கூடங்குளம்

அணு உலை எதிர்ப்பு – ஒரு வர்க்கத்தின் பாடல்
அணு உலை எதிர்ப்பு – ஒரு வர்க்கத்தின் பாடல்

அணு உலை எப்போது அறிவிக்கப்பட்டதோ அப் போதிருந்தே அவர்கள் போராடிக் கொண்டிருக் கிறார்கள், வீதி நாடகங்கள், வெளியீடுகள், ஊர்வலங்கள் அப்போதும் நடந்தது. சூழலியல் போராட்டங்களில் ஆழமான பார்வையும் அக்கறையும் கொண்ட மறைந்த தோழர்கள் நெடுஞ்செழியன், அசுரன் போன்றோர் உட்பட பல அறிவுலகினர் இப்போராட்டத்தில் நீண்ட காலமாக தங்களை இணைத்திருந்தார்கள். ரஷ்ய சமூகத்தின் வீழ்ச்சியும், கம்யூனிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுமே இந்திய அரசை இத்திட்டத்தை கைவிட வைத்தது. இடையில் கழிந்த 2000ல் துவங்கி கடந்த பன்னிரெண்டு ஆண்டுகள் மிக முக்கியமானவை கைவிடப்பட்ட ஒப்பந்தத்தை தூசு தட்டி எடுத்து மீண்டும் அணு உலையை கட்டி முடித்துவிட்டது அரசு. ஆனால் ஒப்பந்தம் போடப்பட்ட போது ரஷ்யா ஒரு சமூக ஏகாதிபத்திய கம்யூனிச நாடாக இருந்தது. மீண்டும் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டபோது அது முதலா ளித்துவ ஏகாதிபத்திய நாடாக இருக்கிறது. இன்றும் இருந்து வருகிறது. ஆனால் தங்களின் பழைய நினைவு களை மறக்க முடியாத சிபிஎம் தோழர்கள் அதை இன் னும் கம்யூனிச நாடு என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

Koodan_kulam_380_copyஇடையில் பிரமாண்டமான அந்தக் கல்லறை கட்டப்பட்டபோது எதிர்ப்பில்லை என்பது வருத்தமான உண்மைதான். பேச்சிப்பாறையில் தண்ணீர் எடுப் பார்கள் என்பதால் முன்னர் அணி திரண்ட விவசாயி களையும், ஏற்கனவே போராடிய கடலோர மக்களையும் மீண்டும் அணு உலை கட்டப்பட்டபோது அணி திரட்ட எந்த அமைப்புகளோ, தனி நபர்களோ முன் வரவில்லை. ஆனால் அதே பகுதில் தனியார் கனிம மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வந்தன. அணு உலைக்கு எதிரான உணர்வுகள் முனகலாக ஒலித்துக்கொண்டிருந்ததற்கு அப்பால் எதுவும் நடந்துவிடவில்லை. கனிம மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டம் தோல்வியில் முடிவடைந்த நிலையில் அவநம்பிக்கையும் இருண்மையுமே அப் பகுதியைச் சூழ்ந்திருந்தது. அணு உலைக்கு எதிரான சின்னச் சின்ன விசும்பல்கள் இருந்ததே தவிர அது மக்கள் போராட்டமாக மாறவில்லை. ஆனால் உதய குமாரின் வருகைக்குப் பின்னர் அந்த போராட்டம் மாபெரும் மக்கள் போராட்டமாக வெடித்தது. அணு உலை நிர்வாகம் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி கொடுத்த நிலையில் மக்களிடம் உருவாக கொதிநிலை மாபெரும் மக்கள் போராட்டமாக வெடித்தது. அதை உதயகுமார் தலைமையிலான போராட்டக் குழுவினர் ஒழுங்கு படுத்தினார்கள். இன்று காலம் அவரை மீனவ மக்களின் கைகளில் சேர்த்திருக்கிறது. 25 ஆண்டுகால அணு உலை ஆபத்து புரிந்துணர்வும், மக்களின் அதிருப்தியும் இன்று இந்த போராட்டத்தை பல திசை களில் நகர்த்தியுள்ளது. ஒரு வருடத்திற்கும் மேலாக என்பதை அந்த மக்கள் போராடவே இல்லை என்கிற பொருளில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஒரு வருடத்திற்கு மேலாக என்பது கவன ஈர்ப்பாக இருக்கலாம். ஆனால் இந்த ஒரு வருடத்தில் அஹிம்சை வழியில் அவர்கள் தொடர்ந்து அணு உலையின் ஆபத்து பற்றி பேசினார்கள். உதயகுமாரோ மக்களோ கேள்விகளை மட்டுமே கேட்டார்கள். அணு உலைக் கழிவுகளை என்ன செய்யப் போகின்றீர்கள்? அணு உலையின் கொதி நீரை கடலுக்குள் கொட்டுகின்றீர்களே? பேரிடர் மேலாண்மை பயிற்சி என்னவானது? விபத்து நடந்தால் இழப்பீடு என்ன? இதில் ரகசியத்தன்மை எதற்கு என்றெல்லாம் கேட்டார்கள். இந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்தக் கேள்விகள்தான் முக்கியமானவை. மகத்தான ஒரு மக்கள் போராட்டத்தின் மிகச் சிறந்த விடயங்கள் இவை.

