவை – பழுப்பு நிறத்தவை, பாலீதீன் மேற்பூச்சுகொண்டவை – சிந்தெட்டிக் பொருட்களால் உறையிடப்பட்டவை (டைரிகள்) – கெட்டியானப் அட்டைப் பெட்டிகள் எனப் பலவிதமான காகிதங்களைப் பார்த்திருப்போம். பழையக் காகிதப் பொருட்களைப் பெற்றுச் செல்லும் நபர் ஒருவர் நம்மிடம் வந்தால் இந்த அனைத்து வகையானக் காகிதங்களையும் அவரிடம் சேர்த்துக் கொடுத்து விட்டு எடை போட்டுப் பணம் பெற்றுக்கொள்வோம். அப்படித்தானே?சில நேரங்களில் அவர் அவற்றை இரண்டு வெவ்வேறு தரத்தில் பிரித்து தனித்தனியாக எடை போடக்கூடும். எப்படியிருப்பினும் இவற்றைப் பத்து விதமாகத் தரம் பிரிப்பதோ அல்லது கையாள்வதோ இயலாத காரியம். அவர் அவற்றை மொத்த சில்லரை வியாபாரியிடம் ஒப்படைக்க சில்லரை வியாபாரி அவற்றை மறுசுழற்சி செய்யும் மையங்களுக்கு அனுப்புகிறார். அங்கே இந்த அத்தனை விதமானக் காகிதங்களும் சேர்த்து (சிலதவிர்க்கப்படலாம்) அரைத்து மீண்டும் கூழாக்கப்பட்டுக் காகிதமாக மாற்றப்படும்.

இவ்வாறு பல விதமானக் காகிதங்களும் ஒன்றுசேர்க்கப்பட்டுக் கூழாக்கப்படும் போது அவற்றை முந்தையத் தரத்துடன் பளிச்சிடும் உறுதியான ஒரு A4 காகிதமாக மீண்டும் உருவாக்க முடியாது. நாளிதழ் போன்ற தரம் குறைந்தக் காகிதங்களைத்தான் பெற முடியும். காகிதக்கூழில் மரத்துகள்களின் நார்கள் எவ்வளவு நீளமாக இருக்கின்றனவோ அவ்வளவுக்குக் காகிதம் உறுதியாக இருக்கும். ஏற்கனெவே அரைக்கப்பட்டப் பழையக் காகிதங்கள் மீண்டும் கூழாக்கப்படும் போது அவற்றின் நார்கள் முன்பு இருந்ததை விட நீளம் குறைந்தத் துண்டுகளாக அரைக்கப்படும். எனவே மறுசுழற்சி செய்யப்பட்டுப் பெறப்படும் காகிதத்தின் உறுதித் தன்மை முந்தைய காகிதத்தைப் போன்று இருக்காது. அடுத்து அச்சிடப்பட்ட வண்ணக்காகிதங்களும், எழுதப்பட்டக் காகிதங்களின் நிறத்தை நீக்குவதற்காக காகிதக்கூழ் பிளீச் செய்யப்படும் (இங்கு பெரும்பாலான அச்சுமைகள் கன உலோக நச்சுடையவை என்பது குறிப்பிடத்தக்கது.) இவ்வாறு பிளீச் செய்வதற்கான பயன்படுத்தப்படும் குளோரினானது தன்னளவில் நச்சுத் தன்மையுடையதோடு பின்னாளில் காகிதங்கள் எரிக்கப்படும் போது ‘டையாக்சினாக’ வெளிப்படக்கூடியது. இந்த டையாக்சின் உறுதி செய்யப்பட்ட ஒரு புற்று நோய்க் காரணியாகும்.