Koodankulam-6_380அணு உலையின் ஆபத்தை விளக்கி ஆயிரக்கணக்கான கைப்பிரதிகளையும் சிறு பிரசுரங்களையும் பூவுலகின் நண்பர்கள் உட்பட, நண்பர்கள் ரமேஷ், ஞாநி, அ. மார்க்ஸ். முத்துகிருஷ்ணன் போன்றோர் மட்டுமல்ல பலரும் வெளியிட்டார்கள். கீற்று.காம், வினவு உள்ளிட்ட பல இணையங்களும், சமூக வலைத்தளங்களும் இப்போராட்டத்திற்கு பெரும் பங்களிப்பை நல்கின, இன்றும் ஆதரித்து வருகின்றன. கடந்த 40 ஆண்டு கால தமிழ் சமூகத்தின் அசைவியக்க வரலாற்றில் பல தரப்பினரையும் ஈர்த்த போராட்டம் என்றால் அது அணு உலைக்கு எதிரான போராட்டமே. ஊடகவியலாளர்கள், படைப்பாளிகள், கவிஞர்கள், திரைத்துறை யினர், என எந்த ஒரு இயக்கத்திற்கும் கிடைக்காத ஆதரவு அணு உலைக்கு எதிரான போராட்டத்திற்கு கிடைத்தது. தேர்தல் அரசியலில் பங்கேற்கும் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி போன்றவைகளும், தமிழ் தேசியக் குழுக்களும், தேர்தல் அரசியலை புறக்கணிக்கும் மக்கள் கலை இலக்கியக்கழகம் போன்ற அமைப்புகளும் இந்த போராட்டத்தில் தங் களை இணைத்திருக்கின்றார்கள். அணு உலை முற்றுகைப் போராட்டம் போலீசாரால் ஒடுக்கப்பட்டபோது இந்த குழுக்கள் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தன மே-17 இயக்கத்தின் நிறுவனர் திருமுருகன் முதல்வர் ஜெயலலிதா வீட்டை முற்றுகையிட முயன்றதாக கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார். திருநெல்வேலியில் அணுஉலை ஊர்வல எதிர்ப்பு முடிந்த பிறகு தலைவர்கள் முன்னிலையில் தோழர் சதீஷ் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டு கைதுசெய்யப் பட்டார். ஈரோட்டில் முகிலன் கைது செய்யப்பட்டார். சதீஷ், முகிலனுக்கு பிணை கிடைப்பதே பெரும் போராட்டமாயிருந்தது. தோழர் பெ.மணியரசன் போலீசாரால் தாக்கப்பட்டார். ஆனாலும் இவ்வளவு பேராதரவு இந்த இயக்கத்திற்கு கிடைத்தபோதிலும் அதிமுக, திமுக போன்ற இரு பெரும் திராவிட இயக்கங்களும், சிபிஐ. சிபிஎம் போன்ற கம்யூனிஸ்ட் கட்சிகளும் அணு உலையை ஆதரிக்கின்றன. ஆனாலும் இந்தக் கட்சிகள் வெளிப்படையாக அணு உலையை ஆதரிக்காத வகையில் இந்த கூட்டியக்கம் அவர்களுக்கு மக்கள் மன்றத்தில் நெருக்கடியை உருவாக்குகிறது.

இந்த அணு உலை எதிர்ப்பு கூட்டியக்கம் அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்க மின் தட்டுப்பாடு, அணு உலையால் ஆபத்தில்லை என்று பச்சைப் பொய்யை இரவு பகலாக பல கோடி ரூபாய் செலவில் செய்தார்கள். ஆனால் அதையும் மீறி அணு உலையால் ஏற்படும் ஆபத்தை மக்கள் உணர்ந்து விட்டார்கள். மின்சாரப் பொய்கள் எளிய உண்மைக்கு முன்னால் நிற்கவில்லை. பல நேரங்களில் பொய் பிரமாண்டமானதாக இருந்தாலும் ஆபரணங்களற்ற உண்மை மகாத் தானது என்பதை காலம் உணர்த்தி விடுகிறதல்லவா? அது போல அணு உலை ஆபத்தானது என்ற எளிய உண்மை இன்று தமிழ் சமூகத்திற்கு பரவலாக தெரிய வந்திருக்கிறது. அதனால்தான் ஆபத்து குறித்து பேசாமல் இத்தனை நாள் போராடாமல் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் போராடுகின்றீர்களே என்று கலைஞர் தொடங்கி பலரும் சொல்கிறார்கள் அவரு களுக்காகத்தான் இந்த போராட்டம் இன்று நேற்றல்ல அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்தே நடைபெறுகிறது என்கிறோம்.

ஒரு வருட அஹிம்சைப் போராட்டத்தின் பின்னர் உதயகுமார் அணு உலையை முற்றுகையிடுவோம் என்று அறிவித்தார். இந்த ஒன்றரை ஆண்டுகால போராட்டத்தில் ஓர் அடித்தட்டு சமூகம் முதன் முதலாக அணு உலையை முற்றுகையிடுகிறது. எந்த வகையிலும் இதை எதிர்கொள்ள முடியாத அரசு நேரடியான அச்சுறுத்தலில் இறங்கியது. போராட்டம் துவங்கிய காலத்திலிருந்தே போலீஸ், விமானப்படை, இராணுவத்தின் அச்சுறுத்தல் இடிந்தகரை உள்ளிட்ட கிராம மக்களுக்கு இருந்தாலும் அரசப்படைகளின் விருப்பத்திற்கு மக்கள் பலியாகவில்லை. முரட்டு மீனவர்கள் தங்களின் இயல்புக்கு மாறாக மூர்க்கமற்ற போராட்டத்தினுள் வலிந்து ஒரு வருடத்திற்கும் மேலாக அமர்ந்திருந்தார்கள். முற்றுகை போராட்டம் அறிவித்தபோது அங்கு திரண்டிருந்த பெண்களை போலீசார் மிக மிக அசிங்கமான வார்த்தைகளால் அர்ச்சித்தார்கள். ஆனாலும் அந்த மக்கள் பொறுத்துக் கொண்டார்கள். ஓர் இரவையும், இன்னொரு பகலையும் அந்தக் கரையோரத்தில் கழித்தார்கள். இந்த பருவத்தில் வீசும் கடல் காற்றான சோழக்காற்றில் (மே முதல் அக்டோபர் வரை ஆறு மாதங்கள் வீசும் காற்று சோழக்காற்று) குளிரிலும், கச்சான் காற்றிலும் அங்கேயே அணு உலைக்கு தூரத்தில் அமர்ந்திருந்தார்கள்.