பழையக் காகிதங்களைச் சேகரிப்பதில் தொடங்கி அவற்றை மொத்த கொள் முதல் நிலையத்துக்குக் கொண்டு வருதல், ஆலைகளுக்கு அனுப்புதல், இயந்திரச் செயல்பாட்டுக்கு உட்படுத்துதல், மீண்டும் கடைகளுக்கு எடுத்துச் செல்லுதல் என நுகர்வோரின் இல்லத்தை அடையும் வரை மீண்டும் சுழலும் இந்த சுழற்சியில் ஏராளமான மரபு எரிபொருட்களும் மறைநீரும் சூழல் மாசுபாடும் பொதிந்திருக்கின்றன. இவ்வாறு மறுசுழற்சி செய்யப்படும் காகிதம் மீண்டும் தன் பயன்பாட்டிற்குப் பின்னர் மறுசுழற்சி செய்யப்படும்போது முன்பிலும் தரமும் உறுதியும் குறைந்த இன்னொரு காகிதத்தை உருவாக்குகிறது. இறுதியாக முதலில் எழுதவோ புத்தகங்களை அச்சிடவோ பயன்பட்டக் காகிதங்கள் பின்னர் அட்டைப் பெட்டிகளாகவோ இல்லை கெட்டியான புத்தக அட்டைகளாகவோ வடிவமைக்கப்படுகின்றன. எனினும் ஒரு சில முறைகளுக்கு மேல் ஒருகாகிதத்தை மறுசுழற்சி செய்ய முடியாது. இறுதியில் அவை சாம்பாலாக்கிகளையோ இல்லை குப்பை கொட்டுமிடங்களையோ அடைந்து தன் இறுதிகட்ட சூழல் பாதிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கும்.

இங்கு மறுசுழற்சியில் மீண்டும் மீண்டும் ஒரு பொருள் அதேப் பொருளாக வார்க்கப்பட வில்லை என்பதைப் பார்க்கிறோம். ஒவ்வொரு முறையும் முன்பை விடத் தரம் குறைந்த ஒரு பொருள் பெறப்பட்டு ஒரு சில தடவைகளுக்குப் பின்னர்அந்தப் பொருள் குப்பையாக்கப்படுகிறது. ஒரு பொருளிலிருந்து மீண்டும் அதேப் பொருள் உருவானால் மட்டுமே அதை நாம் மறுசுழற்சி என்று கொள்ள முடியும். அப்படியான மறுசுழற்சியில் மட்டுமே ‘ஒன்றை ஒன்றுத் துரத்தும் அம்புக்குறிகள்’ அடையாளமாக இருக்க முடியும். ஆனால், இங்கு இந்த சுழற்சி உடைந்து சில தடவைகளுக்குப் பின் பொருள் குப்பைக்குச் செல்வதை ‘குறை சுழற்சி’ (Down cycling) என்கிறோம்.

இந்த மறுசுழற்சி என்று சொல்லப்படும் குறைசுழற்சியில் ஏராளம் ஓட்டைகள் இருந்தாலும் இவை மூலப்பொருட்களின் தேவையைத் தள்ளிப்போடவோ இல்லை சிறிது குறைக்கவோச் செய்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. அதேநேரத்தில் ஒரு பொருள் அப்படியேக் குப்பைக்குச் செல்வதை இவைத் தள்ளிப் போடுவதன் மூலம் குப்பைகள் கையாளுதலிலும் ஒரு சிறிய பங்களிப்பைச் செய்கின்றன.

இங்கு காகிதம் குறைசுழற்சியின் ஒரு உதாரணம் தான். கண்ணாடி, உலோகங்கள், நெகிழி என மறுசுழற்சி செய்யப்படும் எல்லாப் பொருட்களுக்கும் இவை பொருந்தும். நம் வீடுகளில் நாம் பயன்படுத்தும் நெகிழிப் பொருட்கள் பல்வேறு நிறங்கள் வடிவங்கள் தரங்களைக் கொண்டவை. இவற்றை மறுவார்ப்புச் செய்யும் போது இந்த நிறங்களை நீக்குவதற்காக அதிக வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. நெகிழிப் பொருட்கள் குறைசுழற்சிச் செய்யப்பட சூடாக்கப்பட்டு உருக்கப்படும் போது நச்சுவாயுக்களை வெளியேற்றுகின்றன. ஒரு தரமான நெகிழிப் புட்டியை மறுசுழற்சி செய்து மீண்டும் அதே தரமுடைய நெகிழிப்புட்டியை உருவாக்கமுடியாது. முந்தையதை விடத் தரம் குறைந்த நெகிழிப்புட்டிகளோ இல்லைத் தரைவிரிப்புகள் போன்ற பொருட்களையோத் தான் பெற முடியும்.