ஆனால் மறுநாள் எவ்வித முன்னறிவிப்புமின்றி அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். தப்பியோடிய பெண்களின் புடவைகளை உருவி அவமானப்படுத்தினார்கள். நூற்றுக்கணக்கான மக்களுக்கு வாயில் கொப்புளங்களும், தோலில் தடிமனும் ஏற்பட்டது, அவர்களுக்கு காரணம் தெரியவில்லை. பின்னர் ஆய்வு செய்த போதுதான் தெரிந்தது காலாவதியாகிப் போன கண்ணீர் புகை குண்டுகளை அந்த மக்கள் மீது வீசியிருக்கிறார்கள். வேறு ரசாயனக் கலவைகளையும் அத்தோடு வீசியிருக்க லாம் என்று அஞ்சப்படுகிற நிலையில் இச்செய்தி பரவ, மணப்பாட்டில் போராடிய அந்தோனி ஜாண் போலீ சால் கொல்லப்பட்டார். மறு நாள் கடலில் இறங்கி போராடிய சகாயம் இடிந்தகரையில் இறந்தார். சகாயத் தின் உடலைக் கூட ஐந்து நாட்கள் கழித்தே போலீசார் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் வைத்து ஒப்படைத்தார்கள். சகாயம் விவாகரத்தில் பெருமளவு குமரி மாவட்ட கடலோர கிராமங்களைச் சார்ந்த இளைஞர்கள் திரண்ட பிறகு வேறு வழியில்லாமல் அவரது உடலை பல நிபந்தனைகளுடன் கொடுத்தார் கள். சகாயத்தின் உடலை இராஜாக்கமங்கலம்துறை வழியாக ஒவ்வொரு கடலோர கிராமத்திலும் அஞ்சலி செலுத்தி இடிந்தகரைக்குக் கொண்டு செல்லும் அவர்களின் கோரிக்கையை 200 போலீஸ், இராணுவ வாகனங்களையும், 3,000 போலீஸ் இராணுவத்தையும் கொண்டு நசுக்கினார்கள். இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்கள் மீது தடியடியும் நடத்தப்பட்டது. இப்போது இரண்டு துப்பாக்கிகளைக் காணவில்லை என்கிறது தமிழக போலீஸ்.

Koodankulam-9_380இந்த முற்றுகைப் போராட்டத்தின் போது கூடுதல் அதிகாரி ஜார்ஜ் சொன்னதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். கடலோரத்தில் வலைகளை விரித்து வைத்து போலீசாரை கடலுக்குள் இழுத்துச் செல்ல திட்டமிட் டார்கள் மீனவர்கள் என்று அர்ஜூன் படத்தில் கவுண்டமணி அடிக்கும் லூட்டிக்கு இணையாகச் சொல்கிறார். ஆனாலும் அந்த பொய்யின் வடிவங்களை நாம் காண வேண்டும். இரண்டு பெண் இன்ஸ்பெக்டர் களைக் கடத்திச் சென்று இடிந்தகரைக்குள் மீனவர்கள் வைத்திருக்கிறார்கள் என்றும் அவர்களை மீட்கிறோம் என்ற பெயரில் கடலோர கிராமங்களுக்குள் புகுந்து முடிந்தால் உதயகுமாரை கைது செய்வது அல்லது சுட்டுக்கொல்வது என்பதுதான் போலீசின் திட்டம் என்பதாகத் தெரிகிறது. அதனுடைய ஒரு பாகம்தான் துப்பாக்கி காணாமல் போய்விட்டதாக போலீஸ் சொல்லும் புரளி. பல ஆபத்தான சங்கடங்களையும், இடைவிடாது நிம்மதியற்ற ஒரு காலத்தையும் அந்த மக்களும் உதயகுமாரும் எதிர்கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் அவர்களோடு இருப்பதுதான் அறம் சார்ந்து சிந்திக்கும் எவருடைய முடிவாகவும் இருக்கும்.

தனிப்பட்ட கருத்தாக நீண்டகாலமாக ஒரு விமர் சனத்தை நான் முன்வைத்து வந்திருக்கிறேன். சமவெளி வேறு, கடல் வெளி வேறு என்றும் கடலோடிகளின் போராட்டத்தை எப்போதுமே சமவெளி நசுக்கி நசமாக்கி வருகிறது என்றும். ஆனால் கடலோரங்களில் அமைக்கப்படும் பேரழிவு ஆலைகளாலும் கடலோரங் களை நசமாக்கும் திட்டங்களாலும் ஆதாயம் அடை கிறவர்களாக சம வெளி ச் சமூகங்கள் இருக்கிறதென்றும் சொல்லியும் பேசியும் வருகிறேன். இந்தக் கருத்தில் உறுதியாகவும் இருக்கிறேன். ஆனால் சமவெளிச்சமூகங் களின் ஆதரவின்றி இந்தப் போராட்டத்தில் கடலோர மக்கள் வெல்ல முடியாது. கடலோர மக்களோடு கைகோர்க்காத வரை அணு உலை போராட்டம் வெற்றியும் பெறாது என்பதுதான் என்னுடைய உறுதி யான கருத்து. எனது இந்தக் கருத்தை சில நண்பர்கள் ஆபத்தோடு அவதானித்தார்கள். ஆனால் நான் சொன்ன விஷயங்கள் இன்று கூடங்குளத்தில் நடைபெறுகின்றன. இந்த முற்றுகைப் போராட்டத்தில் மீனவ மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தி தாக்கிய போது கூடங்குளம் பகுதியைச் சார்ந்த மீனவர் அல்லாத பிற இன விவசாயிகள் போலீசாரோடு மோதியிருக்கிறார்கள். குறிப்பாக நாடார் இன மக்கள் இந்த போராட்டத்தில் போலீசாரோடு மோதியிருக்கிறார்கள். இந்தப் போராட் டத்தில் ஆகச்சிறந்த உன்னதமான விஷயமாக இதை நான் காண்கிறேன். இன்று அவர்களின் வீடுகளில் கதவு ஜன்னல்களை போலீசார் உடைத்தும் பெயர்த்தும் போட்டுள்ளார்கள். எளிய அந்த விவசாய மக்களின் சிறிய சேமிப்புகளை திருடிச் சென்றிருக்கிறார்கள். ஒரு கிராம், இரண்டு கிராம் தங்கம் என்று தங்கள் பிள்ளை களின் எதிர்கால வாழ்வுக்காக அவர்கள் சேமித்ததை இந்த திருடர்கள் அபகரித்துக் கொண்டார்கள். மீனவ மக்களுக்காக இன்று விவசாயிகள் சிறையிலடைக்கப் பட்டிருக்கிறார்கள்.

இந்துப் பாசிஸ்டுகள் இந்த இரண்டு சமூகங்களையும் பிரிக்க சாதி, மதம், கோவில், வழிபாடு என்று எல்லா அஸ்திரங்களையும் கடந்த காலங்களில் பயன்படுத்தி னார்கள். ஆனால் இன்று அணு உலையால் உருவாகும் ஆபத்து மீனவனுக்கு மட்டுமல்ல அது ஒட்டு மொத்த தென் தமிழக மக்களுக்கும்தான் என்பதை அடித்தட்டு மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். அந்த அச்ச உணர்வி லிருந்து உருவாவதுதான் இந்த வெகு சன மக்கள் திரள் போராட்ட பண்பாடு என்பது. இந்த பண்பாட்டை மேலும் மேலும் வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. ஒரு சமூக அசைவியக்கம் இன்று சமூக நல்லிணக்கத்திற்கு முன்னுதாரணமானதாக முழுமையாக மாற வேண்டும். நம்பியாரும், வேம்பாரும் வற்றி விவசாயமும் நிலமும் வர்த்தகச் சூதாடிகளின் கைகளுக்குச் சென்று விட்ட நிலையில் இன்று விவசா யத்தை நம்பி வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள பல சாதி மக்களின் போராட்டமும் அணு உலைக்கு எதிரான போராட்டமும் இணைக்கப்பட வேண்டும். நமது இசக்கியும், சுடலை மாடனும்,பத்ரகாளியும், நீலியும், பனிமயமாதாவும், ஜெபமாலை மாதாவும், லூர்து மாதாவும் வாழ்ந்த வாழ்ந்துகொண்டிருக்கும் நமது பாரம்பரிய வதிவிடம்தான் நமது புண்ணியபூமி நாம் அதை வழிபடுகிறோம். அது நமது தாய். பிறந்து வளர்ந்து செத்துத் தொலைக்கிற நிலம் மட்டுமல்ல, நமது முன்னோர்களின் மூச்சுக்காற்றை சுமந்திருக்கும் அன்னை நிலம் அதைக் காக்க அனைத்து சமூகங்களும் ஒன்றிணைய வேண்டும்.