இதேபோல தான் உலோகங்களும் கூட. இரும்பு -அலுமினியப் பொருட்கள் என்று பயன்பாட்டில் சொல்லிக் கொண்டாலும் நாம் பயன்படுத்தும் உலோகப் பொருட்கள் தூய்மையான உலோகங்களால் ஆனவை அல்ல. எப்படி தங்க ஆபரணத்தில் அதன் உறுதித்தன்மைக்காகச் செம்பு சேர்க்கப்படுகிறதோ அதேப்போன்று ஒரு குறிப்பிட்டத் தன்மையைப் பெறுவதற்காக எல்லா உலோகப் பொருட்களிலும் வேறு ஏதேனும் உலோகங்களோ இல்லை அலோகங்களோ வெவ்வேறு அளவுகளில் சேர்க்கப்பட்டிருக்கும். உதாரணமாக இரும்பில் அதன் உறுதித் தன்மைக்காக ‘கார்பன்’ சேர்க்கப்படுகிறது. அலுமினியத்தில் தாமிரம் போன்ற உலோகங்கள் சேர்க்கப்படுகின்றது. ஒன்றுக்கு ஒரு உலோகத்தில் இன்னொரு உலோகம் சேர்க்கப்படுவதை ‘உலோகக்கலவை’ (alloy) என்கிறோம். இவ்வாறு சேர்க்கப்பட்டிருக்கும். இவ்வாறு வெவ்வேறு உலோகங்கள் அல்லது அலோகங்கள் வெவ்வேறு அளவுகளில் சேர்க்கப்பட்ட உலோகங்களைச் சேர்த்து உருக்கிப் புதியப்பொருட்களாக வார்க்கும்போது அவற்றிலிருக்கும் மாசுகளை அகற்றுவது மிகக்கடினமானது அல்லது இயலாதது. எனவே பெறப்படும் இறுதி பொருளும் முன்பிலும் தரம் குறைக்கப்பட்ட குறைசுழற்சி செய்யப்பட்டப் பொருளாகவே கிடைக்கிறது.

இவற்றைப் பார்க்கும் போது மறுசுழற்சி என்பது உண்மையில் குறைசுழற்சியே என்பதும் இவை முழுமையான சூழல் சிக்கல்களுக்கானத் தீர்வுகள் அல்ல என்பதையும் உணரமுடியும். அதேநேரத்தில் ஒருபுறம் வரை முறையற்ற உற்பத்தியும் – நுகர்வும் – குப்பையும் தொடரும் வரை மறுசுழற்சியை  அது குறைசுழற்சியாகவே இருந்தாலும் நாம் வெகுசிரத்தையோடுச் செய்ய வேண்டியிருக்கிறது. பொதுமக்களாகிய நாம் இவ்விஷயத்தில் செய்ய வேண்டியது என்ன என்பதைப் பார்க்கலாமா?

  • ஒரு பொருள் முழுமையாக பயன்படுத்தப்பட்ட பின்னர் அது இனி எவ்விதத்திலும் உதவாது என்று முடிவு செய்த பின்னரே அதை நீக்குவது குறித்து முடிவு செய்யுங்கள். உதாரணமாக முழுமையாகப் பயன்படுத்தப்படாத காகிதக் குறிப்பேடுகளைத் தூக்கியெறியுமுன் முதலில் முழுமையாகப் பயன்படுத்துங்கள்.
  • வீடுகளில் உங்கள் குப்பைத் தொட்டிக்கு அருகில் எப்போதும் மறுசுழற்சிக்கானப் பெட்டி ஒன்றை வைத்திடுங்கள். சிறிய பேனா மூடியில் இருந்து மறுசுழற்சி செய்யத்தக்க எந்த உலோக / நெகிழி / கண்ணாடிக் குப்பைகளையும் இந்தப் பெட்டியில் போடுங்கள். நாளிதழ்கள் உட்படக் காகிதங்களைத் தனியாக அடுக்குங்கள்.
  • வீட்டில் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மறுசுழற்சியின் அவசியத்தை உணர்த்துவதோடு அவர்களையும் அதில் பங்கேற்கச் செய்யுங்கள்.
  • மறுசுழற்சியில் குப்பைப் சேகரிப்போரின் (Rag Pickers) பங்களிப்பு மகத்தானது. முடிந்தால் அவர்களின் பங்களிப்பையும் பொருளாதார நிலையையும் கருத்தில் கொண்டு உங்கள் பகுதிகளில் இருக்கும் குப்பை சேகரிப்போருக்கு உங்கள்ம றுசுழற்சி செய்யத்தக்கப் பொருட்களைப் பணம் பெறாது கொண்டு சேருங்கள்.
  • ‘மறுசுழற்சிசெய்யத்தக்கது’ என்று விளம்பரப்படுத்தப்படுவதால் மட்டும் ஒரு பொருளை சூழலுக்கு உகந்தது என்று முடிவு செய்து வாங்காதீர்கள்.
  • சூழலுக்கு ஏற்றத் தொழில்களை முன்னெடுக்க விரும்பும் தொழில் முனைவோராக நீங்கள் இருந்தால் மறுசுழற்சி செய்யும் கட்டுமானங்களை உருவாக்குவது குறித்துப் பரிசீலியுங்கள்.
  • பள்ளிக் கல்லூரிகளில் காகித மறுசுழற்சி செய்யும் அமைப்புகளை நிறுவ முயற்சி எடுங்கள். ‘Zero Carbon Campus’ என்ற இலக்குடன் செயல்படும் பெரியார் மணியம்மைக்கல்லூரியில் காகித மறுசுழற்சிக்கான இயந்திரத்தை நிறுவியிருப்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