இறுதியாக, முழுமையான உடன்பாடு என்று எந்த போராட்டத் திலும் நமக்கு இருந்ததில்லை. அப்படியான அரசியல் ரீதியான முரண்பாடுகள் சில எனக்கு அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் உண்டு. ஆனால் அவைகளைப் பேசுவதற்கான தருணமோ, சூழலோ இதுவல்ல. இப்போது நாம் மக்களையும் தோழர் உதய குமாரையும் பாதுகாக்க வேண்டும். மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் தொடர்பாக எழுந்த மன வருத் தத்தில் உதயகுமார் அவர்கள் சரணடையப் போவதாக அறிவித்து மக்களும் இளைஞர்களும் அவரைத் தடுத்திருக்கிறார்கள். என்னால்தானே உங்களுக்கு இந்த துன்பம் என்று அவர் கண்ணீர்விடுகிறார். அப்படி எல்லாம் இல்லை. உங்களுக்கோ மக்களுக்கோ ஏற்படு கிற துன்பங்களுக்கு அரசும், அணு உலையும்தான் கார ணம், அடித்தள மக்களின் பெருந்திரள் போராட்டத்தை அரசு இயந்திரம் நசுக்குவதும் அரசு இயந்திரங்களிட மிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள போராடும் மக்கள் கூட்டம் சிறிய அளவிலான எதிர்ப்பு நட வடிக்கையில் ஈடுபடுவதும் புதியதல்ல, மக்களின் அந்த எதிர்ப்பை வன்முறை என்று கூறி பலரையும் கொன்று விட்டு அந்தப் பழியை போராட்டத்தை ஒருங்கிணைப் பவர்கள் மீது போடுவதும் வளமையான ஒன்றுதான். ஆனால் அது கூடங்குளம் போராட்டத்தில் நடவாது. அந்த காலக்கட்டம் கடந்துவிட்டது. அணு உலைக்கு எதிராக போராட வந்த உங்கள் மீது இந்த மாதிரி பழிகளை எவர் ஒருவர் சொன்னாலும் அதை முதலில் அந்த மக்களே எதிர்ப் பார்கள். அதற்கு முன்னர் நான் எதிர்ப்பேன். தவிறவும் நீங்கள் சரணடைந்து உங்களை கைது செய்துவிட்டால் இந்த பிரச்சனை முடிந்துவிடாது. அவர்கள் மக்களையும் விட மாட்டார்கள். உங்களையும் விடமாட்டார்கள். நமது சந்ததிகளையும் அணு உலையும் விடாது. இந்த சமூகத்திற்கு நன்மை பயக்கும் ஒரு போராட்டம் என்பதை வெகு விரைவில் தமிழ்ச் சமூகம் புரிந்துகொள்ளும். அப்படி புரிந்துகொள்ளும் போது அணு உலையிலிருந்து நாம் அத்தனை பேருக்குமே விடுதலை கிடைக்கும் அதுவரை இது, இது மட்டுமே நமக்கு பொருந்துகிறது.

எமது நிலத்தைக்

காக்கும் இந்த போராட்டத்தில்

நாம் வென்றாக வேண்டும்

இல்லையேல்

நாம்

கொல்லப்படுவோம்

ஏனெனில் தப்பியோடுவதற்கு

எமக்கு வேறு நிலங்களில்லை.

  •  கென் சாரோ விவா

பூவுலகு செப்டம்பர் 2012 இதழில் வெளியான கட்டுரை