அரசு என்ன செய்ய வேண்டும்?

  • மாநகராட்சிக் கழிவுகளின் மூலம் பெறப்படும் மறுசுழற்சி செய்யத்தக்கக் கழிவுகளை முழுமையாக மறுசுழற்சிக்கு உட்படுத்த வேண்டும். மாநகராட்சிக் கழிவுகள் மதிப்புமிக்க உற்பத்திப் பொருட்களுடன் சேர்த்து ஆங்காங்கு தீ வைத்து எரிக்கப்படுவதை முழுமையாகக் கண்காணித்துத் தடை செய்ய வேண்டும்.
  • மறுசுழற்சி செய்வதற்கு ஏற்றவகையில் எல்லாப் பொருட்களும் உற்பத்தி செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். உதாரணமாக பாலிதீன் பூசப்பட்டக் காகிதத்தை (Multi layered Plastics ) மறுசுழற்சிச் செய்ய இயலாது. இவ்வாறானப் பொருட்களின் உற்பத்தியை முழுமையாகத் தடுக்க வேண்டும்.
  • குப்பை சேகரிப்போரை அங்கீகரித்து அவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் மருத்துவ உதவிகளுக்கு திட்டமிட வேண்டும்.
  • மறுசுழற்சிமையங்கள் சூழலுக்கு ஏற்றவாறு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
  • மறுசுழற்சி செய்யத்தக்கதே ஆயினும் நெகிழிப்பைகள், உறுஞ்சு குழல்கள் போன்ற சிறிய – சேகரிக்கக் கடினமான – சூழலைப் பாதிக்கும் பொருட்களை மறுசுழற்சிக்கு உட்படுத்துவதும் கடினம். அவற்றை முழுமையாகத் தடை செய்ய வேண்டும்.

முதல் பத்தியில் குறிப்பிட்ட படிவளர்ந்த நாடுகள் மிகப் பெரிய கழிவு உற்பத்திச் சாலைகளாகவே இருந்தாலும் அவை மறுசுழற்சிக்கானச் சிறந்தக் கட்டமைப்பை உருவாக்கியிருக்கின்றன. மக்களிடமும் அவை போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தியிருப்பதோடு தம் குப்பையின் பெரும்பகுதியை மறுசுழற்சி செய்கின்றன. ஆனால், இந்தியாவில் உருவாகும் குப்பையில் ஒரு சிறு பகுதி மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. பெருகும் குப்பைகள், சுருங்கும் இயற்கை மூலப் பொருட்கள், சீர்கெடும் சுற்றுச்சூழல் இவற்றைக் கருத்தில் கொண்டு அரசும் மக்களும் ஒன்றிணைந்து மறுசுழற்சியைப் பெருமளவில் ஒரு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும்.

அதேநேரத்தில் ஆனிலியோனார்ட் குறிப்பிடுவது போல தான்  பயன்படுத்தியத் தண்ணீர்ப்புட்டியை மறுசுழற்சி செய்பவரைவிட அந்தப்புட்டியைப் பயன்படுத்தாதவர்தான் சிறந்த சூழல் பங்களிப்பாளர் என்பதை உணர்ந்து அத்தியாவசிய மற்றப் பொருட்களை வாங்கிக்கு வித்துக் குப்பையில் வீசுவதைத் தவிர்ப்போம். நம் சூழலையும் நம்மையும் காத்துக்கொள்வோம்.

 

-ஜீயோ டாமின்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments